அவள் அப்படித்தான்: மஞ்சு என்றொரு முரண்

அவள் அப்படித்தான்: மஞ்சு என்றொரு முரண்
Published on

தமிழ் சினிமாவில் பெண் சித்திரிப்பைப் பொருத்தவரையில் அவள் அப்படித்தான் குறிப்பிடத்தகுந்த ஒரு படம். சர்வதேச அளவில் பெண்ணியப் போக்குகள் பேசுபொருளாக இருந்த காலகட்டம் அது. அயல் சினிமாவின் தாக்கங்களைக் கொண்ட இயக்குநர்தான் ருத்ரையா.

பெண்களுக்கான வெளி மிகச் சுருங்கியிருக்கும் தமிழ் சினிமாவில் நடனமாடுவதையும் அழுவதையும் தாண்டி மஞ்சுவின் குழப்பங்களும் முரண்களும்தான் அவளை இன்று வரை நினைவுகூர்வதற்கான காரணமாக இருக்கிறது.

அவள் அப்படித்தான் மஞ்சு சராசரி பெண் இல்லை.

அவளைச் சுரண்டும் ஆண்களிடம் காட்டும் கறார்தன்மைக்கு நேரெதிராக இருக்கிறது, அவள் நேசிக்கும் ஆண்களிடம் தன்னை முழுமையாக ஒப்புவித்து உடைபடும் தன்மை (Vulnerability).

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ஒரு பெண் கதாப்பாத்திரம் என்றாலும், மீள் பார்வையில் மஞ்சு பல அசௌகரியமான கேள்விகளை எழுப்புகிறாள் என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

‘‘பொம்பளைங்க சுதந்திரம்'' பற்றி தெரியாது என்று அருணின் மனைவி சொல்வதை ‘ண்ச்ஞூஞு ச்ணண்தீஞுணூ'' என்று சொல்லும் மஞ்சு அதனால்தான் அவரால் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று நினைக்கிறாள். அவளது மகிழ்ச்சிக்கு ‘‘பொம்பளைங்க சுதந்திரம்'' பற்றிய மஞ்சுவின் அறிதல் இடையூறாக இருக்கிறது என்று அனுமானம் செய்தால், மஞ்சு அந்த அறிதலின் பார்வையில் வைத்து அவளது அம்மாவை ஏன் பார்க்கவில்லை?

கண்டேன் காதலை படத்தில் கதாநாயகன் சக்தியின் அம்மா ஆடிட்டருடன் ஓடிப் போனது பற்றிய உரையாடலில் கதாநாயகி அஞ்சலி ‘‘அவருக்கு திருமணத்தில்

கிடைக்காத காதல், இப்போது கிடைத்திருக்கலாம்'' என்று சொல்வாள். அஞ்சலி போன்ற ஒரு எளிய,

சராசரியாக மட்டுமே நிறுவப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்திடம் இருந்த தெளிவு, மஞ்சுவிடம் ஏன் இல்லை என்கிற கேள்விதான் அவள் அப்படித்தான் படத்தை மறுபடியும் பார்க்கும் போது எழுந்தது. ‘‘ஜெண்டில்மேன்'' என்று அவள் வியந்தோதும் அப்பா, அவளுடன் பழகி திருமணம் என்கிற நிலை வரும் போது தங்கச்சி மாதிரி என்று சொல்லி நாசூக்காக மறுக்கும் மனோவை பற்றி எந்த கேள்வியும் எழுப்பாமல் அவனுக்கு நன்றி சொல்லி அவளை அழைத்துச் செல்கிறார்.

இறுதியில் கூட, அவள் பார்வையில் ‘‘பொம்பளங்க சுதந்திரம்'' பற்றி எதுவும் தெரியாத அருணின் மனைவியிடம் கேள்விகள் எழுப்புவது போல, பெண் சுதந்திரம் பற்றி ஆவணப்படம் எடுக்கும் அருணிடம் அவள் ஏன் எதுவும் கேட்கவில்லை? பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டும் பார்த்து பழகும் தியாகுவும் கூட கடைசியில் மஞ்சு தன்னை அறைந்து எதிர்ப்பு தெரிவித்ததை தன்மானம் கொண்ட ஒரு பெண்ணின் செய்கையாக சொல்லி கடந்து செல்லும் ‘‘பெருந்தன்மை'' படத்தில் வெளிப்படுகிறது. ஆனால் அந்த தன்மானம், தனது அதீதங்களுக்காக மன்னிப்புக் கோருவதற்கு அருணின் காலில் விழுவதற்கும் தயாராக இருக்கும் போது காணாமல் போய்விடுகிறது.

இறுதியில் பார்வையாளர்களின் கழிவிரக்கத்தை கோரும் ஒரு கதாபாத்திரமாகவே மஞ்சு சுருங்கிவிடுகிறாள்.

 மஞ்சுவே சொல்வது போல மனிதர்கள் முரண்பாடானவர்கள், அதற்கு அவளும் விதிவிலக்கில்லை. ஆனால் மஞ்சுவின் முரண்கள், அவளைப் போலவே அதீதமானவை. அதனால் அவை அதிர்ச்சி மதிப்பீட்டுக்கானவையாக இருக்குமோ என்று தோன்றாமல் இல்லை.?

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com