காலச்சுவடில் வெளியான அ.முத்துலிங்கத்தின் ஒரு மணி நேரம்முன்பு என்ற சிறுகதை பற்றிச் சொல்ல விரும்புகிறேன். அந்தக் கதையில் முத்துலிங்கம் கதைகளின் பிரதான அம்சமான பகடி மொழி ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் இல்லை. கத்தரித்து வைக்கப்பட்ட, செய்யுள் போன்றதான சின்ன சின்ன வரிகளால் யாக்கப்பட்ட கதையிது. மானுட வாழ்வின் அரிய பக்கம் என்கிற பாராட்டிற்கு ஏங்காத எளிய கதை. கொடும் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பம்.. அந்தத் தாய் தன் மகனை புதிய பள்ளியொன்றில் சேர்க்க முயன்று தோற்றுத் திரும்பவது கதை. கதை என்று எதையாவது சொல்ல வேண்டும் என்கிற கட்டாயத்திற்காக நான் விடும் கதையிது.--இந்த ஆகச் சுமாரான கதைக்குள் அந்த மனிதர் செய்திருக்கிற ஜாலங்கள்தான் நண்பனின் அலுவலகப் படிக்கட்டில் அமர்ந்து கதையை முழுக்க படிக்க வைத்தது.
பேருந்தில், வீதியில், லாரிகளுக்கிடையில் கதையுடனேயே பயணித்தேன். எவ்வளவு தான் தடுக்கித் தடுக்கி நடந்து போனாலும் அதற்குள் அந்த அலுவலகம் வந்துவிட்டது. வேறு வழியின்றி அப்படியே படிக்கட்டில் அமர்ந்து விட்டேன். சில அற்பமானுடர்கள் என் காலகளைத் தாண்டி ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.
கதை முழுவதும் முன்னிலையில் பேசுகிறது. இந்த முன்னிலை தொனி எப்போதும் ஒரு ஆறுதல் செய்தியைக் கடத்தவல்லது.‘ பயப்படாதே சிறுமந்தையே! நான் உன்னோடே இருக்கிறேன்' என்பது போல. இத்தொனி கதையின் உருக்கத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. கதைசொல்லி அந்தச் சின்னஞ்சிறுவனோடே ஒட்டி நின்று கொண்டிருப்பதான உணர்வை இத்தொனி வழங்கிவிடுகிறது. ‘உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான்.' ஐந்து சதத்துக்கு உப்பு' என்று நீ சொன்னாய்.
உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்' என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு' என்று விரட்டினான்'. இப்படித் துவங்குகிறது கதை. தேய்வழக்குகளைக் கூட புதிதாக்கிவிடும் வித்தையில் தேர்ந்தவர் முத்துலிங்கம். ‘வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்' என்கிற அரதப் பழசை ‘சிரித்தான்.. அவன் சிரிப்பில் பற்கள் அதிகமாக இருந்தன' என்று புதிதாக்கிக் காட்டுகிறார். ஒரு வீட்டில் சமையலறை இருக்கும். படுக்கையறை இருக்கும். பூஜையறை இருக்கும். ஆனால் அழும் அறை இருக்குமா? ‘அழும் அறைக்குள் போன அம்மா இன்னும் வெளியே வரவில்லை. வெளியே மெல்லிய சத்தம் உனக்குக் கேட்டது' என்கிறது ஒரு வரி. நான் மட்டும் இப்படியொரு சொல்லை உருவாக்கியிருந்தால், நிலத்தைக் கீறி, ஆகாயத்தைக் குடைந்து அண்டராசரங்களின் மேலேறி ‘ ஓ' வென்று கத்தியிருப்பேன். மனிதர் போகிற போக்கில் வெகு சாதாரணமாக அச்சொல்லைப் பெய்து போகிறார்.
ஆனால் இதெல்லாம் ஒரு திட்டம்தான். இப்படியொருவன் அரற்றியழிவான் என்பது உறுதியாக அவருக்குத் தெரியும். அந்தத் திடமான நம்பிக்கையில் செய்யும் ‘ பாசாங்கு வேலை' இது. ‘அவர் ஒரு நல்ல ரைட்டர்... அதுல சந்தேகமில்ல... ஆனா நீ சனிக்கிழமை இராத்திரிகளில் நெஞ்சு நெஞ்சாகக் குத்திக் கொள்வது போல அவ்வளவு பெரிய மாஸ்டரில்லை.. அவர் எழுத்துக்கு லிமிட் உண்டு' என்றான் ஒரு நண்பன். வாணி அவரை அமரச் செய்து தலைமேல் பெய்வதில்லை என்றே நானும் நம்புகிறேன். அவருக்குப் போக்குக் காட்டிவிட்டு அவளொரு தங்க நாணயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்தில்தான் வீசுகிறாள்.
ஆனால் அந்த மனிதர் எத்தனை ஆவலோடு, எத்தனை லாவகமாக அந்தரத்தில் பறந்து அதைப் பற்றுகிறார். சனிக்கிழமை இராத்திரிகளில் நெஞ்சு நெஞ்சாகக் குத்திக் கொள்வதை நான் நிறுத்துவதாக இல்லை. ஒரு வேளை பின் நாட்களில் நானொரு சிறுகதையாசிரியனாக மலர்ந்தால் அதன் பழிபாவங்கள் அவரையே சேரும்.
ஜூலை, 2018.