அழிவிலிருந்து உயிர்த்த மொழி!

அழிவிலிருந்து உயிர்த்த மொழி!
Published on

இந்த மொழியைப் பேசாதே, எழுதாதே, அதன் இலக்கியங்களைக் கொளுத்து! என அந்நிய ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்குள்ளாகிய ஒரு மொழி இன்று மெல்ல மெல்ல தலையெடுத்து ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியாக உருவாகி உள்ளது.  அதன் மக்கள் பெருமையுடன் அதைச் செழிக்க வைக்க முயற்சிகள் எடுக்கின்றனர். அது கொங்கணி மொழி. இதன் வரலாறு இதுபோன்ற அதிர்வுகளை உள்ளடக்கியது. இன்றைய மொழிகளுக்கு  இது ஒரு பாடமாகவும் அமைகிறது.

வாஸ்கோடகாமா என்ற கடற்படை வீரன் போர்த்துகீசிய நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 1497 -ல் கிளம்பி இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தான். அதற்கு சில ஆண்டுகள் கழித்து அதற்கு வடக்கே தள்ளி இருந்த கோவா, பிஜப்பூர் சுல்தானின் கையில் இருந்து போர்த்துகீசியர்களின் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து இந்தியா விடுதலை அடைந்தும் பல ஆணடுகளுக்கு கோவா பிரதேசமானது அவர்களின் கையில் தான்  இருந்துவந்தது. போர்த்துகீசியர்களின் நேரடி ஆட்சிக்காலத்தில் தான்  கொங்கணி மொழி கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானது.

கோவாதான் கொங்கணியின் தாய்நாடு. ஆனால் அங்கிருப்பதை விட நான்குமடங்கு அதிக கொங்கணி பேசுகிறவர்கள் கோவாவுக்கு வெளியே வசிக்கி றார்கள். உ லகிலேயே ஐந்து எழுத்துவடிவங்களில் எழுதப்படும் மொழி கொங்கணிதான். மலையாளம், கன்னடம், அராபிக், ரோமன், தேவநாகரி ஆகிய எழுத்துவடிவங்களில்.

இந்தியாவுக்கு வெளியே கொங்கணிகள் விரிந்து பரந்துள்ளனர். அயர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தற்போதைய பிரதமர்களின் தந்தையர்கள் கொங்கணிகள். ஐக்கிய ராச்சியத்தின் மூன்று உறுப்பினர்கள் கொங்கணிகள். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் 40,000த்துக்கும் மேற்பட்ட கொங்கணி இஸ்லாமியர்கள் உள்ளனர். காலனி ஆதிக்கம் இவர்களை இப்படி உலகெலாம் பரவச் செய்துள்ளது. ஆயினும் போர்த்துகீசியர்களின் தொடக்க கால ஆட்சி, உள்ளூர் மக்களின் கலாச்சா ரத்தை அழிப்பதாக இருந்துள்ளது. அதே சமயம் கொங்கணி மொழிதான் முதல்முதலில் அச்சிடப்பட்ட ஆசிய மொழி என்ற பெருமையையும் பெற்றது. 1556 - ல் கோவாவில் அமைக்கப்பட்டமுதல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இம்மொழிக்கான முதல் நவீன இலக்கணமும் ஆங்கில யேசுசபை பாதிரியார் தாமஸ் ஸ்டீபென்ஸ் என்பவரால் 1640 - ல் வெளியிடப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் நடுவில் பெரும்பாலான கொங்கணி இலக்கியங்கள் அச்சில் வெளிவந்திருந்தன.

இருப்பினும் பெரும்பாலான கொங்கணி பேசும் மக்கள் கோவாவை விட்டு இடம்பெயர்ந்து சென்றது இந்த காலகட்டத்தில்தான். கத்தோலிக்க மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் அல்லது அப்படி சந்தேகத்துக்குள்ளானவர்கள் மீது திருச்சபையின் நீதி விசாரணை நடந்தது. இதற்கு அஞ்சி மாற்று மதத்தவர்களும் புதிதாக கிறித்துவத்தைத் தழுவியவர்களும் வெளியேறினர். தெற்கு நோக்கிச் சென்றவர்கள் மங்களூரில் தங்கினர். இந்த நீதிவிசாரணையின் தொடர்ச்சியாகத்தான் 1684 - ல் உள்ளூர் மொழி அரசால் தடைசெய்யப்பட்டது. அதைப் பேசுவதும் கூட குற்றமென்றானது. அனைத்து எழுத்துகளும் எரிக்கப்பட்டன. 1822 - ல் போர்ச்சுகலில் புரட்சி ஏற்பட்டு புதிய அரசியல் சாசனம் வந்தபிறகு கோவாவில் நிம்மதி ஏற்பட்டது. அதிலிருந்து ஒரு நூற்றாண்டு காலம் கோவா மக்கள் உரிமைகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சியாக இருந்தனர் என்று சொல்லலாம். 1889 - ல் முதல் கொங்கணி பத்திரிகை வெளியானது. அடுத்த ஆண்டே முதல் கொங்கணி நாவலும் வெளியானது. போர்த்துகீசிய, மராட்டிய கலாச்சாரங்கள் இணைந்த கொங்கணி கலாச்சாரம் உருவானது. கொங்கணி மொழி பழைய படி பேச்சு மொழி ஆனாலும் மொழிவளராமல் நின்றுபோனது.

இதுபற்றிய கவலை கொங்கணி மக்களிடையே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்தது. இந்நிலையில் 1942 - ல் இரண்டாம் உலகப்போரை ஒட்டி அனைந்திந்திய கொங்கணி சங்கம் உருவானது. 1952 - ல் கொங்கணி மொழியில் அகில இந்திய வானொலி இயங்கத்தொடங்கியது அம்மொழிக்குக் கிடைத்த பெரும் வளர்ச்சி. இதைத்தொடர்ந்து லிஸ்பன் ரேடியோவும் கொங்கணி நிகழ்ச்சிகளை வழங்கிய மாற்றம் நடந்தது. 1961 - ல் கோவா இந்தியாவுடன் இணைந்த பின்னர் கொங்கணி வேறுமாதிரியான ஓர் அழுத் தத்தை எதிர்கொண்டது. ‘‘கொங்கணி தனி மொழி கிடையாது. அது மராத்தியின் ஒரு பேச்சுமொழிக் கிளை,'' என்று சொல்ல ஆரம்பித்தனர். கோவாவுக்குள்ளே ஒரு பிரிவினர் மகராஷ்டிராவுடன் இணைந்துகொள்வதை ஆதரித்தனர். 1967-ல் மகாராஷ்டிராவுடன் இணைவதை கோவாக்காரர்கள் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் அது யூனியன் பிரதேசமானது. தற்போது மாநில அந்தஸ்துடனும்(1987) இருக்கிறது.

1970-ல் கொங்கணி மாநில மொழி என்ற தகுதியைப் பெற்றது. ஆனால் தேவநாகரி எழுத்துவடிவில் எழுதப்படும் கொங்கணிதான் அதிகாரபூர்வமான மொழி என்று குறிப்பிடப்பட்டது. இதில் என்ன சிக்கல் எனில் கொங்கணியை ரோமன் எழுத்துவடிவில் அங்கே எழுதி வந்தவர்கள் தடுமாற்றத்துக்குள்ளாயினர். நூற்றாண்டுகளாக இருந்து வந்த இப்பழக்கம் புறந்தள்ளப்பட்டது. அத்துடன் அங்கிருந்த மராத்தி மொழிக்காரர்களும் ஒதுக்கப்பட்டனர். கோவாவில் வாழும் சரஸ்வத் என்கிற இந்து உயர்வகுப்பாருக்கு மட்டும் இந்த தேவநாகரி கொங்கணி உதவி செய்வதுபோல் அமைந்துள்ளது என்கிற குரல் எழுந்தது. ரோமன் கொங்கணி கிறிஸ்துவர்களாலும், மராத்தி ஒடுக்கப்பட்ட மக்களாலும் பயன்பாட்டில் இருந்தவை. இந்த பிளவுகளைப் புரிந்துகொண்டால் கொங்கணி எதிர்கொள்ளும் அரசியல் சிக்கலைப் புரிந்துகொள்ளலாம்.

ஆயினும் இன்று கொங்கணி கோவாவில் சாமான்ய மக்களின் பேச்சுமொழியாக நிலைபெற்றுள்ளது. ரோமன் எழுத்துவடிவுக்கும் தேவ நாகரி எழுத்துவடிவுக்குமான போட்டியில் பல நூல்கள் இரு தரப்பிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கொங்கணி நாடகக் கலையும் திரைப்படக் கலையும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. பக்கத்தில் இருக்கும் மங்களூருவிலும் கொங்கணி இலக்கிய வளர்ச்சி மேல் நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com