அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி...

கடற்போர்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி...
Published on

முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலேயே சோழ அரசு ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாக உருவாகிவிட்டது. தமிழ் நாடு முழுவதும் அவன் ஆட்சியின் கீழ் வந்த பின் வடநாட்டு படையெடுப்பும் தொடர்ந்து நிகழ்ந்தது. பல நாடுகள் சோழனுக்கு திறை செலுத்தின.

கங்கநாட்டின் மீது படையெடுத்து சென்ற போது அவனது மகன் சோழ கங்கன் தலைமையில் சென்றது சோழநாட்டுப்படை . பெலவோலா என்ற நகரை முற்றுகையிட்டு அங்குள்ள பல இடங்களைத் தீயிட்டு கொளுத்தினான். சமணக் கோயில்களை அழித்தான். இக்கோயில் கங்க பெர்மானடியால் கட்டபட்டது. இறுதியில் த்ரைலோக்க மல்ல சோமேஸ்வரனால் சோழ கங்கன் என்ற அந்த இளவரசன் மாண்டு போனான் என்று கவர்வாட் என்ற இடத்திலுள்ள கன்னடக் கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வாறு போர்களில் இளவரசர்கள் பலர் இறந்திருக்கின்றனர்.

இராஜேந்திரனின் படைத்தலைவன் தண்டபுத்தி, தக்கண லாடம், வங்காளதேசம், உத்திரலாடம் ஆகிய பகுதிகளை வென்று கங்கைக் கரையை அடைந்தான். கங்கை ஆற்றில் யானைகளை வரிசையாக நிறுத்தி பாலங்கள் அமைத்து அவற்றின் மீது தன் படைகளை கடந்து செல்லுமாறு செய்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடு கூறுகிறது. தோல்வியுற்ற மன்னர் தலைகளில் கங்கை நீர் நிரம்பிய குடங்களையும் வைத்துக்கொண்டு வருமாறு செய்து நாடு திரும்பினான்.

நாடு திரும்பிய வீரர்களை ராஜேந்திரன் கோதாவரியாற்றங்கரையில் வரவேற்கக் காத்திருந்து அழைத்து வந்தான். வருகிறபோது சோழ நாட்டை அடைந்தவுடன் த்ரைலோக்ய பூதேவி சதுர்வேதி மங்கலத்து இறைவனைத் திருவடிதொழுது வந்ததாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

இப்போர்களில் பல படைத்தலைவர்கள் கலந்து கொண்டு வெற்றி தேடித் தந்திருக்கின்றனர். இளவரசன் முதலாம் இராஜாதி ராஜன் இப்போர்களில் கலந்து கொண்டு படையை வழி நடத்தியிருத்தல் வேண்டும்.

இதையடுத்து இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் நிகழ்த்திய போர்களைப் பார்ப்போம்.

இலங்கை மீது சோழர்கள் முதலாம் பராந்தகன் , இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தரச்சோழன் ஆகியோர் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றிருக்கின்றனர். முதலாம் ராஜராஜ சோழன் கி.பி.993 ல் முதலாம் விஜயபாகு ஆட்சி செய்து கொண்டிருந்த போது போர்த் தொடுத்து வெற்றி பெற்று ‘ஈழமான மும்முடி சோழ மண்டலம்’  என்றே அழைத்தான்.

பின்னர் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கி.பி 1017ல் மீண்டும் படையெடுப்பு நிகழ்ந்த போது 5-ம் மகிந்தன் இலங்கையில் ஆட்சி பொறுப்பில் இருந்தான். இம்முறையும் சோழப்படையே வெற்றியடைந்தது.

சோழர் காலத்தில் முன்னைப் படையெடுப்பில்  மீட்கப்படாத பாண்டியன் ஒளித்து வைத்திருந்த சுந்தரமுடி, இந்திரன் ஆரம் போன்றவற்றை முதலாம் ராஜேந்திரன் படை மீட்டுவந்தது.

மாதோட்டம், பதவியா, காந்தனாயிற், மானாங்கேனி, நிலாவெளி, திருகோணமலை போன்ற இடங்களில் ராஜேந்திர சோழன் கட்டிய கோயில்கள் உள்ளன.

‘பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்

ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்

முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த

சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும்’ சோழப்படைக் கொண்டு வந்ததை மெய்கீர்த்தியில் கூறுவதை அப்படியே அங்குள்ள மகாவம்சமும் , சூளவம்சமும் கூறுவதாக கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.

 தோல்வியுற்ற மன்னன் 5-ம் மகிந்தன் சோழநாடு கொண்டுவரப்பட்டான். இங்கு            12 வருடங்களுக்கு பிறகு உயிர் துறந்தான் என்று கூறப்படுகிறது.

கடாரம் என்பது இன்று மலேசியாவில் உள்ள கெடா என்ற இடத்திலிருந்த துறைமுகம். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட சாம்ராஜ்யத்தில் கடாரம் அடக்கம். மலேசிய தீபகற்பம், சுமத்ரா, ஜாவா மற்றும் அருகில் இருந்த தீவுகளும் இந்த சாம்ராஜ்யத்தில் அடங்கி இருந்தன. இது சிறந்த கடற்படையைக் கொண்டிருந்த அரசு. சீனாவுக்குச் செல்லும் கடல்வழி ஸ்ரீவிஜயத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. உலகில் உள்ள கடல்வணிகர்கள் அனைவரும் பயன்படுத்தும் துறைமுகமாக ஸ்ரீவிஜயம் விளங்கியது. தென் சீனக்கடலுடன்  இந்திய பெருங்கடலை இணைக்கும் மலாக்காய் நீரிணை இந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நீரிணையின் மேற்குப்பக்கம் சுமத்ரா தீவும் கிழக்குப் பக்கமாக மலேசியத் தீபகற்பமும் இருக்கின்றன என்பதால் ஸ்ரீவிஜய அரசின் கடல்சார் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். 800 கி.மீ. நீளமும் 60 கிமீ அகலமும் கொண்டது இந்த நீரிணை. இங்குதான் சோழர்களின் கடல்படையும் சரி; வணிக கப்பல்களும் சரி போரோ வர்த்தகமோ செய்திருக்கின்றன. வணிகத்தை வளர்த்துக்கொள்ள  ஸ்ரீ விஜயத்தின் மேல் படையெடுப்பு அவசியமாகிறது.

இப்பகுதியை விஜயோத்துங்க வர்மனை வென்று யானைப்படையை கையகப்படுத்தி அவனது கருவூலத்திலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வந்து வெற்றி வாகைச்சூடியது

சோழனின் கப்பற்படை.

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி

சங்கிராம விசையோத்துங்க வன்மன்

ஆகிய கடாரத்து அரசனை வாகயம்

பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து

உரிமையிற் பிறக்கிய பெருந்திப் பிறக்கமும்

-என்கிறது மெய்கீர்த்தி.

இதில் ஸ்ரீவிஜயம், பனையூர், தொன்மலையூர், மாயிருடிங்கம்,  லங்க சோகம், மாபப்பாளம், மேவிளிம்பங்கம், வலைப்பந்தூரு, தக்கோலம்,மாடமாலிங்கம்,  லாமுரி தேசம், மானக்கவாரம், கடாரம் போன்ற இடங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீவிஜயத்தின் போர்வாயிலில் நின்றிருந்த வித்தியாதர தோரணம் என்ற வளைவையும் அவன் படைகள் கைப்பற்றினான். அவன் கைப்பற்றிய ஊர்கள் பின்வரும் அடைமொழிகளுடன் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளன தெரியுமா?

தீர்த்தப்படித்துறைகளில் நீர் நிறைந்திருந்த  பண்ணை, பாதுகாப்பு அரணாக வலிமையான மலையைப் பெற்றிருந்த மலையூர்,  அகழிபோல் ஆழ்கடலால் சூழப்பட்டிருந்த மயூரடிங்கம், எத்தகையபோருக்கும் அஞ்சா இலங்கசோகா,  ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்ட மாபப்பாளம்,  வலிமையான சுவரை அரணாகக் கொண்டிருந்த மேவிலிம்பங்கம், வலைப்பந்துரு என்ற விலப்பந்தூர்,  அறிவியல்புலமை  வாய்ந்தவர்களால் புகழப்பட்ட தலைத்தக்கோலம்,  மூர்க்கமான போர்களிலும் நிலைகுலையாத மாடமாலிங்கம்,  போரினால் வலிமை கூடிய இளமூரி தேசம், பூந்தோட்டங்களில் தேன் நிரம்பி நின்ற மானக்காவரம்,  ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்ட சக்திவாய்ந்த கடாரம் - என வர்ணிக்கிறார்கள் மெய்கீர்த்தியில்.

நிறை நீர்ப் பண்ணை, மாயிருடிங்கம், இலங்கா சோகம் - ஆகிய தீவுகள் கடல்களால் சூழ்ந்தவை, ஸ்ரீ விஜயத்தைச் சார்ந்தவை. நக்கவாரம், இலாமுரி - ஆகிய தீவுகளையும் வென்றது ராஜேந்திர சோழனின் படை. இவை இன்றைய நிக்கோபர் தீவுகள் எனக் கூறப்படுகிறது. தலைத்தக்கோலம் - என்பது தக்கோபா என்ற தாய்லாந்திலுள்ள பகுதி ஆகும்.

கம்போடியா என இன்று வழங்குகின்ற கம்போஜம் என்ற நாட்டையும் ராஜேந்திர சோழன் வெற்றி பெற்றிருந்தான். அவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேட்டில் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் தேர் ஒன்றை கம்போஜ நாட்டு மன்னன் ராஜேந்திர சோழனுக்கு பரிசாக அனுப்பி வைத்தது பற்றியும், அவ்வாறு அவன் பரிசளித்தது தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள என்றும் கூறப்படுகிறது. கம்போஜம் என்பது இந்தோ சீனாவிலுள்ளது. சூரியவர்மன் என்ற மன்னன் அப்போது ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

மகாவம்சம் மூலமாக மாபப்பாளம் என்பது பர்மாவிலுள்ள தலைங் என்ற பகுதி எனத்தெரிகிறது. ராஜேந்திர சோழனின் படை பர்மாவின் பெரு அரசின் மீது தாக்கி வென்றிருக்கிறது. அங்கு கிடைத்த கருங்கற் தூண்களில் முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு உள்ளது. இத்தூண்கள்  மாபப்பாளத்தை வென்று நாட்டிய வெற்றித்தூண்கள் ஆகும்.

ஸ்ரீவிஜயப் பேரரசு கடல்வணிகத் துறைமுகங்களைக் கொண்டிருந்தபடியால் பெரும் செல்வத்தைக் குவித்த அரசாக விளங்கியது. அத்துடன் கடற்கொள்ளையர்களுக்கும் ஆதரவளித்த நாடாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.  செல்வத்தைக் கைப்பற்றி ஸ்ரீவிஜயத்துக்குப் பாடம் புகட்டவும் கடற்கொள்ளையைத் தடுத்து வாணிகத்தைக் காக்கவுமே ராசேந்திரன் ஸ்ரீவிஜயத்தின் மீது படையெடுத்திருக்க வேண்டும். அந்தப் படையெடுப்பில் தென்கிழக்கு ஆசியா முழுக்க வென்றிருக்கிறான் என்றால் எத்தனை மரக்கலங்கள் சென்றிருக்கும்? எத்தனை வீரர்கள் அங்கே சென்று போர் புரிந்திருப்பார்கள் என்பதை கற்பனை மட்டுமே செய்யமுடிகிறது. இவனது கங்கை வெற்றியையும் கடார வெற்றியையும் மூவருலா போன்ற இலக்கியங்களும் சிறப்பித்துக் கூறுகின்றன.

(கட்டுரையாளர் தொல்லியல் துறை அறிஞர்)

மே, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com