அற்புதவள்ளிகளின் லேண்ட்மார்க்!

அற்புதவள்ளிகளின் லேண்ட்மார்க்!

Published on

வேலைகெடைச் சிருச்சு.. இப்ப ட்ரைனிங்.. அப்றம் கன்ஃபார்ம் பண்ணிருவாங்க,'' என்கிற முதல் பொய்யுடன் ஆரம்பித்தது என்னோட வேலைக்குப் போகும் பெண்கள் விடுதி வாழ்க்கை.

அட்வான்ஸ் தொகை ஐயாயிரம், டார்மிட்டரின்னா 3000.. ப்ளஸ் ஈபி சார்ஜ் யூனிட்டுக்கு ஒன்பது ரூபா.. (குறைஞ்சது ஒரு ஆளுக்கு இத்தனை யூனிட்டுன்னு எதோ ஒரு கணக்குப் பண்ணி ஒரு ஆயிரம் ரூபா. ) அப்புறம் வெஜிட்டேரியன் ஃபுட்டுன்னா 3000 ரூபா.. வாரத்துக்கு ஒரு தபா சிக்கனும், ரெண்டு தபா முட்டையும்ன்னா 4000 ரூபா.. இப்டி ஒரு பத்தாயிரம் குடுக்க முடியறவங்க மட்டும் தான் மினிமம் கேட்டகரி.. மூணு காட்.. நாலு காட்.. அட்டாச்டு பாத்ரூம்.. ஆளுக்கொரு ப்ளக்பாயிண்டு.. அடுக்கடுக்கு இல்லா தனிக்காட்.. ஆளுக்கொரு கப்போர்டு.. அப்டியே ஏசி.. அடிஷ்னலா டீவின்னு.. வசதிக்கேத்தபடி ஆயிரம் கூடும். அடிப்படைத் தேவைக்கே கையில ஐயாயிரம் தான் இருந்ததால, அடுத்தமாசம் பொறக்குறதுக்குள்ள அந்தப் பத்தாயிரத்தை சம்பாதிக்க வெறிப்பிடிச்சு வேலைத்தேடிய என்னோட வேட்கை மிகுந்த வேட்டைக் காலம்.

சனி, ஞாயிறு மட்டும் தான் ஹாஸ்டல்ல முழுநாள் இருக்கமுடியும். ரூம்னா கூட நாலு சுவத்துக்குள்ள ஒளிஞ்சுக்கலாம்.. டார்மிட்டரிங்கறதால கட்டாயமாக காலையிலே கிளம்பி யாகணும். இனிமே ராத்திரி வேகமா படுத்து விடியக்காலைல வேகமா எந்திரிச்சிடணும்னு நான் பொறுப்பா அலார்ம் வைச்சு, படுக்கப்போக கண்ணுக்கு நேரா டியூப்லைட். போர்வைப் போத்தியும் வெளிச்சம் உள்ளுக்குள்ள பளீருங்குது. கீழ்க் கட்டில் பயங்கர டிமாண்டு. வருஷக்கணக்கா அந்த டார்மிட்டரியிலே தங்கி வேலைக்குப் போகுற சீனியர் வொர்க்கிங் வுமென் தங்கியிருக்காங்க.. அவங்களோட வழக்கமான பழக்கத்துலயே அது தெரிஞ்சுது. மேல் கட்டில்ல படுத்துருக்கோங்கற நினைப்பே ஒழுங்காத் தூங்கவிடல. பாத்ரூம் போக ஒவ்வொரு தடவையும் இறங்கி, ஏறணுங்கறதுனால தண்ணிக்குடிக்கிறதக்

கண்ட்ரோல் பண்ணி காலையில ஒரேடியா குளிச்சுக் கௌம்பிக்கிற கெட்ட... கெட்ட பழக்கம் பழகினகாலம். அலார்ம் அடிச்சு முதல் ஆளா நாந்தான் எந்திருக்கப் போறன்ற நெனைப்புலக் கண்ணைத் திறக்கும் போது.. அச்சச்சோ மணி எட்டாயிருச்சா..ன்னுப் பதட்டப்பட வைச்சிருச்சு..

வொர்க்கிங் வுமென் ஹாஸ்டெல்.. ஸ்கூல் காலேஜ் கேர்ள்ஸ் ஹாஸ்டெல் ரெண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம் அன்னைக்குத் தான் புரிஞ்சுது.

ரெண்டு கட்டில், நாலு கட்டில், மூணுகட்டில், டார்மிடரி எல்லாம் அதே தான்.. ஆனா இங்க எல்லாப் பொண்ணுங்களும் ரொம்பப் பொறுப்பா இருந்தாங்க.. டைம் டேபிள் போட்டமாதிரி அலார்மே இல்லாம நேரப்படி நடந்துகிட்டு இருந்தாங்க. எந்த அரட்டையும், சோம்பேறித் தனமும் இல்ல.. போட்டி போட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அதுவரை நைட்டியிலும், ஷார்ட்ஸ் டீஷர்ட்டிலும், எண்ணெய் தடவிக் கொண்டை போட்டு என்னைப் போல் இருந்த பெண்கள், திடீரென விசித்திரமான உடைகளுடன் மாடர்ன், மங்களம், செமி மாடர்ன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாறி இருந்தார்கள். அவர்கள் மேக்கப்பையே வெறித்துப் பார்த்தவளாய், ஒவ்வொரு பெண்ணையும் உற்றுநோக்கி, அவர்கள் செய்யும் வேலை என்னவாக இருக்கும் என்று எனக்கு நானே ஊகித்துக் கொண்டிருந்தேன்.

அவர்களின் பேச்சு எப்போதும் காசைப் பற்றியதாகவே இருந்தது. உணவைப் பற்றி, உறவினர்கள் பற்றி, ஊருக்குப் போய்வந்ததைப் பற்றி பேசினாலும் காசைப் பற்றியே தான் பேச்சுப் போகும். வீட்டுக்கு அனுப்ப வேண்டியது, போய் வந்த செலவு,டிபன் செலவு, டிக்கட் பாப்கார்ன் செலவு, அந்த மாசத் தோட ஸ்பெஷல் செலவுனு.. சுயமா சம்பாதிச்சு சுயமாத் தன் தேவையை தானே பூர்த்தி செஞ்சுக்கிற சுதந்தரமான பொண்ணுங்க. அப்பல்லாம் நாமும் ஒரு வேலைக்குப் போகும் பெண் ஆகணுங்கறது மட்டும் தான் என் கனவு..

அதுவரை பள்ளி , காலேஜ் மாணவிகள் விடுதியிலேயே தங்கிப் படித்திருந்த எனக்கு இரட்டை சடை & ஒற்றை சடைக்கு மாறியதைத் தவிர வேறு பெரிய அனுபவ வித்தியாசத்தைத் தந்திருக்கவில்லை. விடுதிங்குறது வீட்டை விட கொஞ்சம் சுதந்திரமான இடம். ஆண்கள் என்ற மாற்றுப்பாலினம் இல்லாத, எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்காத உலகமாக இருந்தது அதனால் அதிகமான அலட்டல் இல்லாத இடமாக இருந்தது. முக்கால்வாசி நேரமும் அப்பா அம்மாவை நினைத்து ஏங்கி, அடுத்த விருந்தினர் தினம் எப்ப வரும் என்று காலெண்டர் பார்ப்பதாகவே இருந்தது.

வீட்ல இருந்து வகுப்புக்கு வர்ற டேஸ்காலர் பெண்களோட சுதந்திரத்து மேல ஏக்கமும், அவர்கள் மேல் வீசும் வீட்டுவாசத்தின் மூலம் ஏக்கம் தணிவதும், அவர்கள் கொண்டுவரும் புளிசாதம், லெமன் சாதத்தின் மீது மட்டுமே குறியாயும் இருந்தது.

தினமும் டிவி பாக்கமுடியும், பஸ்ஸுல வேடிக்கைப் பார்க்க முடியும், அடுத்த வீட்டில இருக்குற தோழர், தோழிகளை அடிக்கடிப் பார்க்க முடியும். அதுக்கப்பறம் கொஞ்ச நேரம் ஹோம் வொர்க் பண்ணிட்டு, அடுத்த நாள் வகுப்புல மட்டும் படிப்பை வேலையா கவனிச்சாப் போதும். அரட்டை அடிக்க முடியாது, அடாவடியாய் உடை அணியமுடியாது. முக்கியமாக அவுட்டிங் போகமுடியாது. அப்பா அம்மாவின் உத்திரவாதம் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் அரெஸ்ட் தொடர்ந்தது.

அதுவரைக்கும் யாரோ போட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ல வாழ்ந்த எனக்கு ஒரு புது விதமாக ஆரம்பிக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்த வொர்க்கிங் வுமென் ஹாஸ்டெல் ரொம்ப மிரட்சியா இருந்தாலும், ஒரு புது தெம்பையும், நான் என்னை மாற்றியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தையும் கொடுத்தது.என்னோட அடையாளமான சிரிப்பு மாறி, நான் சீரியஸ் ராணியாகி முதன்முதலாக உழைக்கத் தயாரான பட்டறைக்காலம்.

இந்த விடுதிகளில் இத்தனை மணிக்கு வந்திடணும்னு ரூல்ஸும், வரலன்னா அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் முகவரியும் கொடுத்திருக்க வேண்டியிருப்பதால் எப்போதும் தலை மேல ஒரு கத்தி தொங்கிக்கிட்டே தான் இருக்கும். அந்த சுதந்திரம் போதும் என்று எல்லை உணர்ந்த அக்மார்க் நல்ல பொண்ணுங்க ஒரு ரகம்.. திருடின சுதந்திரம் அனுபவிக்கிற ஒரு ரகம்... அடாவடியாக அனுபவிக்கிற இன்னொரு ரகம் இருக்கு. அதுல ஒண்ணுதான் நான்.

மொத்த சுதந்திரத்தையும் இரண்டு மூன்று வருடங்களில் மொத்தமாய் வாழ்ந்துவிடத் துடிக்கும் பட்டாம்பூச்சிப் பெண்கள் இன்னொரு புறம். அவர்களில் ஒருவளாய் தான் என் அனுபவம் இருந்தது. என்ன ஆகப்போறோம்.. என்னவா இருக்கோம்.. என்னவெல்லாம் ஆகலாம்.. என்கிற எந்தத் தெளிவும் இல்லாத, தெளிவு என்பதே என்னவென்று குழப்பிக்கொண்டிருந்த எனக்கு என் வொர்க்கிங் வுமென் ஹாஸ்டல் பல பெரிய கனவுகளும், கதைகளும், திட்டங்களும், அன்பும், கைமாற்றுக் கடனும் பரிமாறப்பெற்ற அற்புதவள்ளிகளின் லேண்ட்மார்க்காக இருந்தது. தன் கனவை சுமந்து சதா இயங்கும் பெண்களைப் பார்ப்பது வேறுமாதிரியான அழகு.

(உஷா கிருஷ்ணன் என்கிற சி.கி.ராணி, திரைப்பட இயக்குநர். ராஜாவும் மந்திரியும் என்கிற படம் மூலம் கவனம் ஈர்த்தவர்)

செப்டம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com