அறிவியல் கல்வியால் ஆகாயம் அளக்கலாம்!

அறிவியல் கல்வியால் ஆகாயம் அளக்கலாம்!

Published on

ஏதேனும் அரசுப் பணி, ஆசிரியர், மருத்துவர், பிற்காலத்தில் பொறியியல், பின்பு எந்தத் துறையில் கல்விகற்றாலும் கணினித்துறையில் பணி வாய்ப்பு.. இப்படித்தான் பல்லாயிர மாணவ, மாணவிகளுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் சுட்டிக்காட்டினர். ஆனால் இன்று, பல புதிய திசைகள் திறந்துள்ளதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அறிவியல் படிப்புகளைப் பற்றி இங்கு பார்ப்போம். இதில் பல ஊக்கத்தொகைகள் உண்டு.

இளநிலை முதல் முதுநிலை அறிவியல் வரை:

முதுநிலை அறிவியல் துறையில் சில ஊக்கத்தொகைகள் தகுதித் தேர்வுகள் மூலமும் பல ஊக்கத்தொகைகள் சமூகநீதியின் அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, Post - Graduate Merit Scholarship University Rank Holders வழியாக, இளநிலைக் கல்வியில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை பெறும் மாணவ, மாணவிகள் முதுநிலைக் கல்வி பயிலும்பொழுது மாதம் 3100 ரூபாய் வழங்கப்படுகிறது.

12 ஆம் வகுப்பு நிறைவுசெய்துவிட்டு, இளநிலை அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை கல்விப் பயில்வோர் JEE நுழைவுத் தேர்வில் 10000 இடங்களுக்குள் பெற்றிருந்தால் Inspire Scholarship வழியாக மாதம் 5000 ரூபாய் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வருடம் 80000 கூடுதலாகவும் வழங்கி, எல்லோரும் கோடைகால ஆராய்ச்சிப்பணிகளுக்கென தனியாக 20000 ரூபாயும் பெறுவார்கள்.

இவற்றுடன் சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளிலும் சர்வதேச மாணவ, மாணவிகளுக்கெனவும், இந்திய மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாகவும் பல்வேறு ஊக்கத்தொகையுடனான பயணச்செலவு வாழ்க்கைச்செலவிற்கெனவும் நிதியினை வழங்கு கிறார்கள். இவற்றில், பல ஊக்கத்தொகைகள், பொருளாதார ரீதியில் பின்னடைவோடு, அயல்நாடுகளில் கல்விக் கற்க வாய்ப்பில்லாமல் தவிப்போருக்கென சிறப்புச்சலுகைகளுடன் வழங்கப்படுபவை.

குறிப்பாக, British Council Scholarship for Women in STENஎன்ற திட்டத்தின்படி, இந்திய மாணவிகளுக்கு (குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு) இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் முதுநிலை உயர்கல்விக் கற்க பெரும் நிதி வழங்கப்படுகிறது.

முதுநிலை முதல் ஆய்வுக்காலம் வரை:

இந்திய ஒன்றிய அளவில் Junior research fellow / senior research fellow  என்ற ஆய்வுக்கால ஊக்கத்தொகையாக, ஒன்றிய பல்கலைக்கழகங்கள், ஒன்றிய ஆராய்ச்சி மையங்கள், ஆராய்ச்சிகள் கல்வி நிலையங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தொடக்கமே கூட மாதம் 31000 ரூபாய் வழங்கப்படுகிறது.

CSIR - NET

தேசியத் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் CSIR - UGC NET தேர்வு, வேதி அறிவியல், இயற்பிய அறிவியல், உயிர் அறிவியல், கணிதவியல், கடலியல், தாவர அறிவியல், வளிமண்டலம் உள்ளிட்ட துறைகளின் உட்பிரிவுகளில் உயர்கல்வி, இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர், துணைப்பேராசிரியர்களுக்கான தகுதியினை உறுதி செய்கிறது.

இளநிலை ஆராய்ச்சிகள் காலங்களில் மாதம் 31000 ரூபாயும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு மாதம் 35000 ரூபாய் தொடக்க ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

GATE தேர்வு:

இளநிலை பொறியியலாளர்கள் முதுநிலை பொறியியல் மற்றும் அரசுப்பணிகளுக்கான தகுதிக்கான தேர்வாக GATE இருப்பது பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான். அதேவேளை, இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், உயிர் அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளும் GATE தேர்வில் உள்ளடக்கம்.

இத்தேர்வு மூலம் இந்திய தொழிற்நுட்பக் கழகம், இந்திய அறிவியல் கழகம், ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்டவற்றில் ஊக்கத்தொகையுடனான உயர்கல்வி பெறுவதற்கும் மேலதிகமான ஆராய்ச்சிப் பணிகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

முதுநிலை கல்வியில் தொடக்கமாக மாதம் 12500 ரூபாய் ஊக்கத்தொகை கல்விக்காலம் முழுமைக்கும் கிடைக்கிறது.

இத்தேர்வின் வழியாகவும், ஆசிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சிலவற்றிக்கு தகுதி உறுதிச்செய்யப்படுகிறது.

என் அனுபவம்:

எல்லோரும் பொறியியல் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் அறிவியல் துறையில் மட்டுமே கல்வி பெறுவேன் என இலக்கு வைத்து, முனைவர் பட்டம் என்பது மட்டுமே என் உயரம் என்பதனையும் உணர்ந்தே கல்விகற்றேன்.

என்னுடைய குடும்பச்சூழல், எனது சமூக நிலை, எனது கல்வி மதிப்பெண் உயரம் இவை எதுவுமே எவ்வித ஊக்கத்தொகையும் வழங்காத நிலை! ஆனாலும், வேலை தேடி அலைவதிலோ, வேலைக்கான உயர்கல்வி பெறுவதிலோ உடன்பாடில்லாமல் அறிவியல் துறையை மட்டுமே கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டிருந்த காலம்!

அறிவியல் துறையில் இயற்பியலா, வேதியியலா என்பதில் இரண்டையும் விட மனசில்லாமல், இயற்பியல், வேதியியல், கணிதவியல் மூன்றையும் சேர்த்திருந்த பயனுறு அறிவியல் (Applied AScinece) துறையில் இளநிலைக் கல்வி.

வேலைவாய்ப்பிற்கே வழியில்லாத பொருட்களின் அறிவியல் (Materials Science) துறையில் முதுநிலைக் கல்வி.

முனைவர் பட்ட ஆய்வினை ஊக்கத்தொகையோடு தொடங்க IIT, IISc உள்ளிட்ட ஆராய்ச்சிகள் கல்வி நிலைய நுழைவுத் தேர்வுக்கு தயாரானேன்.

அதற்கென, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சிகள் கழகத்திலும் இந்திய அறிவியல் கழகத்திலும் (IISc) ஆராய்ச்சி மாணவராக பணிபுரிந்து, நுழைவுத் தேர்விற்கு தயாரானேன்.

முனைவர் பட்ட ஆய்விற்கென நார்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. ஐரோப்பிய நாடுகளில் முனைவர் பட்ட ஆய்வு என்பது வெறும் கல்வி மட்டும் அல்ல, ஆராய்ச்சிப் பணி. ஆதாலால், மாத ஊதியம் உண்டு, அதிலும் ஸ்காண்டினேவியன் நாடுகளில் (நோர்வே, சுவீடன், டென்மார்க்) முனைவர் பட்ட ஆய்வுக் கால ஊதியம் பிறைரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுதும் மிக மிக அதிகம்.

பிறகு, முதுமுனைவர் ஆய்விற்காக (Post - doctoral research) இரண்டு ஆண்டுகள்சீனாவின் ஜேஜியாங்க் பல்கலைக்கழகம் சென்றேன். முனைவர் பட்டம் நிறைவு செய்தது, இயற்பியல் துறையில், நானோ அறிவியலில், நானோ கார்பன் குழாய் (Carbon nanotubes) பொருட்கள் குறித்த ஆய்வு. முதுமுனைவர் ஆராய்ச்சி பொருட்களின் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில்.

பிறகு, இரண்டாம் முதுமுனைவர் ஆய்வு (இரண்டு ஆண்டுகள்) சுவீடனின் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில், அங்கே ஆராய்ச்சியாளர் பணிக்கென இன்னும் இரண்டு ஆண்டுகள், வேதியியல் மற்றும் வேதிப்பொறியியல் துறையில் பணிபுரிந்தேன்.

தற்பொழுது, அயர்லாந்து நாட்டின் லிமெரிக் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன்.

பொருட்களின் அறிவியல் துறையினுள், பொருட்களை பகுப்பாய்வு செய்யும் எலக்ட்ரான் நுண்ணோக்கியில் (electron microscope) எனது அனுபவம் பலவருடங்கள் என்பதால், துறைசார் வல்லுநர் என்பதையும்விட கருவிசார் வல்லுநர் (Instrument Scientist) வகையில், பல்வேறு துறைசார் ஆராய்ச்சிகளுக்கும் என்னைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

அதிலும், பல்துறை ஒருங்கிணைவு (interdisciplinary), பல்துறை கூட்டாய்வு (Multidisciplinary), பல்துறை இலக்காய்வு (transdisciplinary)என்ற வகையில் நவீனுலகம் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையை வடிவமைத்துச் செல்வதால், இங்கே ஒரு துறையின் அறிவாற்றல் இன்னொரு துறைக்குத் தேவைப்படுகிறது. அதனோடு, பல்துறை இலக்காய்வு என்ற புதிய துறை, அதில், பலத்துறையினரின் கூட்டோடு, சமூகக்கண்ணோட்டம், மனித நேய இலக்கோடு

தேசங்களின்/சமூகங்களின்/உலகின் மேம்பாடுகள் குறித்தான ஆய்வுத்துறை விரிவடைந்து வருவதால், இனி கல்வித்துறையில் இவை சிறந்தது, இவை பணம் கொழிப்பவை, இவை வேலைவாய்ப்புக்கானவை, இவை கௌரவத்திற்கானது என்ற முடிவுரையில் தேங்குவதற்கு வாய்ப்பில்லை.

முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து

ஜூன், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com