தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் துக்கத்தை, தனிமையை, மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை இவருடன் தான் கழிக்கிறார்கள். நம் காலத்தின் ராகதேவன் இவர். இசை ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத ‘ராஜா அனுபவம்’ என்று ஏதாவது அந்தரங்கமாக இருக்கும். காலத்தால் அழியாத ஏராளமான பாடல்களைத் தந்திருக்கும் அவருடன் அந்திமழைக்காகப் பேசியதிலிருந்து...
பஞ்சு அருணாசலம் அவர்களுடனான உங்கள் அறிமுகம் பற்றிச் சொல்லுங்கள்...
இதற்காக நான் ஒரு கதையே சொல்ல வேண்டும். நாங்கள் சினிமாவில் இசையமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அண்ணன் பாஸ்கர் எனக்காக நிறைய நடந்திருக்கிறார். யாராவது புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கியிருந்தால் அங்கு போய் வாய்ப்புக் கேட்டு நிற்பார் பாஸ்கர். அது போலியான கம்பெனியாகக் கூட இருக்கலாம். சார் என் தம்பி நல்லா மியூசிக் பண்ணுவான். அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்று போய்க் கேட்பார். நான் எந்த கம்பெனிக்கும் போய் வாய்ப்புக் கேட்டதில்லை.அப்போது நாங்கள் இசைக்குழு வைத்து மெல்லிசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய புதுமுக இயக்குநர்கள் வந்துகொண்டிருந்தார்கள். வி.சி.குகநாதன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன் போன்றவர்கள் வந்தநேரம் அது.
இவர்களையெல்லாம் ஒரு கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து நான் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடிக்காட்டி வாய்ப்புக் கேட்டோம். வந்தவர்கள் எல்லோரும் சரி பார்க்கலாம், பாட்டு நல்லாருக்கு, என்று சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, அந்த இயக்குநர்கள் யாருக்கும் இந்த இளையராஜாவைத் தெரியவில்லை.
அதுவும் நான் இந்தந்த பாட்டு பண்ணியிருக்கேன். லட்டு பண்ணியிருக்கேன், பூந்தி பண்ணியிருக்கேன், காரம் பண்ணியிருக்கேன்னு காட்டின பின்னாடி கூட இது நன்றாக இருக்கிறதென்று தெரியவில்லை.
ஆனால் என் நண்பன் ஆர்.செல்வராஜ், பஞ்சு அருணாசலத்திடம் ‘என் நண்பன் ஒருத்தன் ஜி.கே. வெங்கடேஷ்கிட்ட உதவியாளரா இருக்கான். நல்லா மியூசிக் பண்ணுவான். நீங்க ஒரு வாய்ப்பு தரணும்’னு கேட்டிருக்கிறான். அவர் அப்போது சின்ன படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தார். சரி வரச்சொல்லு பார்க்கலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாம்பலத்தில் ஒரு சிறிய அறையில் லுங்கியும் பனியனும் மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தார் பஞ்சு சார். ரொம்பவும் சின்ன அறையில் ஒரே ஒரு டேபிள் மட்டும் இருந்தது. லேசான மது வாடையும் சிகரெட் வாடையும் அறையில் மிதந்தன.
‘அண்ணே நான் உங்களைப் பாத்திருக்கேன். சபதம் படத்துக்குப் பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தபோது நீங்களும் வந்தீங்க’ என்று நான் சொல்லவும் ‘ஆமாம் நானும் உன்னைப் பாத்திருக்கேன். ஆமா, நீ தனியா மியூசிக் பண்றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘எங்கே பாடிக் காட்டு’ என்றார். அங்கிருந்த டேபிளில் நான் கம்போஸ் பண்ணியிருந்த பாடல்களை அவருக்கு தாளம் போட்டு வாசித்துக்காட்டினேன். அவர், ‘நான் காமெடி படங்களுக்குத்தான் எழுதிகிட்டிருக்கேன். நீ வாசிச்ச பாடல்களுக்கென்று படம் எடுத்தால்தான் பாட்டெல்லாம் நல்லாயிருக்கும்’ என்றார். செல்வராஜ் மருத்துவச்சி என்ற கதையை எழுதினான். அந்த கதையே அன்னக்கிளி என்ற பெயர்வைத்துத் தயாரித்தார்.
பின்னணிப்பாடகர்களைப் பாடவைத்து ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக்காட்டியும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத இயக்குநர்கள் மத்தியில் வெறும் டேபிளில் தாளம்போட்டுக் காட்டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம். பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் எப்படி நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார்கள். ‘நான் என்ன அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன் எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார். இதை நான் மறக்கமுடியுமா?
உங்கள் இசைக்காக நீண்டநாள் காத்திருந்த இயக்குநர் யார்?
பாசில். பூவே பூச்சூடவா படத்திற்குத்தான் என்னிடம் வந்தார். அதற்கு முன் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மலையாளத்தில் ஒரு படத்தை எடுத்து அது சில்வர் ஜூப்ளியாக ஓடியிருந்தது. அந்தப் படத்தை தமிழில் எடுக்க வந்திருந்தார். மலையாளப் படத்தைப் போட்டுக் காண்பித்து,‘இந்தப் படத்துக்குத்தான் நீங்கள் இசை அமைக்கவேண்டும்’ என்றார். ‘ஏற்கெனவே நிறையப் படங்களுக்கு ஒப்புக் கொண்டிருப்பதால் இப்போது என்னால் இசையமைக்க முடியாது. வேறு யாரையாவது வெச்சி மியூசிக் பண்ணிக்குங்க” என்றேன். ‘நீங்க எவ்வளவு நாள் சொன்னாலும் நாங்க காத்திருக்கோம்’ என்று சொன்னார். இப்படி யாராவது சொன்னால் எனக்குக் கோபம் வந்திடும். நீங்க இல்லாமல் இந்தப் படத்தை நான் பண்ணவே மாட்டேன்னும் யாராவது சொன்னால் சத்தியமா அந்தப் படத்துக்கு நான் மியூசிக் பண்ணவே மாட்டேன். அப்படி நிறையபேரைத் திருப்பி அனுப்பியிருக்கேன். ஆனால் பாசில் விஷயத்தில் நிஜமாகவே எனக்கு நேரம் இல்லை. அவர் எனக்காக ஒரு வருஷம் காத்திருந்தார். அப்படி இசை அமைத்த படம்தான் பூவே பூச்சூடவா. இதுதான் பாசிலோட என் அனுபவம்.
திருவாசகத்துக்கு இசை அமைத்ததுபோல நாயன்மார்களின் பாடல்களுக்கு இசை அமைக்கும் விருப்பம் உண்டா?
இசையிலேயே தமிழ் வளர்த்தவர்கள் நாயன்மார்கள். அவர்கள் பாடல்களெல்லாம் இசை வடிவத்திலேயே இருக்கின்றன. இதற்கு நான் தனியாக இசைஅமைக்க வேண்டியதில்லை. ‘உண்ணாமலை உமையாளுடன் உடனாகிய ஒருவன்’ என்று பத்துவயதுப் பாலகன் பாடியிருக்கிறான். அதுவே இசைத்தமிழ். நான் இசைஅமைக்கத் தேவை இல்லை.
கண்ணதாசன், வாலி இவர்களுடன் பழகிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?
என்னுடைய முதல்படமான அன்னக்கிளியிலேயே கவிஞரை எழுத வைக்கவேண்டுமென நினைத்தேன். அது நடக்கவில்லை. பிறகு பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்தான் எழுதினார். ட்யூனை வாசித்த அடுத்த நொடியிலேயே படத்தின் கதைக்கும் சமூகத்துக்கும் பொருத்தமான கருத்தை உள்ளடக்கிய வரிகளை மளமளவெனச் சொல்லக்க்கூடிய ஆற்றல் கண்ணதாசன் ஒருவருக்குத்தான் உண்டு. அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க கவிஞர் ஒருமுறை பாரதிதாசனை சந்திக்கப் போயிருக்கிறார். துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ரொம்பவும் பணிவாக பாரதிதாசன் முன் நின்றிருக்கிறார். தமிழ் ஆளுமை உள்ள பெரியவர்களுக்கு எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்கு கவிஞரின் இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
அதேபோல் வாலி சார் தனித்திறமை படைத்தவர். ஒருமுறை உடுமலை நாராயண கவியை சந்திக்கப் போனபோது கவிராயர் வாலியைப் பார்த்து ‘என்ன வாலி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு எழுதியிருக்கியே.. ஆணையிட்டால் நடக்கணும். இல்லன்னா ஆணையிடக்கூடாது. என்ன பாட்டுய்யா எழுதியிருக்க’ என்று ஜாலியாகக் கேட்டிருக்கிறார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப்புறப்படுகையில், ‘அப்புறம் வீட்டில் எல்லாம் நலமாக இருக்காங்களா என்று கவிராயரிடம் விசாரித்திருக்கிறார். ‘எங்கே...பசங்க என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறாங்க’ என்று சொல்லவும், வாலி உடனே.. ‘அப்ப ஏன் நீங்க ஆணையிடுறீங்க, ஆணையிட்டால் நடக்கவேண்டாமா?’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி தனியான ஆளுமை கொண்டவர் வாலி. கண்ணதாசன், வாலி இருவருமே யாரும் வாய்ப்புக் கொடுத்ததால சினிமாவில் வளர்ந்தவர்கள் அல்ல. படாத கஷ்டங்களைப் பட்டு முன்னேறியவர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்.. அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்..
ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் சமயத்தில் கோபுரத்தின் ஒரு பகுதியைக் கட்டித்தர ஒப்புக்கொண்ட மந்த்ராலயம் அந்த பணியிலிருந்து விலகிக் கொண்டுவிட்டது. அதனால் அப்போது ஜீயராக இருந்தவர் தேசிகர் என்பவர் மூலம் பெரியவாளுக்கு திருமுகம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பெரியவாள் அதைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்து தரையில் கிராமபோன் தட்டை வரைந்து காட்டியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொரு சினிமாக்காரங்க பெயராகச் சொல்லியிருக்கிறார்கள். யாரோ ஒருத்தர் என் பெயரைச் சொல்ல, அதுதான் என்பதுபோல பெரியவர் கையை ஆட்டியிருக்கிறார்.
இந்தத் தகவலை நண்பர் ஒருவர் மூலம் நான் கேள்விப்பட்டேன். அந்த நண்பர் பிரசாத் ஸ்டூடியோ வந்து ‘இதுபோல ஸ்ரீரங்கம் கோயில் கட்ட பெரியவர் அனுக்கிரகம் பண்ணியிருக்கா... 22 லட்சம் ஆகும். நீங்க ஆறாவது நிலை மட்டும் கட்டினால் போதும் அதுக்கு 8 லட்சம்தான் செலவாகும்’ என்று சொன்னார். நான் 22 லட்சத்தையே தருகிறேன். பெரியவாளே சொல்லிவிட்டதால இது அவர் பாரமே தவிர என் பாரம் அல்ல என்று சொல்லி அனுப்பினேன். இதன் பிறகு பெரியவாளை சந்திக்க ஆர்வம் வந்தது. நானும் ஓவியர் சில்பியும் புறப்பட்டோம். அப்போது சதாரா என்ற இடத்தில் அவர் முகாமிட்டிருந்தார். அங்கே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மஹாகாவ் என்ற கிராமத்தில் இருந்தார். அங்கு ஒரு தோட்டத்தில் மாட்டுக்கொட்டகையில் ஜமுக்காளம் விரிச்சு உட்கார்ந்திருந்தார் பெரியவாள். அது மதிய நேரம். அங்கிருந்தவர்கள் என்னை அவரிடம் அழைத்துப்போனார்கள். என்னைப் பார்த்ததும் யாரு என்பது போல் சைகை செய்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். அவரளவுக்கு ஒளிபொருந்திய கண்களை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது வரைக்கும் பார்க்கவில்லை. நான் கைகூப்பினேன். கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்தது. அவர் கையில் இருந்த மாம்பழத்தைப் பிரசாதமாக எனக்குக் கொடுத்தார்.
அன்று இரவு பெரியவாள் வேறு ஒரு கிராமத்துக்குப் போவதாக இருந்தது. எனக்காகவோ என்னவோ அவர் போகவில்லை. அன்றைக்கு பௌர்ணமி இரவு. அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்திருந்தார். வானத்தில் மேகங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. பெரியவாளின் சீடர்கள், ‘இளையராஜா பாடவிரும்புகிறார்’ என்று என் அனுமதி இல்லாமலேயே கூறிவிட்டனர். அவரும் சரி என்று தலையாட்டினார். சாம கான வினோதினி என்கிற செம்பை வைத்திய நாத பாகவதரின் பாடலைப் பாடினேன். ‘சாம கான.. என்று தொடங்கும்போது என்னைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையால் உணர்ச்சி வயப்பட்டு அழுதபடியே பாடி முடித்தேன். பிறகு வானத்தில் இருந்த இருபத்தியேழு நட்சத்திரங்களை அடையாள காட்டி விளக்கினார். அந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள்.
இது மியூசிக் சீசன். இந்த நேரத்தில் இசை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?
இசை அறிவால் செய்யப்படுவது அல்ல.. இசை உணர்வுபூர்வமானது. ஒருமுறை என் வீட்டுக்கு நவராத்திரி அன்றைக்கு லால்குடி ஜெயராமன் வந்திருந்தார். அப்போது நான் ராகவர்த்தினியில் ஒரு கீர்த்தனையை அவருக்கு வாசித்துக் காண்பித்தேன். ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருந்ததைக் கவனித்து ரொம்பவும் ரசித்தார். அதன்பிறகு ராகவர்த்தனியில் அவரே ஒரு கீர்த்தனையைப் போட்டிருக்கிறார். இந்த பியூரிட்டிதான் இசை. ரெண்டுமே ப்யூரிட்டியில் இருந்து வந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம். இப்படி உணர்வுப் பூர்வமாக உள்ளிருந்து வருவதுதான் இசை. கால்குலேட் பண்ணி இந்த ராகத்தில் இப்படிப் போடலாம்; அப்படிப்போடலாம் என்று போட்டால் நம்முடைய மனத்தின் பிரதிபலிப்புதான் தெரியும். இசை தெரியாது.
ஜனவரி, 2014.