அறிஞர் அண்ணா - ஓட்டு வேட்டையிலே மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி!

அறிஞர் அண்ணா - ஓட்டு வேட்டையிலே மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி!
Published on

வாட்டம் போக்கிடும் வழியைக் காணோம்!

விலை பேசும் வித்தையை அறிவார்கள்!

சிண்டு முடிஞ்சு பார்த்தாச்சு! பங்குச்

சண்டை கிளப்புகிறார்கள்!

மும்முனைப் போட்டியை முடுக்கிவிடாதீர்!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள்!

வெண்ணெய் திரண்டு வருகிறது! பக்குவம் தேவை!

முள் நீக்கி மலர் பறித்திடுக!

தம்பி!

பஞ்சமும் பட்டினிச்சாவும், பற்றாக்குறையும் அக விலையும், கிளர்ச்சியும் கலவரமும், அடக்குமுறையும் வன்முறைச் செயல்களும், மிரட்டிக்கொண்டிருக்கக் காண்கின்றோம். சமூகம் முழுவதிலும் ஓர் சலிப்புணர்ச்சி கப்பிக்கொண்டிருப்பது விளக்கமாகத் தெரிகிறது. இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஆளவந்தார்களின் திறமைக் குறைவும் ஆணவப் போக்குமே காரணம் என்று நடுநிலையாளர் பலர் கருத்தறிவித்துள்ளனர்.

மோசமாகிக்கொண்டு வரும் நிலைமையைக் கண்டு திகைத்துப்போன நிலையில் காங்கிரசின் பெருந்தலைவர்கள், நடைமுறைக்கு ஒத்துவரவே முடியாத யோசனைகளை வழங்கிக் கொண்டு, செயல் மறந்துகிடந்திடக் காண்கின்றோம். எங்கே பார்ப்பினும் ஓர் ஏமாற்றம், எரிச்சல்! விட்டேனா பார்! என்ற விராவேசம்! வீழ்ந்துபடுவதாயினும் நான் எண்ணியதைச் சாதித்தே தீருவேன் என்ற சூளுரை! கடை அடைப்புகள்! ரயில் நிறுத்தங்கள்! தீயிடல்! இடித்திடல்! தகர்த்திடல்! இவைகளைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள்!! - எந்த ஒரு நாகரிக அரசும் சகித்துக்கொள்ள முடியாதன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தம்பி! இவைபற்றி நான் இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம், இந்தப் பிரச்சினையை அலசிப் பார்த்திட வேண்டும் என்பதற்காக அல்ல; இத்தகைய மோசமான, வேதனை தரத்தக்க சூழ்நிலையின் பின்னணியில், பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறதே அதனைக் கவனித்தனையா என்று உன்னைக் கேட்பதற்காகத்தான்.

சட்டம், சமாதானம், ஒழுங்கு இவைகள் செம்மையான முறையிலே காப்பாற்றப்பட முடியாத சூழ்நிலையில், உணவு நெருக்கடி பஞ்சம், பட்டினிச்சாவு என்ற அளவு முற்றிவிட்டிருக்கிற சூழ்நிலையில், சமூகத்தின் எந்த ஒரு முனையிலும், மனநிறைவு இல்லாமல், பிரச்சினைகள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

பஞ்சமும் பட்டினியும் கொட்டும் நிலையில், பட்டினிச் சாவு கண்களை உறுத்தும் நிலையில், அகவிலை தாக்கிடும் நிலையில் எப்படி மக்களை அணுகுவது என்ற அச்சமோ, இந்த நிலையில் உள்ள மக்களிடம் ஆதரவு திரட்டிட முடியுமா என்பதிலே ஐயப்பாடோ, துளியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரியக் காணோம். இதனை என்னென்பது? துணிச்சல் என்பதா? அல்லது மக்கள் வேதனையிலே தத்தளிக்கும் வேளைதான் அவர்களின் ஓட்டுகளைப் பறித்திடுவதற்கு ஏற்ற வேளை என்ற திட்டம் என்பதா? புரியவில்லை.

பஞ்சத்தைப் போக்க, பற்றாக்குறையை நீக்க, உணவு நெருக்கடியை நீக்க, அகவிலையைக் குறைக்க, எடுத்துக் கொள்ளப்படவேண்டிய முயற்சிகளிலே காட்ட வேண்டிய தீவிரமோ அக்கறையோ தென்படுவதைக் காட்டிலும், தேர்தல் பற்றிய தீவிரமும் அக்கறையுமே அதிகமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலே தெரிந்திடுவது காண்கிறோம்.

ஆகவே, காங்கிரஸ் கட்சி துணிச்சல் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வு பற்றிய அக்கறையுமற்று இருப்பது நன்றாகத் தெரிகிறது.

இந்தப் போக்கு இவ்வளவு வெளிப்படையாகத் தெரியும்போது, எதைக்கொண்டு அல்லது எதைக் காட்டி, மக்களுடைய ஆதரவைப் பெற முடியும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக் கொண்டிருக்கிறது என்பது, உள்ளபடியே புதிராகத்தான் இருக்கிறது.

மக்களைக் கண்டால், வெட்கித் தலைகுனியவேண்டிய பல செயல்கள், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றன. பாராளுமன்றத்திலே எழுப்பப்படும் புகார்கள், பத்திரிகைகளிலே விவாதிக்கப்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கவனிக்கும்போது, காங்கிரஸ் கட்சி மக்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்க முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. ஆனால், பார்க்கின்றாயே தம்பி! புதிய புதிய படகு மோட்டார்கள் பறக்கின்றன! புதுப்புது கதர்ச் சட்டைகள் தைக்கப்படுகின்றன! அவர் காங்கிரசில் சேர்ந்தார்! இவரை இழுத்துக்கொண்டார்கள்! - என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. தேர்தல் வேலையிலே காங்கிரஸ் கட்சி மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டிருக்கிறது.

தம்பி! இரண்டொரு திங்களுக்கு முன்பு ஒரு நகரத்தில், நமது கழகக் கூட்டம். நான் பேசினேன். அன்று அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர், நமது கழகத்தவர், ஆண்டு பலவாக எனக்கு நண்பர், காங்கிரசு தோற்கடிக்கப் படவேண்டும் என்பதிலே ஆர்வம் கொண்டவர்.

நாலைந்து நாட்களுக்குள், திடீரென அவரை, அந்தப் பக்கத்துக் காங்கிரஸ் தலைவர்கள் மொய்த்துக்கொண்டு, அவரை நம்மிடமிருந்து பிரித்து, காங்கிரசில் சேர்த்து, அவரையே அந்தத் தொகுதியில் நமது கழகத்தை எதிர்த்து நிற்க - காங்கிரஸ் வேட்பாளராக நிற்க - ஏற்பாடு செய்துவிட்டனர் என்று அறிகிறேன்.

இஃது, மனித இயல்பு எந்தெந்த வகையாகவெல்லாம் மாறக் கூடியது கெடக்கூடியது என்பதை மட்டுமல்லாமல், ஓட்டு வேட்டையிலே மட்டும் குறியாக உள்ள காங்கிரஸ் கட்சி எத்தனை விதமான தரக் குறைவான செயலுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதையும் நாம் உணரும்படி செய்கிறது.

இந்தப் புதிய வலிவினைத்தான் அவர்கள் பெரிதும் இன்று நம்பிக்கொண்டுள்ளனர். கொள்கை வலிவையும் அல்ல, சாதனைகளையும் அல்ல.

அவர்கள் மற்றும் ஓர் விஷயத்தில் மிக அதிகமான அளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். மும்முனைப் போட்டியைத் தவிர்க்க வேண்டும், காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளுக்குள் ஒரு தோழமைத் தொடர்பும் தொகுதி உடன்பாடும் ஏற்பட வேண்டும். காங்கிரசல்லாத ஓட்டுகள் சிதறிவிடும்படி விட்டு விடக்கூடாது என்பதனை நமது கழகம் வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

கூட்டு என்றும் எதிர்ப்பு அணி என்றும் உடன்பாடு என்றும் பல்வேறு விதமாகப் பெயரிட்டு அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டுக்கு, நமது கழகம் முதலிடம் கொடுத்திருக்கிறது.

இதற்கான பேச்சு வார்த்தைகள் வளர வளர, கனிவுக்குப் பதிலாகக் கசப்பு வளரும், தோழமைக்குப் பதிலாகப் பகைமை எழும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

கூடுமானவரையில், இந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தராத நிலையை உண்டாக்க வேண்டுமென்பதற்காகக் காங்கிரசுக் கட்சி தன்னாலான முறைகளைக் கையாண்டு வருகிறது.

அறிஞர் அண்ணாவின் கடிதம் - 4-12-66   

மே, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com