அரவிந்தன் – பூரணி

அரவிந்தன் – பூரணி
Published on

நான் கல்லூரி மாணவனாக இருந்த நாட்களில் அந்த வயதுக்கே உரிய கனவுமயமான நாட்களில் கரைந்து கொண்டிருந்தேன். லட்சியங்கள். இலக்குகள், இலக்கற்ற பயணங்கள், தூங்கும் பகல்கள், தூக்கமற்ற இரவுகள், கற்பனைகள், கற்பிதங்கள், மனோரஞ்சித மயக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்த கால்களை இழுத்துப்பிடித்து ஓரிடத்தில் நிறுத்தியவையாக நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு, குறிஞ்சிமலர் ஆகிய இரு நாவல்களும் அமைந்தன.

என் மனதில் லட்சிய வேட்கையை ஊன்றி நீர்வார்த்த பெருமை இந்நாவல்களுக்கு உண்டு.இன்று இந்தப்பக்கத்தை எழுதுவதற்காக குறிஞ்சி மலரை மீண்டும்  ஒருமுறை வாசித்தேன். கற்பனாவாதமும் காந்தியமும் கலந்த இந்நாவலின் பல  பக்கங்களை சிறு புன்னகையோடு இன்று கடக்க நேரிட்டது.

எனினும் இன்றைய என் மனதை ‘ஸ்விட்ச் ஆஃப்’   செய்துவிட்டு அன்றைய என் இள மனதுக்குள் புகுந்து வாசித்தேன். வாசிப்பில்மட்டும்தான் இந்தக் கூடுவிட்டுக் கூடு பாயும் மாயமெல்லாம் செய்துவிட முடியும். பல இடங்களில் கண்ணீர் விட்டேன். பூரணி பிடித்த குடைக்குள் அரவிந்தனாக நானும் புகுந்து மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் வரை மழையில் நனைந்தும் நனையாமலும் பூரணியோடு நடக்கும் பேரானந்தத்துக்காக நடந்தும் விட்டேன். மழையில் நனைந்த அவளுடைய செருப்பில்லாத சிவந்த மருதாணி பூசிய  பாதங்களைக் கூடப் பார்த்துவிட்டேன்.

தப்பான பணத்தை வேண்டாம் என மறுத்துத் தூர எறியும் பூரணியும் அரவிந்தனும் மீண்டும் என் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். அரவிந்தனின் தினசரிக்குறிப்புகளை பூரணியாகவே மாறி நான் என் கன்னங்கள் வெட்கத்தால் சிவக்க வாசிக்கிறேன்.

‘குடையைப் பிடித்த கரம்-மனக்

கொதிப்பைச் சுமந்த முகம்-பெரும்

பசியில் தளர்ந்த நடை’

என்று பூரணி நடுவீதியில் மயங்கி விழுந்ததுபற்றி அரவிந்தன் எழுதிய கவிதையை குறுகுறுக்கும் மனதுடன் வாசிக்கிறேன்.

சத்தியத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராட்டமாகப் பின்னர் நாவல் விரிகிறது. பணக்காரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என  நம்பவைக்கும் மங்களேஸ்வரி அம்மாள். பூரணியைச்

சிக்கெனப்பிடித்து அவளுடைய வாழ்விலும் தாழ்விலும் உடன் நிற்கும் அந்த அம்மாள் ஒரு முக்கிய கதாபாத்திரம்.

பழந்தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக்குடித்த பூரணி மேடையேறிப் பிரசங்கம் செய்யும் ஒரு கதாபாத்திரம்.இன்று அப்படியான ஒரு பெண்ணை திரும்பிக்கூடப்பார்க்காத மனநிலை வாய்த்துவிட்டது. ஆனால் அன்றைய நான் பூரணிக்காக ஏங்கியிருக்கிறேன்.கண்ணீர் சிந்தியிருக்கிறேன். பின்னோக்கிப் பார்த்தால் ஒருவிதத்தில் நானே ஒரு காமெடி பீஸாகத்தெரிகிறது.இப்பிடிப்பிள்ளைகளையெல்லாம் லட்சியப்பெண்ணாக வைத்திருந்திருக்கிறேனே என்று. திடீர் திருப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளையும் கொண்ட இந்நாவலுக்காக உருகியிருக்கிறேன். என் பழைய வழித் தடத்தை அறிந்துகொள்ள உதவுவதாக இன்றைய குறிஞ்சிமலர் வாசிப்பு இருந்தது என்பேன்.

மதுரை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் பூரணி போட்டியிடுகின்றாள். தொகுதிக்கே வராமல் அவள் இலக்கியச் சொற் பொழிவாற்ற இலங்கை,கல்கத்தா என்று சுற்றிக்கொண்டிருக்கிறாள்.எதிரிகள் மதுரைக்குள் பணத்தையும் வன்முறையையும் அள்ளி  வீசுகிறார்கள்.ஆனாலும் 5000 வாக்கு வித்தியாசத்தில் பூரணி வெல்லுகிறாள். சத்தியத்துக்காகவே வாழ்ந்து மடிகின்ற இடதுசாரி இயக்கத்தோழர்களுக்காகக் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் சில மாதம் வேலை செய்த (வெறும் 22000 ஓட்டுகள் வாங்கினோம்) அனுபவம் பூரணியின் வெற்றியை நாவலில் வாசிக்கையில் வெறுப்பான சிரிப்பை வரவழைத்தது.

இந்நாவலை முன்போல விமர்சனமின்றி வாசிக்க முடியவில்லை. என்றாலும் அப்படி லேசா...மறந்தாக்கிலே... ஒத்தைக்கண்ணை மூடிக்கிட்டு...

ஒருச்சாய்ச்சு.... வாசிக்கும்போது மனசு புதுசாகிப் போகத்தான் செய்கிறது. லட்சிய மனிதனாக வாழணும் என்கிற பழைய வெறி மீண்டெழத்தான் செய்கிறது. ஆனாலும் அதை அப்படியே தொடரவும் முடியவில்லை. எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?

பூரணிதான் நாவலின்  மையம். ஆனாலும் பழைய அற வாழ்க்கை பற்றிய வசனங்களில் உறைந்திருக்கும் ஆணாதிக்க வீச்சம் ஆங்காங்கே வெளிப்பட்டு

சித்ரவதை செய்கிறது. அரவிந்தனின் மறைவுக்குப்பின் வளையல்களை உடைத்துக்கொண்டு துறவுக்கோலம் பூண்டு திலகவதியாகி வரும் பூரணி அந்த வீச்சத்தின் உச்சம்.

இப்படியாகக் கலவையான மன உணர்வுகளோடுதான் இப்போது குறிஞ்சி மலரை வாசிக்க முடியும் போல...

(ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்)

நவம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com