ஸ்பானியர்களிடம் மெக்சிகோ வீழ்ந்து, வரும் 2021 - ஆம் ஆண்டுடன் 500 ஆண்டுகள் ஆகவிருக்கின்றன. 1521 - ஆம் ஆண்டு மெக்சிகோ பகுதியில் கொடிகட்டிப் பறந்த ஆஸ்டெக் இன மக்களின் மாபெரும் நகரமான டினொச்டில்டான் வீழ்ந்தது.
உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக டினோச்டில்டான் ஓர் ஏரியின் மீது அமைக்கப்பட்டிருந்தது. இறுதிவரை போராடிய ஆஸ்டெக் படையை அழித்து அந்நகரை முற்றிலுமாக எரித்து சிதைத்துவிட்டு இன்றைய மெக்ஸிகோ நகருக்கு கால்கோள் நாட்டினார் ஹனான் கார்டஸ். ஒரு சில கப்பல்களில் சில நூறு ஸ்பானிய வீரர்கள், குதிரைகள், பீரங்கிகளுடன் வந்திறங்கிய கார்டஸ், முன்பாக மாபெரும் கலாச்சார வலிமை கொண்டிருந்த 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஆஸ்டெக் சாம்ராஜ்யம் மண்டியிட்டு மண்ணோடு மண்ணானது.
இந்த பேரழிவில் ஆஸ்டெக் மண்ணில் பேசப்பட்டுவந்த நாத்தல் உள்ளிட்ட ஏராளமான மொழிகள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகின. மாயன் இன மக்கள் பேசி வந்த மொழிகளும் இதில் கரைந்துவிட்டன. மெக்ஸிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வெரா க்ரஸா என்ற வளைகுடாவில் ஹனான் கார்டஸ் கரையிறங்கியபோது, கரையோர கிராம மக்களுடன் பேச அவரால் இயலவில்லை. அந்த கிராம மக்களுடன் சைகை மொழியில் பேசமுடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கப்பலில் வந்து இறங்கிய வெள்ளைக்காரர் ஒருவர் உள்நாட்டில் சிறைப்படுத்தப்பட்டு வேறொரு இனக்குழுவிடம் இருப்பதாகக் கேள்விப்படுகிறார். அந்த நபரை மீட்டு அவருடைய உதவியுடன் உள்ளூர் மக்களுடன் பேசுகிறார். உள்ளூர் மக்களின் மொழியை அறிந்த ஓர் அடிமைப் பெண், அவருக்கு உதவியாளர் ஆகிறாள். இந்த இருவரை வைத்தே மொழிதெரியாத பிரதேசத்தில் அங்கிருக்கும் இனக்குழுக்களின் பகைமையைக் கைக்குள் கொண்டு மிகப்பெரிய ராஜதந்திர கூட்டணி அமைத்து ஆஸ்டெக் அரசின் தலைநகரான டினோச்டில்டானை வீழ்த்துகிறார். அப்போதைய ஸ்பெயின் நாட்டை விட வளமான, அளவில் பெரிய ஒரு நிலப்பரப்பை அந்நாட்டுக்கு உரிமையாக ஆக்குகிறார். உலகின் மிகப்பெரிய ஆக்கிரமிப்புக் கதைகளில் ஒன்றாக இன்றும் இது பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு ஸ்பானியர்களாலும் உள்நாட்டு மக்களாலும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஆஸ்டெக் சாம்ராஜ்ய அதிபதி மாண்டஸுமாவும் ஹானன் கார்டஸும் சந்திக்கும் காட்சி, இரு வேறுபட்ட கலாச்சாரங்கள் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்றுக் காட்சியாக ஓவியங்களில் பதிவாகி இருக்கிறது.
உள்நாட்டு மக்கள் ஜனத்தொகை இவர்கள் கொண்டுபோன பெரியம்மை போன்ற நோய்களால் பலமடங்கு அழிந்துபோன நிலையில் மீதமிருப்பவர்களை கிறித்துவ மதத்துக்கு மாற்ற ஹனான் கார்டஸ், உள்ளூர் மொழிகளையே பயன்படுத்துகிறார். ஆனால் அரசு மொழியாக ஸ்பானிஷ் மொழியே பயன்பாட்டில் இருப்பதால் ஒவ்வொரு இனக்குழுவினாலும் பேசப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான மொழிகள் சிதைந்து காணாமல் போய்விட்டன. மீசோ அமெரிக்கா என்று அழைக்கப்படுகிற வட அமெரிக்க எல்லையிலிருந்து கீழே எல் சால்வடார் வரைக்கும் உள்ள பகுதியில் இன்றும் நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றை பத்து வகைகளாகப் பிரிக்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே ஸ்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்பதால் இப்போதிருக்கும் மக்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மற்றும் உள்நாட்டு மொழி ஏதோவொன்று பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். மெக்ஸிகோவை எடுத்துக்கொண்டால் வட அமெரிக்க எல்லையில் ஆங்கிலம் கூட அதிகமாகப் பேசப்படுவதாகக் கூறுகிறார்கள்.
ஸ்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னால் உள்ளூர் மக்களால் இன்றுவரை தங்கள் கலாச்சாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. ஆனால் இந்தமொழிகள் இன்னும் அழிந்துவிடவில்லை. கடந்த ஐநூறு ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் அங்கும் இங்குமாக தொடர்ந்த எதிர்ப்புப் போராட்டங்கள் மூலமாக ஸ்பானிஷ் மொழியிடமிருந்து தங்கள் மொழிகளைக் காப்பாற்றி வருகிறார்கள். ஸ்பானிஷ் மொழியே கற்காமல் உள்ளூர் மொழியை மட்டும் பேசும் மக்களும் அங்கே இருக்கிறார்கள். ஆஸ்டெக் சாம்ராஜ்யத்தின் அதிகார பூர்வ மொழியான நாத்தல் மொழி பேசுகிறவர்கள் பதினைந்து லட்சத்துக்கும் மேல் இன்றும் வாழ்கிறார்கள்.
சியாபாஸ் என்றொரு பகுதி மெக்ஸிகோவின் தென்பகுதியில் உள்ளது. அவர்கள் மெக்ஸிகோவின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள். 1994 - ல் அப்பகுதியில் கிளர்ச்சி ஏற்பட்டபோது தங்கள் மொழியான சோட்டில் மூலமாகவே அறிக்கைகளை வெளியிட்டதை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனாலும் மெக்ஸிகோவில் இருக்கும் சுமார் 143 மொழிகளில் 60 மொழிகள் விரைவில் காணாமல் போய்விடும் என்று மொழியலாளர்கள் அபாய மணி அடித்துள்ளனர். உதாரணத்துக்கு அயபானகோ என்றொரு மொழியைப் பேசுகிறவர்கள் இரண்டே பேர்தான் உள்ளனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் சண்டை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை! கிளிவா என்பது இன்னொரு மொழி. இதைப் பேசுகிறவர்கள் 36 பேர். வேலைவாய்ப்பு, இடம் பெயர்தல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றால் சொந்த மொழியை விட்டு ஸ்பானிஷ் மொழிக்கு உள்ளூர் மக்கள் தாவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதைய நிலை என்று நேஷனல் ஜியாகிரபிக் இணையதளம் குறிப்பிடுகிறது.
கடைசியாக என்னதான் உள்ளூர் மொழி புழங்குவதாக சொல்லிக்கொண்டாலும் மெக்ஸிகோவின் மக்கள் தொகையில் 6.5% பேர் மட்டுமே தங்கள் மொழிகளைப் பேசுகிறார்கள். கடந்த ஐநூறு ஆண்டுகளில் ஸ்பானிஷ்தான் அங்கே ஒரே மொழியாக ஆகி உள்ளது. 1491 - ல் அமெரிக்கக் கண்டத்தின் கடற்கரையைக் கண்டு இந்தியாவுக்குக் கடல்வழி கண்டு பிடித்துவிட்டதாகக் கொண்டாடினார் கொலம்பஸ். அதனால் இன்றும் இந்தியர்கள் என்றே அமெரிக்கக் கண்ட பூர்வகுடிகளுக்குப் பெயராகிவிட்டது. சாகும்வரைக்கும் தான் கண்டுபிடித்தது இந்தியாதான் என்று நினைத்துக்கொண்டிருந்தார் அவர்! அது இந்தியாவுக்கான பாதை அல்ல; லட்சக்கணக்கான மக்களின் அழிவுக்குப் பாதையாக அமைந்து விட்டது!
அக்டோபர், 2018.