அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!

அரசியல்வாதிகளுக்கும் தேர்வு வையுங்கள்!
Published on

காந்தியடிகளிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என கேட்கிறார்கள். ‘ஒரு பெரிய நூலகம் அமைப்பேன்'' என்கிறார். நெல்சன் மண்டேலா, நேரு போன்றவர்கள் ‘என்னை எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமென்றாலும்

சிறையில் வைத்துக்கொள்ளுங்கள், புத்தகங்களை கொடுத்துவிடுங்கள்'' என்று

சொன்னார்கள்.

அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடி வரும் என்கிறார்கள். இதை இளைய தலைமுறை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவில் அண்மையில் உலகத்திலேயே ஆகச்சிறந்த கல்வியாளர்

 சிலையை திறக்கிறார்கள். பத்தாயிரம் மைல் பயணம் என்றொரு புத்தகத்தை இறையன்பு எழுதியிருக்கிறார். அதில் தொடக்கத்திலேயே சீன பொன்மொழி ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பத்தாயிரம் புத்தகமாவது படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் கிமீ பயணம் செய்திருக்க வேண்டும் என சொல்கிறது அது. ஆனால் 64,000 புத்தகம் படித்தவர் ஒருத்தர் உலகத்தில் உண்டெனில் அது அண்ணல் அம்பேத்கர் தான். ஒரு தனி மனிதனின் ஆகப்பெரும் நூலகமாக இருந்தது ஆசிய கண்டத்தில் அண்ணல் அம்பேத்கருடையது தான்.

தெய்வத்திருமகன் அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நமக்கு கற்பிக்கும்போது, ‘அறிவு என்பது என்ன? உன் அறியாமை எவ்வளவு என்பதை அளந்து காட்டும் கருவி' என்கிறார். கற்க கற்க நாமெல்லாம் ஒன்றுமே இல்லையென்றாகிவிடும். டெல்ஃபி தேவாலயத்தின் முன் சென்று ஒருவன், உலகத்திலேயே பெரிய அறிவாளி யார் என்று கேட்கிறான். அந்த தேவாலயம், ‘சாக்ரடீஸ்

சாக்ரடீஸ் சாக்ரடீஸ்' அசரீரீ செய்கிறது. அந்த நபர் சாக்ரடீஸை தேடி பல ஆண்டுகள் கிரேக்கம் முழுக்க அலைகிறான். கடைசியாக கண்டுபிடித்துவிட்டான். ஒருவரிடம் இங்கு சாக்ரடீஸ் யார் என்று கேட்கிறான். அவர் சாக்ரடீஸை நோக்கி விரலை

நீட்டிக் காண்பிக்கிறார். வயது முதிர்ந்த நபராக தச்சு வேலை செய்துகொண்டிருக்கிறார்

சாக்ரடீஸ். அந்த மனிதன்,‘நீங்கள் தான் சாக்ரடீஸா?' எனக் கேட்கிறான்.

‘ ஆமாம்.'

‘உலகத்திலேயே நீங்கள் தான் பெரிய அறிஞராமே?' ‘யார் சொன்னது?'

‘டெல்ஃபி தேவாலயம் அப்படி தான் கூறியது‘

‘ நேற்று வரை அப்படி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்கு நான் இல்லை‘ என்று அந்த மனிதரை சாக்ரடீஸ் அனுப்பிவைக்கிறார்.

மனிதர் கோபத்துடன் மீண்டும் டெல்ஃபி தேவாலயம் வருகிறான். ‘நீ பொய் சொல்லிவிட்டாய். சாக்ரடீஸிடம் கேட்டால் அவன் இல்லை என்கிறார்' என கோபமாக கேட்கிறான். ‘அதனால் தான்

சொல்கிறேன், அவன் தான் பெரிய அறிஞன்' என்று தேவாலயம் பதில் அளிக்கிறது.

இலட்சம் துப்பாக்கிகளை கடந்து என் தலைவனை சந்திக்கச் சென்றேன். ஒரு துளி பயமும் எனக்கு கிடையாது. ஆனால் என் நூலகத்திற்குள் நுழைந்தால் நான் நடுக்கமாக உணர்வேன். நூலகம் முழுதும் அறிஞர்களாக படுத்துக்கிடக்கிறார்கள்.

பாட புத்தகம் அல்ல அறிவு. அதற்கு வெளியில் வந்து பேரறிஞர்கள் கொட்டிவைத்த அறிவைத் தேடி ஓடவில்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது. குறிப்பாக தமிழ் சமூக பிள்ளைகள் அதிகம் கற்க வேண்டும்.

என்னை மிகவும் நெருக்கமாக கவனித்தவர்களுக்கு தெரியும் நான் சிறுபிள்ளை மனம் கொண்டவன் என்று. இதை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் விரும்பி படிப்பது அம்புலி மாமா கதைதான். சிறையில் இருக்கும்போதுகூட நான்  எழுத்தாளர் பாமரனிடம், எனக்கு அம்புலி மாமா கதை வேண்டுமென்றென். அவர் ஒரு மாதிரி பார்த்தார். என்னடா போராடிவிட்டு

சிறைக்கு வந்து இந்த கதை கேட்கிறானே என்று. அதைப்போன்ற ஒரு திரைக்கதை, அழகான ஓவியங்கள், நெறிக்கதைகள் எதிலுமே இல்லை. மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி ஆரம்பித்தது தான் என்னுடைய வாசிப்பு. அதிலிருந்து விரிந்து தான் ஆசிரியர்களின் மூலம் மற்ற புத்தகங்கள் அறிமுகமாகின. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய வாசிப்பு உலகத்திற்குள் ஆசிரியர்கள் என்னை அழைத்துச் சென்றனர்.

நூலகம் சென்று படிக்க வைத்ததெல்லாம் என்னுடைய பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் தான். அவர் எனக்கு தமிழ்துறை பேராசிரியராக இருந்தார். பிறகு கல்லூரியில் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை செயலாளராக இருந்த சலீல். அவர் எனக்கு கணக்கியல் பாடமும் எடுப்பார். அதன்மூலம் அவருடன் அதிகமாக உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கல்லூரியில் எங்களுடைய பேராசிரியர் எங்களைவிட சற்றுதான் வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். எனவே தோழமையுடன் பயணிக்கும் ஒரு உறவு இருந்தது.

பிறகு சென்னை வந்த பிறகு அறிவுமதி அண்ணன், சுபவீரபாண்டியன், அய்யா நெடுமாறன், அண்ணன் கொளத்தூர் மணி, அண்ணன் கோவை ராமகிருஷ்ணன், அய்யா வீரமணி போன்றவர்களின் உறவுகள் பெருக பெருக வாசிப்பு இன்னும் அதிகமானது. நண்பன் செல்வபாரதி, கவிதா பாரதி, தபு சங்கர், முத்துக்குமார், யுகபாரதி என உறவுவட்டம் பெருகுகிறது. இதன்மூலம் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு போன்றவற்றில் ஈடுபாடுகள் கூடிவிட்டன.

புத்தக வாசிப்பை இந்த பிரிவில், இந்த தலைப்பில் தான் மேற்கொள்ள வேண்டுமென வகைப்பிரிப்பது மிகவும் தவறு. மற்ற துறைகளுக்கு வேண்டுமென்றால் அந்த சார்ந்து மட்டும் கற்பது பொருத்தமாக இருக்கலாம். அரசியலுக்கு அப்படியல்ல. எல்லாவற்றுக்கும் தேர்வு இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணி, குடிமை பணி, காவல்துறை உயர் அதிகாரி பணி அனைத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வளவு வடிகட்டுகிறார்களே... இதையெல்லாம் தீர்மானிக்கிற, நிர்வகிக்கிற தலைவர்களுக்கு எந்த தேர்வும் இல்லையே... சமூகம், அறிவியல், பொருளியல், இலக்கியம், வரலாறு, உலக அறிவியல், உலக அரசியல், வேளாண்மை இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி அமைச்சர் பதவியேற்பவருக்கு தேர்வு வைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம். ஆனால் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்றால் இந்த தேர்வை எழுத வேண்டும்.  தலைமையேற்று நிர்வாகம் செய்கிற அமைச்சர் கள் எல்லோரும் கட்டாயமாக ஒரு தேர்வெழுத வேண்டும் என்பதுதான் நியாயமாக இருக்கும்.

பல பேர் இங்கு பார்த்து எழுதினால் கூட தேர்வில் தேர்ச்சி பெறமாட்டார்கள். எனவே தேர்வு கொண்டு வாருங்கள். தேர்வில் தோற்றுப்போனால் வெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கட்டும். இப்படிச் செய்தால் ஒரு தேசத் தின் குடிகளுக்கு அறிவார்ந்த தலைவன் கிடைத்துவிடுவான். எனெனில் இவர்களுக்கு பொருளாதாரமென்றால் என்னவென்று தெரியவில்லை அறிவியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. இலக்கியம், வரலாறு எதுவும் தெரியவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் நிர்வகிக்கிறவர்களுக்கு ஆகப்பெரும் அறிவும், அனைத்து புரிதலும் அவசியமென கருதுகிறேன். அரசியலில் ஈடுபடுவர்கள் அனைத்தையும் படிக்க வேண்டும். நான் அப்படியே படிக்கிறேன்.

அரசியலில் ஈடுபடுவர்கள், இளைஞர்கள் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் மார்க்சிம் கார்க்கியின் தாய். இதை கட்டாயம் படிக்க வேண்டும். கலைஞர் கூட சொல்லியிருந்தார்கள், தான் அதிகம் விரும்பி படித்தது தாய் தான் என்று. இளைய தலைமுறை பிள்ளைகள் ஹிட்லருடைய மெயின் கேம்ஃப் படிக்க வேண்டும். அந்த புத்தகத்தில் ஆசிரியர் எழுதிய முன்னுரையை படித்தாலே படிப்பவன் நிமிர்ந்துவிடுவான். இப்போதும் மகிழுந்தில் எனக்கு முன்பு அவர் புத்தகம் தான் இருக்கிறது. ஜான் பெர்கின் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படிக்க வேண்டும். ஹாலிவர் என்க் எழுதிய ப்ரிட்டிஷ் உளவாளியின் வாக்குமூலம் படிக்க வேண்டும். கடைசியாக கூறிய இரண்டையும் படிக்கும்போது உலக அரசியல் உங்கள் உள்ளங்கையில் வந்துவிடும்.

ஒவ்வொரு குடிமகனும் தன் நாட்டின் வரலாறை தெரிந்துக்கொள்வது அவசியம். இந்திய வரலாற்றில் என் தமிழ்நாட்டின் வரலாறு இல்லை. தமிழனுக்கு வரலாறு இல்லை. இலக்கிய சான்றுகள் தான் இருக்கிறது. இதை குறைவாக சொல்ல முடியாது வரலாற்றைப் படைப்பவனுக்கு எழுதுவதற்கு நேரம் இருக்காது என்பார்கள். இப்போ மா.சோ.விக்டர் எழுதியுள்ள 26 புத்தகங்களை படிக்கலாம். நான், அய்யா பெ. மணியரசன் எல்லோரும் வெளியிட்டோம்.

இறையன்பு எழுதிய போர்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத் தலைமைகொள், உலகை உலுக்கிய வாசகங்கள், சீக்ரெட் சிம்மாசனம், இவையெல்லாம் தத்துவம் தான். இதை படிக்கும் எந்த இளைஞனும் ஆகப்பெரும் தலைவனாக தன்னை செதுக்கிக்கொள்வான்.  எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உறுபசி, உணவு யுத்தம் நூலையெல்லாம் ஒவ்வொரு பிள்ளையும் படிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் தமிழர்கள் கட்டாயம் திருக்குறள் படிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். நம்மாழ்வர் எழுதிய அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். இந்த பூமி எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுக்கிறது. அது வேளாண்மை மூலமாகதான் வருகிறது. அதன்மீது ஒரு விருப்பமும் பேரார்வமும் வர வேண்டுமென்றால் தயவுசெய்து நீங்கள் நம்மாழ்வார் புத்தகங்களை நேசித்து படிக்க வேண்டும். ஆனால் எனக்கு கணக்கே கிடையாது நான் எல்லாவற்றையும் படிப்பேன். ஒரு கிறித்தவ அருள்தந்தை வந்து அவர்கள் புனிதநூலைக் கொடுத்து படிக்கச்  சொன்னால் படிப்பேன், ஒரு இந்துமதத்தவர் அவர்களது புனிதநூலை கொடுத்து படிக்க சொன்னால் படிப்பேன், குரானைப் படிப்பேன். நபிகள் நாயகத்தை பல்வேறு இடங்களில் கோடிட்டு பேசியிருக்கிறேன். விவேகானந்தரை கோடிட்டு பேசுவேன். எதையுமே கணக்கில்லாமல் படிப்பேன். எனக்கு பசிக்கு பிரியாணிதான் வேண்டுமென்று கேட்பதில்லை. கூழ் இருந்தால் குடிக்கிறேன்.

சோறு இருந்தால் சாப்பிடுகிறேன். ரொட்டி இருந்தால் தின்பேன். எதுவுமே இல்லையா தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்துக்கொள்வேன். நெல்லை கண்ணன் அவர்கள் சொல்வதைப்போல் திருக்குறளை ஆழ்ந்து படித்தாலே போதும். ஆகச் சிறந்த அரசியல்வாதியாகி விடலாம். ஆட்சியை எப்படி நடத்த வேண்டுமென்பதைக்கூட தனது குறளில் சொல்லிவிட்டார். 

இன உணர்வு, மான உணர்வு வர வேண்டுமென்றால் புரட்சிப் பாவலர் பாக்களை அதிகம் படிக்க வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்தனார் பாக்களை படிக்க வேண்டும்.

சீமான் சத்தமாக பேசுகிறார், கத்தி பேசுகிறார் என்கிறார்கள். அதைகூட நான் சொல்லியிருக்கிறேன். விடுதலை பெற்றவன் பேசுவதற்கும், உரிமைக்கு முழங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நம் மூதாதையர் சங்கே முனங்கு, சங்கே பேசு என்றெல்லாம் சொல்லவில்லை. சங்கே முழங்கு என்கிறான். அவருடைய பாக்கள் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும். ஈழத்து பாவேந்தர் புதுவை ரத்தினதுரை, உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்களுடைய எழுத்துக்களையெல்லான் தமிழ் இளம் தலைமுறையினர் விரும்பி வாசிக்கும்போது எளிமையாக கருத்துகள் உள்புகுந்து உணர்வை சூடேற்றி உசுப்பிவிடும். இவையெல்லாம் தான் என்னை உருவாக்கியது.

(சந்திப்பு: தமிழ்க்கனல், வசந்தன்)

logo
Andhimazhai
www.andhimazhai.com