அரசியலில் இது ஓர் ஆயுதம்

அரசியலில் இது ஓர் ஆயுதம்
Published on

1987 - இல் ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார் விபி சிங். முன்னதாக நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருந்தார். ராணுவத்துக்கு  நீர்மூழ்கிகள் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரிக்க முயன்றபோது, உருவான பிரச்னைகளால் அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டார். ஏற்கெனவே போபர்ஸ் பீரங்கி ஊழலும் வெடித்திருந்தது.

இதை அடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதோடு, மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார். அலகாபாத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஜன்மோர்ச்சா என்ற தன் கட்சியின் சார்பில் வென்றார். 1989&ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜிவ்காந்தியை வீழ்த்தி தேசிய முன்னணிகூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

விபிசிங் பிரதமராக ஆனார். மண்டல் கமிஷனை அமல் படுத்தியதற்காக ஒரு பிரிவால் நேசிக்கப்படுகிறவராக, இன்னொரு பிரிவால் வெறுக்கப்படுகிறவராகவும் வரலாற்றில் இடம் பெற்றார். வலிமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு பிள்ளையார் சுழி அவர் செய்த ராஜினாமா.

சுதந்தர இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய முதல் அமைச்சர் என்று டிடி கிருஷ்ணமாச் சாரியைச் சொல்வார்கள். நிதி அமைச்சராக இருந்தவர் அவர். 1957 - ல் முத்ரா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேரு அமைச்சரவையில் இருந்து அவர் பதவி விலகினார். 1962 - இல் அவர் மீண்டும் மக்களவைக்கு தேர்வாகி, சிறிது காலம் கழித்து நிதியமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. நேரு அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலகல் கடிதம் கொடுத்தார். ஆனால் நேரு ஏற்கவில்லை. ஆனால் மீண்டும் தமிழகத்தில் 1956 இல் அரியலூரில் விபத்து ஏற்பட்டு 144 பேர் இறந்த சம்பவத்தில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்து, அதில் உறுதியாகவே இருந்து பதவி விலகிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்த ஓவி அளகேசன் அப்போது ரயில்வே இணை அமைச்சராக இருந்தார். அவரும் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாகவும் ஆனால் பிரதமர் நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. அவர் பதவியில் நீடித்தார். இதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது அவரை எதிர்த்து, ‘அரியலூர் அளகேசா! நீ ஆண்டது போதாதா; மக்கள் மாண்டது போதாதா' என்று போஸ்டர் அடித்து திமுக தரப்பில் ஒட்டப்பட்டது!

1965, பிப்ரவரி 10 - இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 19 பேர் ஒரே நாளில் இறந்தனர். இரண்டு உதவி ஆய்வாளர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதை அடுத்து மத்திய அமைச்சரவையில் இருந்து சி.சுப்ரமணியமும் (உணவு, விவசாய அமைச்சர்), ஓவி அளகேசனும் ( பெட்ரோலியம், வேதிப்போருட்கள் துறை இணை அமைச்சர்) பதவி விலகினர். ஆயினும் ஐந்து நாட்கள் கழித்து, பிரதமர் சாஸ்திரி எடுத்த நடவடிக்கைகளுக்கு அடுத்து, காமராஜர் போன்ற தலைவர்களின் வலியுறுத்தலால் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

1962 சீனப்போரில் இந்தியாவின் பின்னடைவுக்குப் பொறுப்பேற்று, ராணுவ அமைச்சராக இருந்த கேபி கிருஷ்ணமேனன் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இப்பிரச்னை பிரதமர் நேருவுக்கும் தர்மசங்கடமாக இருந்தது. கிருஷ்ண மேனன் பதவியை ராஜினாமா செய்தார்.

கே.பிளான் என்ற பெயரில் காமராஜர் கொண்டுவந்த திட்டத்தின் மூலமாக முதல்வர் பதவிகளில் இருந்த பல மூத்த தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காமராஜர் தமிழகத்தில் இருந்து டெல்லி அரசியலுக்குச் சென்றது, தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்ததை மறுக்க இயலாது.

2ஜி ஊழல் குற்றச்சாட்டை அடுத்து 2010 நவம்பரில் ஆ. ராசா தன் அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது முக்கியமான சம்பவம். வழக்குகள் நடந்தபின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுகளால் 2011-ல் முதல்வர் பதவியில் இருந்து விலகி, பின்னர் சில காலம் சொந்த அமைப்பு தொடங்கி போராடிய பின்னர், மீண்டும் பாஜகவில்  சேர்ந்து தற்போது முதல்வர் பதவியில் இருக்கிறார். 2011&ல் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் ஆதர்ஷ் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சொல்லப்படும்போது பதவி விலகி

விசாரணைக்கு ஒத்துழைப்பது வழக்கம். ஆனால் சிலர் எல்லோரையும் விட அதிக சமமானவர்கள் என்பதால், எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் எல்லோரும் பதவி விலகிவிடுவது இல்லை. எல்.கே. அத்வானி, 1996 -ல் ஹவாலா பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.  போபாலை சேர்ந்த ஜெயின் சகோதரர்கள் இருவரின் டைரியை ஆதாரமாக சிபிஐ காட்டியது. இதைத் தொடர்ந்து அத்வானி உடனடியாக தன் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். இந்த வழக்கில் இருந்து நிராபராதியாகி வரும் வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை எனவும்

அறிவித்தார். அந்த ஆண்டில் நடந்த தேர்தலிலும் அவர் போட்டியிட வில்லை. அதே ஆண்டு

13 நாட்கள் பாஜக ஆட்சி அமைந்தது. வாஜ்பாயி 13 நாட்கள் பிரதமராக இருந்து, நாடாளுமனறத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் பதவியை விட்டு விலகினார்.

அத்வானி மீதான சிபிஐ குற்ற வழக்கின் அப்பீல் உச்சநீதிமன்றத்தில் 1998 - ல் தள்ளுபடி ஆன பின்னர், அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்டு, வாஜ்பாயி அமைச்சரவையில்  உள்துறை அமைச்சராகவும் பின்னர் துணை பிரதமராகவும் இருந்தார்.

1991 - இல் காவிரி ஆணையம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் கொடுக்க உத்தரவிட்டது. பிரதமராக நரசிம்மராவ். கர்நாடகத்தில் இருந்த காங்கிரஸ் முதல்வர் பங்காரப்பா, இந்த தீர்ப்பை ஏற்க மறுத்தார். இதை மறுக்கும்விதமாக மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தார். பெரிய அரசியல் சாசனப் பிரச்னை உருவானது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க, தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் சங்கடத்துக்குள்ளானார்கள். நரசிம்மராவ் அரசு இப்பிரச்னையை மெல்ல உச்சநீதிமன்றத்திடம் தள்ளிவிட்டது. இப்பிரச்னையில் மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். பொதுவாக பொதுப் பிரச்னைகளில் ராஜினாமா செய்வதாக பூச்சாண்டி காட்டுவது அரசியல்வாதிகள் வழக்கம். ஆனால் ராமமூர்த்தி நிஜமாகவே காவிரிப் பிரச்னையில் பதவி விலகிவிட்டார். தமிழகத்தில் இருந்து ப.சிதம்பரம், அருணாசலம் போன்றவர்களும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் இவர்கள் பதவி விலகவில்லை. இவர்களை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று சீறினார் ஜெயலலிதா.

இதே போல் காவிரி ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கியபோது, அதை எதிர்த்து கர்நாடகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அம்பரீஷ் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் அது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2009 - ல் நடந்த தேர்தலில் அம்பரீஷ் தோற்றுப்போனார். 1989-ல் தமிழகத்தில் திமுக ஆட்சி.

எம்.எல்.ஏவாக வென்று வந்திருந்த ஜெயலலிதா, பல்வேறு பிரச்னைகளால் அரசியலைவிட்டு விலக முடிவு செய்து, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய விரும்பி கடிதம் எழுதினார். அந்த கடிதம் அவருக்கு உதவிகரமாக இருந்த எம்.நடராஜன் இல்லத்தில் இருந்தது. இத்தகவலை உளவுத்துறை மூலம் கண்டறிந்த ஆளும் கட்சி, நடராஜன் வீட்டில் சோதனை செய்து அக்கடிதத்தை கைப்பற்றி, சபாநாயகரிடம் சேர்த்தது. ஆனால் ஜெ., இதைத் தொடர்ந்து மனம் மாறி, அந்த கடிதமே தான் எழுதவில்லை என மறுத்து மேலும் தீவிரமாக அரசியலுக்குள் களமாடத் தொடங்கினார்.

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தன் நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல ராஜினாமாக்களைப் பார்த்திருக்கிறார்.

1961 -ல் வேலூரில் திமுக பொதுக்குழு. ஈவிகே சம்பத்துடன் மோதல். அந்த பொதுக்குழுவில் அடிதடி நிகழ்ந்துவிடுகிறது. இதையடுத்து திமுக பொருளாளராக இருந்த கருணாநிதி தன் பதவியைவிட்டு விலகுகிறார்.

அவைத்தலைவராக இருந்த சம்பத்தும் தன் பதவியை விட்டு விலகிவிட்டார். அவர் தனிக்கட்சி என்று போய்விட, கருணாநிதி அண்ணா விருப்பத்துடன் மீண்டும் பதவிக்குத் திரும்பினார்.

அடுத்து எமர்ஜென்சி காலகட்டத்தில் 1976 - இல் கருணாநிதி திமுக தலைவராக இருப்பதால் கட்சித் தொண்டர்கள் நெருக்குதலுக்குள்ளாகிறார்கள். எனவே அவர் பதவி விலகவேண்டும் என புலவர் கோவிந்தன் கட்சிக்குள் குற்றம் சுமத்த, கருணாநிதி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அதுவும் கொஞ்சம்காலமே நீடித்தது. மீண்டும் அவரே தலைவர் பதவியில் நீடித்தார்.

அடுத்த ஆண்டே 1977 - இல் கே.மதியழகன்

உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பால் தலைவராக இருந்த கருணாநிதியும் பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியனும் பதவி விலகினர். கருணாநிதி மீண்டும் தலைவர் பதவிக்குத் திரும்ப, நெடுஞ்செழியன் மக்கள் திமுக என்ற தனி கட்சியைத் தொடங்கி, பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

1983 - ல் இலங்கையில் தமிழர்கள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு படுகொலைக்குள்ளானார்கள். அச்சமயம் இந்திய அரசு இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி கருணாநிதியும் (அண்ணாநகர் தொகுதி), அன்பழகனும் (புரசைவாக்கம்) தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து, சபாநாயகர் ராஜாராமுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு அடுத்த ஆண்டு கருணாநிதி மேல்சபைக்கு எம்.எல்.சியாகத் தேர்வானார்.

1991 - ல் ராஜிவ் படுகொலையைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். கட்சியின் படுதோல்விக்குப் பொறுப்பேற்று தன் சமு பதவியைத் துறந்துவிட்டார். பின்னர் அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில்

செல்வராஜ் வெற்றி பெற்றார். கட்சியிலிருந்து 1993 - ல் வைகோவை வெளியேற்றிய பிறகு நடந்த களேபரத்தில் கருணாநிதி, திமுக தலைவர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். அப்போது தொண்டர்கள் அவர் வீட்டுக்கு முன்பு கூடினர். ஒரு தீக்குளிப்பு முயற்சியும் கூட நடைபெற்றது. சில மணி நேரங்களில் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று அப்போது திமுக பொருளாளராக இருந்த முக ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆயினும் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் முடிவை திரும்பப் பெற்றதும் நடந்தது.

2019 நாடாளுமன்றத் தேர்தல். 303 இடங்களில் வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராக ஆனார். பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தை அடையக் கூட முடியாமல் காங்கிரஸ் 52 இடங்கள் மட்டுமே பெற்றது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியை விட்டு விலகினார் ராகுல்காந்தி. அவரே கூட அமேதி தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. ‘‘அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல என்னுடைய போர். நான் பாஜகவை வெறுக்கவில்லை. ஆனால் என் உடலில் ஒவ்வொரு செல்லுமே இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தாக்கத்தை தன்னிச்சையாக எதிர்க்கின்றன'' என்று ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு கட்சித்தொண்டர்கள், தலைவர்கள் வற்புறுத்தல்களுக்கு அவர் செவி சாய்க்கவில்லை. இன்று வரை உறுதியாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகியவர் ஜோதிராதித்ய சிந்தியா. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான 15 மாத கால காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது. இப்போது பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார்.

இந்தியாவிலேயே மூன்றுமுறை முதல்வர் பதவியிலிருந்து விலகி சாதனை படைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். 2001-ல் டான்சி தீர்ப்பினால் ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகி, இவரை முதல்வராக அறிவித்தார். அந்த வழக்கில் இருந்து ஜெ.விடுபட்டு வரும் வரை பதவியில் இருந்தவர், பதவியை ராஜினாமா செய்து, வழிவிட்டார். மீண்டும் 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் தண்டனை பெற்றபோது, கண்ணீர் பெருக முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். நீதிபதி குமாரசாமி தன் தீர்ப்பில் ஜெயலலிதாவை விடுவித்தபோது, மீண்டும் பதவி விலகினார்.

இதைஅடுத்து 2016, டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்த அன்று, நள்ளிரவு 1 மணிக்கு ஓ.பன்னீர் செல்வமே மீண்டும் முதல்வராக அமைச்சரவை சகாக்களுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் அவரால் இரண்டு மாதங்களே தாக்குப் பிடிக்க முடிந்தது. 2017 பிப்ரவரியில் ஒரு நாள் அவர் போயஸ் இல்லத் துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு நடந்த ஆலோசனைக்குப் பின் பின்னர் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஒரு நாள் கழித்து இரவு திடீரென ஜெ.சமாதியில் தியானத்தில்  ஈடுபட்டார். சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பதால் தான் பதவி விலகுமாறு கட்டாயப் படுத்தப்பட்டதாக அவர் கூறினார். அதன்பிறகு நடந்தவை திரைப்படங்களையும் விஞ்சும் காட்சிகள்!

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com