அரங்கேற்றம்: முடிவு மாறி இருக்கலாம்

அரங்கேற்றம்: முடிவு மாறி இருக்கலாம்
Published on

வெளியான காலத்தில், தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் கே. பாலசந்தர் இயக்கிய‘அரங்கேற்றம்'. திரைப்படங்களில் பெண்ணின் கற்பு சார்ந்த புனித பிம்பத்தை உடைக்க முயன்ற திரைப்படங்களில் இது ஒரு முன்னோடி என்று சொல்லலாம். வறுமையின் பிடியில் வாடும் ஒரு பெரிய பிராமணக்குடும்பத்தின் மூத்த பெண், தன் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக தன்னையே விற்கும் நிலைக்கு சென்று, அவர்களையெல்லாம் கரையேற்றிய பிறகு சந்திக்கும் அனுபவங்கள் அவளது தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றன. எழுபதுகளுக்கு முன் திரைப்படக் கதாநாயகிகள் நற்பண்புகளால் நிறைந்தவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை பின்பற்றியவர்கள் . திருமணம் தாண்டிய உறவையோ அல்லது சுதந்திரமான வேறு உறவுகளையோ கற்பனை செய்யக்கூட முடியாது. 1967 இல் வெளியான ‘அக்னிபுத்ரி' என்ற மலையாளத்திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக வாழ்ந்த பெண்ணொருத்தியை நாயகன் திருமணம் செய்வதும், அவர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்னைகளையும் விவரித்திருந்தனர். ‘சேத்னா' என்ற இந்திமொழித் திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போலத்தான். ‘அரங்கேற்றம்' தமிழில் இத்தகைய பாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்தியது!

அரங்கேற்றம் படத்தின் லலிதா எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீட்டுக்கு மூத்த பெண். பாலசந்தர் நாயகிகளுக்கு எப்போதும் ஒரு விசேஷ குணம் இருக்கும், நாக்கை துருத்துவது, படாபட் அல்லது அச்சா என்று சொல்வது என்று இப்படி. இதில் லலிதா, முகத்தை புஸ்சென்று வைத்துக்கொண்டு பர்ர்ர்ர் என்று சிரிப்பவள். பக்கத்து வீட்டு உடையார் பையன் தங்கவேலுவிடம் சினேகமாக இருப்பவள்...கிட்டத்தட்ட காதல்தான்! புரோகிதம் செய்யும் அவளது தந்தை பிடிவாதக்காரர் . தம்பிக்கு மெடிக்கல் சீட், தங்கைகளுக்கு துணிமணிகள் என்று தேவைகள் லலிதாவை நகரத்திற்கு வேலை தேடி அனுப்புகிறது. மெடிக்கல் சீட், ஒரு பாலியல் வன்முறைக்குப் பின் தம்பிக்கு கிடைக்கிறது. நிகழ்த்துபவர் ஒரு முதிய தரகர். இன்னும் பல அட்ஜஸ்ட்மெண்டுகள், லலிதாவை ஒரு முழு நேர பாலியல் தொழிலாளியாக்குகிறது. அவள் குடும்பம் செழிக்கிறது. இவளுக்கோ தங்கவேலுவே ஒரு முறை வாடிக்கையாளராக வருகிறான். தங்கையின் கணவனாக வருபவனோ, பழைய வாடிக்கையாளர். இவள் ஒரு பிராமணப்பெண் என்று அறிந்து குலப்பெருமையை சீரழித்ததற்காக அவளை சாடியவன். அப்போதைய காலகட்டத்தில் இயக்குநரும் இப்படி சாடப்பட்டார்.

லலிதாவை அவளது குடும்பம் தூக்கி எறிந்தாலும், உடையார் குடும்பம் அவளை ஏற்றுக்கொள்கிறது. தங்கவேலு அவளை மணம் புரிகிறான். ஆனாலும் தமிழ்த் திரைப்படங்களுக்கே உரிய வகையில், அவனுடன் வாழாமல், லலிதா மனம் பிறழ்ந்து ஒரு தகர டப்பாவை அடித்துக்கொண்டு கடற்கரையில் ஓடுவதோடு படம் முடிகிறது.

இப்போது இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com