அம்பைக்கு வண்ணதாசன்

அம்பைக்கு வண்ணதாசன்
Published on

மதுரை

27.5.92

அன்புமிக்க லஷ்மிக்கு ,

வணக்கம்.

நல்லவேளை , இந்த முறை ஏரோகிராமைச் சரியாகப் பிரித்துவிட்டேன். வழக்கமாக மூணு துண்டாக்கி அப்புறம் ஒட்டவைத்துக் கொண்டிருப்பேன். ஒரு பக்கம் விரல் நகம் அளவுக்காவது புத்தி வளர்ந்து விட்டதே என்று சந்தோஷம். இன்னொரு பக்கம் கிழிந்ததை ஒட்ட வைக்கிற விளையாட்டு கை நழுவிவிட்ட அவஸ்தை.

கதை எழுத வேண்டாம். கவிதை எழுத வேண்டாம். அப்படித் தலையை சாய்த்துப் பூக்களோட நடக்கத் தோன்றினால் போதும், நாலைந்து நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் தேவதேவன் வீட்டுக்குப் போயிருந்தேன். நாங்கள் தூத்துக்குடியில் இருந்து இங்கு வந்த ஒரு வருஷத்துக்குள் அவருடைய வீட்டு குல்மோஹர் மரம் ஏகமாகப் பூக்க ஆரம்பித்துவிட்டது. அவர் நல்ல காரியம் பண்ணியிருந்தார். மொட்டை மாடியில் உதிர்கிற பூவை அள்ளாமல் விட்டிருந்தார். இன்றைய பூ நேற்றைய பூவின் மேல், நேற்றைய பூ முந்தின பூவின் மேல் என்று அடுக்கடுக்கான பூப்படுக்கை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் சில நண்பர்களுடன் பொதிகை மலை உச்சியில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்குப் போகும் போது இப்படித்தான் அடுக்கடுக்காக அகாலத்திலிருந்து காலம் வரை உதிர்ந்து சருகுகளின் மெத்தையிருந்தது. என் ஒவ்வொரு கால் பதிவும் ஊழ் ஊழிகளில் புதைந்து திரும்புவது போல் இருந்தது.

அந்தப் பூக்கள் தந்த உணர்வுக்குச் சமானமாக ஒரு கவிதை கூடத் தேவதேவனால் எழுதமுடியவில்லை. நான் எப்படி எப்படி எல்லாமோ அன்பை வெளிக்காட்டிவிட வேண்டும் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதன் சிறு அடையாளங்களைக் கூட என் வரிகளில். ஏற்றிவிடக் கூடவில்லை. அது முக்கியமுமல்ல எனக்கு. பறவைகளின் ஒலிகளுக்கிடையில், உன்னுடைய பிரத்யேகமான அதிர்வுடைய குரலும் எனக்குக் கேட்கும்படியாக எப்போதாவது இப்படி எழுதினால் போதும். போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு கை பிடிச்சுத் தூக்கிவிடுங்க’ என்று கனத்த கூடையுடன் சில முகம் அழைக்குமே, அப்படி அழைக்கப்படும்படியாக நான் போய்க்கொண்டிருந்தால் போதும். வாங்கின வெள்ளரிப் பிஞ்சை, பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருக்கிற முகம் தெரியாத பயணிக்கும் கொடுக்கும் படியாக சங்கரியோ, ராஜூவோ இருந்தால் போதும்.

விஷ்ணுவுடன் நீ இருந்திருக்க வேண்டிய நேரம் இது. மிக நெருங்கிய உறவின் சிதையேற்றத்துக்குபின் கவிகிற தனிமையும் திக்கு முக்காடலும் நான் அறிந்திருக்கிறேன். அப்போது எல்லாம் பற்றிக் கொள்கிற கையுடன் எனக்கு வள்ளி இருந்திருக்கிறாள். தூத்துக்குடியில் வைத்து என் மிக நெருங்கிய சகாக்கள் அகாலத்தில் 41 ல் 44 ல் என இறந்தார்கள். நான் எப்போதுமே சிதையோடு சிதையாகி, புகை சுற்றி நிணம் எரியும் நேரம் வரை நின்று திரும்புவேன். எரி கட்டங்கள் ஆற்றங்கரையை ஒட்டித் தானே இருக்கும். அப்போது ஆற்றுக்கும் எனக்கும் தனி பாஷையே உருவாகி இருக்கும். தனிமையின் வெள்ளமாக அது ஆழங்கள் காட்டி ஓடும் . கரைந்து விடலாம் கரைந்து விடலாம் என முங்கிப் பார்ப்பேன். மறுபடியும் என்னைத் தக்கைபோல் ஆறு கரையில் துப்பிவிடும்.

நீ விஷ்ணுவுடன் இருந்திருக்க வேண்டும்.

மரணபயமல்ல , மரணம் ஏற்படுத்துகிற வெற்றிடம் சுழல்களை உண்டாக்கக் கூடிய வல்லமையுடையது. உய் உய் என்று அது வீசித் தணியும் வரை கல்மண்டபங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். உடைந்த நூல் சுற்றிய மட்கலங்கள் கிடக்கும். வாடல் பூ மாலைகள் சருகாகிக் கிடக்கும். அறுப்புக் களத்திலிருந்து ஒதுங்கிய பெண் கைப்பிள்ளைக்குப் பால் கொடுக்க மாரொதுக்கிக் கொண்டிருப்பாள். பச்சேரியில் இருந்து அவளுடனே வந்த நாய் , ஓணான்களைக் கவ்வப் போவது போல் அவ்வப்போது எருக்கலஞ்செடிகள் வழியாக ஓடும். மிக அருகிலும் ஆறு தெரியும். மிகத் தூரத்தில் ஆறு தெரியும்.

நிச்சயம் விஷ்ணு உன்னைத் தேடியிருப்பார். மீண்டும் எழுதுகிறேன். கவிதையுடன் அல்லது கவிதையில்லாமல்.

எல்லோர்க்கும் அன்புடன்,

கல்யாணி.சி

மே, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com