அம்பை : தனித்தலையும் ஒரு குரல்

அம்பை : தனித்தலையும் ஒரு குரல்
Published on

இரண்டொரு வருடங்கள் இருக்கலாம். முகப்புத்தகத்தில் அவள் அப்படித்தான் திரைப்படம் பற்றி உணர்வுவயப்பட்டு ஏதோ எழுதியிருந்தேன். அதை பதிவேற்றிய சில மணி நேரங்களிலேயே உள்பெட்டியில் அம்பையிடமிருந்து ஒரு செய்தி  வந்திருந்தது. அவள் அப்படித்தான் எப்படி எல்லோரும் கொண்டாடுவது போல ஒரு பெண்ணிய படம் இல்லை என்று அவர் அதில் விளக்கியிருந்தார். அவரது  கருத்துகளை மனதில் வைத்து படத்தை இன்னொரு முறை பார்க்கிறேன் என்று அப்போது அம்பையிடம் சொன்னதாக நினைவு. ஆனால் அந்த உரையாடலின் முடிவில் எனக்கு புதிய வெளிச்சங்கள் கிடைத்தன. எனது பார்வையிலிருந்த போதாமைகளை புரிந்து கொண்ட ஒரு தருணம் அது.

எழுத வந்த காலகட்டத்திலிருந்து அம்பை இதைதான் செய்து கொண்டிருக்கிறார். மரபுகளை மீறிய ஒரு குரலாக அவர் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். பெண்ணியம் என்கிற கருத்தாக்கமே இறுகிய ஒரு மரபாக மாற்றப்படும் அச்சுறுத்தல் நிலவும் ஒரு சூழலிலும் அதை மிகுந்த விழிப்புடன் எதிர்கொள்ளும் ஒரு குரலாக அம்பை இப்போதும் இருக்கிறார்.

எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் சமரசமற்ற ஒரு பெண்ணியவாதி என்பதுதான் அம்பை பற்றிய எனது அழுத்தமான மனப்பதிவு. அவரது படைப்புகளில் மட்டும் வெளிப்படும் பதிவு அல்ல அது. படைப்புகளை மீறியும் அம்பை அப்படித்தான். அவள் அப்படித்தான் பற்றிய உரையாடல் அந்த மனப்பதிவை மேலும் அழுத்தமாக்கியது. 

1960களில் அவர் எழுத வந்த காலகட்டத்தில் அம்பை தனித்தலையும் ஒரு குரலாகத்தான் இலக்கியத்தில் இருந்திருப்பார். அந்த காலகட்டத்தைப் பற்றி பேசக்கூட விரும்பவில்லை என்றுதான் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அதீதமான கசப்புணர்வை நினைவூட்டும் ஒரு காலகட்டமாக அவருக்கு அது இருந்திருக்கிறது.

பெரும்பாலும் ஆண்களுக்கான வெளியாக மட்டுமே அப்போதிருந்த தமிழ் இலக்கிய சூழலில் அம்பையின் ‘தொந்தரவு செய்யும்’ இருப்பு ஏற்படுத்திய சலனங்களுக்கான எதிர்வினையாகதான் அந்த கசப்புணர்வு இருந்திருக்கிறது. அதுவரை அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு தனது படைப்புகளின் மூலம் ஒரு திறவுகோலை உருவாக்கினார் அம்பை. சமையலறைகளில் கருகிக்கொண்டிருந்த குரல்களுக்கு அவர் ஒரு புதிய விடுதலையை வழங்கினார்.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, சிறகுகள் முறியும், காட்டில் ஒரு மான், வற்றும் ஏரியின் மீன்கள் என்று கிட்டத்தட்ட அம்பையின் அனைத்து  படைப்புகளிலும் இந்த பெண்களை எதிர்கொள்ளலாம்.

அந்த பெண்களில் பலர் ஹோட்டலுக்குச் சென்று பலகாரம் சாப்பிட வேண்டும் என்பது போன்ற எளிய ஆசைகளை கொண்டவர்கள். அது போன்ற எளிய விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பில்லை என்ற அறிதலுடன் அதைக் கடந்துசெல்லும் பெண்களுக்கு அம்பையின் கதைகள் பிடிபடாத ஒரு ஆசுவாசத்தை உருவாக்கித்தந்தன.

2000களின் தொடக்கத்தில் வெளிப்பாடு சிறுகதையை படித்த பிறகு ஒரு உணவகத்திற்கு  சென்று முதல்முறையாக தனியாக சாப்பிட்ட அனுபவம் அலாதியானது. ஏதோவொரு வகையில் எனக்கான சுதந்திரத்தை நானே வகுத்துக்கொண்ட தருணம் அது.

அம்பையின் கதைகளை வாசிக்கும் பல பெண்களுக்கு இந்த அனுபவங்கள் சாத்தியம்.நிறைவேறாத எளிய விருப்பங்கள் தொடங்கி அவர்கள் பேசும் தீவிர அரசியல் வரை அம்பையின் கதாப்பாத்திரங்கள் பெண்களின்  வெவ்வேறான உலகங்களை துல்லியமான வெளிப்படைத்தன்மையோடு  வாசகருக்கு முன்வைப்பவை. 

தமிழ் இலக்கியத்தில் இந்த உலகங்கள் பற்றிய பதிவுகள் பெரும்பாலும் ஆண்களின் வகுக்கப்படட எல்லைகளுக்குள்ளேயே புழங்கிகொண்டிருந்த போது அம்பை அந்த உலகங்கள் மீது படிந்திருந்த புகையை நீக்கினார்.  அந்த வெளிப்படைத்தன்மையில் இருந்த உண்மை பல மட்டங்களில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கலாம்.

தனக்கான குரலை கண்டடைந்து அதை வெளிப்படுத்தப் போராடும் அம்பையின் பெண்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவர்கள். அவர்கள் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய சலனங்களை உருவாக்கியிருப்பார்கள். இப்போது வரை ஏதோவொரு வகையில் நீடித்திருக்கும் சலனங்கள் அவை. தனக்கு முன் எழுதிய எந்தவொரு பெண் படைப்பாளியின் குரலைப்போல அல்ல அம்பையின் குரல். அது தனித்துவமாகவும் தீவிரமாகவும் வெளிப்பட்டது.

எழுத தொடங்கி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்ட போதிலும் இப்போதும் தனது தீவிரத்தையும் தனித்துவத்தை இழக்காத குரலாகவே அது இருக்கிறது. அரை நூற்றாண்டு செயல்பாட்டிற்கு பிறகும் அம்பை தமிழ் சூழலில் தனது பொருத்தப்பாட்டை இழக்காதவராகவே இருக்கிறார். அவரது படைப்புகளில் வெளிப்படும் பெண்களின் பிரச்னைகளும் போராட்டங்களும் கிட்டத் தட்ட இப்போதும் அதே வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ தொடர்கின்றன என்பதே அம்பையின் இந்த நீடித்த தாக்கத்தற்கு காரணமாக இருக்க முடியும். எழுதவரும் பெண்களுக்கு எதிராவும் அவை இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எதிரான குரலாகவும் அம்பையின் குரலே இன்று வரையில் முதல் குரலாக வெளிப்படுகிறது.

சமீபத்தில் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி இறந்த போது அவர் காலச்சுவடில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மகாஸ்வேதா தேவியின் கதைகளைத் தாண்டி அவரைப் பற்றிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு மிகத் துல்லியமான ஒரு சித்திரமாக அந்த கட்டுரை இருந்தது. மகாஸ்வேதா தேவியின் பிறப்பு, அவர் வளர்ந்த பின்புலம், அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுவதன் மூலம் அவரது படைப்பாளுமையின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சியிருந்தார் அம்பை. அந்த கட்டுரை அதனளவில் ஒரு முழுமையான இலக்கிய பிரதி.

அம்பையினுடையது இன்னமும் காலாவதியாகாத குரல் என்று மீண்டும் ஒரு முறை அழுத்தமாக அந்த கட்டுரை நிரூபித்தது. எந்த சிறைக்குள்ளும் அடைபடாமல் தனித்தலைதலில் ஆசுவாசமடையும், அந்த  ஆசுவாசத்தைப் பகிர்ந்தளிக்கும் குரல் அது.

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com