அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே!

மருத்துவர் நாராயண ரெட்டி நேர்காணல்
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே!
Published on

மன அழுத்தம் இல்லாத மனிதனே கிடையாது. ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடுமே தவிர மன அழுத்தம் இருக்கவே செய்கிறது.

பலருக்கு அந்த மன அழுத்தத்தைக் கையாளத் தெரிவதில்லை. அதற்காக மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. மன அழுத்தமும் வாழ்க்கைக்கு தேவைதான். மன அழுத்தத்தை Eustress, Dis stress என்று  இரண்டு விதமாகச் சொல்லலாம்.

திடீரென லாட்டரியில் பத்து கோடி பரிசு விழுந்தால் மனம் எத்தனை துள்ளுகிறது? அந்த ஆனந்த அழுத் தத்தைத் தாங்க முடியாமல் கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இது மகிழ்ச்சியான மன அழுத்தம். இதைத்தான் Eustress என்கிறோம்.

மற்றொன்று தொழிலில் நட்டம் ஏற்பட்டுவிட்டது. நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அப்போது மனம் பயங்கர அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அழுவார்கள். இது எதிர்மறையான மன அழுத்தம். இதை Dis stress என்கிறோம்.

அதாவது எந்த விதமான சம்பவமோ, நிகழ்வோ ஏற்பட்டாலும் உடல் அதற்கு ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும். அதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். அந்த ஹார்மோன் சுரப்பால் உடல் எதிர்வினையாற்றும். சில நிமிடங்கள் ஒரு உணர்வில் இருந்துவிட்டு அதிலிருந்து மாறிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதுவே அதிக நேரம் ஒரே உணர்வில் இருக்கும்போது ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு உடல் பாதிப்படையும்.

தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முதலில் மனம் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். மன அழுத்தம் தரக்கூடிய விஷயம் குறித்தே சிந்திக்கும்போது உடலுறவில் எப்படி விருப்பம் ஏற்படும்? உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதும் ஒருபக்கமிருக்க டென்ஷனை எல்லாம் விட்டுவிட்டு மனம் அமைதியான நிலையில் இருக்க வேண்டுமென்பது முக்கியம்.

ஒரு ஆணோ, பெண்ணோ உடலுறவில் ஈடுபடுவதற்கு மன ரீதியான தூண்டுதலும் வேண்டும், உடல் ரீதியான தூண்டுதலும் வேண்டும். இதில் ஏதோவொன்று இல்லாவிட்டாலும் அது சிக்கலைத்தான் தரும். உதாரணத்திற்கு முன்பின் அறியாத ஒரு பெண்ணின் மீது மனம் விரும்பினாலும் அது சாத்தியமில்லை மற்றும் அது சரியானதில்லை என்று மனதிற்கு தெரியும். அதனால் உடல் அந்த சமயத்தில் தூண்டுதல் அடையாது.

பின்னர் எப்படி இத்தனை பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என்று கேட்கலாம். இப்படியான வன்முறையின் ஈடுபடுபவர்கள் உடலுறவில் சுகம் காண்பதைவிட அந்த பெண்ணை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி அதன் மூலம் சந்தோஷம் கொள்வார்கள். ஒரு பெண் தவிப்பதிலிருந்து சந்தோஷம் அனுபவிப்பதற்கு உடலுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்ககள். இதுவே ஒரு ஆண் மீது கோபமிருந்தால் கத்தியால் குத்திவிடுவான். பெண் மீது கோபமிருந்தால் உடலை வன்முறைக்குள்ளாக்கி வஞ்சம் தீர்ப்பான். எனவே அவர்களது நோக்கம் வேறு. இது இயல்பானதுமல்ல.

சராசரி ஆணுக்கு நினைத்தபோதெல்லாம் விறைப்புத்தன்மை வராது. அப்படி வரவேண்டு மென்றால் மனமும் அமைதியாக இருக்க வேண்டும்.  உடலும் அமைதியாக இருக்க வேண்டும். இதைப் பல பேர் புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். இரண்டு பேரும் சிறிது நேரம் சிரித்துப் பேசி பிறகு உறவில் ஈடுபட வேண்டும். அதைவிட்டு விட்டு பத்து மணி ஆகிவிட்டதா? சீக்கிரம் முடித்துவிடலாம் என்ற நோக்கில் ஈடுபட்டால் உறவும் முழுமை பெறாது. மனமும் திருப்தி அடையாது. இது நிறைய பேருக்குப் புரிவதில்லை.

மன அழுத்தம் இருந்தாலே மனம் உறவில் விருப்பம் கொள்ளாது. உடல் தூண்டப்பட்டாலும் மனம் விரும்பாத காரணத்தால் அதில் முழுமையான சுகம் கிடைக்காது. மன அழுத்தம் உள்ள நேரத்தில் உறவில் ஈடுபட முயற்சி செய்து சரியாக நடக்காதபோது மன அழுத்தம் இன்னும் அதிகமாகும். ஐயோ ஏதோ பிரச்னை இருக்கிறது போல என்று நினைக்க ஆரம்பிக்கும்போதே        அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்து அது ஒரு நிரந்தரப் பிரச்னையாகிவிடும்.

ஒரு கதை கூட சொல்வதுண்டு. கிருஷ்ண தேவராயர் ஒருமுறை பால் குடிக்காத பூனை இருக்கிறதா? என்று கேட்க அவையில் இருந்த எல்லோரும் இல்லை என்று சொல்ல தெனாலிராமன் மட்டும் ’நான் கொண்டு வந்து காட்டுகிறேன். ஆனால் ஒரு மாத கால அவகாசம் வேண்டும்’ என்று கூறிவிடுகிறார். பின்னர் சந்தையில் பூனை ஒன்றை வாங்கிச் சென்று பட்டினி போட்டு பசியில் இருக்கும்போது சூடான பாலை முன் வைக்கிறார். பூனை சட்டென பாலில் வாய்வைக்க சூட்டில் வாய் புண்ணாகிவிடுகிறது. இப்படி தினமும் செய்து ஒருமாதம் கழித்து அரண்மனைக்கு அந்த பூனையை பட்டினி போட்டுத் தூக்கிச் செல்கிறார். அங்கு பூனைக்கு ஆறிய பால் வைக்கப்படுகிறது. ஆனால் பூனை அந்த பாலைக் குடிக்காமல் திரும்பிக் கொள்கிறது. ஏனெனில் பசி, சூடான பால், சங்கடம் இவை மனதில் பதிந்துவிட்டதால் ஆறிய பாலையும் குடிக்க மறுக்கிறது பூனை. இதற்குப் பெயர்தான் Conditional technic. பசி வந்தால் பால் குடிக்கலாம். பசி போகும். இது இயல்பானது. இதையே  மாற்றி பசி பால் குடித்தால் வேதனை அதிகமாகும் என்று மாற்றுவது பழகுதலில் வரும் இயல்பு. இப்படித்தான் மனித மனங்களும் சில கண்டிஷனல் டெக்னிக் இருக்கிறது.

இப்படித்தான் நேற்று உறவுகொள்ளும்போது ஏதோ சிக்கலை உணர்ந்தேன். இன்றும் கூட அப்படி நடக்குமோ என்று நினைப்பது. சில நாட்கள் இப்படி நினைத்துக் கொண்டே இருந்தால் அது உண்மையாகவே நடந்துவிடக்கூடும். ஒருவருக்கு மறைமலை நகரில் வீடு. ஈ.சி.ஆரில் வேலை. வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் உடல் சோர்வாகிவிடுகிறது. உறவில் ஈடுபட முடியவில்லை என்றார்.

‘ஒன்று வீட்டை அலுவலகத்தின் அருகில் வீட்டை வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது வீடு இருக்குமிடத்திலேயே ஒருவேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றேன். இங்கு வேலை பார்த்தால் சம்பளம் அந்தளவுக்கு போதாது என்கிறார். 

அவரிடம் இவ்வாறு கூறினேன்: “சம்பாத்தியம் அல்லது சந்தோஷம். ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். வாழ்க்கையில் பணத்தை விடவும் மகிழ்ச்சி முக்கியம் என்று மனம் நினைக்க வேண்டும். எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.”

அக்டோபர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com