அப்பா கோபம் பொய்க் கோபம்!

அப்பா கோபம் பொய்க் கோபம்!
Published on

அப்பாவிடமிருந்து நான் தப்பாமல் பெற்றுக் கொண்டது முன்கோபம் தான். பதினைந்து வயதுக்கு மேல் அப்பாவிடம் கோபமாகவே தான் இருந்திருக்கிறேன்.

அம்மாவுடனான அவரது பிணக்குகளில், அவருக்கே உரிய அலட்சியமான தோரணையுடன் வீட்டில் பலநேரம் நடந்து கொள்வதைப் புரிந்து கொள்ளவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் தவித்த பருவங்களில், நீதிபதியாகி விட்டிருப்பேன். கோபக்கோலம் பூண்டு அப்பா யாரைச் சத்தம் போட்டாலும் வீட்டில் பலமணி நேரத்திற்கு

அசாதாரண அமைதி நிலவும். அப்படியொரு சூழலில், குற்றவுணர்ச்சி மேலிட, குழந்தை என்கிற முறையில் என்னிடம் சகஜமாகப் பேசவரும் அப்பாவிடம் முகம்கொடுக்காமல் நோகடிப்பேன்.

எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். அப்பாவின் செருப்பு சப்தம் கேட்கும். ‘‘தீபா!'' என்ற அன்பான குரல் ஒரே சமயத்தில் அழுகையையும்,

ஆத்திரத்தையும், சுயகழிவிரக்கத்தையும் கொண்டு வரும். அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டேன். நான் சொல்லாமல் அல்லது சொல்லத் தெரியாமல் விட்ட சொற்கள் ‘ஙிடதூ ச்ணூஞு தூணித டுடிடூடூடிணஞ் ட்தூ டூணிதிஞு ஞூணிணூ தூணித, ச்ணீணீச்?'' என்பதாகத் தான் இருந்திருக்கும்.

எதையாவது கேட்டால் ‘‘ம்'' என்று அமர்த்தலாகப் பதில் சொல்லிவிட்டு, ‘என்னைத் தனியாக விட்டுப் போகமாட்டாரா' என்று அழும்போடு உட்கார்ந்திருப்பேன். என்னிடம் தான் கோபப்பட்டிருந்தார் என்றால் இன்னும் மோசம். ‘‘அப்பா கோபம்?'' என்று கேட்டால் சின்ன வயதில் ‘‘பொய்க்கோபம்'' என்று அழுது கொண்டே சொல்ல வேண்டும். பதினைந்து வயதில் செல்லுபடியாகுமா. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.

‘‘அகதா கிர்ஸ்டி படிக்கிறியா? டால்ஸ்டாய் படி. ஆஹா எப்டி இருக்கும் தெரியுமா?''என்று ஏதாவது சொல்வார்.

சமாதானமாகி அவரிடம் ‘‘காப்பி எடுத்துக்கோங்க'' என்று வரும் அம்மாவையோ மற்றவர்களையோ எரிச்சலாகிப் பார்ப்பேன். இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட சுயமரியாதையே கிடையாதா என்று, முறைத்துக் கொண்டு அவதிப்படுவேன். குணமே அப்படியாகிப் போனது.

அவ்வளவு கோபம் ஏன் வரும்? வாஞ்சையில் அப்பாவை விஞ்ச யாரும் கிடையாது. அப்பாவைப் பற்றிய வேறு பரிமாணங்களை மிகவும் சாவதானமாகத் தான் புரிந்து கொள்ள வாய்த்தது.

டூ லேட்!

எவ்வளவோ சிந்தனைகளுக்கிடையே சதா எங்கள் தேவைகள் குறித்தும் நலன் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டு தானிருந்தார். ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது ஒரு சனிக்கிழமை ஏதோ ஓவியப் போட்டிக்காக வேறு பள்ளிக்குச் செல்ல வேண்டி இருந்தது. காலையில் பள்ளி சென்று அங்கிருந்து மற்றவர்களுடன் பஸ்ஸில் செல்ல வேண்டும். மதியம் திரும்பி விடுவதாக எதிர்பார்க்கப்பட்டது. விவரம் கேட்டுக் கொண்ட அப்பா இரண்டு வாழைப்பழங்களை எடுத்து வந்து பையில் வைத்து, ‘‘லேட்டாச்சுன்னா சாப்பிடு'' என்று அனுப்பி வைத்தார். நானோ மறந்தே போனேன். மூன்று மணிக்கு மேல் வீடு வந்து சேர்ந்த போது கடுமையான தலைவலி என்று அழுது கொண்டே வந்தேன்.

‘‘பழத்தைச் சாப்டியா?'' என்றார் அப்பா. இல்லை என்றதும் வந்ததே அவருக்குக் கோபம். கன்னா பின்னாவென்று திட்டினார். நிச்சயம் அழுதபின்பு வந்து கட்டியணைத்து ‘‘அப்பா கோபம் பொய்க் கோபம்'' என்று சொல்லி இருப்பார். அது அவ்வளவு உண்மை!

2013இல் அப்பாவுக்கு பித்தப் பை அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது அவரது நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான திரு.பழனியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து ஒருவாரம் ஆஸ்பத்திரியும் வீடுமாக இருந்த என்னைவிட, ஆஸ்பத்திரியிலேயே இருந்த நண்பர்களுள் முக்கியமானவர்.

சிறுவயது முதலே அவரைப் பார்த்திருந்தாலும், அப்பா கோவை வரும் போதெல்லாம், ஏன் அப்பா எங்கே வெளியூர் சென்றாலும் துணையாக உடன் செல்பவர் திரு. பழனி அவர்கள். அதிகம் பேச மாட்டார்; ரொம்ப அமைதியானவர்.

கேண்டீனில் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ‘‘அப்பாவை ஏன் இவ்ளோ பிடிக்கும்? எப்போ அப்பாவை முதல்ல சந்திச்சீங்க'' என்று கேட்ட போது அவரது பதில் எதிர்பாராததாக இருந்தது. ‘‘அன்பு தாம்மா. அப்பாவின் பேரன்பு.'' என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் அவர் பதிலளித்தார். இத்தனைக்கும் நண்பர்கள் தாம் அப்பாவுக்கு ஓடியோடி எல்லாம் செய்வது போல் இருக்கும்.

ஆனால் அவர் சொன்ன பதிலில் இருந்த உறுதியில் உண்மை ஒலித்தது. அப்பாவைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லையோ எனும் சந்தேகம் மீண்டும் வலுத்தது.

2010 ஆம் ஆண்டு எனக்கு இளைய மகள் பிறந்த அன்று, வீட்டில் அம்மாவும் அப்பாவும் நானும் குழந்தை நேஹாவும் மட்டும் தான் இருந்தோம். திடீரென்று வலி எடுத்து விட்டதால் செக்அப்புக்குப் போறேன் என்று சொல்லி விட்டு, ஓசைப்படாமல் துணிகள் இருந்த பையை எடுத்துக் கொண்டு இரண்டு தெரு தள்ளி இருந்த நர்சிங் ஹோமுக்கு நடந்து விட்டேன். பின்னே? வயதான அவர்கள் இருவரையும் கலவரப்பட வைக்க முடியுமா?

அப்பாவா அசருவார்? அப்போது உடல்நிலையிலும் மனதளவிலும் மிகவும் தளர்ந்திருந்தாலும், மிக அத்தியாவசியத் தேவைக்கன்றி வெளியில் வராத அப்பா, சில நிமிடங்களிலேயே என்னைப் பின் தொடர்ந்து மருத்துவமனையில் வந்து காத்திருந்திருக்கிறார் என்பது எனக்கு அப்புறம் தான் தெரியும்.

திருச்சியில் அப்பாவின் நண்பர் மோதி ராஜகோபாலின் மகளின் திருமணம். அக்காவுக்கு நல்ல பழக்கம் என்பதால் அக்கா, அப்பா, நான் மூவரும் பயணமானோம். அந்தப் பகல் நேர ட்ரெயினில் அப்பா, அக்கா நான் மூவரும் பயணித்ததை மறக்கவே முடியாது. ஜன்னலோர சீட்டுக்காக அக்காவும் நானும் கொஞ்சம் அடித்துக் கொண்டதையும் அப்பா சமாதானப்படுத்தி இருவரையும் மாற்றி மாற்றி அமரச் சொன்னதையும் கூட!

அக்காவுக்குக் குழந்தை பிறந்து வீட்டிலிருந்த சமயம் நானும் அவளும் மதியம் சீட்டாடுவோம். ஆசையாய் வந்து எங்களுடன் கலந்து கொள்வார். அப்பா விளையாட வருகிறார் என்பதால் அதீத உற்சாகம் அடைவேன் போல; அவரை வம்புக்கிழுத்து கேலி செய்வேன். அக்கா சிரித்தாலும் கண்ணாலேயே என்னை சும்மா இரு.. சும்மா இரு என்பாள். அம்மு ஃபுல் வாங்கினால் ஒன்றும் சொல்லாமல் இருந்த அப்பா நான் வாங்கிய போது பழித்துக் காட்டினார். ‘‘அவ தானேப்பா எப்பவுமே ஜெயிச்சிக்கிட்டு இருக்கா, அவ ஃபுல் வாங்குறத விட நான் வாங்கும் போது கிண்டல் பண்றீங்க?'' என்றேன். ‘‘ம்.. கொழுப்பு அதிகம் இருக்கறவங்களைத் தானேம்மா தட்டணும்'' என்றார் சிரித்தபடி. இது போன்ற பொழுதுகள் இன்னும் அதிகம் கிடைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வோம்!

அப்பாவுக்கும் அம்மாவுக்குமான வசந்தகாலங்கள் அவர்களிருவரும் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்த கடிதங்களின் வடிவில் என்னிடம் வந்து சேர்ந்தது. இந்த மாதிரி நுண்ணுணர்வுப் பைத்தியம் நான் தானென்றோ, அல்லது கடைக்குட்டியாக, அவர்களின் இளமைக்கால வாழ்வை அதிகம் பார்க்காதவள் என்றோ, என்னிடம் தான் கொடுத்தார்கள். அந்தக் கணத்தை மறக்க முடியாது. பத்திரமாக வைத்திருக்கிறேன். என்றாவது வெளியிடலாம் என்று ஒரு எண்ணம்.

தீபலட்சுமி, எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள். எழுத்தாளராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் செயல்படுகிறார்.

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com