அ ப்பா எப்போதும் வியப்பே எனக்கு; எல்லோருக்கும் அப்படித்தானா என்பது தெரியாது. அப்பா என்கின்ற தமிழ்ச் சொல்லே எத்தனையோ விதமாக மாறி மாறி மருவி உலக மொழிகளில் எல்லாம் உயிர்ப்பித்திருக்கின்றது.
அப்படியே அப்பனை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கானே என்பது, வழக்கில் நீண்ட நாட்களாக உள்ளது. உரிச்சு வச்ச மாதிரி என்பதிற்குள் உருவ ஒற்றுமை மட்டும் சொல்லப் படுவதில்லை குண நலன்களும் சேர்ந்தே குறிக்கப்படுவதே சிறப்பு. அம்மா சொல்லுவாள், பல நேரம் அவாளை மாதிரியேதான் சாப்பாட்டு ருசி எல்லாம்ன்னு மகனை குறித்து சொல்லும் போது மணாளனை குறிப்பிடுவது.
ஓரு தந்தையின் கடமையை பழம்பாடல் சொல்லுகின்றது:
‘சான்றோனாக்குதல் தந்தையின் கடனே'
இன்றைய அப்பாக்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர். பையன் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ இருக்கின்றானென்ற பெருமைக்கே பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர்.
என்னப்பா, பிள்ளை குடிப்பானாமே என்று வினவினால், அது நம்ம நாடு மாதிரி இல்லை அண்ணாச்சி... அங்கேல்லாம் எல்லாரும் குடிப்பாங்கன்னு விடை தருவதை பெருமையாகக் கருதுகின்றனர். ‘நானே அவன்கூட உட்கார்ந்துகுடிப்பேன் அண்ணாச்சி' எனப் பெருமை பேசும் அப்பாமாரும் உண்டு.
சிகரெட்டு ரெண்டுபேரும் ஒரே பிராண்டையே குடிப்பதாகப் பெருமைப்படும் அப்பாக்களும் உண்டு.
உலகம் எனில் உயர்ந்தோர் பக்கமே என்கின்றது தமிழ். சான்றோர்கள் என்பதே உயர்ந்தோர்கள்.
சான்றோனாக்குதல் தந்தையின்கடனே என்றால், கல்வி கேள்விகளில் குழந்தையை
சிறந்தவனாக்கினாலே அவன் ஒழுக்கத்தையும் உயர் பண்புகளையும் கற்றுக்கொள்வான் என்பதனைக் குறிக்கின்றது, தமிழ் மரபு.
கோவலனைக் குறிக்கையில் மாசாத்துவான் பெற்ற மகனேயாகி என்கிறார் இளங்கோவடிகள். அவன் மாசாத்துவானை என்னோற்றான்கொல் என்று வியக்க வைக்கவில்லை. அதனாலேயே கண்ணகிப் பெருமாட்டி பாண்டியன் அவையிலே அவனை
மாசாத்துவான், பெற்ற மகன் என்கின்றாள்.
மாதவி அம்மை கூட அவனுக்கு மடல் எழுதும் போது
அடிகள் முன்னர் நான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்
குரவர் பணியன்றியும் குலப் பிறப்பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு...
என வருந்துகின்றாள். தந்தை தாயைப் பேண வேண்டியவன் அதனைக் கூட கைவிட்டு விட்டுப் போனாயே என்று. என்னை அழைத்துச்
சென்றால் இரவுதானழைத்துச் செல்வாய்; கண்ணகி அக்காவையும் அப்படியே இரவு அழைத்துச்
சென்றது என்னாலேயா என்று.
இங்கே மாசாத்துவான் குற்றவாளியா? இல்லை கோவலனா? என்ற வினா எழுகின்றது.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல் என்பார் பேராசான்.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் என்றும் சொல்வார்.
தந்தை மகனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கின்ற பேராசான் மகனை அந்தத் தந்தைக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து உதவிசெய் என்கின்றான்.
மிதமிஞ்சிய செல்வம் கோவலனை அப்படி ஆக்கியிருக்கலாம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றாள் அவ்வைப்பெருமாட்டி.
தந்தை தாய்ப் பேணென்றும் அவளே சொன்னாள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனவும் அவளே கூறிச் சென்றாள்.
தந்தை சான்றோனாக இருந்தால் தானே அவன் சொல் மந்திரமாகக் கூடும்? பணம் இருந்தால் போதுமென்று வாழ்வதனைப் பெருமையாகக் கருதும் சமுதாயத்தில் இது எங்கனம் சாத்தியம்?
பிசிராந்தையார், தன் மக்கள் உயர்ந்தவர்களாக சிறந்தவர்களாக இருப்பதனாலேயே தனக்கு நரைக்கவில்லை என்கின்றார்.
ஏவா மக்கள் மூவா மருந்து என்கின்றது முது மொழி தமிழ். அப்பா என்பது மகனாலும் மகளாலும் வந்த பெருமை. அதனைக் காக்கின்ற பெரும் பொறுப்பு அவர்களுக்கும் உண்டல்லவா?
ஜனவரி, 2021