டிவிட்டரில் சமீபத்தில் சுற்றலுக்கு வந்த ஒரு ஹிந்தி சீரியலின் சின்னக் காட்சி ஒன்று: ஏதோ ஒரு குடும்பத் தகராறு அல்லது விவாதத்தின் முடிவில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண், கயிற்றை வீசி நிலவை இழுத்து தரைக்குக் கொண்டு வருவார்.
ஏதோ பள்ளத்தில் சிக்கிய காரை இழுப்பது போல ஓர் உணர்ச்சியுடன் அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பார்! குடும்பத்தில் அனைவரும் சமகாலத்தில் இருப்பது போல ஒரு தோற்றத்தில் இருப்பவர்கள் என்பதால், எந்த யுகத்தில் இந்த அதிசயம் சாத்தியமாகியிருக்கிறது என்கிற சந்தேகம் பகுத்தறிவு கொண்டவர்களுக்கு இயல்பாகவே எழும்.
ஆனால் சீரியல் உலகம் என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. நாட்டின் சட்ட திட்டங்கள், சமூக வழக்கங்கள் என்று எந்தவிதமான சட்டகத்துக்குள்ளும் அடங்காதது.
தமிழ் சீரியல் உலகிலும் இதுதான் விதி. தமிழ்நாட்டை அதன் சீரியல்கள் வழியாக மட்டுமே புரிந்து கொள்ள யாராவது முயன்றால், முன்னேறிய சமூகநீதி மாநிலம் என்கிற நிஜம் மறைந்து, பழைமைகளில் திளைக்கும் பிற்போக்கு நிலம் என்கிற பிம்பமே எழும்.
சில வருடங்களுக்கு முன்பு அத்திப்பூக்கள் என்கிற சீரியல் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வாடகைத் தாயாக செல்லும் ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை. அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் உணர்வுப்பூர்வமான பந்தம், அதனால் ஏற்படும் குழப்பம் என்று பல நிலைகளில் அந்தத் தொடர் பயணப்பட்டது.
உண்மையில் அந்த சீரியலில் காட்டியது போல திருமணமாகாத ஒரு பெண், வாடகைத் தாயாக ஆக முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதில் முக்கியமானது, வாடகைத் தாயாக முன் வருபவர், திருமணமானவராக குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால், இந்த தொடரின் வாயிலாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பம் என்பது முற்றிலும் வேறுவிதமானது.
இப்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இன்னொரு சீரியல் நிலா. நான் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் (எனது மன நலனைப் பேணும் அக்கறையில் தொடர்ந்து சீரியல்கள் பார்ப்பதில்லை) அதில் ஒரு பெண் தனது நெருங்கிய தோழியின் கணவராலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமாகிறார். ‘தோழியின் கணவர் மீது தவறில்லை, அது ஒரு விபத்து' (!!!) என்று ‘புரிந்து கொண்டு' அந்தப் பெண், தோழியின் கணவருடனேயே சென்று கருக்கலைப்புக்கு முயற்சிக்கிறார். இதில் பாலியல் வல்லுறவு என்கிற குற்றம் பற்றிய புரிதலின்மை வெளிப்படுவது ஒருபுறம் இருக்கட்டும், இன்னொரு புறம் கருக்கலைப்பு செய்ய இவர்கள் அணுகிய மருத்துவர், இவர் திருமணமாகாதவர் என்பதால் சட்டப்படி அது தவறு என்று சொல்லி போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டுகிறார். நடைமுறையில் உள்ள சட்டம் பற்றிய புரிதலற்ற, அபத்தமான ஒரு காட்சியால் பார்ப்பவர் மனதில் பதியும் எண்ணம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்று நினைக்கும் போதே பதறுகிறது.
தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் கதாநாயகர்களின் தாய் வில்லியாக இருப்பார்கள், (அபூர்வமான விதிவிலக்குகளும் உண்டு). அவர்களது வேலையே, தனது மகனிடமிருந்து அவர் விரும்பித் திருமணம் செய்து கொண்ட பெண்ணைப் பிரிப்பதுதான். மேற்கூறிய நிலா சீரியலிலேயே மகனிடமிருந்து மனைவியை பிரிக்க வேண்டும் என்பதற்காக மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று மருத்துவமனையில் பொய் சான்றிதழ் வாங்கி மகனின் மனதில் சந்தேகத்தை விதைக்கும் வேலையை ஒரு தாய் செய்வார்.
திருமகள் என்றொரு சீரியலிலும் இது போல ஒரு காட்சி. மருமகளை மகனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக மருமகளுக்கு ஏற்கனவே யாருடனோ திருமணம் நடந்து விட்டதென்று போலி புகைப்படங்களை வைத்து நாடகம் நடத்துவார்.
பிறகு கொலையே செய்தால் கூட காவல்துறை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், நீங்கள் தமிழ் சீரியலின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும்.
ரோஜா என்கிற சீரியலின் கதாநாயகன், ஒரு பிரபல வக்கீல். ஆனால் அவரது மனைவி மீது நடக்கும் பல கொலை முயற்சிகள், கடத்தல் போன்ற எதையும் காவல்துறை வரை கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று முயற்சிக்க மாட்டார். காரணம் அதை செய்வது குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பெண். எந்த குடும்பத்தில் இப்படி தொடர் கொலை முயற்சிகள் நடக்கின்றன என்றும் தெரியவில்லை. ஆணிச்செருப்பு அணிவது, ஏழு மலை ஏழு கடல் தாண்டி விளக்கு ஏற்றுவது போன்ற பரிகாரங்களுக்கும், கடும் நெருக்கடியான சூழலில் கடவுளே ஆஜராகி உதவி செய்வதற்கும் இந்த சீரியல் பிரசித்தம். அதுவும் எப்படிப்பட்ட உதவி? லட்டு பிடிப்பது, முறுக்கு சுடுவது போன்ற உதவிகள்!
பாரதி கண்ணம்மா நிச்சயம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகன், இருதய நோய் நிபுணர். ஆனால் மனைவிக்கு பிரசவம் பார்ப்பார். அதெல்லாம் கூட சீரியல் என்று விட்டுவிடலாம். ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க எட்டு வருடங்களா எடுக்கும்? அதுவும் மனைவியின் மீது சந்தேகப்படுவது, கணவரே மருத்துவர் என்னும் போது ஏன் அவ்வளவு தாமதம்? அதுவும் ‘மனைவி மீது சந்தேகம், மற்றபடி நாயகன் நல்லவன்' என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான பிற்போக்குத்தனமான டெம்ப்ளேட்? ஏன் சந்தேகம் வருகிறது என்று பார்த்தால், நாயகனுக்கு ஒரு விபத்து காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது, ஆனால் மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. என்ன விபத்து என்று பிளாஷ்பேக்கில் சொல்கிறார்கள். பெரிய விபத்துதான், ஆனால் அதில் நாயகனுக்கு முதுகெலும்புதான் பாதிக்கப்பட்டிருக்கிறது!
தமிழ் சீரியல்களில் டிஎன்ஏ டெஸ்டிற்கு கிடைத்த முக்கியத்துவம் வேறு எந்தத் தளத்திலாவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. ரோஜாவிலும் கூட டிஎன்ஏ டெஸ்டில் பல குளறுபடிகள், தில்லுமுல்லுகள் என்று நடக்கும். மருத்துவக் கட்டமைப்பில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாட்டில் சில சீரியல்கள் பதிய வைக்கும் கருத்து, உங்களிடம் கொஞ்சம் பணமும் செல்வாக்கும் இருந்தால் நீங்கள் விரும்பிய ரிப்போர்ட்டை எந்த லேபிலும் பெறலாம்.
சினிமாவைப் போல் அல்லாமல் சீரியலில் பெண் கதாபாத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் என்று ஆறுதல் அடைய முடியாது. சீரியலில் வரும் பாத்திரங்கள் அப்படி. ஒன்று மடித்த சேலைக்குள் பாம்பை மறைத்து வைத்து அதை அணிய காத்திருக்கும் பெண்ணை கொலை செய்ய திட்டமிடுவது. அல்லது, அப்படி தன் மீது கொலை முயற்சி நடந்தாலும் பரவாயில்லை, குடும்ப ஒற்றுமைக்காகவும் கௌரவத்திற்காகவும் அதை பொறுத்துக்கொண்டு மேலும் கொலை முயற்சிகளுக்கு அனுமதி வழங்குவது. இப்படி இரண்டு சட்டகங்களுக்குள் இந்த பெண் கதாபாத்திரங்களை அடக்கிவிடலாம்.
தமிழ் சீரியல்களுக்கு என்று பொதுவான சில அம்சங்கள் உண்டு. அவ்வளவு பிற்போக்கானவை அவை. கொலை கூட செய்யத் தயங்காத மாமியார்கள், கறுப்பாக இருப்பதாலேயே கஷ்டங்களை அனுபவிக்கும் கதாநாயகிகள், கணவரை சார் அல்லது ஐயா என்று அழைக்கும் நாயகிகள் இப்படி பல. இதன் சமூகரீதியான தாக்கங்கள் என்ன என்பது பற்றிய ஆய்வுகளோ தரவுகளோ இல்லை என்பது கவலைக்குரிய இன்னொரு விசயம்.
சில வருடங்களுக்கு முன்பு மாதர் அமைப்பு ஒன்றில் தமிழ் சீரியல்கள் அதன் தாக்கம் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொண்டார்கள். பெண்கள் பற்றிய மிக மோசமான பிரதிநிதித்துவங்கள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் அந்த ஆய்வு பேசியது. இன்று அதை விட பின்னோக்கி சென்று இருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு வந்த சீரியல்களில் இருந்த ஓரளவு நம்பகத்தன்மை கூட இன்று வரும் பெரும்பாலான சீரியல்களில் இல்லை.
இன்றைய சீரியல்கள் வழியாக மட்டுமே யாராவது, தமிழ்நாட்டின் சட்டங்கள் அல்லது மருத்துவ வசதிகளை புரிந்து கொண்டால், அவர்களுக்கு என்னமாதிரியான கருத்து இருக்கும்? தமிழ்நாட்டில், கருக்கலைப்பு என்பது கொலை, அதற்குரிய தண்டனை உண்டு. அதுவும் திருமணத்தை மீறிய உறவு என்றால் நிச்சயம் கடும் தண்டனை.
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு வேளை குடி போன்ற போதைகளின் ஆதிக்கத்தில் அதைச் செய்தால் பிரச்னை இல்லை, அந்தப் பெண்ணே மன்னித்து விட்டுவிடலாம்.
சக குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்தாலும் தப்பித்துக்கொள்ளலாம்.
ஒரு புறம் தமிழ் சினிமா கபிலன், மாறன் என்று அறிவியல்பூர்வமான ஒரு பாய்ச்சலை நிகழ்த்திக்-கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் சீரியல்கள் என்கிற பெயரில் நமது வீடுகளுக்குள்ளேயே நம் பகுத்தறிவின் மீது ஏவப்படும் வன்முறையை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
சொல்லப்போனால், நிலவைப் பிடித்து இழுத்து வருவதையொத்த காட்சிகளுக்கு தமிழ் சீரியலிலும் பஞ்சமில்லை. பாண்டவர் இல்லம் என்கிற சீரியலில், தன்னை சோழ நாட்டு இளவரசியாகவே கற்பனை செய்து அப்படியே வாழ்கிறார். ஏன் அப்படி கற்பனை செய்கிறார் என்றால் அவர் சோழர் காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்தவர் என்று சொன்னார்கள். மதுரை, பாண்டிய நாடு என்று பித்து பிடித்து அலைந்து கொண்டிருப்பவர் என் கணவர். அவரைப் பாண்டிய நாட்டின் பாரம்பரிய காஸ்டியூமில் நினைத்துப் பார்க்கவே திகைத்துவிட்டது.
அந்த நினைப்பில் ஒரு நொடி தலை சுற்றி மீள்வதற்கு முன்பு அடுத்த அதிர்ச்சி. ‘சோழ இளவரசியை' பார்க்கும் மனநல மருத்துவர் சொல்கிறார்: ‘‘மகிழ்ச்சியாக இருக்கிறார், அவர் அப்படியே இருக்கட்டுமே'' என்று! இப்படியொரு மருத்துவரைப் பற்றி தேரா மன்னா என்று எந்த வாயிலுக்குச் சென்று முறையிட?!
பி.கு: ஒரு இடை வேளைக்கு பிறகு மீண்டும் அந்த நாடகத்தின் சில எபிசோடுகளை பார்த்தேன். சோழ நாட்டு இளவரசி மிக நவீன உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தார். அவர் சோழ நாட்டு இளவரசர் என்று நம்பிய ஒரு கதாநாயகனுக்கு மனைவியாகியிருந்தார். ஆனாலும் ஏதோ பழிவாங்கும் நோக்கம் இருப்பது போன்றதொரு தோற்றம். ரொம்ப கிளீஷேவாக இருந்தாலும், இதுதான் நிஜம்: இவர்கள் பழி வாங்குவது அந்த கதாபாத்திரங்களையா இல்லை நம்மைப்போல பார்வையாளர்களையா என்பதுதான் தெரியவில்லை!.
ஆகஸ்ட், 2021