இறுதிச்சுற்று திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி இயக்குநர் சுதாவின் குரலிலேயே தெரிந்தது. நொச்சிக்குப்பம் மக்களுடன் படத்தின் வெற்றியை கொண்டாடடிவிட்டு திரும்பியவரை தேனாம்பேட்டையிலுள்ள அவருடைய அலுவலகத்தில் உற்சாகமான காலைப் பொழுதில் அந்திமழைக்காக சந்தித்தோம்.
“மணி சார்கிட்ட அசிஸ்டெண்ட் ஆக சேரும் போதே கோச்சுக்கும் ஸ்டூடண்டுக்குமான கதையா தடகளப் பின்னணியில் இறுதிச்சுற்று திரைக்கதையை வச்சிருந்தேன். துரோகி படம் முடிச்சிட்டு இந்த ஸ்கிரிப்டை திரும்ப எடுத்து படிக்கும் போது ஏதோ குறைவதாகப்பட்டது. அந்த சமயத்துல ஒரு பத்திரிகையில் பெண்கள் குத்துச் சண்டையைப் பற்றி சின்னதா படம் ஒன்னு போட்டிருந்தாங்க. ராயபுரத்தில இருந்து பெண்களை குத்துச் சண்டைக்கு, போருக்கு போற மாதிரி தயார்ப்படுத்தும் ஏழ்மையான பெற்றோர்கள். ஏன்னா ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வேலை கெடைக்கும். அதுவரைக்கும் பாக்ஸிங் பற்றி ஏராளமான சினிமா பார்த்திருந்தாலும் அமெச்சூர் பாக்சிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உடனே அது பற்றி ஆராய்ச்சில இறங்கினேன்.
இந்தியா முழுக்க பெண்கள் குத்துச் சண்டை சம்பந்தமாக வீரர்கள், கோச், ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டிஸ் எல்லாரையும் சந்திச்சேன். என்னை அதிகம் கவர்ந்தது தமிழ் நாட்டு பொண்ணுங்கதான்.
2000 ல இந்தியாவுல பெண்கள் குத்துச்சண்டை ஆரம்பிச்சது. 2003 லயே தமிழ்நாடு நேஷனல் சாம்பியன் ஆயிடுச்சி. 2006 ல நாம உலக சாம்பியன் ஆயிட்டோம். ஆனா அந்த பொண்ணுங்க நிலைமை ரொம்ப மோசம். அதே பாக்ஸர்ஸ் தான் இருக்காங்க. புதுசா யாரையும் வர விட மாட்டேங்கிறாங்க. அந்த பெண்களோட கதையை கேட்டு அழுதிருக்கேன். அப்பதான் இந்த விஷயங்கள் வெளில வரணும்னு நெனைச்சேன்.
அதுவரை பாக்சிங் செய்யற பெண்கள் மல்யுத்த வீரர்கள் மாதிரி கரடுமுரடான உடம்போட இருப்பாங்க என்ற என்னுடைய எண்ணம் அவங்கள பார்த்த பிறகு மாறிடுச்சி. நெறைய அழகான பொண்ணுங்க பாக்சிங்ல இருக்காங்க.
சின்ன வயசுல இருந்தே நான் நல்லா படங்கள் எடுப்பேன். ஒளிப்பதிவாளர் ஆவதுதான் என்னுடைய ஆசையும் கூட.
சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்துல இருந்து ஒரு பொண்ணு சினிமாவுக்கு போகணும்னு சொன்னா விட்ருவாங்களா..? வீட்ல நான் ஐஏஎஸ் படிக்கணும்னு ஆசை. ஹிஸ்டரி எடுத்தா ஐஏஎஸ் தயாரிப்புக்கு சுலபமா இருக்கும்னு சொல்ல WCC ல சேர்ந்தேன். காலேஜ்ல இருந்து பிலிம் இன்ஸ்டியூட் க்கு அப்ளை செஞ்சா, சயின்ஸ் பேக்ரவுண்ட் இல்லாம சினிமேட்டோகிராபி படிக்க முடியாதுன்னு லெட்டெர் அனுப்பிட்டாங்க. காலேஜ் முடிச்ச உடனே கல்யாணம். என்னோட கணவர் தான் உனக்கு என்ன பிடிக்குமோ பண்ணு, சும்மா உட்கார்ந்திருந்தா மூளை துருப்பிடிச்சி போய்டும்னு சொன்னார். அதுக்கப்புறம் தான் மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். காலேஜ்ல லக்சரரா வேலை பார்த்துட்டு இருக்கும்போது பிரண்ட் மூலமா ரேவதி டாக்குமெண்ட்ரிக்கு ஸ்கிரிப்ட் எழுத வாய்ப்பு கெடைச்சுது. அதற்கடுத்து ரேவதி மித்ர மை பிரண்ட்(Mitr my friend) படம் ஆரம்பிக்க அதுல டயலாக், ஸ்கிரிப்ட் செய்தேன். ரேவதி நல்ல நடிகை மட்டுமல்ல அருமையான இயக்குநர். ஆர்டிஸ்ட் கிட்ட இருந்து பர்பாமென்ஸை எப்படி வாங்கிறதுன்னு அங்கதான் கத்துகிட்டேன்.
அடுத்து என்னன்னு யோசிக்கறப்ப எனக்கு மணிரத்னம் படத்துல வேலை பார்க்கணும்னு ஆசை. இல்லைன்னா ராம் கோபால் வர்மா, ஷங்கர் இப்படித்தான் யோசிச்சுட்டு இருந்தேன். நண்பர் சுரேஷ் பாலாஜி, மணி சாரிடம் கன்னத்தில் முத்தமிட்டால் போஸ்ட் புரடக்ஷன் டைம்ல என்னைப் பற்றி சொல்ல, படம் ரிலீசுக்குப் பிறகு இண்டர்வியூ. கன்னத்தில் முத்தமிட்டால் பற்றி என்னுடைய கருத்தை கேட்டார். ஒரு ஸ்கிரிப்ட் எழுதியாச்சே, தனியா படம் பண்ணலாமே என்றார். ‘எனக்கு அந்த நம்பிக்கை இன்னும் வரலைன்னு சொன்னேன்.
எங்கிட்ட ஒர்க் பண்ணா வந்துருமான்னு கேட்டார். நீங்க ஒர்க் பண்ற ஸ்டைல் பார்த்தா வரலாம்னு நெனைக்கிறேன்னு (கொஞ்சம் திமிரான பதில் தான்) சொன்னேன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல இருந்து ஒரு லைனை எடுத்து அது பத்தி ஆய்வு செஞ்சிட்டு வரச் சொன்னார். எவ்வளவு நாள்னு சொல்லல. ஆராய்ச்சி செய்யறது எனக்கு பிடித்தமான வேலை என்பதால் ஒரு வாரத்துல எல்லா தகவல்களையும் சேர்த்து பெரிய பைலோட அவர் முன்னாடி போய் நின்னேன். மணி சாருக்கு ரொம்ப சந்தோஷம். அங்கிருந்து தொடங்கி அடுத்த ஆறரை வருஷத்துல அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம்.
ஆய்த எழுத்து படம் முடிந்து குரு தொடங்குவதற்கு இடைப்பட்ட இரண்டரை வருஷத்துல நான் மட்டும் தான் மணி சாருக்கு அசிஸ்டெண்ட். அந்த டைம்ல ஏழெட்டு ஸ்கிரிப்ட் பண்ணியிருப்போம். ஒவ்வொரு முறையும் இதுதான் அடுத்த படம், மூணு மாசத்துல ஷீட்டிங் போய்டலாம் என்ற நினைப்போடத்தான் வேலை பார்ப்போம்.
மணி சார் இப்படித்தான் படம் செய்யனும்னு யாரையும் உட்கார வச்சி கிளாஸ் எடுக்க மாட்டார். அவர் எப்படி ஒர்க் பண்றானுன்னு பார்த்து கத்துக்கிறதுதான். ஆனா அவர் சொன்னது, ’சுதா நீயாவது நான் சொல்றத கேளு. படத்துல முக்கியமான காட்சின்னு எதை நினைக்கிறயோ அதை முதலில் ஷூட் பண்ணு. கிளைமேக்ஸ் தான் படத்தை தாங்கும்னு நெனைச்சா அதை முதலில் எடுக்கறதுதான் சரி. படம் வளர வளர ப்ரடியூசர்க்கு செலவு தான் கண்ணுல தெரியும். கடைசி நேரத்துல பணம் இருக்காது. பாட்டுக்கு மட்டும் செலவு பண்ண ரெடியா இருப்பாங்க. ஏன்னா படத்தோட வியாபாரத்துக்கு பாட்டு வேணும்.’ என்னோட குரு சொன்னதைத்தான் முதல் படம் துரோகிலயும் செய்தேன், இப்ப இறுதிச்சுற்று லயும் அதேதான். முதல் எட்டு நாள் ஷீட்டிங்குக்கு பிறகு 35 நிமிஷம் கிளைமேக்சை தான் எடுத்தேன். கிளைமேக்சை முதலில் எடுப்பது ரொம்ப சிரமமான வேலை. அதிக செலவு வைக்க கூடியதும் கூட.
2007 ல் மணி சாரிடம் இருந்து வெளியே வந்து பண்ண படம்தான் துரோகி.
அது சரியா போலங்கிற போதும் அதை எப்படி எடுத்துக்கறதுன்னு மணி சார் கிட்ட தான் கத்துகிட்டேன். அவர் எப்பவும் சொல்வார். ‘man who can't handle his success, can not handle his failure’. ஆய்த எழுத்து படம் ரிலீசாகி மூணாவது நாள், சார் படம் இங்க நல்லா போய்ட்டிருக்கு, அங்க நல்லா போய்ட்டிருக்குன்னு நாங்க சொன்னோம். ஏன்னா எங்ககிட்ட மீடியேட்டர்ஸ் அதைத்தான் சொன்னாங்க. நாங்க நம்பினோம். ஆனா, நாலாவது நாள் இதைச் சொன்னப்ப மணி சார் சொன்னது,’ படம் சரியா போகலை, அத புரிஞ்சிகிட்டு அடுத்த வேலைய பாருங்க.. Just move on ன்னு சொன்னாரு. துரோகி சரியா போலங்கிறது எனக்கு ரெண்டாவது நாளே தெரிஞ்சிடுச்சி. ரொம்ப வருத்தமான விஷயம் தான். அதுக்காக நான் இடிஞ்சி போய் உட்காந்துரல. மூணாவது நாள் எனக்கு போன் வந்தப்ப என் படம் ஊத்திகிச்சின்னு நானேதான் சொன்னேன். இன்னிக்கு இறுதிச்சுற்று நல்லா போய்ட்டிருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. சந்தோஷம். அதுக்காக நான் வானத்துல பறக்கவும் செய்யல. நம்ம ஒர்க்க மக்கள் ஏத்துகிட்டாங்கன்னு சந்தோஷம். அவ்வளவுதான். இன்னிக்கும் துரோகி என் மனசுக்கு பிடித்தமான படம் தான். துரோகிக்கு அப்புறம் நமக்கு சினிமா வேண்டாம்னு முடிவுக்கு வந்துட்டேன்.
சினிமாவுக்கு அடுத்து என்னுடைய பெரிய விருப்பம் ஆர்கானிக் பார்மிங்கும்,சமையலும். அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். அப்ப என்னோட பிரண்ட் பிஜோய் நம்பியாருக்கு இந்தியில சைத்தான் படம் புக் ஆயிடுச்சி. அந்த படத்தில் வேலை செய்யணும்னு கேட்டப்ப மறுக்க முடியாம பாம்பே போனேன். அந்த யூனிட் அவங்களோட உற்சாகத்த பார்த்ததும் எனக்கும் அந்த உற்சாகம் தொத்திகிச்சு. அப்பதான் இறுதிச்சுற்று படத்தோட ஒன் லைனை பிஜோய் கிட்ட சொன்னேன். பிஜோய்க்கு பிடிச்சிருந்தது. நானே புரட்யூஸ் பண்றேன், இந்த கதையை படமாக்கலாம் என்றார். அங்கிருந்து திரும்பவும் சினிமா என்னை ஆக்கிரமிச்சிருச்சி.
பாலா சார் ரொம்ப வருடமாக குடும்ப நண்பர். மணி சார்கிட்ட நான் அசிஸ்டெண்ட் ஆக இருக்கும்போதே அவர் டீம்ல வேலை பார்க்க கூப்பிட்டு இருக்கார். ஒரு தீபாவளிக்கு அவங்க வீட்டுக்கு போயிருந்த போது அடுத்து பரதேசி படம் செய்யப் போறேன். 45 நாள்ல ஷீட்டிங் முடிக்கிறதா திட்டம்னு சொன்னார். அப்படின்னா நான் இந்த படத்துல வேலை பார்க்கிறேன்னு சொன்னேன். பரதேசி படத்துல கிரியேட்டிவ் ப்ரடியூசரா உள்ளே நுழைஞ்சேன். எல்லா வேலையையும் பார்த்தேன். இன்னொரு பெரிய டைரக்டரை பக்கத்திலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைத்தது. அதே சமயத்துல இறுதிச்சுற்றுக்கான என்னுடைய ஸ்கிரிப்ட் வேலையும் போய்ட்டு இருந்தது.
ராஜ்குமார் ஹிரானி சார் மும்பைல மேடியோட பக்கத்து வீடு. மேடி இந்த ஸ்கிரிப்ட பத்தி அவர்கிட்ட சொல்ல அவர் ஹிந்தில இந்த படத்த நான் தயாரிப்பு செய்றேன்னு சொல்லியிருக்கார்.முதல்ல மணி சார், அப்புறம் பாலா சார் அதற்கடுத்து ராஜ்குமார் ஹிரானி சார்ன்னு பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட வேலை பார்த்தது என்னுடைய பாக்கியம் தான். யாருக்கும் எளிதாக கிடைக்காத வாய்ப்பு இது.
இறுதிச்சுற்றுக்கு ஹிந்துவுல வந்த விமர்சனத்த படிச்சுட்டு மைக் டைசன் படம் பார்க்க ஆசைன்னு சொல்லியிருக்கார். அவருக்கு ஸ்கிரீன் பண்றதுக்கான தேதிகளை முடிவு செஞ்சிட்டு இருக்கோம். ஆனா இதனோட ஹிந்தி வெர்சனுக்கு சில இடங்கள்ல நல்ல ரெவ்யூ இல்ல. இரண்டரை மார்க் கூட சிலர் கொடுத்திருந்தாங்க. தமிழ் படம் வேற, ஹிந்தி படம் வேற. ஹிந்தில ராதாரவிதான் மேடியோட மாமனார் என்ற விஷயமே இல்லை. அடுத்து மேடிய டெல்லிக்கு கூட்டிட்டு போறது ராதாரவின்னு தெளிவா தமிழ்ல இருக்கும். ஹிந்தில தேவ் கத்ரிதான் திரும்ப மேடிய டெல்லிக்குக் கூப்டற மாதிரிஇருக்கும். இதெல்லாம் தான் காரணமா இருக்கும்னு நான் நெனைக்கிறேன்.
நடிகையைத்தான் லீட் ரோல்ல நடிக்க வைக்கலாம்னு முயற்சி செய்தேன். 17 வயசு கேரக்டருக்கு ரெண்டு மூணு பேர் தான் செட் ஆகிற மாதிரிஇருந்தாங்க. ஆனா அவங்களுக்கு இந்த மாதிரி படம் செய்யறதில விருப்பம் இல்ல. ரித்திகா சிங்கை பாக்சிங் காம்படிஷன்ல பார்த்தேன். நடிக்க விருப்பமான்னு கேட்டதுக்கு ஓக்கே சொன்னாங்க. சில சீன்களை குடுத்து நடிக்க சொல்லும்போது ரொம்ப ஈசியா நடிச்சது அந்த பொண்ணு. கேமரா பயமே இல்ல. ஒரே சீனை வேற மாதிரி நடிச்சு காட்ட சொன்னா அதையும் செஞ்சிச்சு. அப்பவே ரித்திகா சிங் இந்த படத்துக்குள்ள வந்துட்டாங்க.
இறுதிச்சுற்று கதை ஜெயிக்கும்னு யாருமே நம்பல. இந்த மாதிரி கதையெல்லாம் ஹிந்திக்கு செட் ஆகும், தமிழுக்கு செட் ஆகாது; இந்த கதை ஏ சென்டருக்கானது, பி, சி க்கு புடிக்காது..இப்படி பல பேர் பல கருத்துக்களை சொன்னாங்க. ப்ரடியூசர் கிடைக்க நிறையவே சிரமப்படோம். அதுக்கப்புறம்வந்த பிரச்சனைகள் வேற மாதிரி. எங்க ப்ரடியூசரோட முந்தைய படம் மோசமான பெயிலியர். அந்த படத்தோட தோல்வியால பாதிக்கப்பட்டது எங்க டீம்.முதல் நாள்ல இருந்தே பிரச்னைதான். 2010 லிருந்து 2016 பிப்ரவரி வரை ஏறக்குறைய ஐந்து வருட போராட்டம் இந்த படம். ஒருவழியா ப்ரடியூசர் சசி எல்லா கஷ்டத்தையும் தாண்டி படத்தை அழகா ரிலீஸ் பண்ணிட்டார்.
நான் என்னை ஒரு பெண்ணா எந்த ஒரு சமயத்திலேயும் நெனைச்சது இல்ல. முதல்ல ரேவதி டீம்ல 17 பெண்கள் வேலை செய்தோம். எல்லா வேலையையும் செய்தோம். அடுத்து மணி சார். அவர் மிகப்பெரிய பெண்ணியவாதி. இந்த வேலையை ஆண்கள் தான் செய்யணும், இந்த வேலையை பெண்கள் தான் செய்யணும்னு யூனிட்ல எந்த வேறுபாடும் கிடையாது. இப்படி வளர்ந்ததனால எனக்கு எந்த வேறுபாடும் தெரியல. சினிமாங்கிறதே நம்ம சமூகத்துல கொஞ்சம் பிரச்னைக்குரிய தொழிலாத்தான் பார்க்கப்படுது. ஏன்னா இங்க வெற்றி சதவீதம் மிகக் குறைவு. எங்கிட்ட யாராவது நீ ஒரு பெண், அதனால இந்த வேலையெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருந்தா அவங்க மூஞ்சை உடைச்சிருப்பேன்( சிரிக்கிறார்)”.
மார்ச், 2016.