ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
2006 - ல ஈரோடு புத்தகத் திருவிழாவில என்னை வற்புறுத்தி என்னைப் பேச வெச்சாங்க. எனக்கு பெருசா பேச வராது.. நான் பேச்சாளன் இல்லைன்னு சொன்னாலும் கேட்காம பேரைப் போட்டுட்டாங்க. என்னடா வம்பாப் போச்சேன்னு சில பாரதியார் பாட்டு, கண்ணதாசன் பாட்டு, சில சங்க இலக்கியப் பாட்டு எல்லாத்தையும் மனசுல வெச்சிருந்தேன். அதையெல்லாம் ஒண்ணா கோர்த்துப் பேசினேன். ஒன்றரை மணி நேரம்.. அங்க இருந்த ஐயாயிரம் பேரும் எழுந்துபோகாம கேட்டாங்க. அட நம்மால கூட ஒரு கூட்டத்தைக் கட்டிப்போட முடியுமான்னு ஆச்சர்யத்தோட என்னையே நான் கேட்டுக்கிட்டேன். பள்ளிக்கூட வயசுல மனப்பாடம் பண்ண பரா சக்தி, மனோகரா வசனம், கட்டபொம்மன் வசனம் போன்றவற்றையெல்லாம் வெச்சு அடுத்ததா தமிழ்சினிமாவில் தமிழ் என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு பேசினேன். நல்ல கூட்டம் வந்தது. இந்த ஆளு பேசுறாண்டா என்ற அங்கீகாரம் கிடைச்சது.
2007 - ல என் டைரியில் இருந்து முக்கியமான விஷயங்களை வெச்சு ஓர் உரை பேசினேன். அப்புறம் மகளிர் நல வேட்புநாள் என்ற விஷயம் வந்துச்சு. செப்டம்பர் 7 ஆம் தேதி என் மனைவி பிறந்த நாள் வந்தப்ப அந்த தினமும் வந்துச்சு மனைவியைக் கொண்டாடுவது பத்தி அந்த தினத்தில் திருப்பூர்ல பேசினேன். ஒண்ணேகால் மணி நேரம். இன்னிவரைக்கும் அந்த உரையை அடிச்சிகிறமாதிரி ஒண்ணை பேசலைன்னு நினைக்கிறேன். தூக்குக் கயிற்றை முத்தமிடப்போகிறவன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் எப்படிப் பேசுவானோ அதுபோன்ற பேச்சு அது. விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய பேசினாங்க. ஆனால் சூர்யா, கார்த்தி சினிமாவுல நடிக்கறாங்க. ஆஸ்திரேலியாவுல டூயட், ஜப்பான் ல சண்டைக்காட்சி, காமெடி சீன் எல்லாம் படத்தில இருக்கு. அதை ஒளிபரப்பறது நியாயம். ஒரு மனுஷன் மைக் புடிச்சிட்டு ஒரு மணி நேரம் ஏதோ பேசறான். அதை எப்படிப்பா ஜனங்க பாப்பாங்கன்னு டெல்லியில் இருந்து டிவி நிர்வாகிங்க கேக்கறாங்க. கடைசியில இந்த ஒரு தடவை ஒளிபரப்புவோம். சரியா வரலேன்னா யார் உரையையும் ஒளிபரப்ப வேண்டான்னு டிவியில முடிவெடுத்தாங்க. 2008 தீபாவளி அன்னிக்கு விஜய் டிவில 'பெண்' ங்ற தலைப்பில் தாய் - மனைவி - மகளைப் பத்தி பேசினது ஒளிபரப்பாச்சு. பார்த்தவங்க அப்படியே எமோஷனல் ஆயிட்டாங்க.
2009-இல்தான் ராமாயணமும் 2015இல் மகாபாரதமும் 2022இல் திருக்குறளும் பேசினேன். காலம் என்னை பேச்சாளனாக மாற்றி இருக்கிறது. மகாபாரதம் பேச்சுக்கு தயாரிக்க நாலரை ஆண்டுகள் ஆயின. சோ சார் எழுதின 1450 பக்கம் புத்தகம் படிச்சு குறிப்பு எடுத்தேன். இளம்பிறை மணிமாறனின் 20 மணி நேர உரைகள், பி ஆர் சோப்ராவின் 70 மணி நேர பாரதத் தொடர் காணொலி. இதெல்லாம் பார்த்து தயாரிச்சு, 2015 அக்டோபர் 26 ந்தேதி ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 6000 பேர் முன்னால ஒரு சொட்டு தண்ணி குடிக்காம ஒரு துண்டு பேப்பர் குறிப்பில்லாமல் மகாபாரதம் முழுக்கதையையும் 2 மணி 10 நிமிடத்தில் பேசி முடிச்சேன். என்ன பரவசமான தருணம் அது. அந்த உரையோட முடிவில் என் இரு மகன்களும் மேடைக்கு வந்தாங்க. அவங்களைக் கட்டிப்புடிச்சு அழுதிட்டேன். அந்த நிமிடம் என்ன தோணுச்சுன்னா.. இதைவிட நல்ல தருணம் ஒரு மனிதனுக்கு சொர்க்கம் செல்ல கிடைக்காது என்று..அந்த அளவுக்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்தன.
ஜெயக்குமார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
ஓய்வாக இருக்கும் சமயத்தில் மகிழ்சியாக இருந்தேன் என்றால், டி.எம்.எஸ்., சுசிலா, ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எம்.ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரின் பாடலைக் கேட்பேன். அதுவொரு அலாதியான மகிழ்ச்சி.
1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் கட்சியில் சீட் கேட்டேன். இதில் 1991ஆம் ஆண்டுதான் அம்மா (ஜெயலலிதா) சீட் கொடுத்தார். மிகுந்த உற்சாகத்தில் கட்சிக்காரர்களுடன் நண்பர்களுடனும் சேர்ந்து கொண்டாடினேன். மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து எல்லோரும் அறுசுவை விருந்து கொடுத்தேன். பிறகு, இன்ப அதிர்ச்சியாக அம்மா என்னை அமைச்சர் ஆக்கினார். அப்போது எல்லோருக்கும் விருந்து வைத்தேன்.
கடமை என்பது ஆனந்தம்.
‘கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்.. அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.. உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டால், துன்பம் எல்லாம் விலகும் கண்ணா..' இந்த வரிகளை மகிழ்ச்சியாக இருக்கும்போது நினைத்துக் கொள்வேன்.
அறந்தாங்கி நிஷா
ரொம்ப சந்தோஷமாக இருந்தால் சொந்த ஊரான அறந்தாங்கி போய்விடுவேன். சந்தோஷத்துக்கான காரணத்தை அம்மா, அப்பாவிடம் ரொம்ப நெருங்கிய நண்பர்களிடமும் சொல்வேன். சொன்னால், சிரிப்பீங்க. அன்றைய நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.
ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது சென்னையிலிருந்தேன். சந்தோஷத்தில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அறந்தாங்கி சென்றேன். அதை அப்பா - அம்மாவிடம் சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதுவரை நான் நடித்த படங்களின் பெயரோ நடிகர்களோ அவர்களுக்குத் தெரியாது. ரஜினிதான் அவர்களுக்குத் தெரியும். என் சொந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, எனக்கு நடந்த சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வதுதான் வழக்கம்.
காந்தி கண்ணதாசன் - பதிப்பாளர்
சந்தோஷத்தைக் கொண்டாடுவதில் நான் எங்க அப்பாவைப் போல. கொண்டாடித் தீர்ப்பேன். முதல் வேலையாகக் கோயிலுக்குச் செல்வேன். அடுத்து, குடும்பத்தினருடன் ஹோட்டலுக்கு செல்வேன். மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என எல்லோரும் பேசி, சிரித்து இரண்டு மூன்று மணி நேரம் போனபிறகுதான் அங்கிருந்து கிளம்புவோம்.
சமீபத்தில், ஒரு நல்ல விஷயம் நடந்தது. அந்த மகிழ்ச்சியில் செனடாப் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். என்னுடைய மகனும் மருகளும்தான் ஹோட்டலை தேர்வு செய்வார்கள். அப்படி நாங்கள் கடைசியாக சென்ற ஹோட்டல் பெயர் ‘சோயா'. அது ஒரு சைனீஸ் ஹோட்டல். எல்லோரும் சைனீஸ், தாய் ஃபுட்டை மகிழ்ந்து சாப்பிட்டோம்.
மீரான் மைதீன் எழுத்தாளர்
வருமானமே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழும் மனிதன் நான். நாம்தான் நமக்கானவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உணவில். அதிக விலை கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடும் உணவின் மூலமாக உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அது மருத்துவ செலவுகளுக்கு வழிவகுக்கும். எந்த வகை உணவானாலும் நாமே குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிடும்போது தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம். இது குடும்ப ஆரோக்கியத்தையும் மனநிறைவும் ஏற்படும்.
எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைக்கும் துணி எடுப்பதில்லை. எதாவது பெருநகரங்களுக்கு செல்லும்போதுதான் துணி எடுப்போம். அதை பண்டிகை நேரங்களில் பயன்படுத்திக் கொள்வோம். அதேபோல், நாங்கள் பெரும்பாலும் தனித்தனியாக பயணம் செய்வதில்லை. எதாவது திருமண நிகழ்வுகளுக்கு செல்லும்போது குடும்பத்துடன் செல்வதுண்டு. எல்லாவற்றையும் கௌரவத்துக்கானதாக இல்லாமல் தேவைக்கானதாக செய்ய வேண்டும். அதுதான் மகிழ்ச்சியைத் தரும்.
பத்மப்ரியா, திமுக
நம் எண்ணங்கள்தான் செயல்களாகின்றன. எந்த பிரச்னையையும் பிரச்னையாக பார்க்காமல், அதையொரு வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததற்கு நகர வேண்டும்.
பள்ளிக்கூடம் படிக்கும்போது, மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், எம்.பி.பி.எஸ். படிக்க முடியவில்லை. ஒருவேளை அதைப் படித்திருந்தால் இன்று மருத்துவராக இருந்திருப்பேன். ஆனால், மைக்ரோ பயாலஜி படித்ததால், புற்றுநோய் ஆய்வு மையத்தில் டீச்சராக வேலைப் பார்த்து, இன்று அரசியல்வாதியாக இருக்கிறேன். இதுவே நிறைவாக, மகிழ்வாக இருக்கிறது.
சொக்கன், எழுத்தாளர்
நான்மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது உணவின் வழியாகத்தான்.
உள்ளூரில் எங்கள் குடும்பத்துக்கென்று விருப்பமான உணவகங்களின் சிறு பட்டியலொன்றைத் தொகுத்துவைத்திருக்கிறோம். அத்துடன், எங்களுக்குப் பிடித்த சிறு தீனிகளும் உண்டு. மகிழ்ச்சியின் அளவைப் பொருத்து, வெளியில் சென்று சாப்பிடுவோம். இல்லாவிட்டால், எதையாவது ஆர்டர் செய்து வரவழைப்போம். நன்கு அரட்டையடித்தபடி சுவையாகச் சாப்பிடுவதுதான் உண்மையான கொண்டாட்டம் என்பது எங்கள் கட்சி. ஆனால், அது உடனடிக் கொண்டாட்டம்தான். உண்மையான, நீண்ட கால, நிரந்தரக் கொண்டாட்டம் என்றால், மகிழ்ச்சியைத் தருகிற அந்தச் செயலைத் தொடர்ந்து செய்வதுதான்.
தமயந்தி எழுத்தாளர்
என்னுடைய மகிழ்ச்சி அனைத்தும் அன்பு சார்ந்தது. சாப்டீயா? என்று யாராவது கேட்டாலே சந்தோசப்படுவேன். அதுதான் வாழ்தலுக்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது.
ஒருமுறை ஐந்தாறு நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். அப்போது என்னுடைய பிரண்ட் பத்மாவிடமிருந்து போன் கால். அவள் என்னுடைய குரலைக் கேட்டு என்ன ஏதென்று விசாரித்தாள். பிறகு பணம் அனுப்பி வைத்தாள். இப்படியான தருணங்களில் தனியாகப் போய் சந்தோஷத்தில் கண்கலங்குவேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தால் நிறைய அன்பு செலுத்துவேன்.
கவிஞர் மகுடேசுவரன்
ஒருமுறை திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு சென்றபோது, இருசக்கர வாகனத்தை, நொய்யல் ஆற்றின் கரையோரம் ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டேன். மாலை நல்ல மழை. இரவு புத்தகக் கண்காட்சியை முடித்துவிட்டு வெளியே வந்தால், வாகனத்தை வெளியே எடுக்க முடியவில்லை.
கால்பந்து மைதானம் மாதிரி இருந்த இடம், ஒன்றரை மணிநேரம் பெய்த மழையால் வயற்காடுபோல் ஆகிவிட்டது. இப்படியொரு நிலப்பகுதி இருக்குமா என்று ஆச்சரியப்பட்டேன்!
மின்சாரம் இல்லாத அந்த இரவில் வண்டியை சிரமப்பட்டு வெளியே எடுத்தால், சேறு தடுப்பானில் கெட்டியாக மண் பிடித்துக் கொண்டது. வண்டியை முன்னாலோ, பின்னாலோ நகர்த்த முடியவில்லை. வண்டியே காணாமல் போயிருந்தால் கூட சந்தோசப்பட்டிருப்பேன்.
பத்து மணிக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவரின் உதவியோடு சேறு தடுப்பானிலிருந்த மண்ணை அகற்றி, தேங்கியிருந்த தண்ணீரில் வாகனத்தைக் கழுவி வெளியே எடுத்தோம். அப்போது இரவு ஒரு மணி. வண்டியை வெளியே எடுக்க, நான்கு மணிநேரம் படாத பாடுபட்டோம். அந்த வேதனையில் சிரித்தேன் பாருங்க ஒரு சிரிப்பு அதை மறக்கவே முடியாது!
ஈரோடு கதிர்
மகிழ்ச்சியான தருணங்களில் மனநிலையில் தன்னம்பிக்கை கூடிவிடும். முகத்தில் உருவாகும் ஒருவித உற்சாகம், அன்பும் நெகிழ்வும் கலந்ததொரு பாவனை ஆகியவற்றின் வழியேதான் எனக்கு வெளிப்படும்.
அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றின் பட்டியல் மனதில் பெரும் நம்பிக்கையோடு வந்து சூழும்.
அந்தத் தருணத்தில் அந்த மகிழ்ச்சிக்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது வாஞ்சை கூடும். நன்றி சொல்லத் தோன்றும். அதை முடிந்தவரை வெளிப்படுத்தவும் செய்வேன்.
நட்புகளை உறவுகளைச் சந்திக்க விரும்புவது உண்டு. அப்படிச் சந்திப்பது, உரையாடுவது அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அல்ல. காரணம் நம்முடைய மகிழ்ச்சியை அதன் விதமாகவே மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள், உள்வாங்கிக்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், அந்த உற்சாகம் நிறைந்த தருணத்தில் உரையாடுவது மிகவும் பிடிக்கும்.
அந்த தினம் நிறைவடையும்போதே, உறக்கத்திற்குப் பிறகு வேறொரு மனநிலையும் சூழலும் வாய்க்கும் என்பது தெரியும். மகிழ்ச்சியான அந்தத் தருணம் வெகு வேகமாகக் கடப்பதுபோல் தோன்றும். நல்லதொரு நினைவாகப் பதிந்திருக்கும்.
ராமர் நகைச்சுவை நடிகர்
சந்தோஷமாக இருந்தால் குடும்பத்துடன் கிளம்பி சொந்த ஊருக்குச் சென்றுவிடுவோம். அந்த சந்தோஷம் இன்னும் இரட்டிப்பாகும். கிராமத்துச் சூழல் எனக்கும் பிள்ளைகளுக்கும் பிடிக்கும் என்பதால், அங்கேயே நன்றாகச் சமைத்து சாப்பிட்டு வருவோம்.
ஊருக்குப்போக முடியாத சூழல் என்றால் மதுரையிலேயே
படத்துக்குச் செல்வோம், ஓட்டலில் நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவோம். என்னுடைய சந்தோஷக் கொண்டாட்டம் எப்போதும் குடும்பத்துடனே இருக்கும்.
சுரேஷ் சந்திரா சினிமா பி.ஆர்.ஓ
குறிப்பிட்ட ஒன்றுக்காக மட்டும் இல்லை; நான் எல்லாவற்றுக்கும் சந்தோஷப்படக் கூடியவன். சந்தோஷத்தைக் கொண்டாடும் அளவுக்கு எனக்கு சந்தோஷம் குறைவாக வருவதில்லை. பண்டிகைகள் போலக் குறைவாக வருவதைத்தான் கொண்டாடுவோம்.
நடிகர், இயக்குநர் ரோகிணி
கொண்டாட்டம் என்பது அந்ததந்த நேரத்தைப் பொருத்தது. சில நேரங்களில் ஒரு கப் காஃபி போதும். சில நேரங்களில் சினிமாவுக்கு போவது. பிடித்தவர்களுடன் பிடித்த சாப்பாட்டை அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடுவது. நேரம் அதிகம் கிடைத்தால், போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற ஊருக்கு செல்வது. இப்படித்தான் என் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
காளிவெங்கட் நடிகர்
என்னுடைய கொண்டாட்டத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்கும்.ஒன்று சமையல் இன்னொன்று இசை.
இசை என்றால், பாட்டுக் கேட்பது, நண்பர்களுடன் சேர்ந்து பாடல் பாடுவது என கொண்டாட்டமாக இருப்பேன்.
என் அலுவலகத்தில் கிட்டாரும், தர்புகாவும் எப்போதும் இருக்கும். எப்போதுமே இசையோடு இருப்பேன். வாசிக்கத் தெரிந்தவர்கள் வரும்போது அவர்களை வாசிக்கவைத்துக் கேட்பேன்.
அதேபோல், சமைப்பதிலும் ஆர்வம் அதிகம். புதுப்புது உணவு வகைகளை செய்துகொண்டே இருப்பேன். அதில் பிரியாணிக்கு முக்கிய இடம் உண்டு. எப்போதெல்லாம் முழுநாள் லீவ் கிடைக்கிறதோ அன்று மதியம் நிச்சயம் பிரியாணி இருக்கும்.
கீதா இளங்கோவன், எழுத்தாளர்
மகிழ்ச்சி என்கிட்டதான் இருக்குனு நினைக்கிறேன். எதுவெல்லாம் எனக்கு சந்தோசம் தருதோ அதையெல்லாம் செய்வேன். காலையில நடக்கிறது மாதிரி சின்னச் சின்ன விசயங்களில், தோழிகளுடன் பயணம் செய்வதில்..இப்படி. இதுக்கெல்லாம் பெரிதா திட்டமிடுவது இல்லை. யாராவது ஒரு தோழி வீட்டில் கூடி, அங்கிருந்து கடற்கரைக்கு கிளம்பி தேநீர் குடிச்சிட்டு பேசிட்டு கலைவோம். வாழ்க்கையை நாம நினைச்சபடி வடிவமைச்சுக்கிறோம்கிறதுல சந்தோசம்.
வாழ்க்கைல மறக்கமுடியாத சந்தோசக் கொண்டாட்டம்னா, பத்தாம் வகுப்புல பள்ளிக்கூடத்தில முதல்ல வந்ததுதான். அதை நான் எதிர்பார்க்கல. முதல் பொதுத்தேர்வுங்கிறதால அம்மா, அப்பா சொல்லிகிட்டே இருப்பாங்க. அதுப்படி படிச்சோம். எத்தனை மதிப்பெண் வரும்னு எல்லாம் தெரியாது. ரிசல்ட் வந்ததும் எனக்கு திறமை இருக்குனு எனக்கே உணர்த்தின நாள்னு சொல்லலாம். அப்போ பெரிசா இல்ல, சாக்லேட் வாங்கிக் கொடுத்ததுதான் கொண்டாட்டம். அதுக்கடுத்து, கேரளத்தில வேலைபாத்திட்டிருந்த எனக்கு, எப்படியாவது தமிழ்நாட்டுக்கு வந்திடனும்கிறது குறியா இருந்தது. இந்திய தகவல் சேவை& ஐஐஎஸ் பணிக்காக, யுபிஎஸ்சி தேர்வு.. டெல்லியில நேர்காணல் நடந்தது. அதுக்குமுன்னால டெல்லியே போனதில்ல. கடுமையான குளிர். தங்கிப் படிச்சிட்டிருந்த தோழி வீட்டில இருந்து நேர்காணல முடிச்சிட்டு ஊருக்கு வந்தாச்சு. ஒரு நாள் வேலையிடத்தில இன்னொருத்தர் வந்து, உங்க பெயர் (மத்திய அரசு வெளியிடும்) எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பேப்பர்ல வந்திருக்குன்னு காட்டினாங்க. அந்தப் பட்டியல்ல ரெண்டாவது இடம் கிடைச்சிருந்தது. முதல் தலைமுறைப் பட்டதாரியான எனக்கு, படிப்பு, வேலைங்கிறது எவ்வளவு முக்கியம்? அரசு வேலைங்கிறதெல்லாம் கனவா இருக்கும்நிலை இல்லையா? அதுவும் என் வாழ்க்கையில இன்னொரு மகிழ்ச்சியான தருணம்.
அரவிந்தன்,எழுத்தாளர்
மகிழ்ச்சியைப் பெரிதாகக் கொண்டாடக்கூடியவனல்ல நான். மகிழ்ச்சியைக் கொண்டாடுவதைக் காட்டிலும் அதை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவன். என்னுடைய மகிழ்ச்சிக்கான தருணங்கள் உரையாடல், வாசிப்பு, எழுத்து, இசை, உணவு, நகைச்சுவை என்பவையாக இருக்கும். நண்பர்களோடு உரையாடும்போது ஒரு கட்டத்தில் பேச்சு சூடுபிடித்துப் பரவச நிலையை எட்டும். அந்தக் கணம் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. புத்தகங்களைப் படிக்கும்போது, அற்புதமான இடங்கள் பெரும் மகிழ்ச்சியைத் தரும். அண்மையில ஒரு நூலில் காந்தியின் கூற்று ஒன்றைப் படித்தேன். ‘அந்த நிமிடத்து உண்மைக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இப்படித்தான் ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மைக்கு நகர்ந்துபோகிறேன்' என்னும் வரியைப் படித்தபோது அந்த மகிழ்ச்சி கிட்டியது. இதை உடனடியாக நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.
மகிழ்ச்சியை நீட்டிப்பது அல்லது அதற்கான காரணத்தைப் பகிர்ந்துகொள்வது. இதுதான் என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சியைக் கொண்டாடுவது. மகிழ்ச்சிக்கான காரணம் அருமையான உரையாடலாக இருக்கலாம், அற்புதமான வரியாக இருக்கலாம், சுவையான சர்க்கரைப் பொங்கலாக இருக்கலாம், நல்ல இசையாகவோ அலாதியான காட்சி அனுபவமாகவோ நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவையாகவோ இருக்கலாம், நாம் எழுதிய ஒரு வரியாக இருக்கலாம். மகிழ்ச்சி தரும் அனுபவங்களை அவற்றைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சிக்கான தருணங்களை நீட்டிக்கச் செய்யும் என்பது என் அனுபவம்.
மருத்துவர் கு.சிவராமன்
மகிழ்ச்சினாலே நண்பர்கள், குறிப்பா பள்ளி, கல்லூரி நண்பர்களோட இருக்கிறதுதான். பொதுவா எல்லாரும் சேர்ந்து உணவகம், திரைப்படம் பாக்கப் போறது அடிக்கடி நடக்கிற மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள். நான் தீவிர பயண விரும்பி. நான்கு ஆண்டுகளுக்கு முன்ன மலேசியா பக்கத்தில லங்காவினு ஒரு தீவுக்கு என்கூட மருத்துவம் படித்த நண்பர்களோட பயணம். மருத்துவத்தில எப்பவும் மும்முரமா இருக்கிறதால நேரம் எங்கே கிடைக்கும்? அப்போ மலேசியாவுல ஒரு மருத்துவக் கருத்தரங்கு நடந்தது. அதையொட்டி அந்தத் தீவுக்குப் போறதுனு தீர்மானம். லங்காவியோட சிறப்பே, அதன் அழகும் சில வசதிகளும்தான். தனியா படகை அமர்த்திட்டு கடலுக்குள்ளே சுத்திட்டு, அங்க மீனப் பிடிச்சதுமே கையோட சமைச்சுத் தருவாங்க. ஒரே ஜாலியா படகுல கிளம்பினோம். உள்ள போய் கொஞ்ச நேரத்துல மழைனா மழை அப்படியொரு கொடும் மழை..மழை நின்னாதான் படகை எடுக்கமுடியும்னு அப்டியே நின்னுட்டாரு, படகோட்டி. அது ஒருமாதிரி முன்பாதி கண்ணாடி இழை மறைச்சிருக்கும் படகு. மழையில படகு அப்படி இப்படினு ஆட்டம் காட்டுது... தண்ணியும் படகுக்குள்ள கொட்டுது. எங்களுக்குன்னா டைட்டானிக் படத்து காட்சிகள்லாம் நினைவுக்கு வருது. ஒருவழியா முக்கால் மணி நேரம் கழிச்சு மழை நின்னது. அது மறக்கமுடியாத கொண்டாட்டமா ஆகிருச்சு. இதேபோல, ஆஸ்திரேலியப் பயணத்துல சிட்னி பாலத்துல மேலே ஏறலாம்னு இணையத்துல படிச்சிருந்ததால, ஏறித்தான் பாத்திடுவோமேன்னு முயற்சி. ஏறவேண்டிய இடத்துக்குப் போனா, அங்க பல நடைமுறைகள். ஹைப்பர் டென்ஷன் இருக்கா, ஆஸ்த்துமா இருக்கானு சோதனைகள்... பிறகு பாராசூட் பத்தி பயிற்சி தந்தாங்க... ஏன்னா மேலே தலைக்கு மேல ஹெலிகாப்டர் பறக்கும்...கீழே கடல்... பத்துப்பத்து பேராதான் கூட்டிட்டுப் போனாங்க. நான் போயிருந்தப்போ 25ஆவது திருமண நாளைக் கொண்டாடுறதுக்காக ஒரு தம்பதியர் வந்திருந்தாங்க. அந்தப் பாலம் ஏறினது, வித்தியாசமான மகிழ்ச்சி அனுபவமா இருந்தது.
என்னைப் பொறுத்தவரை, மகிழ்ச்சின்னா நண்பர்கள், பயணம், புத்தகம். திடீர்னு கையில இருக்கிற கவிதையோ கட்டுரையோ வாசிக்கத் தொடங்கிடுவேன்.
சுபாஷினி, தொல்லியல் எழுத்தாளர், ஜெர்மனி
எனக்கு புதிய இடங்களுக்குச் செல்வது.. அங்கு புதிய மனிதர்கள், பண்பாடு, கலாசார வாழ்க்கையை அறிந்துகொள்வது, இயற்கை, தாவரங்கள், அவை பூப்பது, காய்ப்பதைப் பார்ப்பதும் அதற்காக அவற்றை வளர்ப்பதும் மகிழ்ச்சியை அள்ளித்தரக்கூடியவை. மலைகள், மலை உச்சிகளைப் பார்ப்பது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். கணினி வர்த்தகத் துறையில் இருக்கும் எனக்கு, அந்த மலைகளினூடே தனியாக நின்று அதைப் பார்க்கையில் இயற்கை எவ்வளவு உறுதியாக இருக்கிறதென்று தோன்றும். மலைகளின் அந்த பிரமாண்டத்துக்கு இடையே இருப்பது அதனோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வது மகிழ்வு.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில், சுவிட்சர்லாந்து நாட்டில் ஐரோப்பாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் ஜுங்ஃப்ராவ் யோகில் (Jungrau Joch) சூரிய வெளிச்சத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகால பனிப்பாறை அடுக்குகளைப் பார்த்தது, நான் வாழும் ஜெர்மனியின் மிக உயர்ந்த மலைச்சிகரம் சூக்ஸ்பிட்சவில் (Zugspitze) பனி பொழிந்துகொண்டே இருக்கும்போது அங்கு போய் நிற்பது அப்படியொரு அலாதியான அனுபவம், மலேசியாவின் - கேமரன் மலைப்பகுதியில் ஒரு பக்கம் அடர்த்தியான மழைக் காடுகள், அதில் மிக உயரமாக இருக்கும் மரங்களின்வழி சூரிய ஒளி பாய அந்த பிரமாண்டம் பெரும் புத்துணர்ச்சி தரும். இப்படியான காடுகளை அழித்து தமிழர்கள் மூலம் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களும் அதையொட்டியதாக இருக்கும். இலங்கை மலையகத்தில் இன்னும் இதைவிட அழகான காட்சியைப் பார்க்கலாம்.
அன்னபாரதி பட்டிமன்ற பேச்சாளர்
என் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொண்டாடுவது சூழலுக்கு ஏற்ற மாதிரி இருக்கும். சந்தோஷமாக இருந்தால் பாட்டுக் கேட்பேன். நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பேன். சிலநேரங்களில் பாட்டு போட்டுவிட்டு டான்ஸ் ஆடுவேன். அப்படி இல்லையென்றால், பிறருக்கு உதவி செய்வேன். அது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். என் பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆசிரமத்தில் தான் கொண்டாடுவோம்.
சந்தோஷமாக இருக்கும் போது கோயிலுக்குச் செல்வது மனநிறைவாக இருக்கும்.
கவிஞர் குட்டி ரேவதி
எதாவது நல்ல விஷயம் நடந்து சந்தோஷமாக இருந்தால் குடும்பத்துடன் அமர்ந்து உண்போம். வெளியே உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதை நான் ஊக்கப்படுத்துவதில்லை. ஏனெனில், உணவு விடுதிகளில் நல்ல உணவு கிடைப்பதில்லை. பணம்தான் நிறைய விரையம் ஆகும். அதற்கு பதிலாக, வீட்டிலேயே நல்ல உணவு சமைத்து அனைவரும் சேர்ந்து உண்ணும் பழக்கத்தை வைத்துள்ளோம்.பாஸ்டனில் உள்ள என்னுடைய தம்பி ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற மாதம் சென்னை வந்திருந்தான். அது ரொம்ப சந்தோஷமான விஷயம் என்பதால், எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம். அது ஒரு நல்ல நினைவு.
ரோகிணி மணி ஓவியர்
சந்தோஷத்துக்கான காரணத்தை உடனே எல்லோரிடமும் சொல்லமாட்டேன். முதலில் பிடித்த ஒருசிலரிடம் நேரிடையாக சொல்லிவிடுவேன். இன்னும் சில சிலரிடம் தாமதமாக சொல்வேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த சந்தோஷ மனநிலையை நீட்டிக் கொண்டே வருவேன். அடுத்து நல்ல சாப்பாடு, அதுவும் ஸ்வீட்டுடன்.
இன்னும் சொல்லப்போனால், என்னுடைய பிறந்தநாளில் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன். வரும் வாழ்த்துகள் மகிழ்விக்கும் என்றாலும், தாமதமாக வரும் வாழ்த்து நிறைய சந்தோஷத்தைக் கொடுக்கும்.
மாது பாலாஜி , மேடை நடிகர்
நான் எப்போதும் சந்தோஷமாக இருக்கக் கூடிய ஆள். சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் நாடகத்துக்குச் செல்வேன். மேடையேறி பார்வையாளரைப் பார்க்கும்போது ஏற்கெனவே உள்ள சந்தோஷம் இன்னும் இரட்டிப்பாகும். அதேபோல், சோகமாக இருந்தாலும் நாடகத்துக்குச் செல்வேன். அது சந்தோஷத்தை வர வைப்பதற்காக.
பனிமலர் பன்னீர்செல்வம்
சந்தோஷமாக இருந்தால் நல்லா சாப்பிடுவேன். வீட்டிலேயே சாப்பிடுகிற மாதிரி என்றால் பிரியாணி, அதனுடன் சிக்கன் 65, கத்தரிக்காய் தொக்கு செய்து சாப்பிடுவேன்.
வெளியே போய் சாப்பிடுவது என்றால், ஏற்கெனவே ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருப்பேன். அன்றைக்கு அந்த ஹோட்டலுக்கு சென்றுவிடுவேன்.
கையில் கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தால் எனக்காக நானே ஒருபொருளை வாங்கி பரிசளித்துக் கொள்வேன், அந்த சந்தோஷத்தின் நினைவாக.
பேராசிரியர் ஞானசம்பந்தன் சொற்பொழிவாளர்
மகிழ்ச்சியை குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து கொண்டாடுவேன். வளர்ச்சி எல்லாமே மகிழ்ச்சி என்பேன். நல்ல உணவு சாப்பிடுவது மகிழ்ச்சி என்றால், அதை பகிர்ந்து சாப்பிட்டால் இன்னும் மகிழ்ச்சி.
எழில் கரோலின் வி.சி.க.
மகிழ்ச்சியாக இருந்தால் ரொம்ப சத்தமாக சிரிப்பேன். எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் சிரிப்பேன். கானா பாட்டு போட்டு விட்டு ஜாலியா டான்ஸ் ஆடுவேன். எனக்கு 55வயதாகிறது. வடசென்னையில் வி.சி.க. கட்சி உறுப்பினர்களின் இல்லத் திருமண விழாக்களுக்குச் சென்றால் எல்லோரும் டான்ஸ் ஆடுவோம்.
வா. மு. கோமு எழுத்தாளர்
மகிழ்ச்சியாக இருந்தால் கதை எழுத தொடங்கிவிடுவேன். அதுவும் காலைவேளையிலேயே எழுத ஆரம்பித்துவிடுவேன். மகிழ்ச்சியான மனநிலையில் கதை எழுதும்போது இரண்டு மூன்று மணி நேரத்தில் கதை எழுதி முடித்துவிடுவேன். அப்படி சமீபத்தில் இரண்டு சிறுகதைகள் எழுதினேன். ‘அதிசய நீருற்று' என்ற சிறுகதை சென்ற மாத உயிர்மை இதழில் வெளியானது. இன்னொரு கதை குமுதம் தீபாவளி சிறப்பிதழில் வெளியாகி உள்ளது.
அராத்து
மகிழ்ச்சியான தருணங்களை எப்படி கொண்டாடுவீர்கள் என அந்திமழை ஆசிரியர் கேட்டதும் கொஞ்சம் குழம்பி விட்டேன். பொதுவாக எல்லோருக்கும் எது மகிழ்ச்சியான தருணம் ? அது எப்போது வரும் ? பிறந்தநாள் , திருமண நாள்(!?), அலுவலக ப்ரொமோஷன், காதலை ஒத்துக்கொண்ட தருணம், முதன் முதல் புணர்ந்த தருணம், குழந்தை உருவான தருணம், குழந்தை பிறந்த தருணம், சொந்த வீடு வாங்குவது, கார் வாங்குவது என லௌகீகமாக பலரும் சொல்வார்கள்.
இதில் இந்த ‘நாள்'கள் வருவது முன்பே தெரியும்.பலருக்கும் அது ஒன்றும் ‘உண்மையான' மகிழ்ச்சியான தருணமாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையான மகிழ்ச்சிகரமான தருணங்கள் எல்லாம் பெரும்பாலும் எதிர்பாராமல் நடப்பவை தான். திடீரென்று லவ் யூ சொல்லி விட்டு முதல் முத்தம்(அந்த குறிப்பிட்ட காதலில்) தந்து விட்டு ஓடுவது எத்தனை மகிழ்ச்சிகரமான தருணம் ! அதை எப்படிக் கொண்டாடுவது ? தனியாகப் பித்துப் பிடித்தது போல குதிக்க வேண்டியதுதான்.
ஒரு போட்டியில் வெல்வது, ஓர் அங்கீகாரம் கிடைப்பது, புரமோஷன் கிடைப்பது, தொழிலில் வெல்வது போன்றவைகள் நாம் எதிர்பாராமல் நடக்கும். அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் அதை நம்மால் கொண்டாட இயலாது. மனதுக்குள் ரெக்கை கட்டி பறக்க வேண்டியதுதான்.
இவையல்லாமல், மகிழ்ச்சியான தருணங்களை நாமே திட்டமிட்டு உருவாக்க முடியும். இவற்றை உருவாக்க காரணங்கள் தேவையில்லை. மகிழ்ச்சியான தருணங்களில் இருக்க நாம் ஆசைப்பட்டால் போதும். கொஞ்சம் திட்டமிடுதலும், பணமும் தேவை.
நான் மகிழ்ச்சியான தருணங்களை நண்பர்களுடனும் காதலிகளுடனும் தான் உருவாக்கிக் கொண்டாட விரும்புபவன். வெகு சில அரிதான சந்தர்ப்பங்களில் தனியாகக் கொண்டாடுவேன். உதாரணமாக பைக்கில் நீண்ட தூரப்பயணம் செய்வது.
மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட வேண்டும் என்றால் நாம் முதலில் செய்யவேண்டியது சென்னையை விட்டு குதிகால் வளைந்து மூக்கில் உதைக்கும் அளவுக்கு வேகமாக ஓடி விட வேண்டும்.
நான் மகிழ்ச்சியான தருணங்களை இப்படியான முறைகளில் உருவாக்கிக் கொண்டாடுவேன்.
1. நண்பர்களுடன் நீண்ட தூர ஏசி கோச் ரயில் பயணம் / சொகுசு கார் பயணம்.
2 . வெளியே தங்குமிடத்தின் கதவைத் திறந்து கால் வைத்தால் , மலையோ, ஏரியோ, நதியோ, கடலோ இருக்க வேண்டும். காலை அதில் தான் வைக்க வேண்டும். அதைப்போன்ற இடங்களில் சும்மா அடையாளத்திற்காகத் தங்காமல், நான்கைந்து நாட்கள் தங்குவேன்.
3. வெளிநாட்டு பப்களில் நள்ளிரவு ஜெபம், விடிய விடிய. சூரியனைப் பார்த்து விட்டு உறங்கச் செல்வது.
4. நல்ல வசதியான ஹெரிடேஜ் பங்களா
வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து அதிரி புதிரியாக ராஜ விருந்து சமைத்து வைத்து விட்டு மெல்ல மெல்ல மது அருந்தியபடி விடிய விடிய இலக்கியம் பேசுகிறோம் பேர்வழி என கண்டதையும் பேசிக் கலைந்து, மறுநாள் பகலில் நேத்து என்னல்லாம் பேசினோம் என முழுக்க முழுக்க ரீவைண்ட் செய்வது.
5. வெட்டியாக ஒரு இலக்கிய விழாவை அறிவித்து விட்டு , ஏற்பாட்டு வேலைகளை நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, அவ்வப்போது நண்பர்களை கூப்பிட்டு வேலை முடிஞ்சிடிச்சா? என்ன வேலை பாத்துட்டு இருக்கீங்க என கடுப்படித்துக்கொண்டே மகிழ்ச்சியைக் கொண்டாடுவது.
6. சோஷியல் மீடியாவில் என்னத்தையாவது கொளுத்திப் போட்டு விட்டு ஆஃப்லைன் போய் விடுவது. மனக்கண்ணில் மற்றவர்கள் வெறிநாய்கள் போல கடித்துக்கொண்டு ஓலமிடுவதை பார்த்துக்கொண்டே எந்தப்பெண்ணிடமாவது காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பது. இதைப்போல மகிழ்ச்சியைக் கொண்டாடும் தருணம் வேறில்லை.
மொத்தத்தில் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடுதல் என்றாலே பயணம் தான் முதலிடம். அதன் பிறகுதான் மது, நண்பர்கள், நங்கைகள் , உணவு எல்லாம் .
கடைசியாக முக்கியமான ஒன்று. சிலர் மகிழ்ச்சியான தருணங்களை குழந்தைகளுடன் கொண்டாடுவோம் என்பார்கள். அல்லது குழந்தைகளுடன் இருக்கும் தருணமே மகிழ்ச்சியான தருணம் என்பார்கள். அதை நம்பாதீர்கள். அது சரியல்ல.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் வேறு, பெரியவர் களுக்கான மகிழ்ச்சியான தருணங்கள் வேறு. நாம் ஒரு 5 ஸ்டார் ரெஸார்ட்டில் குழந்தைகளை கொண்டு போய் விட்டு மகிழ்ச்சியாக இரு என்போம். அவர்களுக்கு போர் அடிக்கும். குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான தருணங்களின் போது நாம் ஒரு பாதுகாப்பாளராக இருக்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சியான தருணங்களில் குழந்தையை ஒரு பாதுகாப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு போக வேண்டும்.
இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடச் சென்றால் ஒருவர் தலையில் இன்னொருவர் மண்ணள்ளிப்போட்டு, ஏண்டா போனோம் என நொந்து போய் குழந்தைகளைத் திட்டிக்கொண்டே வர வேண்டியதுதான். அவர்களுக்கு அந்த உரிமையும் இல்லை. மனதுக்குள் திட்டிக் கொண்டும் கறுவிக்கொண்டும் வரும்.
மொத்தத்தில் ஹேப்பி எண்டிங் ஆக இருக்காது. நான் சொல்வது நேரடியான, இரட்டை அர்த்தம் இல்லாத ஹேப்பி எண்டிங்!.
தேவநேயன், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்
நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்னுடைய முக்கியமான கொண்டாட்டம். குடும்பத்தினர் எல்லாரும் ஒரே நேரத்தில் சந்தித்துக்கொள்வதே அபூர்வம் ஆகிவிட்ட சூழலில், எப்போதாவது சகோதர, சகோதரிகள், அம்மாவுடன் ஒன்றுசேர்ந்து சந்தித்துப் பேசுவதே அரிதினும் அரிதானது. அந்த மகிழ்ச்சியைச் சொல்லிவிட முடியாது. எங்கள் குடும்பமே ஆசிரியர் குடும்பம். இதனால் சிறு வயதிலிருந்தே குழந்தைகளை நேயத்தோடு நடத்தவேண்டும் என்பது மனதில் பதிந்துவிட்டது. இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் குழந்தை உரிமைகளை அறியாமலே வகுப்புகளை எடுக்கிறார்கள். தனித்தனியாக இதைப் புரியவைப்பது ஒரு புறம் இருக்க, ஒட்டுமொத்தமாக இத்தனை பேருக்கும் தனிப் பாடமாக வைத்தால் எப்படி இருக்கும்? நீண்ட காலக் கோரிக்கைக்குப் பலனாக, இந்த ஆண்டில் 645 பி.எட். கல்லூரிகளில் குழந்தைகள் உரிமைகளும் பாதுகாப்பும் என்பது கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது அண்மையில் கிடைத்த பெரு மகிழ்ச்சி. சக செயற்பாட்டாளர்களுடன் நானும் இதைக் கொண்டாடியது மறக்கமுடியாதது. இதைப் போன்ற கலாசார, பண்பாட்டு மாற்றம் மற்ற எல்லாவற்றையும்விட அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
சுகுணா திவாகர், எழுத்தாளர் - பத்திரிகையாளர்
மகிழ்ச்சியைக் கொண்டாடுவது என்றால் அது பிரியாணியுடன்தான். அதுவும் என் சொந்த ஊர் திண்டுக்கல். அங்கு திரும்பிய இடமெல்லாம் பிரியாணி. அந்த சீரகசம்பா பிரியாணி இங்கே எப்போதாவதுதான் கிடைக்கும். அது கிடைத்தால் பெருமகிழ்ச்சி. அது கிடைக்காமல் பாசுமதி பிரியாணி கிடைத்தால் மகிழ்ச்சி. சூடும் சுவையும் நிறைந்த மட்டன் பிரியாணிதான் என் சாய்ஸ். தேவைகளை நிறைவு செய்ய முடியாத பொருளாதாரச் சூழல் என்றால் தேவைகளைக் குறைக்க முடியுமா அல்லது தேவைகளை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பேன். எது உண்மையிலேயே இன்றியமையாத தேவையாக இல்லாமல், வசதிக்காக மட்டும் அனுபவிக்கிறேன் என்று பார்த்து அதைக் குறைக்கவோ முற்றிலும் நிறுத்தவோ செய்வேன். 'துன்பம் வரும் வேளையில் சிரி' என்று வள்ளுவர் அனுபவித்துதான் சொல்லியிருக்கிறார். துன்பமான மனநிலையில் ஒரு நல்ல நகைச்சுவைப்படம், அல்லது கவலைகளை மறக்கும்படி ஒரு புத்தகம் அல்லது இளையராஜா இசை - இவைதான் என் புகலிடங்கள்‘.
சுகிதா, தொலைக்காட்சி விவாத நெறியாளர்
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான மகிழ்ச்சி என்றால், எனக்கு புதிதுபுதிதாகக் கற்றுக்கொள்வதில் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. கூகுள் நியூஸ் நடத்தும் இணையப் படிப்புகள் உட்பட பன்னாட்டு அளவிலான இணையவழிப் படிப்புகளை முடித்து அப்டேட் செய்துகொள்வது குறிப்பாக ஐந்தாயிரம், பத்தாயிரம் டாலர் செலவிலான படிப்புகள் எல்லாம், வேலை பொறுப்பின் பொருட்டும் படிக்க வாய்க்கிறது. அண்மையில், 'குற்றங்களை செய்தியாக்குவது என்பதிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புச் செய்தியாக்கம்' என்கிற படிப்பை முடித்தபோது, அவ்வளவு சந்தோஷம். அந்தச் சான்றிதழ்கள், பட்டங்களைப் பார்ப்பதே எனக்கு பெரும் கொண்டாட்ட உணர்வுதான். ஒரு கட்டத்தில் இது அடிக்ஷன் போல ஆகிவிட்டது. இந்தப் படிப்புகளின் வகுப்புகள் சில நாள்கள் நம் நாட்டு நேரத்துக்கு நள்ளிரவில் நடக்கும்... அப்படி கலந்துகொள்வதெல்லாம்கூட வித்தியாசமான மகிழ்ச்சிதான். நம் துறையில் தவிர்க்கமுடியாத ஆளாக நம்மை வைத்துக்கொள்வதில்தான் மகிழ்ச்சி. இப்படி இருப்பதால் தன்னம்பிக்கையும் தானாகவே வளர்கிறது, இல்லையா? இதைத்தாண்டி, மலைப் பிரதேசங்கள், கடல் பகுதிகளுக்கெல்லாம் போய்ப் பார்க்க ஆவல்தான். ஆனால் செய்திச்சூழலில் நேரம் எங்கே இருக்கிறது?
கவிஞர் தி. பரமேசுவரி
என்னுடைய பிறந்த நாள் செப்டம்பர் 11. பாரதியார் நினைவு நாளும் அன்றுதான் என்பதால், தாத்தா (ம.பொ.சி.) இருக்கும்வரை வீட்டிலேயே இருக்கமாட்டேன். அவருடன் கூட்டங்களுக்குப் போய்விடுவேன். எனக்குத் தெரிந்து அதுதான் என்னுடைய ஆகப்பெரிய கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்தை இன்றுவரை வேறு எதிலும் உணரமுடியவில்லை. குழந்தைகளுடன் இருப்பது, அவர்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது, நல்ல வரிகளை நான் படிக்கும்போது, எழுதும்போது, சுற்றி இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கும் மகிழ்ச்சிதான். பள்ளிக்கூடத்தில் எந்த நல்ல செய்தி என்றாலும் வகுப்பிற்குள் நுழைந்து மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் ஒரு கொண்டாட்டம்தான். இன்னொன்று, பரிசுப் பொருள்களை வாங்கித் தருவதில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக, சுற்றியிருக்கும் பெண்கள், வாழ்க்கைத்தட்டில் நம்மைவிடக் கீழே இருப்பவர்களுக்கு பரிசளிப்பது பிடித்தமான கொண்டாட்டம். சில சமயங்களில் துரத்தித் துரத்தியெல்லாம் பரிசுகள் வாங்கித்தருவது ஒரு பழக்கமாகிவிட்டது. தோழி ஒருவருக்கு சுடிதார் எடுத்துத்தர வேண்டும்; அவர்தான் இப்போது ஊரில் இல்லை!
விழியன், சிறார் எழுத்தாளர்
மகிழ்ச்சியான தருணங்கள் வரும்போது நண்பர்கள், குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். நம்முடைய அனைத்திலும் உடனிருப்பவர்களுடன் கொண்டாடுவது என்பதுதவிர வேறென்ன... மகிழ்ச்சியான நேரத்தில்
சாப்பிடாமல் இருப்போமா.. மனம் நிறைந்தால் வயிறையும் குளிர்விக்க வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு கொண்டாட்டத்தில் நல்ல சுவையான உணவு குறிப்பாக பிரியாணி இடம்பெறும். அதைவிட எப்போதும் ஒரு தேநீர் மகிழ்ச்சியைக் கொண்டாடவைக்கும். பெரிய வெற்றி என்றில்லை சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடுவது தேநீருடனே. அது நம்மை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்ளும் தருணம். Self Appreciation மிக முக்கியம்.
நெடுநாள் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை ஆர்டர் போட்டு வாங்கிப் படிப்பதும் கொண்டாட்டத்தின் ஒரு அங்கம். நண்பர்களுக்கு அவர்கள் விரும்பும் புத்தகங்களை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக அனுப்புவதிலும் எனக்கு மகிழ்ச்சி!
கொண்டாட்டம் கூடாது!
எஸ்.கே. முருகன், ஞானகுரு மகிழ்ச்சி
இதழாளர் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமே தவிர கொண்டாடக்கூடாது. ஒரு கொண்டாட்டம் அதை விட பெரிய இன்னொரு கொண்டாட்டத்திற்கு ஏங்க வைத்துவிடும். அந்த ஏக்கம் ஏமாற்றமும் துன்பமும் தரலாம். எனவே மகிழ்ச்சியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதே போதும்.
ஒருவரிடம் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை மட்டுமே மகிழ்ச்சி தர போதுமானவை. ஒரு டீ, ஒரு பாடல், ஒரு பூ போன்ற சாதாரணங்களிலும் மகிழ்ச்சி கொட்டிக் கிடக்கிறது. எழுத்தாளர் சுஜாதா கூறியதுபோல் காலைக்கடன் கழிப்பதிலும் ஒருவரால் மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, மகிழ்வதற்கு மனம் மட்டுமே தேவை. சித்தார்த்தன் மரத்தடியில் தான் மகிழ்ச்சியை கண்டுபிடித்தான், அரண்மனையில் அல்ல.
ஒரு பிரச்னை வந்தால்... அதற்கு விரைவில் தீர்வும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை முக்கியம். நம்மை மீறி நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், நேர்முக சிந்தனை, ஆழமான நம்பிக்கை வளர்த்துக் கொண்டவர்களால் எத்தகைய கஷ்டங்களையும் மகிழ்ச்சியுடன் அணுக முடியும்.
ஒரு இலட்சம் பூக்கள்!
தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர்
ஆரம்பத்தில் பணியாற்றிய அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மனிதநேய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினேன். உடனே அ.தி.மு.க. கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நாகப்பட்டினம் தொகுதியில் நான் வெற்றிபெற்றேன். கட்சி தொடங்கிய 81ஆவது நாளில் எம்.எல்.ஏ. ஆனது, என் வாழ்க்கையில் அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. அவ்வளவு காலம் சமூகப் பணியாற்றியவனை அரசியலிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என பலரும் எண்ணிக்கொண்டிருந்தபோது, எனக்கும் கட்சிக்கும் மக்கள் மகத்தான ஆதரவு தந்தனர். அந்த வெற்றிச்செய்தியைக் கேட்ட பல மணி நேரம் மிகவும் உணர்ச்சியமயமாக இருந்தது. பல நாடுகளில் இருந்து அலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். வெற்றியைக் கொண்டாட நாகையில் பெரிய ஊர்வலம் நடத்தினோம். என் தாயாரையும் வளர்ப்புத் தாயாரையும் சந்தித்து வணங்கினேன். இறைவனுக்கு நன்றி தெரிவித்து தொழுகை நடத்தினேன். எனக்காகப் பாடுபட்டவர்களிடம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தேன். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த தொண்டர்களுடன் அன்பையும் வாழ்த்தையும் ஒரு வார காலத்துக்கு பரிமாறிக்கொண்டோம். இலட்சம் பூக்கள் ஒரே நேரத்தில் தலையில் விழுவதைப் போல இருந்தது, மறக்கமுடியாத பேரானந்தம். இன்னும் பல புதிய களங்களையும் வெற்றிகளையும் பெற்றாலும் அந்த முதல் வெற்றியின் மகிழ்ச்சிக்கு இணையாக எதையும் கூறிவிட முடியாது.
கோபிநாத், ஒளிப்பதிவாளர்
மகிழ்ச்சி, துன்பம் இரண்டிலும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கொரோனா காலத்தில், இருப்பதை வைத்து எப்படி வாழ்வது என்று கற்றுக் கொண்டேன். கஷ்டத்திலும் ஏதேனும் சில நன்மைகள் இருக்கும். அதையே மகிழ்ச்சிக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வேன்.
கவிஞர் சுகிர்தராணி
என்னுடைய கவிதைகள் முதல் முறையாக புத்தக வடிவத்தில் வந்தது, என் வாழ்க்கையின் மறக்கமுடியாத மகிழ்ச்சி. தொண்ணூறுகளின் முற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதிவந்த போதும், இரண்டாயிரங்களின் தொடக்கத்தில்தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘கைப்பற்றி என் கனவு கேள்' வெளிவந்தது. அதுவரை கையெழுத்துத் தாள்களில் மட்டுமே இருந்த கவிதைகளை, புத்தகமாகப் பார்ப்பது எந்த எழுத்தாளருக்கும் கவிஞருக்கும் மகிழ்ச்சியானது இல்லையா? அது ரொம்பவும் கொண்டாட்டமாக இருந்தது. நான் ஆசிரியராகப் பணிபுரிந்த இடத்தில் சக ஆசிரியர்கள், தோழிகள் அதைப் பெரிதாகக் கொண்டாடினார்கள். அது என்னால் இப்போதும் மறக்கமுடியாதது. என்னுடைய மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்பது எப்போதும் நண்பர்களுடன்தான். அவர்களோடு பயணம்செல்வது அதுவும் நம் மாநிலத்தில் அல்லாமல், வெகுதொலைவில் உள்ள இடங்களுக்குப் பயணம்போவது..எல்லா நண்பர்களுடனும் அப்படிப் போக வாய்க்காது. சில நண்பர்களுடன்தான் அமையும். கடந்த ஆண்டு அப்படி கர்நாடக மாநிலத்துக்கு பத்து நாள்கள் நீண்ட பயணம் போய்வந்தோம். மைசூர் உட்பட அங்குள்ள பல நகரங்களுக்கு தோழியின் குடும்பத்தினருடன் சென்றுவந்தது, அண்மையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு கொண்டாட்டம்!
கா. முத்துகிருஷ்ணன், எழுத்தாளர்
நான் எல்.ஐ.சி.யில் 36ஆண்டுகள் பணிபுரிந்த காலத்தில் என் மனைவியை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. அவர் என் குடும்பத்தையும் குழந்தைகளையும் நன்கு கவனித்துக்கொண்டார். அதற்கு நன்றிக்கடனாக, எனது பணி ஓய்வுக்குப்பின் லயன்ஸ் இயக்கத்தின் சார்பாக உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க அவரையும் அழைத்துச் சென்றேன். 2017ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு
சென்றோம். 2019ஆம் ஆண்டு லண்டன், ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றோம். என் மனைவிக்கு ஒரே பிரமிப்பு. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த நிகழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டதாக நினைத்து இன்றும் மகிழ்கிறேன்.
நர்த்தகி நடராஜ் பரதநாட்டிய கலைஞர்நர்த்தகி நடராஜ்
என்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது பரதநாட்டிய கலை. நான் மகிழ்வாக இருக்கும் தருணத்தில் நல்லா நடனம் ஆடுவேன், மழையில் நனைவேன். அண்மையில், கேரளாவுக்கு
சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு செல்லும் வழி, பசுமையாக இருந்தது. அதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நடந்தே வருகிறேன் என்று
சொல்லிவிட்டேன். மாலை அந்த வழியாக நடந்து செல்லும்போது, கூட வந்தவரிடம் இயல்பாக பாடச் சொன்னேன். கூடவே தூறல் மழையும் வந்துவிட்டது. அந்த சில்லென்ற பச்சை பசேலென்ற இடத்தில் ஆடி மகிழ்ந்தேன். என் ஒத்திகையை அங்கேயே பார்த்துவிட்டேன்.
ஆர்.பாலகிருஷ்ணன், இந்தியவியல் - சிந்துவெளி ஆய்வாளர்
டிசம்பர், 16, 2019. சிந்துவெளிப் பண்பாடு பற்றிய எனது ஆங்கில நூல் Journey of a Civilization: Indus to Vaigai வெளியீட்டு விழா. அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம். சிறப்பு அழைப்பாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 550 பக்கங்கள், 3.3 கிலோ எடை கொண்ட இந்த நூலை தடவித் தடவிப் பார்க்கிறேன். பார்வையாளர்கள் வரிசையில் எனது மனைவி சுஜாதா, மகள்கள் ஓவியா, ஸ்மிருதி. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது. நிறைவால் நிரம்பி வழிகிறது மனசு. புற்றுநோயிலிருந்து மீண்டு சரியாக பத்து ஆண்டுகள் கழித்து இந்த நூலுடன் நான் அந்த மேடையில்.. ‘தாயே, தமிழே, தெருமுனைக்கு அப்பால் ஒரு திசையறியா சிறுவனை நீ இரு துருவம் பார்த்துவர ஏன் பணித்தாய்' என்று கேட்கிறேன். இது தான் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சிக்கொண்டாட்டம்.
எனது உச்சபட்ச மகிழ்ச்சியை நான் அழுது கொண்டாடுவேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், ஆட்சிப்பணி, ஆய்வுப்பணி என்று எனது மகிழ்வான தருணங்கள் ஒவ்வொன்றிலும் எனது கண்களில் நீர் கசியும்.
என் சுயத்தை நிறுக்க என் கைகளில் எப்போதும் ஒரு சொந்தத் தராசு. அந்த வகையில் என்னை உடைந்து அழ வைக்காத எதுவும் எனதுதராசில் ஒரு பெரிய மகிழ்ச்சியாக இருக்க முடியாது.