ஜெர்மனியிலிருந்து அமெரிக்க போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-47 இல் நாங்கள் கிளம்பினோம்.
ரீஜென்ஸ்பர்க்கில் புல் மைதானத்தில் விமானங்கள் வரிசையாக நின்றன. கைதிகள் விமானங்களின் இறக்கை நிழலில் அமர்ந்து காத்திருந்தனர். இதைவிட்டு அவர்கள் விலக மாட்டார்கள். அவர்கள் தவறவே விடப்போகாத பயணம் இது. விமானக் குழுவின் தலைவர், ‘எல்லோரும் ஏறுங்கள் ' என்றபோது நெருப்பில் இருந்து தப்பிப்பவர்கள் போல் எல்லோரும் ஏறிக்கொண்டோம். ஜெர்மனி மேல் பறந்தபோது யாரும் ஜன்னல் பக்கம் திரும்பவில்லை! ஜெர்மனியை திரும்பப் பார்க்க யாருக்கும் விருப்பம் இல்லை! வெறுப்புடனும் நோய்மையுடனும் அதைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டனர். அவர்கள் அதைப் பற்றி பேசவே விரும்பவில்லை. ஆனால் ஜெர்மனியைவிட்டு நிரந்தரமாக நீங்கிவிட்டது உண்மை என்றான பின் தங்கள் சிறைகளைப் பற்றி பேச ஆரம்பித்தனர். நாங்கள் ஜெர்மானியர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. அது இறந்த காலம் ஆகிவிட்டது. அதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. ‘‘யாரும் எங்களை நம்ப மாட்டார்கள்'' என்றார் போர் வீரர் ஒருவர். அவர்கள் இதை ஒப்புக்கொண்டார்கள். யாரும் அவர்களை நம்பப் போவதில்லை.
‘‘மிஸ்.. நீங்கள் எப்போது பிடிபட்டீர்கள்?'' என்னிடம்கேட்டார் ஒரு வீரர்.
‘‘நான் டச்சாவைப்(DACHAU) பார்க்க வந்திருந்தேன். இப்போது இந்த விமானத்தில் சும்மா தொற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்புகிறேன்''
அவர்களில் ஒருவர் திடீரெனச் சொன்னார்.‘‘நாம் அதைப் பற்றி பேசியாக வேண்டும். நம்மை யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் அதைப் பற்றி பேசித்தான் தீரவேண்டும்.''
முள் கம்பி வேலிக்கும் மின்சார வேலிக்கும் பின்னால் எலும்புக்கூடுகள் வெயிலில் அமர்ந்திருந்து தங்கள் உடலில் பேன்களைத் தேடிக்கொண்டிருந்தன. அவர்களுக்கு வயதும் இல்லை. முகங்களும் இல்லை. அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள். நமக்கு அதிர்ஷடம் இருந்தால் இதுபோல் எதையும் நாம் இனி பார்க்கவே மாட்டோம். சிறைச்சாலைகளுக்கு இடையே இருந்த பெரிய மைதானத்தைத் தாண்டி மருத்துவமனைக்குச் சென்றோம். ஹாலில் மேலும் பல எலும்புக் கூடுகள் அமர்ந்திருந்தன. மரணத்தின் மற்றும் நோயின் வாசனை அடித்தது. எங்களை அவர்கள் பார்த்தார்கள். ஆனால் யாரும் அசையவில்லை. முகத்தில் எலும்புகளின் மீது இழுபட்டிருந்த மஞ்சள் வண்ண தோலில் எந்த உணர்ச்சியும் இல்லை. மருத்துவரின் அலுவலகத்துக்குள் மனிதனைப் போலிருந்த ஒருவன் தன்னை இழுத்துக்கொண்டு நுழைந்தான். அவன் போலந்து நாட்டவன். ஆறடி உயரம். 45 கிலோவுக்குள் எடை இருக்கும். கோடுபோட்ட சிறை சீருடை. லேஸ் இல்லாத காலணி. தன் கால்களைச் சுற்றி ஒரு போர்வையை அணிய முயன்றிருந்தான். கண்கள் பெரிதாய், முகத்தை விட்டு வெளியே வந்துவிடும்போலிருந்தன. தாடை எலும்பு தோலை கிழித்து வெளியே வரும்போல் இருந்தது. புச்சன் வால்டில் இருந்து டச்சாவுக்கு வந்த கடைசி மரணப் பயணத்தில் அனுப்பப்பட்டிருந்தான். முகாமுக்கு வெளியே அவனுடன் வந்தவர்களில் இறந்தவர்களின் உடல்களைத்தாங்கிய ஐம்பது பெட்டிகள் இன்னும் இருந்தன. கடந்த மூன்று நாட்களில் அமெரிக்க ராணுவம் டச்சாவின் பொதுமக்களைக் கொண்டு பல இறந்த உடல்களைப் புதைக்கச் செய்திருந்தது. இந்த பயணம் வந்தபோது இப்பெட்டி வண்டிகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை அடைத்திருந்தனர் ஜெர்மன் காவலாளிகள். அதில் பசி, தாகம், மூச்சுத்திணறலால் பலர் மெதுவாக இறந்திருந்தனர். அவர்கள் கதறினர். வெளியே வர முயன்றனர். ஒவ்வொரு முறையும் இந்த அலறலைக் குறைக்க காவலாளிகள் இந்த பெட்டிவண்டிகளை நோக்கிச் சுட்டனர். இந்த மனிதன் பிழைத்துவிட்டான். இறந்த உடல்களின் குவியலுக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டான். இப்போது அவன் தன் கால்களாக இருந்த எலும்புகளின் மீது நின்றான். திடீரென அழுதான். ‘‘ எல்லோரும் செத்துவிட்டார்கள்.'' அவனது முகமற்ற முகம் துக்கம் அல்லது சோகம் அல்லது அச்சத்தில் கோணலானது.'' எல்லோரும் செத்துட்டாங்க. என்னால் தாங்க முடியவில்லை. என் கதை முடிந்தது.. எல்லாரும் செத்துட்டாங்க... தாங்க முடியவில்லை''
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே கைதியாக இருந்தவர் அந்த போலந்து மருத்துவர். அவர் சொன்னார்:'' நான்கே வாரங்களில் நீங்கள் மீண்டும் இளமைக்குத் திரும்பிவிடுவீர்கள். நன்றாகி விடுவீர்கள்''
அவனது உடல்வேண்டுமானால் வலிமை பெறும். ஆனால் அவனது கண்கள், மற்றவர்கள் கண்களைப் போல் மாறப்போவதே இல்லை.
இந்த மருத்துவமனையில் தான் கண்ட விஷயங்களைப் பற்றி எந்த உணர்வும் இன்றி மருத்துவர் சொன்னார். அவரால் காண மட்டுமே முடிந்தது. வேறெதுவும் செய்ய இயலவில்லை. கைதிகளும் அதே போல் பேசினர். டச்சாவில் நடந்தவற்றை புரிந்துகொள்ளவே முடியாத வெளியுலக மனிதரிடம் அமைதியாக, தாங்கள் சொல்லும் விஷயங்களுக்காக மன்னிப்புக் கோருபவர்கள் போல.
‘‘ இங்கே ஜெர்மானியர்கள் வித்தியாசமான சில பரிசோதனைகளைச் செய்தனர். ஆக்சிஜன் இல்லாமல் எவ்வளவு நேரம், எவ்வளவு உயரத்துக்கு வானில் ஒருவன் போகமுடியும்? என்று பரிசோதித்தார்கள். மூடப்பட்ட காரில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றினர். மரணம் விரைவில் நடக்கும். அதாவது 15 நிமிடங்கள். ஆனால் கொடூரமான மரணம். இந்த சோதனையில் நிறைய பேர் சாகவில்லை. சுமார் 800 பேர் மட்டுமே செத்தார்கள். 36000 அடி உயரத்துக்குமேல் யாரும் ஆக்ஸிசன் இல்லாமல் வாழமுடியாது என்று கண்டுபிடிக்கப்பட்டது'' என்றார் மருத்துவர்.
‘‘ இந்தப் பரிசோதனைக்கு யாரை தேர்வு செய்தார்கள்?'' நான் கேட்டேன்.
‘‘ கைதிகளைத்தான். நலமாக இருக்கும் கைதிகளைத் தேர்வு செய்தார்கள். இதில் மரண விகிதம் நூறு சதவீதம்.''
‘‘ இது சுவாரசியமாக இல்லையா?'' என்றார், இன்னொரு போலந்து மருத்துவர்.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தோம். கடுங்கோபம் வந்தது என்பதை விட அவமானமாக இருந்தது. மனித இனத்துக்கே அவமானம்.
‘‘ நீரில் சில பரிசோதனைகள் செய்தார்கள்,'' என்றார் முதல் மருத்துவர்.
கடலில் சுட்டு வீழ்த்தப்படும் விமானங்களின் ஓட்டிகள் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கமுடியும் என்று அறிய இந்த சோதனை. பெரிய அண்டாக்களில் கழுத்தளவு நீர் நிரப்பி கைதிகளை நிற்க வைப்பர். ஜீரோவுக்கு கீழே எட்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள நீரில் இரண்டரை மணிநேரம் மனிதன் உயிருடன் இருக்கலாம் என்று கண்டறிந்தார்கள். இந்த பரிசோதனையில் 600 பேரை கொன்றார்கள். சிலசமயம் ஒரே மனிதன் மூன்றுமுறை இப்பரிசோதனைக்கு உள்ளாவான். அவன் முதல்முறை கொஞ்சநேரத்திலேயே மயக்கமானால் அவனை மீட்டு எடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை.
‘‘அவர்கள் கதறினார்களா? அழுதார்களா?''
இந்த கேள்விக்கு அவர் புன்னகைத்தார். ‘‘ இந்த இடத்தில் மனிதனின் கதறலுக்கோ அழுகைக்கோ எந்தப் பலனும் கிடையாது. யாருக்கும் எப்போதும் பலனில்லை.''
-இதுவரை நீங்கள் படித்து ( அதிர்ந்தது?) புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளரான மார்த்தா ஜெல்ஹார்ன் 1945-ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜி முகாமுக்குள் சென்று பார்த்துவிட்டு எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. வியட்நாம் போரின்போது அங்கு சென்று மார்த்தா எழுதிய கட்டுரைகள் அமெரிக்க ஆட்சியாளர்களை கலங்கடித்தன. அதன் பின்னர் அவர் வியட்நாம் போகமுடியாமல் பார்த்துக்கொண்டது அமெரிக்க அரசு. மார்த்தா எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மனைவி. தன் எண்பதாவது வயது வரை களத்துக்குச் சென்று உண்மைகளைத் தோண்டி எடுத்து எழுதினார்.
அதிகாரங்களை நடுங்கவைத்த சாகச புலனாய்வு பத்திரிகையாளர்கள் என்று வில்ப்ரெட் பர்சாட், மார்த்தா ஜெல்ஹார்ன், எட்வர்ட் ஆர் முர்ரோ, ஜேமஸ் காமரான், லிண்டா மெல்வெர்ன், பால் ஃபூட், சிமார் மில்னே, ராப்ர்ட் பிஸ்க் போன்ற மேலை நாட்டு பத்திரிகையாளர்களைக் குறிப்பிடலாம்.
பிரிட்டன் பத்திரிகையாளர் கிளாட் காக்பர்ன், ‘‘ அதிகார பூர்வமாக மறுக்கப்படும் வரை எதையும் நம்பாதே'' என்றார். இதைத்தான் புலனாய்வு பத்திரிகையாளர்கள் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
பலநாடுகளில் உண்மையை எழுத பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவேண்டியிருக்கிறது. கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பத்திரிகையாளர்களின் உயிர் ஓரளவுக்குப் பத்திரமாக இருக்கிறது எனலாம்.
பனிப்போர் காலத்தில் ரஷ்யாவில் இருந்து ஒரு குழு அமெரிக்கா வந்தது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் பல்வேறு பத்திரிகைகள் ஊடகங்கள் அநேக பிரச்னைகளில் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த ரஷ்ய குழு, ‘‘ இது மாதிரி ஒரு நல்ல சூழலை உருவாக்க எங்கள் நாட்டில் சர்வாதிகாரம் தேவைப்படுகிறது. மக்களை சிறையில் அடைக்கிறோம், அவர்களின் நகங்களைப் பிடுங்குகிறோம். இங்கோ அப்படி எல்லாம் இல்லை. இதன் ரகசியம் என்ன? எப்படி ஒருமித்த கருத்தை உருவாக்கி உள்ளீர்கள்?'' என்று கேட்டார்கள் என எழுத்தாளர் சைமன் லூவிஷ் பதிவு செய்துள்ளார்.
இந்த கேள்விகளுக்கான பதில்களை ஜார்ஜ் ஆர்வெல்லின் Unpublished Introduction to Farm –இல் கண்டறியலாம். ‘‘ சர்வாதிகார நாடுகளை விட சுதந்தரமான சமூகங்களில் கருத்துத் தணிக்கை முறை என்பது மிகவும் மேம்பட்டதாகவும் முழுமையானதாகவும் உள்ளது. ஏனெனில் இங்கே அதிகாரபூர்வமாக தடை விதிக்காமலேயே எதிர்கருத்துகளை ஊமையாக்கலாம், தர்மசங்கடமான உண்மைகளை இருட்டிலேயே வைத்திருக்கலாம்'' என்கிறார் அவர்.
இப்போது சமூக ஊடகங்களும் இணையமும் உலகெங்கும் அதிகாரமையங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பல தடைகளை உடைத்து கட்டமைப்புகளைத் தகர்த்து உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி என அதிகார மையங்கள் சிந்திக்கின்றன.
பின் வரும் பக்கங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படாத புலனாய்வு பத்திரிகையாளர்களின் அறியப்படாத பக்கங்களை அறிமுகப்படுத்துகின்றன.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்.
டிசம்பர், 2018 அந்திமழை இதழ்