கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள், பள்ளிகளில் திருக்குறள் பற்றிப்பேசச்செல்கையில் உயர்நிலைப்பள்ளி படித்த மாணவனான என்னையும் அழைத்துச் செல்வார். அவர் பேசுவதற்கு முன்பாக கொஞ்ச நேரம் நானும் பேசுவேன். அப்படியொரு பயணம் மேற்கு வங்க மாநிலத்துக்கும் வாய்த்தது. அது பற்றி திரும்பிவந்தவுடன் வங்கத்தில் ஒரு வாரம் என்ற தலைப்பில் அண்ணாவின் திராவிட நாடு இதழில் எழுதினேன். அதை அண்ணா படித்திருக்கிறார். என்னை வேறொரு நிகழ்ச்சியில் பார்த்த அவர் அருகே அழைத்து, ‘மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய். தொடர்ந்து எழுது’ என்றார். இப்படி உற்சாகப்படுத்துவதுதான் அண்ணா அவர்களின் அடிப்படைக்குணம்.
கும்மிடிபூண்டி அருகே ஆரணி ஆற்றங்கரையில் காரணி என்பது என் ஊர். அருகே சின்னம்பேடு என்ற ஊரில் அண்ணா திராவிட நாடு விடுதலை குறித்துப் பேசவந்திருந்தார். அப்போது திமுக ஏழை எளிய மக்கள் கட்சி. பணக்காரர்கள் ஆதரவே இல்லை. அங்கே ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியிலே பேசுகிறார். பெட்ரோமேக்ஸ் விளக்கு எரிகிறது. நிலா வெளிச்சம் பட்டும் படாமலும் இருக்கிறது. நானும் சில நண்பர்களும் தூரத்தில் ஒரு வரப்பில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்கிறோம். அரையிருளில் நாங்கள் இருப்பது அவர் பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போது மேகம் விலகி நிலா காய்கிறது. எங்கள் முகங்களை அவர் மேடையில் இருந்து காண்கிறார். “இந்த ஊரின் பணக்காரர்கள்தான் நம்மைக் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் நிலவு நம்மீது கருணை காட்டி ஒளியை வீசுகிறது. அதோ தொலைவில் இருக்கிறாரே மாணவர் வேழவேந்தன். அவரிடம் பேனாவையும் தாளையும் கொடுத்துவிட்டால் இந்த நிலவைப் பற்றி அழகான கவிதையை இப்போதே எழுதிவிடுவார்” என்கிறார். அவருக்குத் தெரிந்தவன் நான் ஒருவன் வந்திருக்கிறேனாம்.என் பெயரை மேடையிலே சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் சொல்கிறார் என்பது புலப்படுகிறது. இப்படித்தான் அவர் பல்லாயிரக்கணக்கான தம்பிகளை, ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை, பெரும் பேச்சாளர்களை திமுக என்னும் இயக்கத்துக்கு சம்பாதித்தார்.
என்னுடைய திருமணம் வடசென்னையில் அண்ணா அவர்களின் தலைமையில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. காலை பத்துமணிக்கு வரவேண்டும். தலைவர்கள் எல்லாம் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாவை மட்டும் காணவில்லை. பதினோரு மணியைத் தாண்டிவிட்டது. அப்போது மேடையை நோக்கி ஹார்ன் ஒலி எழுப்பி ஒரு மணல் லாரி பாய்ந்துவருகிறது. மேடை அருகே அந்த லாரி நிற்கிறது. கதவைத் திறந்துகொண்டு ஓர் உருவம் குதித்து துண்டால் தன்னைச் சுத்தம் செய்துகொண்டு மேடையை நோக்கி வருகிறது. அது அண்ணா! காஞ்சியிலிருந்து வரும் வழியில் கார் பழுதாகி நின்றுவிட்டது. வழியில் சென்ற லாரியை மடக்கி ஏறி வந்திருக்கிறார்! அவர் அன்புத்தம்பிக்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகத்தயாராக இருந்தார்!
ஒரு பேச்சாளர் தமிழ்நாடு முழுக்க பேசப்போனார். பேசிவிட்டு வந்து அண்ணாவை சந்தித்தார். ‘எல்லா இடங்களிலும் கட்சி சிறப்பாக உள்ளது. ஆனால் ஒரு ஆபத்து. அங்கு எங்கும் நீங்கள் இல்லை. மதுரை என்றால் முத்து.. திருச்சி என்றால் அன்பில்... அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. குட்டி சாம்ராஜ்யங்கள் உருவாகின்றன.’ என்றார். அண்ணா கண்டும் காணாமலும் இருந்தார். மீண்டும் அந்த பேச்சாளர் இதை வலியுறுத்தவே அண்ணா சொன்னார்: ‘ஆட்டின் கால் கொழுத்தாலும் கழுத்து கொழுத் தாலும் கசாப்புக் கடைக்காரனுக்கு லாபம். அன்பில் வளர்ந்தாலும் முத்து வளர்ந்தாலும் அது எனக்குத்தான் லாபம்’. கேட்டவர் வாயடைத்துப் போய்விட்டார். இதுதான் வெற்றிகரமான ஒரு தலைவனின் குணாதிசயம். அண்ணா தன் உயரத்தைப் பற்றியும் தன் தகுதியைப் பற்றியும் சுயநம்பிக்கை உடையவர். அதனால்தான் அவர் ஆலமரம்போல் பலருக்கு நிழல்தந்தார். சூரியன் போல் பலருக்கு ஒளிதந்தார். யாரையும் ஒழித்துவிடவும் அழித்துவிடவும் காய் நகர்த்தவில்லை!
பழவேற்காட்டில் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டம். அண்ணாவின் ஒப்புதலை நான் தான் வாங்கிக்கொடுத்தேன். ஊர் முகப்பிலேயே அவருக்கு வரவேற்பு ஊர்வலம். வழியெங்கும் கோல் விளையாட்டு, தீ விளையாட்டு. ஊர்வலம் நகரவே இல்லை. சிவிஎம் அண்ணாமலை மெல்லபோய், ‘சீக்கிரம் முடிங்கய்யா. அண்ணா பேச வேண்டும்.. தாமதமாகிறதே’ என்று அவர்களிடம் கூறுகிறார். இதை அண்ணா கவனித்துவிட்டார். ‘உனக்கு கோல் விளையாடத் தெரியுமா? என்று சிவிஎம்மிடம் கேட்டார். அவர் தெரியாது என்றார். என்னிடம் திரும்பி உனக்கு? என்றார். நானும் தெரியாது என்றேன். ‘அதோ ஆடிக்கொண்டிருக்கிறானே.. அவனுக்கு கோல் விளையாட மட்டும்தான் தெரியும். ஆடட்டும். தன் வித்தையெல்லாம் இந்த கூட்டத்தில் காட்ட நினைக்கிறான். ஒரு கால்மணி நேரம் தாமதமானாலும் பரவாயில்லை’ என்றார். இதுதான் எளிய மனிதனின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் பண்பு.
67’ல் திமுக வென்றபின்னர் கோட்டையில் செய்தியாளர்கள் வெற்றிக்கான காரணத்தைக்கேட்டபோது அண்ணா சொன்ன பதில் ‘வாய்மை!’ இதற்கு விளக்கம் கேட்டபோது.. ‘வாயும் மையும் தான் காரணம். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஊர் ஊராகப் போய் வாய் வலிக்கப் பேசினார்கள்; எல்லோரும் பத்திரிகைகளில் மை தீர எழுதினோம். இந்த வாயும் மையும் சேர்ந்துதான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன’ என்றார்.
நாவலர், மதியழகன், கலைஞர், சம்பத், பேராசிரியர், சிற்றரசு என்றும் ஏகப்பட்ட தலைவர்கள் ஊர் ஊராகப் போய் பேசினர். அத்துடன் ஒவ்வொருவரும் பத்திரிகை நடத்தினர். என்விஎன் -திராவிடன், காஞ்சி மணிமொழியார்- போர்வாள், கலைஞர்- முரசொலி, முத்தாரம், நாவலர்- மன்றம், மதியழகன்- தென்னகம், க.ராஜாராம்- திருவிளக்கு நடத்தினர். இதுபோன்ற பத்திரிகைகளும் திமுகவுக்கு பேருதவி செய்தன.
1956 மாநாட்டில் அன்பில் வரவேற்புக் குழு தலைவராக இருந்து நடத்திய மாநாடு மிகமுக்கியமானது. அதில்தான் திமுக அரசியலில் ஈடுபடுவதா வேண்டாமா என்று வாக்கெடுக்கப் பட்டது. அம்மாநாட்டில் நாவலர்தான் தலைவர். அண்ணா அந்தக் கூட்டத்தில்தான் தம்பி வா, தலைமை ஏற்க வா! என்று சொன்னதோடு நில்லாமல் உன் ஆணைக்கு அடிபணிந்து நடக்கிறோம் என்று சொன்னார். இதுபோல எந்த தலைவரும் சொல்லியதே இல்லை. அத்துடன் அந்த மாநாட்டில் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று வாக்களித்தவர்களைக் குறித்து அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். அவர்களின் எண்ணங்களை மதிப்பதாகச் சொன்னார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் அரவணைத்து, ஏற்றுக்கொள்ள வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் உடையவர் அவர்.
இன்னொரு நிகழ்ச்சியையும் உதாரணமாகச் சொல்லவிரும்புகிறேன். ஒரு குக்கிராமத்தில் கூட்டம். அவ்வளவாக வசதி இல்லாத நிலையிலும் அப்பகுதி தோழர் முடிந்த அளவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணா பேசி முடித்தார். இரவு உணவுக்கு அத்தோழர் வீட்டுக்குச் சென்றார்கள். தோழரின் மனைவி மீன் குழம்பு செய்திருந்தார். அதில் மண்ணெண்ணெய் தெரியாமல் கலந்துவிட்டிருக்கிறது. அண்ணாவுடன் சாப்பிட்டவர்கள் முகம் சுளிக்கிறார்கள். அண்ணாவோ விரும்பி சுவைத்து சாப்பிட்டுவிட்டு, மிக நன்றாக இருந்தது உணவு என்று தட்டிக்கொடுத்துவிட்டு வருகிறார். அண்ணாவுடன் வந்தவர்கள் கேட்கிறார்கள். ‘ ஏண்ணா? புளுகுறதுக்கும் ஒரு எல்லை வேண்டாமா? மண்ணெண்ணெய் நாற்றம் அல்லவா அடித்தது?’ என்று.
அண்ணா.. ‘ இருக்கட்டும்யா.. அந்த தம்பதியின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி.. நான் அதைக் கெடுக்கக்கூடாது.. உண்மையைச் சொன்னால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பான்...?’ இந்த பெரும் குணம்தான் அவருக்கு ஏராளமான தம்பிகளைப் பெற்றுத்தந்தது. அவரிடமிருந்து பல்வேறு இளம் தலைவர்களையும் உருவாக்கித் தந்தது!
(சந்திப்பு: முத்துமாறன்)
மார்ச், 2015.