‘எங்க வீட்டில் டிவியை அணைத்துவிட்டாலும் அதில் ராதிகா முகம்தான் தெரிகிறது” -என்று பலர் விளையாட்டாகச் சொல்வதுண்டு. ஆனால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
சித்தி சீரியல் மூலமாக 2000த்தில் சின்னத்திரையில் வலுவாகக் கால் ஊன்றிய ராதிகா, இன்று வாணி ராணி தொடர் வரை 17 ஆண்டுகள் சின்னத்திரையை ஆள்கிறார். ஒரே பாத்திரத்தில் நடித்தால் போதாது என்று இரட்டை வேடத்திலும் நடிக்கிறார்.தொண்ணூறுகளுக்கு முன்பு நடிகைகளாக இருந்தவர்களுக்கு அவர்கள் சற்று வயதாகி கதாநாயகி வாய்ப்புகளை இழந்தபின்னர் பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லை. ஒரு வேளை, அக்கா மற்றும் அம்மாக்களாக வெள்ளித்திரையில் மறுபிரவேசம் செய்யலாம். தான் யாருடன் நாயகியாக நடித்தோமோ அவருக்கே அம்மாவாக நடிக்கவேண்டிய சூழலும் உருவாகும். ஆனால் இந்தநிலை தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் அதுவும் மெகாசீரியல்களின் வெற்றிக்குப் பின் மாறுதல் அடைந்தது. வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவிகளில் தோன்றினார்கள். ஆனால் சினிமாவில் பெற்ற வெற்றியை அவர்கள் எல்லோரும் அடைய முடிந்ததா என்றால் இல்லை. வெற்றிபெற்றவர்கள் என்று உறுதியாகச் சொல்லவேண்டும் என்றால் இரண்டே பேர்தான். ஒருவர் ராதிகா சரத்குமார். இன்னொருவர் தேவயானி.
ராதிகாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவரே தொடர்களின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரே வேறொரு தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடித்தால் அவருக்கு ஏற்ற சம்பளம் கொடுக்கவோ காலை ஒன்பதுமணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை நடித்துக்கொடுக்கவோ இயலாது. பெரும்பாலான நடிகைகளுக்கு பிரச்னையே இந்த 9-9 நடிப்பதுதான். சினிமா என்றால் தினமும் ஒரு சீன் எடுப்பார்கள் என்றால் டிவி சீரியலில் ஐந்து சீன்களாவது படப்பிடிப்பு நடத்தவேண்டும். அதுமட்டும் அல்ல; திரைத்துறையில் இருந்துகொண்டு டிவியை இரண்டாந்தரமாகப் பார்க்கும் மனநிலையும் சில நாயகிகளிடம் இருக்கிறது. இந்த மனநிலையிலும் மாறுதல் அடைந்த நடிகைகளே டிவி பக்கம் வருகிறார்கள்.
தேவயானி, கோலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் தோன்றி வெற்றிகரமாக பல ஆண்டுகள் உலா வந்தார். அவரே பின்னர் ராஜ் டிவியில் ஒரு தொடரை தயாரித்தார். ஆனால் அது சரியாகப் போகவில்லை. இப்போது அமைதியாக விலகிவிட்டார். திருமதி செல்வம் தொடரில் நடித்தபோது நடிகை அபிதாவும் புகழ்பெற்று விளங்கினார். இவர்களைத்தாண்டி மெகா சீரியல்களில் பெரிய வெற்றி பெற்றவர்களாக எந்த நடிகையையும் சொல்ல முடியவில்லை. ஆனால் டிவி தொடர்களில் அவர்கள் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீப்ரியா முக்கியமானவர். இவரும் நிரோஷாவும் தோன்றிய சின்னப்பாப்பா - பெரியபாப்பா போன்ற தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. நளினியும் நீண்டகாலமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் சின்னத்திரையில் தோன்றிக்கொண்டு இருக்கிறார். கௌசல்யா, ரோஜா, யுவராணி, மீனா, சுகன்யா, குஷ்பூ, கௌதமி என 90களுக்குப் பிறகு 2000த்தை ஒட்டி வாய்ப்புகள் குறைந்த நடிகைகள் அனைவருமே டிவியில் மெகா சீரியல்களில் தங்கள் திறமையைக்காட்டி இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியான வெற்றி பெற்றவர்கள் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் மெகாசீரியல்களைப் பொறுத்தவரை அந்த பாத்திரமாகவே நடிகையை மக்கள் நினைக்கவேண்டும். திரைப்படங்களில் அப்படி இல்லை. இந்த பெரிய வித்தியாசமே வெற்றியைத் தீர்மானிக்கிறது.
மெகா சீரியல்களை விட்டால் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, நடுவராக ஓய்வுபெற்ற நடிகைகள் வந்திருக்கிறார்கள். இதில் பிரம்மாண்ட வெற்றியை முதலில் பெற்றவர் நடிகை லட்சுமி. கதையல்ல நிஜம் அவர் தோன்றிய வெற்றிகரமான டாக் ஷோ. குஷ்பூ ஜெயாடிவியில் நிகழ்த்திய ஜாக்பாட் இன்னொரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. இப்போது சன் டிவியில் குஷ்பூ, நிஜங்கள் என்ற பஞ்சாயத்து தொடரில் பட்டையைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.
சரி மீண்டும் மெகா சீரியல் பக்கமே வருவோம். இப்போதைக்கு வாய்ப்பு குறைந்துள்ளவர்களில் ஒரு நடிகைக்கு தேவயானி, ராதிகா போல் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அவர்தான் இன்னும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். அவர்? சினேகா!. மற்றபடி திரிஷா, நயன்தாரா போன்றவர்களை மெகா சீரியலில் பார்க்க இன்னும் கொஞ்சம் நாள் இருக்கிறது பாஸ்!
ஜூன், 2017.