‘இந்தி தெரிந்திருந்தால் வட நாட்டிற்கு போயாவது நல்ல வேலை பார்த்து ஜாம் ஜாம்னு வாழ்ந்திருக்கலாம். இந்த பிழைப்புவாதிகள் பண்ணின கூத்தினால், நம்ம
வம்சத்திற்கே இந்தி தெரியாமல் போய்விட்டது’ என்பதான உரையாடல்களை நூற்றுக்கும் மேற்பட்ட முறை கடந்தாயிற்று.
ஆரம்பத்தில் கோபத்தை வரவழைத்தும் விவாதத்தில் ஈடுபடவைக்கும் இத்தகைய வாசகங்கள் தற்போது மெலிதான புன்முறுவலைத் தான் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கட்டிடத் தொழிலாளியாகவும்,உணவு விடுதி பணியாளராகவும்,இன்னபிற இடங்களில் கூலியாகவும் இந்தி பேசுபவர்கள் வந்த பிறகு மேற்கூறிய வாசகங்கள் வலுவிழந்து விட்டன.
கொஞ்சம் நாட்டு நடப்பு தெரிந்தவர் என்று நான் நம்பிக்-கொண்டிருக்கும் கர்நாடக வாழ் தமிழர் ஒருவர் இது போன்ற வாசகத்தைக் கூற தொடர்ச்சியாக நடந்த உரையாடல்...
“ உங்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் என்ன சாதித்திருப்பீர்கள் ?”
“இந்த வடநாட்டு சப்ளையர்களிடம் பேரம் பேசலாம்ல?”
“நீங்க வடநாட்டுல மட்டும் தான் கொள்முதல் செய்றீங்களா?”
“முன்னெல்லாம் அதிகம் பம்பாய், டில்லியில வாங்கிட்டு இருந்தோம். இப்போ சைனாவுலேயும் வாங்குகிறோம்..”
“எத்தனை சதவிகிதம் சைனாவுல வாங்குகிறீங்க?”
“அறுவது சதவிகிதம் சைனாவுல வாங்குகிறோம்”
“அப்போ நீங்க இந்திக்கு பதில் சீனமொழி தானே கத்துக்கணும்? தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வந்து வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் கொடி கட்டி பறக்கும் மார்வாடிகளின் ஊரில் தமிழ் சொல்லிக் கொடுக்கப்படவில்லையே”
“வியாபரத்திற்கு இல்லைனாலும், பயணத்தின் போதாவது உதவுமே”
“சீனாவிலிருந்து கிட்டதட்ட 2000 க்கும் அதிகமான மொழி பேசும் மக்களை கடந்து காஞ்சிபுரம் வரை வந்த யுவாங் சுவாங்கிற்கு எந்த மொழியும் திணிக்கப்படவில்லையே”
“வாஸ்தவம் தான் . இருந்தாலும் தேசிய மொழிய கத்துக்-கிறதுல என்ன தப்பு”
“இந்தி எப்படி தேசிய மொழியாச்சு?”
சிறிது யோசனைக்குப் பின் ,“அதிகமானோர் பேசுவதாலா?” என்றார் சந்தேகத்துடன்.
“எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது, காகமாகத் தான் இருக்கும்” என்று ராஜ்யசபாவில் அண்ணாதுரை சொன்னதை யோசிக்கவேண்டும்”
“சரி . இத விடுவோம் இந்தியா முழுவதும் சுற்றி வியாபாரம் பண்ணுகிறீர்களே. உங்களது இந்தி அனுபவம் எப்படி ?”
“இந்தியாவில் எங்க போனாலும் இந்திய வைச்சு பிழைச்சுக்-கலாம் என்று நினைப்பதே தவறு. இந்தியாவில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக உள்ள மாநிலங்கள் உத்திர-பிரதேசம், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் , ஹரியானா மற்றும் தில்லி மட்டும் தான். இதிலயும் சிக்கல் உண்டு. என்னுடன் ராவத் , ஸ்ரீசந்த் என்று இந்தி பேசும் இளைஞர்கள் வேலை பார்த்தார்கள். ஒருவர் பேசும் இந்தி மற்றவனுக்கு புரியாது. ராவத்தின் சொந்த ஊர் மத்திய பிரதேசத்தின் பர்வானி (Barwani) ஸ்ரீசந்தின் சொந்த ஊர் பீகாரின் தர்பங்கா (Darbanga). மத்தியபிரதேச காரன் பேசுற இந்தி பீகார் காரனுக்கு புரியாத போது தமிழ்நாட்டில் நாம பேசுற ஓட்ட இந்திய வச்சு வியாபாரமெல்லாம் செய்ய முடியாது; வேணும்னா காமெடி செய்யலாம். தில்லி நிசாமுதீன் ரயில் நிலையத்தில் ஆட்டோகாரனிடம் எவ்வளவு என்று கேட்டபோது சைந்தாலிஸ் என்றான். ஆங்கிலத்தில் சொல்லச் சொன்னேன் . ஆங்கிலம் தெரியாது என்றவனிடம் சிறிது யோசனைக்கு பின் எத்தனை பத்து ரூபாய் எத்தனை ஒரு ரூபாய் என்று அறைகுறை இந்தியில் கேட்க விழுந்து விழுந்து சிரித்துவிட்டு நாலுபத்து ஏழு ஒன்று என்று கூறினான். தேசாப் இந்திப் படத்தில் உள்ள ஒரு பாட்டின் உதவியால் எனக்கு இந்தியில் ஒன்று முதல் பத்து வரை தெரியும்.”
“ஒரு மொழியை எதிர்ப்பது சரியா?’
“ சார் தமிழ்நாட்டுல நடந்தது இந்திக்கு எதிரான
போராட்டம் கிடையாது. இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம்.”
“அடுத்த ஜென்மத்தில் நீங்கள் இந்திக்காரராக பிறந்தால்..”
“அடுத்த ஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது”
“ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்களேன்”
“ஞானகூத்தனின் கவிதையை தழுவி
எனக்கும் இந்தி தான் மூச்சு
ஆனால் அதை
பிறர் மேல் விட மாட்டேன்
என்று இந்தியில் கவிதை எழுதுவேன்”.
இந்த உரையாடலை மீறிய இரு விஷயங்கள்.
ஒன்று.
இந்திதிணிப்பிற்கு ஆதரவாக பேசுபவர்கள் எல்லாம் ஒரு நாட்டிற்கு ஆட்சி நடத்த பொது மொழி கண்டிப்பாக வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். இதற்கான பதிலை,‘பலமொழி இனங்களை உள்ளடக்கிய சோவியத் ரஷ்யாவில் கூட பொது மொழி என்று தனியே இல்லை. ஆனாலும் ஆட்சி நடத்துவதில் அங்கே எந்த சிக்கலும் இல்லை என்ற போது இங்கே மட்டும் ஏன் இந்த ஒற்றை மொழி திணிப்பு?’ சோமசுந்தர பாரதியார் 26 , டிசம்பர்
1937 ல் திருச்சியில் நடந்த கூட்டத்தில் தந்துவிட்டார்.
இரண்டு.
இன்றைய தமிழின் கீழ் நிலைக்கு காரணமாக சில அரசியல் கட்சிகளை நோக்கி பலரது விரல்கள் நீளுகின்றன. தமிழை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு சில கடமைகள் இருக்கின்றன. ஆனால் கடமையிலிருந்து ஆட்சியாளர்கள் தவறும் போது மக்களாகிய நாம் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும்.பாளையங்கோட்டை தூய ஜான்ஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார் என்னுள் விதைத்த தமிழ்ப்பற்றென்ற விதை இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.
நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்கள் மனதில் விதையுங்கள் தமிழ்ப்பற்றை....
அக்டோபர், 2012.