அடிப்படை தேவை வாசிப்பு!

அடிப்படை தேவை வாசிப்பு!
Published on

வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதையையோ சம்பவத்தையோ சினிமாவில் கொண்டு வந்தால் அதைப் பீரியட் ஃபில்ம் என்று அழைக்கிறோம்.  தமிழில் அரு. ராமனாதனின் வீரபாண்டியன் மனைவி (கி.பி.12-ஆம் நூற்றாண்டு), கல்கியின் பொன்னியின் செல்வன் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு), ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி (1940-46) போன்ற நாவல்களை வைத்து அருமையான பீரியட் சினிமாக்களை எடுக்கலாம்.  சினிமா உலகின் மேதைகளில் ஒருவரான ஸ்டான்லி குப்ரிக்கின் ‘ஸ்பார்ட்டகஸ்’ படத்தை பீரியட் சினிமாவுக்கு ஒரு  சிறந்த  உதாரணமாகச் சொல்லலாம்.  கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் நடந்த கதை அது.  குப்ரிக்கின் மற்றொரு படம் ’2001: A Space Odyssey'  (1968) ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் சினிமாவாக இருந்தாலும் அதன் ஆரம்பக் காட்சி ஒரு மகத்தான பீரியட் சினிமாவுக்கான முன்னோடி என்று சொல்லலாம்.  நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து துவங்குகிறது கதை.  முதல் மூன்று நிமிடங்களுக்குத் திரையில் வெறும் இருள். அதே சமயம் ஒரு அமானுஷ்யமான இசை.  இந்த இசை பிரபஞ்ச வெளியில் இருப்பதாகக் கற்பிதம் செய்யக் கூடியதாக இருக்கிறது.  ‘ஆதியிலேயே சப்தம் இருந்தது’ என்பதான இசை.  இப்படிப்பட்ட இசையை மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஊறித் திளைத்த ஒருவரால்தான் இந்த இடத்தில் வைக்க முடியும்.  György Ligeti  என்ற ஹங்கேரிய சங்கீதக் கலைஞரின் Requiem என்ற இசைக் கோர்வையே அந்த இசை.  படத்தின்   மொத்த இசை பற்றியே பல ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. அதில் ஒரு விமர்சகர் இந்த இடத்தில் வரும் இசை பற்றி  ” a very challenging and hypnotic piece replete with microtonal clusters, soaring overwhelmingly powerful wordless voices and orchestral sonorities conjuring supernatural states of mind & a sonic wormhole into the infinite ” என்று எழுதுகிறார்.   

அடுத்து நிலவின் ஒளியில் பூமி தெரிகிறது.  பலவிதமான ஒளிக்கலவைகள்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் பாறைகளும் ஆங்காங்கே மலைகளுமாய்த் தெரியும் மாபெரும் வெளி.  இன்னமும் பூமியின் சில இடங்களில் பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய போது இப்படித்தான் இருந்திருக்குமோ என வியக்கும் வண்ணம் சில இடங்கள் இருக்கின்றன.  அப்படி ஒரு காட்சி திரையில் விரிகிறது.  நிலவில் இறங்கிய மனிதனுக்கு அந்த நிலவின் தரையும், கண் முன்னே விரியும் பரந்த வெளியும் எப்படி இருந்திருக்குமோ அப்படி ஒரு தோற்றத்தைக் காண்கிறோம்.  ‘மனிதனின் தோற்றம்’ என்ற தலைப்பு வருகிறது.   குரங்கிலிருந்து மனிதன் உருவான காலம்.  இன்னும் முழு மனிதனாக மாறவில்லை.  குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உருவத்தில் இருக்கிறான் மனிதன்.  ஒரு பிரம்மாண்டமான பாலைவனம்.  சூரியன் கீழிருந்து மேலே எழும் காட்சி. 

அடுத்த காட்சியில் படம் Pleistocene காலத்துக்கு வருகிறது.  நாற்பது லட்சம் ஆண்டுகளிலிருந்து இரண்டு கால்களும் கைகளுமான எலும்புக் கூடு.  கைகளையும் கால்களையும் கொண்டு நடந்த படுக்கைவாட்டு நிலையிலிருந்து முதுகை நிமிர்த்தி நடக்கும் உருவம் என்பதற்கான எலும்புக் கூடு.  பிறகு இரண்டு கொம்புகளோடு கூடிய ஏதோ ஒரு மிருகத்தின் மண்டையோடு.  கற்பனை செய்து பாருங்கள்.  பல ஆயிரக் கணக்கான மைல்கள் விரிந்து பரந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான வெளியில் இரு கொம்புகளோடு கூடிய மண்டை ஓடு இருந்தால் அந்தக் காட்சி எப்படி இருக்கும்?  ஸால்வதோர் தாலியின் The Great Masturbator, Swans Reflecting Elephants, The Persistence of Memory  போன்ற ஓவியங்களை நினைவூட்டும் காட்சி அது.  ‘பெர்ஸிஸ்டென்ஸ் ஆஃப் மெமரி’ ஓவியத்தில் மடங்கிக் கிடக்கும் கடிகாரத்துக்குப் பதிலாக இரு கொம்புள்ள விலங்கின் மண்டை ஓட்டைக் கற்பனை செய்து கொண்டால் அதுதான் குப்ரிக்கின் அந்தக் காட்சி.  மீண்டும் பிரம்மாண்டமான வெளி.  சில எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன.  மொத்தத்தில் இந்தக் காட்சிகள் அனைத்துமே சால்வதோர் தாலியின் சித்திரங்கள் சலனமுறுவதைப் போலவே நம்முள் இறங்குகின்றன.  படத்தின் இந்தப் பகுதியை  mythological documentary  என்று வர்ணிக்கிறார் குப்ரிக்.  மேலும், சிற்பக்கலை தெரிந்திருந்தால் இதை மேலும் கலாபூர்வமாக ரசிக் கலாம் என்று எழுதுகிறார் ஒரு விமர்சகர். 

இரண்டு கொரில்லாக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.  பன்றி போன்ற தோற்றம் கொண்ட, ஆனால் வால் இல்லாத சில மிருகங்கள் அந்த மனிதக் குரங்குகளின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.  குரங்குகள் வீசியெறிந்த எலும்புகளைத் தின்கின்றன.  ஒரு குரங்கு மற்றொரு குரங்குக்கு பேன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  பன்றி போன்ற மிருகம் கொரில்லாவின் அருகே சென்று உணவைப் பங்கிட முயலும் போது கொரில்லா அந்த மிருகத்தை அடித்து விரட்டுகிறது.  சிறுத்தை ஒன்று குன்றிலிருந்து பாய்ந்து ஒரு கொரில்லாவைத் தாக்குகிறது.  மற்ற கொரில்லாக்கள் பயந்து ஓடுகின்றன.  அந்தக் காட்சி அத்துடன் முடிகிறது.  அடுத்த காட்சியில் கொரில்லாக்கள் ஒரு குட்டையில்  நீர் அருந்திக் கொண்டிருக்கின்றன.  மற்றொரு இடத்தைச் சேர்ந்த கொரில்லாக்கள் இந்த கொரில்லாக்களின் இடத்துக்கு வர அவற்றைத் துரத்தி அடிக்கின்றன.  அடுத்த காட்சியில் கொரில்லாக்கள் உறங்குகின்றன.  பொழுது விடிந்ததும் அந்த இடத்தில் ஒரு செவ்வக வடிவ தூணைப் பார்க்கின்றன.  அதில் இருக்கக் கூடிய ஆபத்தை நினைத்துக் குதிக்கும் கொரில்லாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பயம் குறைந்து அந்தத் தூணை (monolith ) மெதுமெதுவாகத் தொட்டுப் பார்க்கின்றன; முகர்ந்து பார்க்கின்றன. இந்த இடத்தில் வரும் இசை

ரிச்சர்ட் ஸ்ட்ராஸின் Thus Spake Zarathustra.  குப்ரிக் ஏன் இந்த இடத்தில் இந்த இசையைப் பயன்படுத்துகிறார்?  பீரியட் சினிமா எடுப்பவர் தத்துவத்தில் ஊறி இருக்க வேண்டும்.  ஃப்ரெட்ரிக் நீட்ஷே எழுதிய கூட Thus Spake Zarathustra என்ற நூலில் அவர் மனிதன் என்பவன் மனிதக் குரங்குக்கும் சூப்பர்மேனுக்கும் இடையிலான பாலம் என்கிறார்.  (மூன்று மணி நேரம் ஓடும் குப்ரிக்கின் ஸ்பேஸ் ஒடிஸி படத்தின் இந்த ஆரம்பக் காட்சிகளைப் பற்றியே தனியாக ஒரு புத்தகம் எழுதலாம்.)

அடுத்த காட்சியில் எலும்புக் குவியலிடையே கைகளால் விளையாட்டாக அளைந்து கொண்டிருக்கிறது ஒரு கொரில்லா.  அப்போது அதன் கைகளுக்கு அகப்படும் ஒரு நீண்ட எலும்பை வைத்து அடிக்கும் போது மற்ற எலும்புகள் உடைந்து போவதைப் பார்த்து அதிசயம் கொள்கிறது.  பிறகு அந்த எலும்பினால் பன்றியை அடித்துக் கொல்கிறது.  மனித வரலாற்றில் வேட்டைக்கான ஆயுதம் அறிமுகமானது இப்படித்தான் நடந்தது. படத்தின் 19-ஆவது நிமிடத்தில் கொரில்லாக்கள் வெற்றி எக்காளத்துடன் குதூகலித்து ஆடுகின்றன.  ஒரு கொரில்லா தன் கையிலிருக்கும் எலும்பை வானில் விட்டெறிகிறது.  அடுத்த காட்சியில் அந்த எலும்பு இருபதாம் நூற்றாண்டின் பிரபஞ்ச விண்கலமாக மாறுகிறது.

ஒரு பீரியட் சினிமா எடுக்க வேண்டுமென்றால் அதன் இயக்குனருக்கு சினிமா மட்டும் தெரிந்திருந்தால் போதாது.  தத்துவம், ஓவியம், சிற்பம், இலக்கியம், வரலாறு, புவியியல், மானுடவியல் போன்ற எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.  இதற்கெல்லாம் ஒருவர் தனித்தனியாக அந்தந்தத் துறைகளுக்கான புத்தகங்களை வாங்கிப் படித்து நிபுணத்துவம் அடைய முடியாது.  பொதுவாகவே வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.  சில உதாரணங்கள் தருகிறேன்.  The Way To Al & Mutasim  என்ற கதையில் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் திருச்சி பாலக்கரையில் உள்ள ஒரு முஸ்லீமை விவரிக்கும் போது அந்த நபர் தெருவோரத்தில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது சிறிய கல் ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு போனார் என்று எழுதுகிறார்.  எதற்கு சிறிய கல் என்று தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே தெரியாது என்கிற போது போர்ஹேஸுக்கு எப்படித் தெரிந்தது?  வாசிப்பு.  அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குமே தெரிந்திருக்காது.  நான் இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்ததால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

சிறுநீர் கழித்த பிறகு ஆணுறுப்பில் தங்கும் சிறுநீரை உறிஞ்சி எடுப்பதற்காகவே அந்தச் சிறிய கல்.  அதே கதையில் இன்னொரு இடத்தில் ஒரு கதாபாத்திரம் அலஹாபாதில் ஹிந்துஸ்தான் டைம்ஸும், தில்லியில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் படிப்பதாக வருகிறது.  வட இந்தியாவில் சில காலம் வாழ்ந்த ஒருவரால்தான் இந்த நுணுக்கத்தை கவனிக்க முடியும்.  என்னவென்றால், உத்தரப் பிரதேசத்தில் மேட்டுக்குடியினர் கூட நேரடியான ஆங்கிலப் பத்திரிகைக்குப் பதிலாக கொஞ்சம் பிராந்திய வாடை அடிக்கும் ஆங்கிலப் பத்திரிகைதான் படிப்பார்கள்.  ஹிந்துஸ்தான் டைம்ஸும் ஆங்கிலப் பத்திரிகைதான் என்றாலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆங்கிலப் பிணைப்பு அதிகம்.  போர்ஹேஸின் கதைகளில் இப்படிப்பட்ட ஏராளமான நுணுக்கங்களைக் காணலாம். 

பீரியட் சினிமா எடுக்க நினைப்பவர்கள் தாங்கள் செல்ல நினைக்கும் காலத்துக்குள், நிலவெளிக்குள் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்த வேண்டும்.  கலாச்சாரம், அரசியல், சமூகவியல் என்று எல்லாவற்றிலும் அந்தக் கால/வெளிப் பிராந்தியத்தில்  சென்றாக வேண்டும்.  குவெண்டின் டரண்டினோ இயக்கிய   ஒரு பீரியட் படம்.  1858-இல் டெக்ஸஸில் நடக்கும் கதை. 150 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால் அதில் வரும் அடிமைகளும் மற்றவர்களும் அவ்வப்போது தரையில் எச்சில் துப்புவார்கள்.  அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள் நாகரிக வளர்ச்சி அடையாத நிலையில் இருந்ததால் அந்தப் பழக்கம் அவர்களிடம் இருந்தது.  (சில நாடுகளில் இந்தக் காலத்திலும் அவ்வப்போது எச்சில் துப்பிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்; அது வேறு விஷயம்.) 

பீரியட் சினிமா எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத் தமிழில் பல உதாரணங்கள் உள்ளன.  அதில் ஒன்று, வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடகத் துறையில் இருந்தவர்கள் பற்றிய கதை.  நாம் அறிந்த தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்ற பழைய பிரபலங்கள் அனைவரும் சபா நாடகங்களிலிருந்து வந்தவர்கள்தாம்.  அப்போதைய நாடகங்களின் முக்கியமான அம்சமான சங்கீதம் தெரியாவிட்டால் நடிகராகவே ஆக முடியாது.  முகவெட்டு, தோற்றம் எல்லாம் அடுத்த பட்சம்தான்.  அதனால்தான் அந்தக் காலத்துப் படங்களில் முப்பது நாற்பது பாடல்கள் இடம் பெற்றன.  தலைவியிடம் தலைவன் தன் காதலைச் சொல்வதையே பாடலின் வாயிலாகத்தான் தெரிவிப்பான்.  தலைவியும் பாடலிலேயே சம்மதம் சொல்வாள்.  எல்லாமே பாடல்தான்.  இத்தகைய சங்கீத உலகுக்கு அடிப்படையாக இருந்த இசைக் கருவி, ஹார்மோனியம்.  ஹார்மோனியம் இல்லாமல் சென்ற நூற்றாண்டு நாடகங்கள் இல்லை.  ஆனால் காவியத் தலைவனில் ஹார்மோனிய சத்தமே இல்லை.  இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.  ஒரு ஹாலிவுட் இசையமைப்பாளரைப் போட்டிருந்தால் கூட அவர் கொஞ்சம் ஆய்வு செய்து ஹார்மோனிய இசையைக் கொடுத்திருப்பார்.  ஆனால் நம் ஊர் ஆட்களுக்குக் கோடிகளில் கிடைக்கும் பணம் மட்டும் போதும்.  அந்தப் படத்திலிருந்து இனிமேல் ரஹ்மான் இசையமைத்த எந்தப் படத்தையும் பார்க்கலாகாது என்ற முடிவுக்கு வந்தேன்.  ஆம், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம்.   நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் நாடகக் கலைஞர்களுக்கு இழைக்கும் அவமானம் இது. 

ஒரு பீரியட் சினிமா என்றால் அதை இயக்கும் இயக்குனர் அந்தக் கால கட்டத்திலேயே வாழ்ந்தவரைப் போல் ஆக வேண்டும்.  அதற்கு அடிப்படையான தேவை வாசிப்பு என்று குறிப்பிட்டேன்.  டேவிட் லீனின் லாரன்ஸ் ஆஃப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ, எ பேஸேஜ் டு இந்தியா ஆகிய படங்கள் மகத்தான பீரியட் சினிமாக்கள்.  சமீபத்தில் நான் பார்த்து ரசித்த ஒரு பீரியட் படம் ஸ்தெஃபானி தி ஜியுஸ்தோ இயக்கிய டான்ஸர்.  வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு படம். 

பிப்ரவரி, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com