அங்குதான் நிம்மதியாக இருந்தேன்!

அங்குதான் நிம்மதியாக இருந்தேன்!
Published on

வருடக்கணக்காக சுவரிலேயே ஒட்டிக் கிடந்த பல்லியொன்று திடீரெனத் தவறி, தண்ணீருக்குள் விழுந்தாற்போல்தான் நான் விடுதி வாழ்க்கையில் விழுந்தேன். இருபத்தைந்து வருடங்களாக உறவினர் வீடுகளில் கூடத் தங்கியறியாத ஒரு பெண்ணிற்கு, விடுதி வாழ்க்கை, அதிலும் சென்னை போன்ற பெருநகரத்தில் கிடைக்கும் விடுதி வாழ்க்கை மிகவும் புதியது. அப்படிப்பட்ட மூன்று வருட வாழ்வில் நான் சந்தித்த அனுபவங்கள் ஏராளம்.

தென் மாவட்ட கிராமம் ஒன்றிலிருந்து பணி நிமித்தம் நான் சென்னை வர நேர்ந்ததே ஒரு விபத்து போலானதுதான். வந்தவுடன் இங்கிருக்கும் நண்பர் மூலமாக முகப்பேர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில்தான் வந்திறங்கினேன். இரண்டு மாதத்திற்கான வாடகையை இருப்புத்தொகையாக செலுத்தி விட்டு, மூன்று பேர் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஓர் அறையில் என் ஒரே ஒரு சூட்கேஸுடன் குடியேறிய நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. அப்போது அந்த அறையில் நான் மட்டும்தான். விடுதியில் தங்க வேண்டுமென்றால் போர்வை, தலையணை எல்லாம் நாம்தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுகூட அப்போது எனக்குத் தெரியாது. நானோ சென்னைக்கு புத்தம்புதியவள், என் நண்பரோ சாப்பிட்டு உறங்குங்கள் மாலை வருகிறேன் எனச் சொல்லிச் சென்றுவிட்டார். உணவுடன் கூடிய விடுதிதான் என்றாலும் எனக்கு வெளியில் சென்று சாப்பிட பயமும் கூச்சமுமாக இருக்கிறது. அப்படியே கொண்டு வந்த பெட்டியைத் தலைக்கு வைத்து வெறும் கட்டிலில் சுருண்டு படுத்து விட்டேன். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பசி வயிற்றைக் கிள்ள எழுந்து வெளியே சென்று விசாரித்தால் சாப்பிடத் தட்டும் நாம்தான் கொண்டு வர வேண்டுமாம். பிறகென்ன மாலை அந்த நண்பர் வரும் வரைக்கும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

அதன் பிறகு, திருவல்லிக்கேணியில் இருக்கும் பெண்கள் விடுதி ஒன்றிற்கு மாறினேன். கிட்டத்தட்ட அரைகுறை  சென்னைவாசியாகவும் மாறிவிட்ட காலம். பத்திரிகையில் பணி புரிந்ததால் நேரம்காலம் வரையறை இல்லாத பணிச்சூழல், நண்பர்கள், இலக்கியக்கூட்டங்கள் என சற்றே நகர வாழ்க்கைக்கு பழகி விட்டிருந்தேன். ஆனால், பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்களும், கல்லூரியில் படிக்கும் பெண்களும் தங்கியிருந்த அந்த விடுதி சற்று அதீத கட்டுப்பாடுகள் கொண்டது. அங்கிருக்கும் அத்தனை பெண்களின் நல்லொழுக்க வாழ்விற்கும் தாம்தான் பொறுப்பு என்பதுபோல் நடந்து கொள்ளும் நிர்வாகம். உணவை அறைக்கு எடுத்துச் சென்று உண்ணக்கூடாது, பொதுவான உணவு மேசையில்தான் உண்ண வேண்டும் என்பது விடுதிகளில் பொதுவான விதி. முன்னர் இருந்த விடுதியிலும் இந்த விதிமுறை இருந்தாலும்கூட யாரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், இந்த விடுதியில் அந்த விதி கடும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றப் பட்டது. அதாவது இரவு 8 - 8.30 உணவு நேரம் என்றால் அந்த நேரத்திற்குள் அனைவரும் உணவு மேசையில் வந்து ஆஜராகி உண்டு விட வேண்டும். நாம் வேலை முடிந்து 9 மணிக்கு வந்தாலோ அல்லது எடுத்து வைத்துக் கொண்டு பிறகு சாப்பிடலாம் என்றாலோ அதற்கு அனுமதி கிடையாது. உணவிற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தி விட்டு நான் வெளியில் சாப்பிட்ட நாட்கள்தான் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் நேரக் கட்டுப்பாடு என்பதைத்தாண்டி கூட்டத்தோடு அடித்துப் பிடித்துக் கொண்டு சாப்பிடுவதற்கு இருந்த கூச்சம்தான். இதையெல்லாம் தாண்டி, நாம் இரவில் வருவதற்கு தாமதமானால் நிர்வாகத்திற்கு பதில்

சொல்ல வேண்டி இருக்கும். 10 மணிக்குள் விடுதிக்குள் இருக்கவேண்டும் என்ற விதியை ஒப்புக்கொண்டுதான் நாம் செல்கிறோம் என்றாலும், என்றைக்காவது நேரும் சிறு தாமதங்களையோ, அல்லது விடுதிக்குள் வந்தபிறகு நாம் மீண்டும் வெளியில் செல்வதையோ அவர்கள் கேள்விக்குட்படுத்துவார்கள்.

கேள்வி என்பது விதிமுறை இதுதானே என்பதாக மட்டும் இருக்காது, ‘அலுவலகம் 6 மணிக்கே முடிந்து விடுமே இவ்வளவு நேரம் பெண்பிள்ளைக்கு வெளியில் என்ன வேலை?', ‘அடக்க ஒடுக்கம் வேண்டாமா?', ‘தினமும் உனக்கு கதவு திறந்து விடுவதுதான் என் வேலையா?', ‘அலுவலகம் முடிந்து வந்தபிறகு இரவில் வெளியில் செல்கிறாயே அப்படி என்ன வேலை?' என தேவையில்லாத, அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்பார்கள். அதன் சாராம்சம் எல்லாம் பெண் பிள்ளை, ஒழுக்கம் இதைப்பற்றியதாகவே இருக்கும். பெற்றோர்கள் படிப்பதற்கு, பணி புரிவதற்கு என நகரங்களுக்கு அனுப்புவதே பெரிய சகாயம் அதற்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது போலவே அவர்கள் நம்மை நடத்தும் விதம் இருக்கும். உண்மை என்னவென்றால், என் பெற்றோர்கூட இப்படியெல்லாம் கேள்வி கேட்டது இல்லை. இவற்றினாலெல்லாம் ஏற்பட்ட கடும் வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் பிறகு அந்த விடுதியில் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்று நானும், இனி ஒரு நிமிடம் கூட இவளை வைத்துக் கொள்ள முடியாது என அவர்களும் முடிவு செய்த நாளில் வேறு விடுதிக்கு மாறிக்கொள்ள முடிவு செய்தேன்.

ஆனால், இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் அந்த விடுதியில் நான் இருப்பதற்கான காரணமாக இருந்தது அங்கு தனியறை கிடைத்த சௌகரியம்தான். மொட்டைமாடியில் நான்கு புறமும், கூரையும் தகரத்தால் ஆன மிகச்சிறிய அறையாயினும், வெயில் காலங்களில் உள்ளே இருக்க முடியாத அளவிற்கு வெப்பம் தகித்தாலும் அது தனியறை. அவ்வளவு குறைந்த வாடகையில் தனியறை கிடைப்பது அதுவும் திருவல்லிக்கேணி பகுதியில் சிரமம் ஆதலால் அந்த அறையின் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு காலம் கடத்தினேன். மீண்டும் வேறு விடுதிக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்த போது, இங்கிருந்தது போன்ற நேரக்கட்டுப்பாடுகள் இல்லாத, உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்காமல் நம்மை வெளியில் சாப்பிட்டுக் கொள்ள அல்லது சமைத்துக் கொள்ள அனுமதிக்கும் தனியறை கிடைத்தால் நல்லது என்று தேடத் தொடங்கினேன். கண்டிப்பாக இது கானல் நீரில் மீன் தேடும் கதைதான், ஆனால் அப்படியும் ஓர் அறை கிடைத்தது.

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் பகுதியில் பெங்கால் நபர் ஒருவரின் நிர்வாகத்தில் நடத்தப்பட்ட மேன்ஷன் அது. பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து தங்கி பணி புரியும் ஆண்களும் பெண்களும் மாத வாடகைக்குத் தங்கியிருப்பர். அப்படி அங்கு தங்கியிருந்தவர்களில் ஆண்கள்தான் அதிகம். பெண்கள் ஒன்றிரண்டு பேர் இருந்திருக்கலாம். நான் தங்கியிருந்த தளம் முழுவதும் ஆண்கள் தங்கியிருந்த அறைகள்தான். அங்கு தங்கியிருந்த இரண்டு வருடமும் த்ரில்லான அனுபவம்தான். அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை சமயங்களில் அனைவரும் ஊருக்கு சென்று விட ஒன்றிரண்டு பேருடன் நானும் அந்த விடுதியில் இருப்பேன். நண்பர்கள் அனைவரும் மேன்ஷனிலா தங்கியிருக்கிறாய் என ஆச்சரியமாகக் கேட்பார்கள். ஆனால், அங்குதான் நான் எந்த விதிமுறைகளும் இன்றி நிம்மதியாக இருந்தேன். இத்தனைக்கும் அவற்றில் பாதி வேலையின்றி விரக்தியில் திரிந்த நாட்கள்.

உண்மையில், பாதுகாப்பு என்ற பெயரில் சமூகம் ஏற்படுத்தும் மனவுளைச்சல்களை விடவும், நாம் துணிச்சலுடன் அந்தப் பாதுகாப்பு வேலியைத் தாண்டும் போது கிடைக்கும் அனுபவம்தான் வாழ்க்கையை இன்னும் விரிவாக்குகிறது. என்ன, நடு ராத்திரியில் கூட அடிக்கடி எழுந்து கதவு தாழிடப்பட்டிருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டியிருக்கும். அந்த எச்சரிக்கையுணர்வும் சேர்ந்ததுதானே வாழ்வு?

செப்டம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com