அகம் முகம்: மனோவேகம்

அகம் முகம்: மனோவேகம்

Published on

அபி - 80' நிகழ்வு. 31.7.2022 அன்று மதுரையில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

அபி எனும் பெருங்கவிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய விழா அது. போவதற்காக அன்று காலை 6 மணிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் முன்பதிவு செய்திருந்தேன். காலை அலாரம் 4.30க்கு வைத்திருந்தேன். ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி வந்து போன் செய்தபோது காலை 5.10. தூங்கிக்கொண்டிருந்தேன். அலாரம் தவறுதலாக செவ்வாய்கிழமைக்கு என்றிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

சாலிகிராமத்திலிருந்து எக்மோர் செல்ல வேண்டும். காப்பி குடிக்கவில்லை.காலைக்கடன்களில் சிக்கல். எல்லாம்தாண்டி அவசர அவசரமாக தயாராகி கீழே வந்தபோது 5.25. பாதி மனதுடன் ஓட்டினார் சுப்பிரமணி. ‘முடியாது சார். ரயில் கிளம்பிடும்.'

எனக்கும் அது தோன்றினாலும் அவரைத் துரிதப் படுத்தினேன். என் கவனக்குறைவைச்  சொன்னேன். இயல்பாகவே உற்சாகமானவர் சுப்பிரமணி. கொஞ்ச நாள் பழக்கத்தில் ஒட்டிக்கொண்டவர். வேகமானார்.

முதல் நாள் அபி அய்யாவுடன் பேசியதிலிருந்து ஜெயமோகனை சந்திக்கப்போவது வரை எல்லாம் மனதில் காட்சிகளாக ஓடின. ஆட்டோ இன்னும் வேகமாக ஓடியது. எக்மோரை நெருங்கியபோது மணி 5.55.வாகன நெரிசல் வேறு.

‘சார் இறங்கி வேகமா போயிடுங்க.' அவருக்கு பணமும் நன்றியும் கொடுத்துவிட்டு ஓடி வந்து ரயிலில் ஏறியபோது மூச்சு இறைத்தது. அடுத்து அது நிம்மதி பெருமூச் சானது.

பிறகு மதுரை வந்தது. அபி அய்யாவைச் சந்தித்தது. விழாவில் இருந்தது. சுவையான உரைகளைக் கேட்டது. எல்லாமே அழகான தருணங்கள்.

இதற்கெல்லாம் ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணிக்குதான் நன்றி சொல்லியாக வேண்டும்.

அன்று கொண்டுபோய் சேர்த்தது, அவர் மனோவேகம்தான்.

கொடியும் பசியும்

‘பாரத் மாத்தாக்கி ஜே!' கோஷம் போட்டபடி ஒரு வேன் போனது. யாரும் கொடி வாங்கவில்லை.

சிறுமி கூவிக்கூவி கொடி விற்கப்பார்த்தாள்.

‘வித்துட்டு சீக்கிரம் வந்துடும்மா...

பசி வயித்துக்கூட சண்ட போடுது,' தாத்தா சொன்னது

 சத்தமாய் காதில் மோதியது.

கஷ்டப்பட்டு ஓரிரு கொடிகள் விற்றாள். ஒரு கொடியை ஒரு குழந்தையின் சட்டையில் குத்திவிட்டாள்.  காசு வாங்கவில்லை.  அவள் அம்மா சிறுமியின் நெற்றியில் முத்தம்வைத்துவிட்டுப் போனாள்.

சுதந்திரக் காற்று அவள் உடல் வியர்வையைத் துடைத்துவிட்டுப் போனது.

தாங்கித் தாங்கி நடந்தபடி ஒருவர் வந்தார். ‘பாப்பா எல்லா கொடியும் எனக்கு கொடு. எவ்வளவு?' கேட்டார். சிறுமி கேட்ட பணத்தைக்கொடுத்தார். ‘இத நான் ஃபிரியா உன்னமாதிரி குழந்தைகளுக்கு குடுக்கப்போறேன்,' சொல்லிவிட்டுப்போனார். ஆச்சரியம் வடியாமல் சிறுமி அவரைப்பார்த்தாள். தாத்தா ஞாபகம் வர ஓடிப்போய் கிடைத்த ஆறிப்போன இட்லியை வாங்கினாள். வேகமாய் வந்து கொடுத்தாள்.

தாத்தாவின் பசிபள்ளத்தில் போய் இட்லி விழுந்தது. வயிற்றைத் தடவியபடி  சொன்னார்.

‘இந்தியா பசி தீத்துடுச்சு.'

அம்மாவும் மகளும்

‘அம்மா...நாம மோதிரம் இந்தக் கடையிலதான வாங்கனோம்!'

‘அம்மா..நம்ம மோதிரம் இந்தக் கடையிலதான இருக்கு!'

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com