வயநாடு பேரழிவு மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!

Wayanad Flood
Published on

வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை, இயற்கையின் பழிவாங்குதல் என்றெல்லாம் சொல்வது ஒரு பெரும் அபத்தம். அங்கு நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று சொன்னால் கூடப் போதாது. இது மனிதன் இயற்கையிடம் பிச்சை கேட்டு வாங்கிய பேரழிவு.

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயரமான சிகரம் ஆனைமலை. அதன் பிறகு வெள்ளிரிமலை – செம்பாறைமலை சிகரங்கள். கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் உள்ளது வெள்ளிரிமலை சிகரம். வடக்கே வைத்திரியில் தொடங்கி செம்பாறைமலை, அருணமலை, தொள்ளாயிரம்கண்டி மலை மற்றும் வெள்ளிரிமலைகளை உள்ளடக்கிய ‘ஒட்டகக் கூம்பு’ (Camel hump) மலை வரிசையின் தென்கிழக்குச் சரிவில் உள்ளது பேரிடர் நிகழ்ந்த முண்டக்கை மலைச் சாய்வு. மேற்குச் சரிவில் கோழிக்கோடு மாவட்டம் மற்றும் நிலம்பூர் பள்ளத்தாக்கு. முண்டக்கைப் பகுதியில் உருவாகும் ஆழ்ந்த நீரூற்றுகள் புன்னையாறாக உருமாறி சூசிப்பாறை நீர்வீழ்ச்சி வழியாக சாலியாறை நோக்கிப் பாய்கின்றன.

முண்டக்கைப் பகுதியில் நமக்குத் தெரிந்து நிகழ்ந்த முதன்முதல் வெள்ள நிலச்சரிவு 1984இல். அன்று அங்கிருந்து 17 மனித உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்கடியில் எங்கோ புதையுண்ட பத்துக்கும்மேற்பட்ட காட்டு நாய்க்கர் பழங்குடிக் குடும்பங்களைப் பற்றியோ, எத்தனை பேர் என்று தெரியாத மற்ற காட்டுவாசிகளைப் பற்றியோ இன்று வரைக்கும் எந்தப் பதிவும் இல்லை. அன்றுவரை கேரளாவில் ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய வெள்ள நிலச்சரிவு அது. 2019 ஆம் ஆண்டில் மறுபடியும் முண்டக்கையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. புத்துமலை, பாதார் மற்றும் கவளப்பாறை. 2020இல் முண்டக்கையில் மீண்டும் பெரிய நில வெடிப்பு நிகழ்ந்தது. அதில் மனித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் எளிதில் உடையக்கூடியதும் சூழலியல் சிக்கல் கொண்டதுமான மலைத்தொடர் வெள்ளிரிமலை, செம்பாறைமலை. மனிதன் மிகவும் கவனமாகத் தலையிட வேண்டிய சூழலியல் பகுதி அது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பிரிட்டிஷ் நிறுவனங்கள் 99 ஆண்டு குத்தகை முறையில் உள்ளூர் மன்னர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி, இந்த மலைகளின் பெரும்பாலான பகுதிகளை தோட்டங்களாக மாற்றினர். மலை உச்சிகளை மட்டும் விட்டுவிட்டு மையப் பகுதிகளை ஏலக்காய் காடுகளாக மாற்றினர். அதன் அரைச்சரிவு அடிவாரங்களில் தேயிலை பயிரிடப்பட்டது. இதனால் நடந்த வன அழிவின் தாக்கம் தமிழ்நாட்டையும் கடந்து பாண்டிச்சேரியை எட்டியதாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சூழலியலாளர் மெஹர் ஹோம்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, தோட்டங்களின் உரிமை இந்தியர்களுக்கு வந்தபோது ஏலக்காய் காடுகளும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. சரிந்து ஒழுகிப்போகாமல் இம்மலைகளில் மண்ணைத் தாங்கிப்பிடித்திருந்த மாபெரும் மரங்கள் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கல்லாயி மர வியாபார மையத்தில் குவிந்து கிடந்தன. மலைகளின் இயற்கையான செடிகொடி மேலுறை முற்றிலுமாக தொலைந்துவிட்டது. 1970 ஆம் ஆண்டின் தனியார் வன உரிமை சட்டத்தைத் தொடர்ந்து, மீதமுள்ள மலைத்தலைகளும் மழிக்கப்பட்டன.

முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை முதல் செம்பாறைமலை வரையிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தோட்டத் தொழிலாளர்கள் அல்லது அவர்களது சந்ததியினர். ஏழை எளிய மக்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தும் கேரளத்தின் ஏறநாடு பகுதியிலிருந்தும் அடிமைத் தொழிலாளிகளாக வந்தவர்களின் வழித்தோன்றல்கள். அவர்களில் யாருமே நில உரிமையாளர்களோ பணக்காரர்களோ அல்ல. பெரும்பாலானோர் பாழடைந்த வரிசை வீடுகள், குடிசைகள் அல்லது ஐந்தோ பத்தோ சென்ட் காணிகளில் வசிக்கும் ஏழைகள்.

1980இல் ஒரு மாவட்டமாக உருவான பிறகு, வயநாட்டின் சமூகம் மற்றும் அரசியல் சூழலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. வளர்ச்சிக்கான கூக்குரல்கள் எங்கும் எழத் தொடங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசுகளின் ஊதுகுழலிலிருந்து வளர்ச்சி, வளர்ச்சி… என்ற இயந்திரத்தனமான கோஷங்கள் பரவின. வயநாட்டின் சூழலியலுக்கேற்ற வளர்ச்சி எது என்பதைப் பற்றிய எந்தவொரு பார்வையுமே அவர்களுக்கு இருக்கவில்லை. விமான நிலையங்கள் வரவேண்டும், ரயில்வே வரவேண்டும், பலப்பல மருத்துவக் கல்லூரிகள் வரவேண்டும் போன்ற கோஷங்களின் நெரிசலில் தத்தளித்தது வயநாடு.

கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பயங்கரப் புயலாக சுற்றுலா வளர்ச்சி வயநாட்டின்மேல் வந்து விழுந்தது. அரசு நிர்வாகமும் ஊராட்சிகளும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சுற்றுலா வளர்ச்சிக்காக எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இறங்கின. வெளிநாட்டு மலையாளிகள், புதிய செல்வந்தர்கள், பெரும் தொழிலதிபர்கள் எனப்பலர் கொண்டை ஊசி வளைவுகளேறி வயநாடு சென்றனர். வயநாட்டின் சுற்றுச்சூழலைப் பற்றியோ, நிலையான வளர்ச்சி பற்றியோ அவர்கள் சற்றும் கவலைப்படவில்லை. அவர்களின் ஆகாயக் கேமிராக் கண்கள் வயநாட்டின் அலாதியான இயற்கை அழகின் மீது வட்டமிட்டன. மலையுச்சிகளில் உள்ள கண்கவர் நிலங்களை அவர்கள் கைவசப்படுத்தினர். கரடுமுரடான எட்டமுடியாப் பகுதிகள் வரை ஊடுருவி இடங்களைக் கைப்பற்றினர். வனம் மற்றும் பொது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பெரிய பெரிய கட்டமைப்புகள் கட்டப்பட்டன. நெடுகிலும் குறுக்கிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆறுகள், நீரோடைகள், நீரூற்றுகளை தடுக்கவோ தடம் மாற்றவோ செய்தனர். எல்லாம் அரசாங்க ஆதரவோடு!

வயநாட்டில் இப்போது ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா விடுதிகள் அல்லது ஹோம் ஸ்டேகள் உள்ளன. இவற்றின் பெரும்பகுதி ஒட்டகக் கூம்பு மலைத் தொடரின் உச்சிப் பகுதிகளிலோ மையப் பகுதிகளிலோ அமைந்துள்ளன. இந்தக் கட்டுமானங்களும் அவற்றை அடைவதற்கான சாலைகளும் தாம் 2019ல் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் அடிப்படைக் காரணி. வயநாட்டில் பரவலாக நிகழ்ந்த வெள்ள நிலச்சரிவுகள், நிலக் கீறல்களைத் தொடர்ந்து, சூழலியல் மற்றும் வனவிலங்கு ஆய்வுக்கான ஹியூம் ஆணையம் நடத்திய ஆய்வில் 2018இல் மட்டும் 1132 நில இடிவுகள் இங்கே நடந்தாகக் கண்டறியப்பட்டது. இவற்றின் 58 சதவீதம் பலப்பல கட்டமைப்புகளுக்குப் பின்னால் தான் நிகழ்ந்தன. 29 சதவீதம் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை ஒட்டி நிகழ்ந்தன.

2018, 2020 நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மாவட்ட பேரிடர் ஆணையத்தின் கோரிக்கையில் மாநில பேரிடர் மேலாண்மை ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், வயநாட்டின் மலைச் சரிவுகளில் பாதுகாப்பற்ற இடங்களில் 4000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அவர்களை போர்க்கால அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்றவேண்டும் என்றும் பரிந்துரை இருந்தது. ஆனால் அந்தப் அறிக்கையை யாருமே கண்டுகொள்ளவில்லை. அந்த பரிந்துரையில் குறிப்பிட்ட அதிகளவான குடும்பங்கள் முண்டக்கை, வெள்ளிரிமலை பிரதேசங்களில் தாம் இருந்தன.

இதற்கும் பத்தான்டு முன் டாக்டர். ஜி. சங்கர் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வில் எந்த நேரத்திலும் அதிரடி நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக ஒட்டகக் கூம்பு மலைத் தொடரின் முண்டக்கை அடக்கமான பல பகுதிகளைக் குறிப்பிட்டது. இந்தப் பகுதிகளில் கட்டுமானங்கள் மற்றும் வரம்பு மீறிய நிலப் பயன்பாட்டை தடை செய்யவோ கட்டுப்படுத்தவோ வேண்டும் என்று வலுவாகப் பரிந்துரைக்கப்பட்டது. ஹியூம் பரிந்துரையிலும் மிகுந்த கவனிப்பும் எச்சரிக்கையும் தேவைப்பட்ட இடமாக முண்டக்கையை குறிப்பிட்டிருந்தது.

முண்டக்கையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் ஓய்வு விடுதிகள் மற்றும் ஹோம் ஸ்டேக்களின் சொர்க்கமாகும். சாகச சுற்றுலா, கூடாரச் சுற்றுலா மற்றும் கண்ணாடிப் பாலங்கள் ஆகியவற்றின் மையமாக உள்ளது இந்த இடம். கட்டுப்பாடற்ற இந்த சுற்றுலாவே முண்டக்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணம். மேலும் இப்பகுதிகளில் எத்தனையோ கருங்கல் உடைக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன! முண்டக்கையில் இத்தகைய பெரும் கற்சுரங்கத்தை மக்கள் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் மூட வைத்திருந்தாலும் இந்தப் பேரழிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் அதைத் திறந்திருந்தனர்.

வளர்ச்சி என்ற போர்வையில் வயநாடு அழிக்கப்படுவதற்கு மாநில அரசு துணை நிற்கிறது. இப்போது அரசாங்கம் மற்றொரு ‘லட்சிய’ திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. அது வயநாட்டில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை குறுக்கே கிழித்துச் செல்லும் இரட்டை சுரங்கப்பாதை. ஒட்டகக் கூம்பு மலைத்தொடரின் மையப்பகுதி வழியாகத்தான் இந்த சுரங்கப்பாதை செல்கிறது. 10 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதைக்கு 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் இதன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வும் இன்றுவரை நடத்தப்படவில்லை. காட்கில் (Madhav Gadgil) அறிக்கையின் அடிப்படையில் இந்த அனைத்துப் பகுதிகளும் ஆபத்தான சிவப்பு மண்டலப்பகுதி (red zone) ஆகும்.

வயநாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் விதிமீறல் கட்டமைப்புகள் லட்சக்கணக்கானவை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் மலை முகடுகளிலும், அணைகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் எண்ணற்ற ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் மற்றும் நில அமைப்பு மாற்றல்கள் நடந்துள்ளன, நடந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசும் பஞ்சாயத்துகளும் அரசியல் தலைவர்களும் வளர்ச்சிவாதிகளும் எல்லாவற்றுக்கும் குடை பிடிக்கிறார்கள். இயற்கையின் மீதான இந்த வன்புணர்வு வயநாட்டில் ஓர் அன்றாட நிகழ்ச்சி.

இயற்கையின் மாபெரும் பழிவாங்குதலுக்கு ஆளாகிறவர்கள் ஒருபோதும் இயற்கையைச் சீரழிப்பவர்கள் அல்ல. ஆதரவற்ற அப்பாவி மனிதர்கள், பூர்வகுடிகளின் குழந்தைகள் தாம் இதில் வேரோடு அழிக்கப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை. அவர்களின் துன்பங்கள் ஒருபோதும் முடிவதில்லை.

மழைவெள்ளம் ஒழுக்கிக் கொண்டுவந்த மண்ணிலும் பாறையிலும் அடித்து நொறுங்கிப்போன உயிர்களும் தொலைதூரத்து ஆற்றுவெள்ளத்தில் துண்டு துண்டாக மிதந்த மனித உடல்களும் எழுப்பும் அழுகுரல் சாபங்கள் நம் சந்ததியினரைக்கூட தூங்க விடாது.

என். பாதுஷா, (வயநாடு இயற்கை பாதுகாப்புக் குழு தலைவர்)

தமிழில்: ஷாஜி

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com