விண்டேஜ் உஸ்கியின் கதை

vintage uski
Published on

 1996 ஆம் ஆண்டு. அப்போது எனக்கு பதினான்கு வயது. பெரியம்மா மகளின் பூப்புனித நீராட்டு விழா அன்று காலையில் நடைபெறவிருந்தது. அம்மா என்னை அழைத்து ஒழுகினசேரியில் இருந்த செல்லம் டெய்லர் கடையில் தைக்கக் குடுத்திருந்த துணியை வாங்கி வரச் சொன்னாள். நானும் புதுத் துணிமணிகள் அணிந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனேன்.

ஒழுகினசேரி பாலத்தின் கீழே உள்ள பழைய சாலையில் இருந்தது அந்த டெய்லர் கடை. அதற்கடுத்த படியாக ஒரு வெற்றிலை பாக்குக் கடையும், அதைத் தொட்டடுத்து இருந்தது ஒரு சொர்க்கம். அதுதான் ஏ.ஆர்.ஒயின்ஸ் என்னும் அற்புதங்களை நிகழ்த்தும் பானக் கடை.

அப்போதெல்லாம் இருபத்தினான்கு மணிநேரமும் பானக்கொள்முதல் செய்யும் வகையில் பானிகளின் மத்தியில் அரசாங்கம் நல்மனதோடு நடந்து கொண்டது. செம்புலியும் லால் சித்தப்பாவும்தான் அங்கே கேஷியர்மார். ஆகையால் பானப்பெட்டிகளோடு கிடைக்கும் அழகழகான குவளைகள், குப்பி மூடி திறப்பான்கள், டீ ஷர்ட்டுகள் மற்றும் பனியன்கள் அதற்குமேலாக ஆடையைத் துறந்த அம்மணிகளின் படம் போட்ட காலண்டர்களும் கிடைக்கும். கடைசி வகையறா தவிர்த்து மீதமெல்லாம் எனக்கு மனம் போலக் கிட்டும் என்பதுதான் அந்நாட்களில் மிகப்பெரிய சோகமாக அமைந்து போகும்.

டெய்லர் கடை வாசலில் போய் நின்றபோது மணி காலை ஏழரை. எனக்கும்தான். ஏனெனில் ஒயின்ஸ் ஷாப் வாசலில் நின்றது வட்டு முருகன் மாமன். “செத்த பொறு! அயர்ன் பண்ணித் தாரம்டே!” என்று செல்லம் டெய்லர் தலைதெறித்த கிழவனால்தான் அங்கே காத்திருந்தேன்.

“லேய் பாவநாசம்! என்னடே வூட்டுல ஃபங்க்ஷன வச்சிக்கிட்டு இங்க வந்து காத்து குடிக்கிய?” என்ற குரல் கேட்டது. குரலின் ஓனர் வட்டு முருகன்.

“நீ அங்க நின்னு மூத்தரம் குடிச்சியல்லா! பொறவு நா இங்க நிக்கதுல ஒனக்கென்ன கொள்ளை?” என்று அன்று நான் பதிலளித்திருக்காவிடில் அன்றைக்கு ஒரு கண்டத்திலிருந்து தப்பியிருப்பேன். ஆனால் விதி பகவானின் கணக்குக்கு யார் தப்பியது?

முருகன், “அகராதிக் ...ய்வுள்ளை! நா என்ன மூத்தரமாடே குடிச்செம்? ஒனக்கு நெஞ்சொரம் இருந்தா இதக் குடிச்சிப் பாராம்? வாயி மயித்த ஒசத்துகல்லா?” என்றவாறே என்னுடைய ஈகோ டிஸ்க்கை பறண்டி வைத்து விட்டான்.

“அடக்கொப்பனக் கெடந்தவன! எனக்கிட்டயா அளக்க மொழத்துல?” என்றவாறே நான் கடைக்குள் நுழைந்து பின்பக்கமிருந்த பாருக்குள் போய் வட்டனிடம் கேட்டேன்,“குப்பிய யாரு கொப்பனா வாங்குவான்?.”

வட்டனுக்கு சிலிர்த்து விட்டது.

“என்ன சாதனம்டே வேணும்?” வட்டன்.

நான், “விண்டேஜி விஸ்கி?”

“பாத்தயா தொட்டிக் ...ய்வுள்ளைக்கி சாதனத்துக்க பேரெல்லாந் தெரிஞ்சி வச்சிருக்கு? யாம்டே கொறஞ்ச சாதனங்களு தொண்டைக்கி தாழ எறங்காதோ?”

“நா என்ன ஒன்னிய மாதிரி பிச்சக்காரக் ...ய்வுள்ளையா?” என்று நான் பதிலளிக்கவும் வட்டனுக்கு சூர்த்து வந்துவிட்டது. நாற்பது ரூபாய் கொடுத்து அதை வாங்கியும் வந்துவிட்டான். அப்போது ஒரு டீயின் விலை ரூபாய் ஒன்று.

அங்கிருந்த பதார்த்தங்களைக் கண்ணுற்றவாறே வட்டனைப் பார்க்க அவனுக்கோ பதட்டம். ‘நாயி என்னத்தையெல்லாம் தின்னு நம்ம பர்சுல தமுறு வைக்கப் போவுகோ?’

நானும் அவனுடைய பதட்டத்தை குறைக்க விரும்பாமல் அங்கிருந்த ஒரு சர்பத் குப்பியை எடுத்து அதை சர்பத் கிளாசில் ஊற்றி அதன்மீது விண்டேஜ் விஸ்கியை லாவகமாக ஊற்றினேன். கிளாஸ் நிரம்பியது. 

அங்கிருந்த சப்ளையர்மார்கள் அடுத்து நடக்கப் போகும் விபரீதம் புரியாமல் வட்டனிடம் சொன்னார்கள், “எண்ணே பய பொடியானாங்கும்! வீம்புக்கு வாசிச்சி பல்ல ஒடைக்கப் போறாம்! பயல் தாங்க மாட்டாம் பாத்துக்கா! வம்பா சள்ளைய வெல குடுத்து வாங்கிறாத!”

“அவெம் எங்கவே இதக் குடிப்பாம்? நாயி குடிக்க மாதிரி நடிக்கி?” என்றான் வட்டன் சிரித்தவாறே...

நான் வட்டனைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்து விட்டு கிளாசிலிருந்த மொத்தத்தையும் குடித்து விட்டு அங்கிருந்தவர்களைப் பார்த்து சிரித்தேன். எல்லோரும் திகைத்தவாறே முருகனைப் பார்க்க நான் அங்கிருந்த அவித்த முட்டைகள், கோழிக்கறி என்று ஒன்றையும் விடாமல் அள்ளித் தின்றேன். முருகனுக்கோ ரத்தக்கண்ணீர் வடிந்தது. பார் பில் யார் தருவார்? விண்டேஜ் குவார்ட்டர் குப்பி என்னைக் கண்டு வெற்றுக் குடமாகப் பல்லை இளித்தது.

நான் அங்கிருந்து வெளியேறி சைக்கிளை எடுக்கவும் செல்லம் டெய்லர் என்னை அழைத்து, “லேய்! ஜாக்கெட்ட வாங்கிட்டு போ!” எனவும் நான் அவரிடம், “கொண்டு போயி கொம்மைக்கிட்ட குடும்வோய்! ஒம்மால நாங்கெட்டேன்! என்னால வட்டன் கெட்டான்!” என்று சொல்லும்போது செல்லத்தின் முகத்தில் குழப்பத்தின் கோடுகள்.

சைக்கிளை மிதித்து ஒழுகினசேரி மேம்பாலத்தில் ஏறும்போதுதான் கலிலியோ சொன்னது எத்தனைக்கும் உண்மை என்பதும், அவரது காதுகளில் ஏன் பாலிடாயில் ஊற்றிக் கொன்றார்கள் என்பதும் புரிந்தது. ஆம் உலகம் ஓர் உருண்டைதான். என்னுடைய கால்கள் வழுக்கின. போதாக்குறைக்கு எனக்கு முன்பாக இரண்டு சாலைகள் திருநெல்வேலியை நோக்கிப் பறந்து போய்க் கொண்டிருந்தன. இப்போது ஒரு சில குழப்பங்கள் எனக்குள் எழுந்தன.

‘இந்த இரண்டு சாலைகளில் எந்தச் சாலை என்னை வீட்டில் கொண்டு போய் விடும்? இது யாருடைய சைக்கிள்? இந்த சைக்கிளில் ஏன் சீட் இல்லை! முக்கியமாக என்னுடைய டவுசர் ஏன் பின்பக்கத்தில் கிழிந்திருக்கிறது? என்னுடைய சோலி முடிந்ததா?”

“லேய் பாவநாச சிவன்! அங்க என்னடே ஒரு வாயிநோட்டம்? ஒன்னிய கடைக்கில்லா அனுப்பிருந்து? இங்க நிக்கா? தண்டவாளத்துல சாடப் போறியா?” என்ற வெகுதூரத்தில் இருந்த வந்த குரல் கேட்டுத் திரும்பினால் சாலையின் எதிரில் நின்று கொண்டிருந்தான் நேசராஜன் மாமா.

இப்போது பிரச்சனை என்னவென்றால் எனக்கெதிரே இரண்டு நேசராஜன்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒன்று ஒரிஜினல் நேசராஜன். பக்கத்தில் நின்றது ஹாலுசிநேசராஜன். மதுகுடிப்பதால் சகமனிதர்களைக் குளோனிங் முறையில் தத்தெடுக்கலாம் என்ற வினோதம் எனக்கு மனசிலாகியது. நான் தத்தளித்தேன். என்னிடமும் ஏதோவொரு விந்தையைக் கண்ட நேசம் சாலையைக் கடந்து என்னிடம் வர என்னுடைய கண்கள் ததும்பியதைக் கண்டு குழம்பிப் போனான். அவனது முகத்தை என்னுடைய முகத்தின் அருகே கொண்டு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு,

“அடச் செறுக்கியுள்ள! என்னலே இது... வெள்ளமடிச்சிருக்கியா? இப்புடி நாறுகு?” என்றான்.

நான் மெதுவாகச் சொன்னேன். “அந்த வட்டுக் கொப்பன..ளி முருகம் மாமந்தா என்னிய குடிக்க வச்சிட்டாம் பாத்துக்கா மாமா!”

“என்னடே மாமா கீமான்னு மரியாத கொடி கெட்டிப் பறக்கு?” என்று என்னை சந்தேகக் கண்கொண்டு பார்த்தான். அதிலும் ஆச்சர்யமொன்றுமில்லை. சாதாரணமாகவே நான் அவனுக்கு மரியாதையெல்லாம் செலுத்துவதில்லை. “லேய் நேசங் கெடந்தவன!” என்றுதான் கூப்பிடுவது. அதனால்தான் இன்று அவனை நான் ‘மாமன்’ என்று அழைத்ததும் அவனது வாயில் நுரை தள்ளிவிட்டது.

“என்னத்தல சொல்லுக? முருகங் குடிக்க வச்சானா?” – அவனுக்கு அதிர்ச்சி.

“ஆமாங்கம்லா ...ய்மோன!” – நான் தள்ளாடியபடியே நின்றேன்.

“என்னத்தடே குடிச்சா?”    

“விண்டேஜி வுஸ்க்கி!”

“என்னது உஸ்க்கியா? யார்ல குடிக்கச் சொன்னது?”

“அதாஞ் சொன்னம்லா முருகம்ன்னு... காதுல என்ன செடியா மொளச்சிருக்கு?”

அவனால் நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான், “அவங் குடிக்கச் சொன்னாம்னா கில்பக்க குடிச்சிருவியா நீ? ஒனக்கு அறிவு எங்கலே போச்சி?”

நான் பதில் சொல்லவில்லை.

“இது யாருக்க சைக்கிளு?” என்றான். நான் மீண்டும் அந்த சைக்கிளைப் பார்த்தேன். ஹெர்குலிஸ் சைக்கிள். என்னுடையது ஹீரோ ஜெனரேஷன் எக்ஸ் மாடல். சரிதான். யாருடைய சைக்கிளையோ திருடி விட்டேன். களவு என்ற நிதர்சனம் என் கண்முன்பாக வரவே நான் கதறினேன்.

“என்னைய காப்பாத்து மாமேன்! தல சுத்திச் சுத்தியே நாஞ் செத்துருவம்னு தோணுகுலே நேசம்!”

அப்போது அங்கே ஒரு தாத்தா எழுந்தருளினார். பக்கத்து ஊர்க்காரர். நேசராஜ் என்னை அவரிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடைய கையிலிருந்த சைக்கிளை வாங்கிக் கொண்டு போய் அது செல்லம் டெய்லருடையது என்று அறிந்து வழியில் கிடந்த அதனுடைய சீட்டை எடுத்து அதில் பொருத்தி அதை ஒப்படைத்துவிட்டு சாக்கடைக்குள் கிடந்த என்னுடைய சைக்கிளை எடுத்துக் கழுவி கொண்டு வந்தான்.

பிளாட்ஃபார்ம் மீது ஃபுல் ஃபார்மில் பிளாட் ஆகிக் கிடந்த என்னைக் கால் தாங்கலாகத் தூக்கி சைக்கிள் கேரியரில் அமரவைத்து தள்ளிக் கொண்டே வந்தவன் ஒழுகினசேரி ஆற்றுப் பாலத்தில் அமைந்திருந்த கமலா டிங்கர் ஒர்க்ஸ் தாண்டிய ஒரு மாம்பட்டைக் கடையில் இறக்கி அமர வைத்தான். நான் ஆங்கில எழுத்தான ‘L’ வடிவில் அமர்ந்திருந்தேன். கடைக்காரருக்கு ஆச்சர்யம்.

“செவம் இந்த பிராயத்துலயே என்ன எழவக் குடிச்சிருக்கு?”

“வே ராசாண்ணே! ஆளு புடி கெடச்சா? தர்மராஜி மச்சானுக்க மொவெம்!” என்று நான் என்னவோ ஐஎஸ்ஆர்ஓ ஏவுதளத்தில் போய் ஒரு ராக்கெட்டைச் சந்திர மண்டலத்துக்கு ஏவிவிட்டு வந்த பாவனையில் என்னை அறிமுகப் படுத்தினான்.

“எலே என்னத்த கேக்கா? இந்த நாயிதான் டெய்லி இந்த வழியாத்தானே பள்ளியோடத்துக்குப் போவும்? ஆனாலும் அந்த மனுஷன் பாவம்லா? இம்மாதிரி தலதெரிச்ச கொள்ளியள பெத்துக்கிட்டு மனியேம் ரோட்டுல நடமாடாண்டாம்! அவுக அய்யம் போற வாற அனக்கமே இருக்காது! இந்தக் ...ய்வுள்ளைக்கி என்ன ஒரு பைமூணு வயிசிருக்குமா? குடிச்சப் பட்ட வயிசுதானே இது! தாயிளியளு!” என்றவாறே எங்கப்பாவுக்கு ஒரு பாராட்டு பத்திரமும், எனக்கு ஒரு பரம் வீர் சக்ராவும் வழங்கிவிட முற்பட்டார்கள்.

“செவத்த இந்த வட்டு முருகேம் அடப்பெடுத்த தாய்ளி வாங்கித் தந்ததா இந்த மூதேவி சொல்லுகு! ஒயின்ஸ் சாப்புல தேடுனா வட்டனக் காணல! அங்குள்ளவம்மாருகிட்ட கேட்டா ஒருபெயலும் மூச்சி வுட மாட்டங்கானுவோ! இப்ப இந்த நாய எப்புடி வூட்டுக்குக் கூட்டிட்டுப் போறதுன்னு தெரியலை! இன்னைக்கி சடங்கு ஃபங்சன் வேற இருக்கு!” என்று நேசராஜன் அங்கலாய்த்தான்.

அன்றைக்கு என்னுடைய பெரியம்மா மகளது பூப்புனித நீராட்டு விழா. அப்பா தவிர்த்து குடும்பமே விழாவுக்கு ஆயத்தப் பட்டுக் கொண்டிருந்தது. ஒருமுறை என்னை அடிக்க வந்த என்னுடைய பெரியப்பாவை ஒரு பூந்தொட்டியைக் கொண்டு எறிய முற்பட்டேன். அங்கே குறி தவறியதால் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உயிர் தப்பியது, மேலும் உயிர் தப்பிய என்னுடைய பெரியப்பா என் அம்மாவைக் கூப்பிட்டு, “புள்ளையா பெத்து வளத்து வச்சிருக்க? மயிரு கணக்கா!” என்று கூவ, என் அம்மா’ “ஒம்ம சோலி மயித்தப் பாரும்வே! சின்னப் பயக்ககிட்ட சண்டைக்கி நிக்கீறு? வெக்கமே கெடையாதா ஒமக்கு?” என்று பெகளம் வைக்க, “இருக்க வேண்டியவம் ஒழுங்கா இருந்தா செறைக்க வேண்டியவம் ஒழுங்கா செறைப்பாம்!” என்று என்னுடைய தந்தையாரைப் பூசகமாகப் பேச மேற்படி விஷயம் ஒரு கிழவியின் வாயிலாக தந்தையாரின் காதுகளை எட்டியது.

 அவர் இந்த விழாவுக்காக விண்ணப்பித்திருந்த தன்னுடைய விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்குப் போய்விட்டார்.  

“ஏ ராசாண்ணே! இந்த நாய வூட்டுக்குக் கூட்டிப் போக ஒரு வழி சொல்லாம்!” என்று நேசம் கொந்தளிக்க, “இந்த கர வழியா நேரா போயி தெக்கினிக்கி மறிஞ்சன்னா இவனுக்க வூடு இருக்கு!” என்று ராசா சலம்பினான்.

“அந்த மயிரு எனக்குத் தெரியாதுல்லா! இந்த நாய்க்க சிக்க தெளிய வைக்க என்னவாது ஏற்பாடு இருந்தா சொல்லுங்கேன்!” என்று நேசம் உருகினான்.

கடைக்கார ராசா உள்ளிருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து வெட்டி என்னுடைய வாய்க்குள் அமுக்கினான். எனக்குள் மிகுந்த அமைதி உருவாகியிருந்தது. மூடிக் கிடந்த சிற்பத்தின் விழிகளை ஒரு சிற்பி திறந்து வைப்பதைப் போல என் இமைகளைத் திறந்து கண்ணுக்குள் எலுமிச்சைச் சாறைப் பிதுக்கி பீய்ச்சி அடித்தார்கள். எனக்குள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது. நான் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு கடைவாசலில் படுத்துக் கொண்டேன். என்னை மீண்டும் எழுப்பி ஒரு குப்பி மோரை ஊற்றி அபிஷேகித்தார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த வாந்தி மாத்திரம் வரவில்லை. அப்போது எனக்குள் ஒரு சிறிய மலர்ச்சியும் எழுச்சியும் வரவே நான் எழுந்து நிற்பதைக் கண்ட நேசராஜனின் முகத்தில் ஒரு தெழுச்சி.

நான் குழப்பத்தில் நேசத்திடம் கேட்டேன், “லே நேசம்! நா எப்புடி இங்க வந்தேன்?”

“இப்பத்தாம்டே லூப்தான்சா பிளைட்டுலேர்ந்து எறங்கி இங்க வந்து படுத்துருக்க! ...ய்ளி காலங்காத்தால பொணத்த சொமக்க வுட்டுக்கிட்டு நடிக்கிதியா?” என்று எகத்தாளம் ஊதினான்.

‘எங்கிட்டயேவா ஓவராவா பேசுக நேசக்கூயான்? இருட்டி இன்னைக்கி ஒனக்கு இருக்கு எட்டாங்கொட!’ என்று மனதுக்குள் கருவினேன்.

ஒருவழியாக என்னைக் கொண்டு நேசம் வீட்டில் கொண்டு வந்து விட என்னுடைய தொய்வைக் கண்ட குடும்பம் என்னிடம் என்னுடைய துன்ப நிலைக்குக் காரணம் யார் என்று கேட்க நான் நேசராஜ் மாமனைக் கையைக் காட்டினேன். நேசராஜ் எமனது வாசலில் தலை வைத்துப் படுத்தான். அதற்குப் பின்னர் வட்டு முருகன் ஊருக்குள் வரவேயில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com