தஞ்சை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள திருவையாறு நகரம், தியாகராஜ ஆராதனைக்குப் பெயர் பெற்றது. அதேபோல் அசோகா எனப்படும் இனிப்பு வகைக்கும் பெயர் பெற்றதாகும். பல்வேறு ஊர்களில் இனிப்பகங்களில் அசோகா தயாரித்து விற்றாலும் அசோகா என முதன் முதலில் பெயரிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஊர் திருவையாறுதான். இங்குள்ள அசோகாவின் ருசி வேறெங்கும் கிடைக்காது.
பாசிப் பருப்பு, நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தி இன்று வரை விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் சுவையான பிரபலமான இனிப்பு இது. வாயில் உருகும் மென்மையான தன்மை கொண்டது. இசையால் உள்ளம் உருகையில் அசோகா பலர் வாயில் உருகிச் செல்லும் ஊர் இது!
இவ்வூரில் அசோகா என்றால் நினைவுக்கு வருவது ஆண்டவர் அல்வா கடை. இதை 1975-இல் இருந்து கணேசமூர்த்தி என்பவர் நடத்தி வந்தார். அவரது தந்தையார்தான் அசோகா அல்வா தயாரிப்பை முதலில் தொடங்கியவர். கிட்டத்தட்ட இந்த அசோகா அல்வாவுக்கு வயது எண்பது எனக் கூறலாம்.
”50 வருடங்களாக இங்கே சிறப்பாக இயங்கி வருவது எங்கள் ஆண்டவர் அல்வா கடை. மூன்று தலைமுறைகளாகப் புகழ்பெற்ற பாரம்பர்யம் மிக்கக் கடை இது. எங்கள் அசோகாவின் சிறப்பே செயற்கையான நறுமணப் பொருள் எதுவும் (FLAVOURS) ஏதும் சேர்க்கப்படாததுதான். எந்த சமரசமும் இன்றி தரத்தை அப்படியே பராமரித்து வருகிறோம். அதனால் தந்தைகாலத்து வாடிக்கையாளர்களோடு இன்றைய தலைமுறை வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல... பல்வேறு ஊர்களில் இருந்து தியாகராஜர் ஆராதனைக்கு வரும் பிரபல இசைக் கலைஞர்களும் இசை ரசிகர்களும் பொது மக்களும் இந்தக் கடையில் அசோகா உண்ணாமலும் பார்சல் வாங்காமலும் செல்ல மாட்டார்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை” என்றார் ராஜேஸ்வரி கணேசமூர்த்தி. இவர் கணேசமூர்த்தியின் இளைய மகள்.
பேசி முடிப்பதற்குள் அலைமோதிய கூட்டம் அவரது வார்த்தைகளை அப்படியே மெய்ப்பித்தது. இனிப்பான அனுபவம்!