துராசாரம்

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை
துராசாரம்
ஓவியம்: மனோகர்
Published on

போர்க்களத்தில் தவறி விழுந்த பூவைத் தேடுவது போல் இருந்தது ராதாவின் மனநிலை. மனதின் மொத்த இருட்டுக்கும் நம்பிக்கை என்ற ஒற்றைத் தீக்குச்சி பதில் சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால் அதுவும் எந்த நொடியில் அணைந்து போகுமோ என்ற பரிதவிப்பும் அவளிடம் இல்லாமல் இல்லை.

கழுவிய பாத்திரங்களையே மீண்டும் கழுவி வைத்தாள். அழுக்காய்க் கிடந்த பாத்திரங்கள் அப்படியே சின்க்கில் கிடந்தது.

இயல்பான நாளாக இருந்திருந்தால், இந்நேரத்துக்கு கல்லூரிக்குக் கிளம்பி இருப்பாள். மாலை நேரத்துக் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக இருக்கிறாள்.

மின்னஞ்சலில் விடுப்பை அனுப்பிவிட்டு கால்களை அணைகட்டி சோபாவில் அமர்ந்து கொண்டாள். வளைந்த கால்களுக்குள் முகத்தை புதைத்துக் கொள்வது ஒருவிதமான பாதுகாப்பாக இருந்தது. ஆனால் வீடுமுழுக்க ஜகஜோதியாக எரிந்து கொண்டிருந்த தனிமையின் நிசப்தம், அவள் உணர்வுகளைக் கூச வைத்துக் கொண்டிருந்தது.

குக்கரில் வைத்த சாதம் பதம் தப்பி குழைந்து போய் இருக்க, அதை பாத்திரத்தில் மாற்றும் பிரக்ஞைகூட அற்றவளாய் அமர்ந்து இருந்தாள். சமையலறை ஜன்னலில் நேரத்துக்கு சரியாய் வந்த காகம், பசிக்கு அழைத்துக் கொண்டு இருந்தது.

முற்பகலுக்கே உரித்தான நிசப்தம் தெருக்களில் பதிந்து போயிருக்க, பதியம் போட்ட வெயிலுக்கு வேர்வை சாகுபடியாகிக் கொண்டிருந்தது. அலைபேசியின் தொடர் அழைப்பிற்கு செவிசாய்க்க எழுந்து உள்ளே வந்தாள்.

சுகுமார் தான். குரலை இயல்பாக்கிக் கொண்டு ஹலோ சொன்னாள்.

 “ராதா, வேலையா இருந்தியோ? ரொம்ப நேரமா ஃபோன் அடிச்சிட்டே இருந்துச்சு.’’

“குக்கர் சத்தத்துல காதுல விழல. உங்க ட்ரிப் எப்படி போகுது..?’’

“நல்லா போகுது. மித்ரன் எப்படி இருக்கான்..? ஏன் என்கிட்டே பேசறதே இல்லை..? மன்த்லி எக்ஸாம் போகுதோ..?’’

மொத்தத்தில் சுகுமாரிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அந்தக் கேள்விகளுக்கு அவர் எதிர்பார்க்கும் பதில்களைப் பெற்றுக் கொள்ளும் ஆவலும் மிகுத்தமாக தெரிந்தது. அவர் இல்லாமையின் நிகழ்வுகளை இன்னும் அரை மணிநேரத்துக்காவது துருவுவார்.

எல்லாம் சரியாக இருக்கவேண்டும். சரி என்பது அவர் எதிர்பார்ப்பின் திசையில் இருந்தே வரையறை செய்யப்படும். அவர் கற்பனைக்கும், பார்வை தூரத்திற்கும் ஒவ்வாத ஒன்றை அவரால் சரியானது என்று சொல்லி அங்கீகரிக்க முடியாது. அந்த மையப் புள்ளியில் இருந்து லேசாய் நகர்ந்த ஒன்றுகூட சரியானது இல்லை அவரைப் பொறுத்தவரை.

“ ஏன் டல்லா இருக்கே ராதா..? உடம்புக்கு எதுவுமா..?’’ மென்மையாகக் கேட்டார்.

சொல்லி ஆறுதல் தேட நிறைய வருத்தம் இருந்தது. புரியாத குழப்பங்களின் எண்ணிக்கையும் கணிசமாக கைவசம் இருந்தது. ஆனால் அதெல்லாம் பணிச்சுமையில் இருப்பவருக்கு அனாவசியம் என்று நினைப்பார்.

பளுவும் சுமையும் அனைவருக்கும் பொதுதான். பொருளீட்டித் தராத சுமைக்கு மரியாதை குறைவு.

“ இல்லை உடம்புக்கெல்லாம் எதுவுமில்லை. மெனோபாஸ்  ஸ்ட்ரெஸ்.’’ உள்ளிழுத்த குரலில் சொன்னாள்.

“ அதெல்லாம் இயற்கை. எதுவுமே இந்த உலகத்தில் முதலில் நமக்கு நடக்கிறது இல்ல. யாருக்கோ நடந்து முடிந்ததின் தொடர்ச்சியை மட்டுமே நாம சந்திக்கிறோம். ஃப்ரீயா விடு.’’

கைகளைப் பற்றிக் கொள்ளவில்லை, தோளில் கரம் போடவில்லை. உள்ளங்கையை அழுத்தி விடுவிக்கவில்லை; ஒரு அறிக்கை விடுவது போல் ஆறுதலை விடுத்துக் கடந்தார்.

உள்ளபடி இந்த மன இறுக்கமெல்லாம் ராதாவிற்கு மட்டுப்பட்டு விட்டது. கவலைகளை நீர்த்துப் போக வைக்க, சந்தோசங்கள் வரவேண்டும் என்பதெல்லாம் காலாவதியாகிப் போன பழைய பாடம். ஒரு கவலையை நீர்த்துப் போகவைக்க, இன்னொரு கவலை பக்கத்தில் முளைத்தால் போதுமானது என்று காலம் புரிய வைத்துக் கொண்டு இருந்தது.

சுகுமாரிடம் பேசி முடித்தவள் ஃபோனை சார்ஜில் போட்டாள். காலையில் இருந்து உணவைக் காணாத வயிறு, ஞாபகமாய் ஞாபகப்படுத்தியது. குழைந்த சாதத்தில் மோர் விட்டு, கரைத்துக் குடித்தாள்.

மெல்லிய தயக்கத்தோடு மித்ரனின் அறைக்குள் நுழைந்தாள். எல்லாம் கலைந்தது கலைந்தபடி கிடந்தது. டிராவைத் திறந்து பார்த்தாள். பாதி உண்ட சிப்ஸ் பாக்கெட்டில் எறும்பு மொய்த்துக் கொண்டிருக்க, எடுத்து அவசரமாக உதறினாள்.

தனக்கு தீங்கு செய்யாத உயிர்களை, கால்களை நகர்த்தி நகர்த்தி நசுக்கி கொன்றாள். அந்த சதிராட்டத்தில் துளிகூட குற்றவுணர்வு உண்டாகவில்லை. இப்படித்தான் அங்கே பல விசயங்கள் ஒழுங்கில்லாமல் கிடந்தது. மாற்றாத தலையணை உறைகள், கசங்கிய படுக்கை விரிப்புகள்…

இதெல்லாம் பதின்மக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நடப்பது தான். ஆனால் இங்கே அதற்கும் ஒருபடி மேலாக சில விசயங்கள். எதையும் சீராக்கவும் நேராக்கவும் அவள் விருப்பப் படவேயில்லை.

சிஸ்டத்தை உயிர்பித்தாள். அது உயிர்பெற்று ஊதா வண்ணத்திரை விரிவதிற்குள் படபடப்பு கூடிப் போனது. ஏதோ தவறு செய்வது போல் குற்றவுணர்வு. ஏ.சி போதாமல் அபத்தமாய் மின்விசிறியையும் சுழலவிட்டாள்.

நிலைப்பட்டு இருந்த கணினியின் சர்ச் ஹிஸ்ட்ரியைத் தடவியபோது, கைகள் இன்னும் நடுக்கமெடுத்தது. தெரிந்த உண்மையை மறுபடி  தெரிந்து கொள்ள இல்லாத ஆர்வம், தன் கண்கள் ஏமாற்றி இருக்கக் கூடாதா என்று விசித்திரமாக ஆசைப்பட்டது.

சிறிய சிறிய வளைந்த அம்புக்குறிகளைத் தாங்கி ஏராளமான  வலை முகவரிகள். அத்தனையும், காமக் களியாட்டங்களை காட்டும் இணைய தளங்கள். திறக்க தைரியமற்று அப்படியே நெற்றிப் பொட்டை கையில் தாங்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

‘மித்ரன் எப்படி இருக்கான்; சாப்பிட்டானா; தூங்கினானா; ஒழுங்கா படிக்கிறானா’ ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு அந்த கேள்விகள் மூலமே மகனை வளர்த்துக் கொண்டிருக்கும் தந்தை சரியானவரா..? இந்த வயதில் காட்டவேண்டிய கூடுதல் நெருக்கம் கை நழுவிப் போனதா..?’ ராதாவிற்கே புரியவில்லை.

சர்ச் ஹிஸ்ட்ரியில் இருந்த வாட்ஸ் அப் வெப்பை ஒருவித தயக்கத்தோடு தான் தொட்டாள். அது தன்னால் முகம் காட்டித் திறந்தது. நேற்று இரவு வாட்ஸ் அப் செயலியை கணினி வாயிலாக திறந்து இருக்கிறான் போலும், அந்தப் பிணைப்பில் இருந்து இன்னும் வெளியேறி இருக்கவில்லை.

ஏராளமான எண்கள். நண்பர்களுடனான விடலைத்தனமான சாட்டிங். மெல்லிய புன்னகையை உண்டாக்கும் கேலி கிண்டல்கள். விகல்பமாய் எதுவுமில்லை. ஒரு சிலரிடம் மட்டும் கொஞ்சம் கிண்டலைத் தாண்டிய விரசப் பேச்சுகள்.

நிச்சயம் மித்ரன் ஃபோனை எடுத்துப் பார்க்கும் போது, இங்கே வாட்ஸ் அப் திறந்ததைக் காட்டிக் கொடுக்கும். அவன் பதட்டமும் கோபமும் அடைவான் என்று புரிந்தது. இனி சுதந்திரங்கள் சிறை வைக்கப்படும். சிஸ்டத்தை திறக்க சிக்கலான வார்த்தை பூட்டைப் போட்டு வைப்பான்.

வயதுக்கே உரிய எதிர்பார்ப்புகள், எதிர் பாலினம் மீதான கனவுகள் தெரிந்தது. இதெல்லாம் இயல்புதான். இப்படியே இதே அதிர்வெண்ணோடு நகர்ந்தால் பெரிதாய் பிழையாகப் போகாது.

பெரிதாக ராதாவோடு இணக்கமாகப் பேச மாட்டான். ஒருவேளை அவளே பெற்ற தாயாக இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டான் என்றும் சொல்வதிற்கில்லை.

சுகுமார் ராதாவை மணந்து அழைத்து வரும் போது, மித்ரனுக்கு எட்டு வயது. புத்திக்கு எல்லாம் எட்டும் வயதும் கூட. மனைவியை இழந்தவர் சுதாரிப்புக்கு நேரமெடுத்துக் கொண்டுதான் ராதாவை மணமுடித்தார்.

இங்கு வந்தபிறகு தான் புரிந்தது, அவர் உறவுகளை பராமரிக்க பெரிதாக மெனக்கெட மாட்டார் என்று. வேலை மீது தனியான காதல் அவருக்கு. மகனைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை தேவைப்பட்டு இருக்கிறது என்பதைத் தவிர, மறுமணத்திற்கு ஆழமான காரணங்கள் இல்லை.

ஆனால் பிறந்தவீட்டில் கிடைத்த சுதந்திரம், மிச்ச சொச்சமில்லாமல் ராதாவிற்கு இங்கும் கிடைத்தது. இங்கு வந்த பிறகுதான், எம்.பில் முடித்து கல்லூரி பணியிலும் சேர்ந்தாள்.

எப்போதும் சில அடிகள் தள்ளியே தான் நிற்பான் மித்ரன். அவன் வளர வளர அந்த இடைவெளி பெருத்துப் போனது தவிர, குறையவே இல்லை.

‘சித்தி’ என்ற அழைப்பில் ஜீவனே இருக்காது. வலித்தாலுமே, ராதா புரிந்து கடந்து போய் விடுவாள். உறவுச் சிக்கலில் பிரதானமே புரிதலை புகட்ட விளையக் கூடாது.

அதிக நேரம் அவளும் மித்ரனும் மட்டும் தான் வீட்டில். மாதத்தில் ஓரிருநாள் சுகுமாரன் ஊரில் இருந்தாலே பெரிய விசயம். அறைக்குள் இருப்பான், நண்பர்களோடு வெளியில் செல்வான். கேள்விகளுக்கு சின்ன சின்னதான பதில்கள் வரும்.

அந்த ஒட்டாத தன்மை ஆரம்பத்தில் பெரிதாய் தோன்றவில்லை. ஒரு இயந்திரம் போல நகர்ந்த நாள்கள் மீது ஒருதுளி அபிப்ராய பேதம் வந்து ஆட்கொள்ள் ஆரம்பித்தது ராதாவின் நாற்பதுகளின் மத்தியில் தான். மெனோபாசின் மனச்சிக்கல் அவளை வெகுவாய் அசைத்தது.

அந்த நிமிசம் தன் கையைப் பிடித்து அடிவயிற்றில் வைத்துக் கொண்டு தன் முகத்தை தோளில் சரித்து ஆறுதல் தரும் துணைக்கு தவிக்க ஆரம்பித்தாள். இந்த உலகத்தில் தான் பயனற்றுப் போய்விட்டது போல் ஒரு ஆழ்மன பயம் அவளுக்குமே.

‘ நமக்கென்று ஒரு குழந்தை இல்லை; கணவரிடம் கூட சம்பிரதாய அன்பைத் தவிர எதுவுமில்லை; நாளை என்ற சொல் நீண்டால் என்னாகும்? மித்ரன் காட்டும் இந்த கோபம் கூட, சுகுமாரனுக்குப் பிறகு கிடைக்காதோ’

இந்த குழப்பமும் பயமும் தனக்கானது மட்டும் என்று அவள் யோசிக்கவே இல்லை. தன்னைப் போன்ற ஏராளமான மடந்தை வயது பெண்களின் நிலை இதுதான் மெனோபாஸ் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் மூட் ஸ்விங்கை கையாளத் தெரியாமல் தவிக்கும் போது, ஒரு ஆறுதலையும், நம்பிக்கைக்காகவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி கையேந்திக் கொண்டு நிற்பார்கள். அந்தக் கைகளை பற்றி நம்பிக்கை தரும் ஒரு உறவு உலகத்திலேயே உன்னதமானது பெண்களைப் பொறுத்தவரை.

ஆனால் இந்த நிமிசம் தன் குழப்பத்தை விட, மித்ரனின் தெளிவும், மீட்சியும் முக்கியம் என்று தோன்றியது.

சிஸ்டத்தை அணைத்துவிட்டு எழுந்தவள், கலைந்து கிடந்த அறையை ஒழுங்கு செய்து வைத்தாள். திரைச்சீலைகளை மாற்றி, அறைக்கு வேறு தோற்றம் தந்தாள்.

ஹாலில் அமர்ந்து மித்ரனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்ததும் அவன் வந்தான். வரும்போதே ரெளத்திரனாக உள்ளே நுழைந்தான். புத்தகப் பையும், சாப்பாடு பையும் பக்கத்திற்கு ஒன்றாக பறந்தது.

ஒடிசலாய் வெடவெடப்பான உயரத்தோடு, அதற்கேற்ற சதைப்பற்று வந்திருக்காத மித்ரன். பள்ளி இறுதியில் இருந்து இன்னும் ஓரிரு மாதங்களில் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்க காத்துக் கொண்டிருப்பவன், இத்தனை கோபப்பட முடியுமா..? என்று கேட்குமளவிற்கு கோபத்தில் நின்றான்.

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நிதானமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

“என்ன பிரச்சனை உனக்கு..? வரும்போதே எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்..?’’ காரணம் தெரிந்தே இருந்தாலும், அவன் அதை எப்படி வெளிப்படுத்தப் போகிறான் என்ற ஆவல் அவளுக்குமே மிகுந்திருந்தது.

“ ஏன்’னு தெரியாது..? நடிக்கிறீங்களா..? இந்த வேலையெல்லாம் வச்சுகிட்டீங்க, இந்த வீட்டில நீங்க இருக்கவே முடியாது. பார்க்கிறீங்களா..?’’ உடைய ஆரம்பித்திருந்த குரல், கொஞ்சம் பெண்மை சாயல் அடித்தது. அதுவும் சேர்த்து அவனை வெகுவாய் தாழ்வுணர்ச்சியில் தள்ளி இருக்க வேண்டும். அதனாலேயே அடிக்கடி சுதாரிப்பை இழக்கிறான்.

“ மித்ரா, நிதானமா பேசு. உன் அப்பாவுக்கு கூப்பிட்டு பேசணுமா..?’’ அப்பா என்ற வார்த்தை அவனுக்கும் தனக்குமான தற்காப்பாய் ராதா பயன்படுத்த, ஒரு ஏளனப் பார்வை பார்த்தான்.

“ அவர் என் அப்பா. ஆனால் நீங்க என் அம்மா இல்லை. உங்களுக்கு எல்லாம் நான் பயப்படவோ, பதில் சொல்லவோ வேண்டிய தேவையில்லை. சித்தி.. ஒன்லி சித்தி. அந்த இடத்திலேயே நின்னுக்கோ. என் சிஸ்டத்தை பார்க்கிறது, நான் இல்லாதப்போ என் ரூமைத் திறந்து பார்க்கிறது எல்லாம் வச்சுகிட்டால் நான் மனுசனா இருக்க மாட்டேன்.’’

அவன் படுத்திய அவமானத்தில் ராதாவின் பொறுமை பொடிப் பொடியாகிக் கொண்டு இருந்தது. தற்காத்து வைத்திருந்த நிதானத்தை தவறவிட ஆரம்பித்து இருந்தாள்.

“இப்படி என் எதிரில நின்னு பேச உனக்கு அசிங்கமா இல்லையா..? உன்னை கண்காணிக்கிறது என் நோக்கமே இல்லை. பத்து நாள் முன்னாடி உன் ரூம்ல நீ தப்பான படங்கள் பார்த்துட்டு இருந்தே. அதைப் பார்த்த அந்த நிமிசத்தில் இருந்து இந்த நிமிசம் வரைக்கும் ஒரு தாயாய் என் தவிப்பும், கவலையும் உனக்கு புரியாது. இது தப்புனு உன்கிட்டே எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதுனு நான் தவிச்சுட்டு இருக்கேன். அந்த தப்பை நீ மறுபடி மறுபடி செய்யறியானு தான் உன்னை கண்காணிச்சேன். என் சந்தேகம் வீண் போகல. நேத்தும் நீ எல்லாம் பார்த்து இருக்கே.’’

தலை குனிவான், அவமானமாய் உணர்வான். மன்னிப்பு கேட்பான். அல்லது அழுது ஆர்பாட்டம் செய்வான் என்று அவள் கற்பனை செய்து வைத்திருந்த எதையுமே அவன் செய்யவில்லை.

நிமிர்ந்து பார்த்தான். கண்களில் அத்தனை இகழ்வு.

“ ஆமாம். செக்ஸ் படம் பார்த்தேன் தான். இப்போ என்ன..? செக்ஸும் வாழ்க்கையில ஒரு அங்கம் தானே..? அதை தெரிஞ்சுக்கறதுலயும், புரிஞ்சுக்கறதுலயும் என்ன தப்பு இருக்கு? ஏன் அந்த செக்ஸ்க்காகத் தானே முப்பத்தியேழு வயசில கூட நீங்க என் அப்பாவை கல்யாணம் பண்ணிட்டீங்க..?’

ராதா சிலையாகி நின்றுவிட்டாள். உடல் முழுக்க கூசிப் போனது. மகன் உறவாய் நம்பிக் கொண்டிருந்தவன் பேசிய வார்த்தைகளில் தன்னையே வெறுத்தாள். முகம் சிவந்து, உதடு துடிக்க நின்று கொண்டிருந்தவளை பொருட்டாய் கூட மதிக்காமல், அறைக்குள் சென்றவன் கதவை அடைத்தான்.

நிசப்தம் என்ற மொழி வீடுமுழுக்க ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. தன் பிரச்னைகளை சாதூர்யமாகக் கையாண்டது போல் ஒரு மிதப்பு மித்ரனிடம். அந்த வயசுக்கேயான அகம்பாவம். இரவு முழுக்க உறங்காமல் அதே இடத்தில் அமர்ந்து இருந்தாள் ராதா. கடைக்கண்ணில் பார்த்துக் கொண்டே தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஒரு முடிவோடு உள்ளே சென்றவள் கைப் பையோடு வெளியே வந்தாள். கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தான்.

“ஈவினிங் உன் அப்பா வந்திடுவார் மித்ரன். அதன்பிறகு நான் இங்கே வர்றேன். உனக்கு தேவையானது சமைச்சு வச்சிருக்கேன். நீ உன் இஷ்டப்படி இருக்கலாம்." நடந்தவளை விழிகளை குறுக்கி வினோதமாகப் பார்த்தான்.

“எங்கே போறீங்க?’’

“நீ என்னை தாய் ஸ்தானத்துல பார்க்கலைனு எனக்கு தெரியும். அதை நான் யோசிச்சதே இல்லை. ஆனால் காமப் படம் பார்க்கிறதை நியாயப்படுத்தி பேசற உன்கூட  இருக்க பயமா இருக்கு.’’ விருட்டென வெளியேறி விட்டாள்.

விடுதியில் இருந்து வெளியில் வந்த ராதாவின் முகம் நிர்மலமாய் இருந்தது. எதிர்வரிசையில் இருந்த மரத்தடியில் நின்று கொண்டிருந்த சுகுமார் கைகளை அசைத்தார். அவரிடம் இருந்து துளி தள்ளி மித்ரன் நின்று கொண்டிருந்தான்.

“ ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?’’ முகத்தில் நிமிர்வான புன்னகை.

“ இல்ல ராதா’’ கார் கதவைத் திறக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள். பெரியவர்கள் இருவரும் இயல்பாக பேசிக் கொண்டு வர, மித்ரன் அமைதியற்று அமர்ந்திருந்தான்.

பத்து நாள்கள் தத்தி தத்தி ஓடிவிட்டது. எந்த குற்றச்சாட்டையும் சுமத்தாமல் உனக்கு நடுவில் இருப்பது எனக்கு பயமாக இருக்கிறது' என்ற ஒற்றை வார்த்தையில் சரித்துவிட்டு வெளியேறி விட்டாள்.

சுகுமார் ஊரிலிருந்து வந்து விசாரித்த போதும், மித்ரனின் மீது எந்தப் பழியும் சுமத்தாமல்,

“எனக்கும் மித்ரனுக்கும் நடுவே ஒரு மனவருத்தம். அது சரியானதும் நானே வருவேன். அதுல நீங்க தலையிட வேண்டாமே’’ என்று முடித்துக் கொண்டாள்.

அந்த நேர்மை மித்ரன் மனதை அறுத்தது. நீ யார் என்னை கேள்வி கேட்க என்று கேட்டான் தான், ராதா இல்லாத வீடு மனதை என்னவோ செய்தது.

பேசியிருக்கலாம், வாதிட்டு இருக்கலாம், எல்லாவற்றையும் விட்டு விட்டு நீ போ' என்று தூக்கி எறிவது என்ன வகை கோபம்?

ஹோட்டலில் உணவருந்தும் போது, ராதா எதிரில் கடந்து போன பெண்களை நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருந்தது.

“ உன்னோடு இருக்க எனக்கு பயமா இருக்கு’’ என்று சொன்ன வார்த்தை வதைத்தது. அவனின் ஆராட்டத்தை ராதா பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.

“ஹலோ சுகுமாரன்…’’ யாரோ நண்பர் ஒருவர் தோளைத் தட்ட, பரஸ்பரம் ராதாவுக்கும், மித்ரனுக்கும் அறிமுகம் செய்து வைத்த பிறகு நண்பரோடு பேச தனியாக எழுந்து போனார்.

பீங்கான் கோப்பைகளில் இருந்த சூப், கடல்போல தள்ளாடிக் கொண்டு இருந்தது. ஸ்பூனில் அள்ளி வாய் அருகில் கொண்டு சென்றவளை,

“ உங்களுக்கு என்ன பிரச்சனை?’’ என்ற கோபமான கேள்வி அப்படியே நிறுத்தியது.

“ நான் அப்படி எதுவும் சொல்லலயே மித்ரா.’’

“பிறகேன் வீட்டை விட்டு போனீங்க? நான் உங்ககிட்டே அப்படி பேசினது தப்புத்தான். போதுமா?’’

“நீ எதுவும் தப்பா பேசல மித்ரா. சூப் ஆறிப் போறதுக்குள்ளே குடி.’’  உதடு குவித்து குவித்து சூப்பை ருசிக்க ஆரம்பித்தவளை மெல்லிய குழப்பம் மேவப் பார்த்தான்.

“இல்ல, அப்பாவை செக்சுக்காக கல்யாணம் பண்ணிட்டதா சொன்னது எல்லாம் தப்பு.’’ தலை தன்னால் தரை பார்த்தது. இந்த குற்றவுணர்வுதான் திருத்தலுக்கு முதல்படி.

“இல்லயே சரியாத்தானே சொல்லி இருக்கே. கல்யாணத்துக்கு பின்னே ஆயிரம் காரணம் இருந்தாலும், அதில் முதல் நோக்கம் அது தானே. நீ வெளிப்படையாக சொன்ன செக்ஸ்,’’ புன்முறுவல் பூத்தபடி டிஷ்யூவை எடுத்து உதடு ஒற்றினாள்.

விதிர்த்துப் போய் பார்த்தான் மித்ரன்.

“உன் அம்மா, அப்பாவை கல்யாணம் பண்ணிக்கவும் அதேதான் காரணம். திருமண பந்தம்கிறது காமத்துக்கான ஒரு ஒழுங்குமுறை. அது ரொம்ப ரொம்ப நேர்மையானது, அவசியமானது. இதை ஒப்புக்கொள்ள தயங்கற மாதிரி கோழைத்தனம் எதுவுமில்லை.’’ பேசிக் கொண்டே பேரரை அழைத்தவள் மித்ரனுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தாள். அவன் பருகாமல் வைத்திருந்த சூப்பை தள்ளி வைத்தாள்.

முளைக்க ஆரம்பித்திருந்த அவனின் பதின்ம மீசை மெல்ல துடித்து அடங்கி அவன் உணர்வை சொன்னது.

“என்னைப் பத்தி ஏன் அப்பாகிட்டே சொல்லல? ஐ மீன் நான் படம் பார்த்தது’’ அவன் பார்வை ராதாவின் முகம் பார்க்காமல் தரை பார்த்தது.

“ உன் வயசில எதிர்பாலினம் மேல் ஒரு ஈர்ப்பு வர்றது இயல்புதான். காமங்கிறது பருக கிடைக்காத அமிர்தம் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரானு மிதமிஞ்சிய கற்பனை ஒடும். அது என்னன்னு தெரிஞ்சுக்க குறுக்குவழியைத் தேடும் இது எல்லாமே சகஜம்தான்.

காமத்தை தெரிஞ்சுக்கணும், நீ பார்க்கிற மாதிரி உணர்ச்சியைத் தூண்டும் படங்களை பார்த்து இல்ல, மருத்துவரீதியா பெண், ஆண், அவர்கள் கலப்பு, அதன் மூலம் குழந்தை பிறப்புனு இருக்கிற அத்தனை விசயத்தை பாடமா தெரிஞ்சுக்கணும்.

பெண்ணாய்ப் பிறக்கிற உபாதை தெரிஞ்சுக்கணும், ஒவ்வொரு மாதமும் கருமுட்டை சுழற்சியில அவள் படற நரக வேதனையை புரிஞ்சுக்கணும்.

முப்பது வருசம் பட்ட வலியெல்லாம்  முடிவுக்கு வரும் அந்த காலகட்டத்துக்கு பேர் மெனோபாஸ். அப்போ அந்தப் பெண் உடம்பாலும், மனசாலும் வறட்சி அடைந்து ஒரு மூட் ஸ்விங்ல என்னை மாதிரி தவிக்கும்போது, உன்னை மாதிரி ஒரு மகனோ, மகளோ பக்கத்தில் இருந்து கையை பிடிச்சுக்க மாட்டாங்களானு அந்தப் பெண் தவிப்பாங்கிறதையும் புரிஞ்சுக்கணும்.’’ ராதாவின் கண்கள் கலங்க மித்ரன் தவிக்க ஆரம்பித்தான்.

“நீ காமத்தை தெரிஞ்சுக்கறதை நான் தடுக்க மாட்டேன். தவறான வழிகள்ல கத்துகிட்டே ஒன்றை நீ தவறான இடத்துல பயன்படுத்திடுவியோ'னு ஒரு பெண்ணா பயப்படறேன். மற்றபடி உன் வயசுக்கான தேடலை நான் தடுக்கவே மாட்டேன். தவறான பாதையை மட்டும் தேடாதே’னு மட்டும்தான் சொல்வேன். இந்த வயதுக்கு உனக்கு பெண் உடல் மேல இருக்கிறது ஆர்வம். அந்த ஆர்வம் நீர்த்துப் போனபிறகு நீ பார்க்கிற பெண் மேல உனக்கு ஆர்வம் இருக்காது… அவள் உனக்கு ஆதர்சமாய் தெரிவாள்.’’ மெல்லிய புன்னகையோடு கை நீட்டி அவன் தலையை வருடி கன்னத்தில் தட்ட அதில் மெல்லிய ஈரம் தென்பட்டது.

சுகுமாரன் வந்துசேர உணவும் பேச்சமாய் நேரம் கடந்தது. மித்ரன் அமைதியாகவே உண்டு முடித்தான். அவனை கண்களாலேயே அளந்தவர், என்ன என்பதுபோல் ராதாவிடம் புருவத்தை உயர்த்திக் கேட்டார்.

தோள்களை குலுக்கி மென்மையாக சிரித்தாள்.

உண்டு முடித்து வெளியில் வந்தார்கள்.

“ராதா எப்போ வீட்டுக்கு வரப்போறே?’’ என்றார் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே.

மரம் அனுப்பிய கடிதங்கள் அவர்கள் தலைமீது உதிர்ந்தது. ராதாவின் பார்வை மித்ரனின் மீது படிந்தது.

“அப்பா, சின்னம்மா ஹாஸ்டல் போயிட்டு திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு அப்படியே கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போயிடலாம்னு சொன்னாங்க,’’ என்றான் ராதாவை பார்க்காமலே.

பார்வையை குறுக்கி மித்ரனையே பார்த்தாள். அதே பாணியில் அவனும் பதில் பார்வை பார்த்தான். பெயருக்கேற்றபடி ராதாவிற்கு மித்ரனாக கண்ணில் தெரிந்தான். ஒரு கள்ளச் சிரிப்பு இருவர் இதழ்களிலும்.

சித்தியை சிடுக்குடைத்து சின்னம்மாவாக்கி இருப்பது புரிந்தது. அசையாமல் நின்றவள் கைகளைப் பற்றிக் கொண்டு காரை நோக்கி நடந்தான்.

எஸ்.பர்வின் பானு

எஸ். பர்வின் பானு. சொந்த ஊர் பழனி. தற்போது வசிப்பது சென்னை. 14 வயதில் ஆரம்பித்த எழுத்துப் பயணத்திற்கு இப்போது 27 ஆம் ஆண்டு. இதுவரை 800க்கும் அதிகமான சிறுகதைகள், 150 நாவல்கள், ஒரு தொலைக்காட்சித் தொடர் என்று பட்டியல் நீள்கிறது. ஏராளமான பரிசுகளை போட்டிகளில் வென்றுள்ள நீளமான எழுத்துப்பயணம் இவருடையது.

logo
Andhimazhai
www.andhimazhai.com