நினைப்பும் நிஜமும்

நினைப்பும் நிஜமும்
Published on

தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு பாடல்: ‘‘கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா? கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?'' அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும். இங்கே சில நினைப்பும் நிஜமும்.

நினைப்பு: பணம் இருந்தால் தேர்தலில் ஜெயித்து விடலாம்.

2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்ற இரு பெரும் அணிகளைத் தவிர மற்ற கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்ற வரலாற்றைச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏக்களில் 170 பேர் கோடீஸ்வரர்கள். இத்தனை கோடீஸ்வரர்களால் தமிழகச் சட்டமன்றம் ஒரு போதும் நிரம்பியதில்லை. ஒருவகையில் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் அந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் மனுத்தாக்கல் செய்தவர்கள் 997 பேர். அதில் 553 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது பாதிக்கு மேல்!

மக்களவையும் பொருள் பொதிந்தவர்களால் நிரம்பியுள்ளது. மக்களவையில் உள்ள 23 திமுக உறுப்பினர்களில் 22 பேர் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மனுச் செய்தவர்களிடம் மூன்று கேள்விகளை முன் வைக்கின்றன. அவற்றில் இரண்டு: எவ்வளவு

சொத்து இருக்கிறது? எவ்வளவு செலவழிப்பீர்கள்?

இவையெல்லாம் பணம் இருந்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற எண்ணத்தை மக்களிடம் மட்டுமல்ல, அரசியல்வாதிகளிடமும் ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக பணத்தை மட்டுமே நம்பி களத்திலிறங்குவோர் உண்டு. பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டதன் காரணமாக இரு தொகுதிகளில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட வரலாறு கொண்ட தமிழகத்தில் இது வியப்பளிக்கக் கூடியது அல்ல.

ஆனால் பணம் இருந்தால் போதும் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்பது முழுவதும் உண்மையல்ல.

1951ஆம் ஆண்டு.சுதந்திரம் பெற்ற பின்

மக்களவைக்கு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல். திண்டிவனம் தொகுதி. களத்தில் காங்கிரஸ் வேட்பாளராக இந்தியன் எக்ஸ்பிரஸ்&தினமணி அதிபர் ராம்நாத் கோயங்கா. அவரை எதிர்த்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற சிறிய கட்சியின் வேட்பாளராக திருக்குறள் வீ. முனுசாமி. திருக்குறளைப் பரப்புவதே தனது முழு நேரப்பணியாக ஏற்றுக் கொண்டவர். பெரும் செல்வந்தர் எனச் சொல்வதற்கில்லை. சுதந்திரம் வந்த புதிது என்பதால் காங்கிரசின் செல்வாக்கு நாடு முழுதும் உச்சத்தில் இருந்தது.பணம், ஊடகம், ஆள்பலம் இவையும் கோயாங்காவிற்கு ஆதரவாக இருந்தது. ஆனால் முனுசாமி, கோயாங்காவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்குகள் (கோயங்கா: 1,22,561 வாக்குகள்;

முனுசாமி: 2,14,722 வாக்குகள்) பெற்று வென்றார். தினமணியைத் திருக்குறள் வென்றது.

அதெல்லாம் அந்தக் காலம். இப்போது அவையெல்லாம் கனவில் கூட நடக்காது என்ற முணுமுணுப்புக் கேட்கிறது. சரி சமீப காலத்திற்கே வருவோம்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். 2016 ஆண்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில்  மிகப்பெரும் செல்வந்தராக (சொத்து மதிப்பு ரூ 300 கோடிக்கு மேல், ஜெயலலிதாவை விடப் பெரும் செல்வந்தர்) விளங்கியவர் வசந்த குமார். கன்னியாகுமரியில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் தயாநிதி மாறன் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர் போன்ற பெரும் பணக்காரர்களால் வெற்றி பெற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த வேறு சில பணக்காரர்கள்: சுப்புராயன் (1952 மக்களவை), ஜி.டி. நாயுடு (1952,1957 மக்களவை) டி.எஸ். சௌந்திரம் அம்மாள் (TVS நிறுவனர் கூ.ங.சுந்தரமய்யங்காரின் மகள் - 1967 மக்களவை) புதுக்கோட்டை அரசர் விஜய ரகுநாத தொண்டைமான் (1971 மக்களவை) டிடிவி தினகரன் (2004 மக்களவை) ஆர்.பிரபு (2009 மக்களவை) சி.பா. ஆதித்தனார் (1962, 1977 சட்டமன்றம்) நல்லசேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் (1967 சட்டமன்றம்) ராமநாதபுர அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1967 சட்டமன்றம்) ஜெயலலிதா (1996)

நிஜம்: தேர்தலில் வெல்லப் பணம் தேவையாக இருக்கலாம். ஆனால் பணம் மட்டும் போதாது

நினைப்பு: இலங்கைத் தமிழர் பிரசினையில் தமிழகத் தமிழர்கள் உணர்வு ரீதியாக ஈடுபாடு கொண்டவர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் எத்தனையோ பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், கல்லூரி அடைப்புகள், மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. பாராளுமன்றத்தில் தமிழ் எம்பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்கள் கொண்டிருந்த உணர்வுகளை எதிரொலித்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் - அவை அவர்களுக்குத் தேர்தல் களத்தில் வெற்றிகளைப் பெற்றுத் தரவில்லை. 1983 மத்தியில் இலங்கையில் பிரச்னை உச்சம் பெற்றது. 1985 மே மாதம்  கருணாநிதி டெஸோ அமைப்பைத் தொடங்கினார். அதற்குப் பின்னர் வந்த 1989 மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு இடம் கூடப் பெறவில்லை. திமுக கூட்டணியில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் ஒரு இடத்தில் (நாகப்பட்டினம்) வெற்றி பெற்றது. (1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது ஆனால் அப்போது அதிமுக ஜெ& ஜா என்று அணிபிரிந்து கிடந்தது. ஆனால் 1989&ல் இந்திய அமைதிப்ப்படை இலங்கைக்குச் சென்றதன் காரணமாக தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான மனநிலை நிலவுவதாகக் கருதப்பட்டது.) 1991 தேர்தல் முடிவுகள் யாவரும் அறிந்ததே. 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் நடந்து கொண்டிருந்தது. ஈழத்தமிழர்களைக் கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. 25.04.2009 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, எங்கள் ஆதரவுடன் நாங்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய மத்திய அரசு அமைந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணத் தனி ஈழம் அமைத்துத் தருவேன். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தனி ஈழம்தான் ஒரே வழி, அதை நிச்சயம் செய்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்  என்று பேசினார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக 18 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் மட்டும் பெற்றன.

திமுக, அதிமுக மட்டுமல்ல, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நின்ற பாமக, மதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தேர்தலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. மாறாக மதிமுகவும், பாமகவும் பலவீனமடைந்துள்ளன

நிஜம்: இலங்கைத் தமிழர் மீது இந்தியத் தமிழருக்கு அனுதாபம் உண்டு, ஆனால் அது தேர்தலில் ஆதரவாக மாறாது.

நினைப்பு: தமிழகத்தின் வலிமையான கட்சி திமுக

தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவிற்கு மிகப் பெரிய இடம் உண்டு. ஐந்து முறை தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய கட்சி, சட்டமன்றத் தேர்தலில் (1971) இதுவரை எந்தக் கட்சியும் பெற்றிராத அளவு 184 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி, பலமுறை பிளவு கண்டும் கலகலத்து விடாத கட்சி, ஒரு காலத்தில் அதோடு களத்தில் மோதிய எத்தனையோ கட்சிகள் இன்று காணாமல் போய்விட்ட நிலையிலும் (உதாரணம், சீர்திருத்தக் காங்கிரஸ், சம்பத்தின் தமிழ் தேசிய கட்சி, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, தமிழக உழைப்பாளர் கட்சி, பிராஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, ஆதித்தனாரின் நாம் தமிழர், ம.பொ.சியின் தமிழரசுக் கழகம்) தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிற கட்சி, 13 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி வாய்ப்பை இழந்து வந்த போதும்,கரைந்து போய்விடாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கட்சி, தமிழகத்திலிருந்து மத்திய அரசில் அதிக முறை பங்கு பெற்ற காங்கிரஸ் அல்லாத கட்சி,  என பல சிறப்புக்களைக் கொண்ட கட்சி திமுக. அது மட்டுமன்றி. அதன் தலைவர் 1957ல் தொடங்கி 2016 வரை நடந்த எந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி கண்டதில்லை என்ற வரலாற்றையும் கொண்ட கட்சி.  

இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது தமிழகத்தின் மிக வலிமையான கட்சி திமுக என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பே. அது முற்றிலும் உண்மைக்கு மாறானது அல்ல.

ஆனால் திமுக ஆரம்பத்திலிருந்தே தேர்தலைத் தனியாக சந்தித்ததில்லை. 1957ல் அது முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டபோது  அது கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி எல்லோரும் சுயேச்சைகளாகவே போட்டியிட்டனர். எல்லோருக்கும் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படவில்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சியாகத் திமுக களமிறங்கியது 1962ல்தான். அப்போதே அது தனித்துக் களமிறங்கவில்லை. கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சியோடு கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள அண்ணா விரும்பினார். ஆனால் அதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. அதை விட்டுவிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வேர்ட் பிளாக் ஆகியவற்றுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார் அண்ணா. அப்போது கூட்டணி என்ற வார்த்தை அரசியல் அகராதியில் ஏறியிருக்கவில்லை. அது தொகுதி உடன்பாடு என்றழைக்கப்பட்டது. 1962லிருந்து 2016 வரை நடைபெற்ற எல்லாச் சட்டமன்றத் தேர்தல்களையும் கூட்டணி வைத்துக் கொண்டே திமுக சந்தித்து வந்திருக்கிறது. 1967 வரை அது கடுமையாக எதிர்த்து வந்த, பிரிந்தும் கூடியும் வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் தலைமைகளையும் பெற்ற காங்கிரஸ் கட்சியாகவோ, கம்யூனிஸ்ட்களாகவோ, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மதிமுகவாகவோ, கடுமையாக விமர்சனங்களை வீசிய பா.ம.க வாகவோ, விடுதலைச் சிறுத்தைகளாகவோ, முஸ்லீம் லீகாவோ, கட்சிகளாக இல்லாத ஜாதி அமைப்புகளாகவோ அந்தக் கூட்டணி இருக்கும். அதிமுக, தேமுதிக இவற்றைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளோடும் & பாஜக உட்பட& தேர்தல்களில் கூட்டணி கண்டிருக்கிறது திமுக. தேர்தல் களத்தைத் தனித்துச் சந்திக்கும் அளவு வலிமை பெற்றிருக்கிறதா என்ற ஐயம் திமுக தலைமைக்கே இருந்து வந்திருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை அதனால் ஆட்சிக்குத் திரும்ப முடியவில்லை என்பது வரலாறு.

அதிமுகவும் பல கட்சிகளோடு கூட்டணி கண்டு வந்திருக்கிறது. ஆனால் 2014 மக்களவைத் தேர்தலிலும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்துக்  களம் கண்டது (சில சிறு அமைப்புகளுக்கு தலா ஓரிடம் ஒதுக்கினாலும் அவை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டன).

இதுவரை சட்டமன்றத்தில் மிக அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற பெருமையைக் கொண்ட திமுகதான் மிகக் குறைந்த இடங்களையும் (2) பெற்றிருக்கிறது. திமுக இரண்டு முறை

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியாத நிலையை அடைந்திருக்கிறது (1991, 2011). ஒருமுறை அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறாத, கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்த, சிறுபான்மை அரசாக, ஆட்சி செய்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நான்கு முறை போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்ற திமுகதான் மூன்று முறை ஒரு இடத்தைக் கூடப் பெறமுடியாமல் தோல்வி கண்டிருக்கிறது.

கருணாநிதியைத் தவிர திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலர் & அண்ணா முதல் ஸ்டாலின் வரை& தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். கருணாநிதி இருமுறை நூலிழையில் வெற்றி பெற்றிருக்கிறார் (1980

சட்டமன்றத் தேர்தல் 699, 1991 சட்டமன்றத் தேர்தல் 890 வாக்குகள்)

இந்த ஏற்ற இறக்கங்கள் எதைக் காட்டுகின்றன? தன் கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிகளின் பலம், வேட்பாளரின் செல்வாக்கு இவற்றைக் கொண்டு ஓரளவிற்கு வெற்றிகளைப் பெற்று வந்திருந்தாலும் திமுகவின் பெரும் வெற்றிகள், குறிப்பாக அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய வெற்றிகள், அலைகள் சார்ந்து பெற்ற வெற்றிகளாக அமைந்திருக்கின்றன. அந்த அலைகள் மத்தியில்/மாநிலத்தில்ஆளும் கட்சிக்கு எதிரான அலையாக இருக்கலாம் (1967,1996, மற்றும் 1980 மக்களவை) அல்லது கூட்டணிக் கட்சிக்கு சாதகமான அலையாக இருக்கலாம் (1971)

அலைகள் வீசும் தேர்தல்களைக் கொண்டு எந்தக் கணிப்பையும் முற்றும் முடிந்த முடிவாக அறுதியிட முடியாது. ஏனெனில் அலைகள் நிலையானவை அல்ல. ஆனால் அவை சில சுவடுகளை விட்டுச்  செல்லும் என்பது நிதர்சனமான உண்மை.

நிஜம்: தமிழகத்தின் வலிமையான கட்சிகளில் ஒன்றுதான் திமுக. ஆனால் அலையில்லாத சூழலில் தனித்திருந்து ஆட்சிக் கனியைப் பிடிக்குமளவு வலிமை கொண்டதல்ல.

ஜூலை, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com