முதல் குடியின் விலை

Shaaji chen
ஷாஜி சென்
Published on

சொர்க்கமிருப்பது உண்மை யென்றால்

அது பக்கத்தில் நிற்கட்டுமே

பெரும் வெட்கங்கள் ஓடட்டுமே…..

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…

ஏன்… ஏன்… ஏன்…?

குடிகாரர்களின் கோலாகலங்களுக்கு நடுவே உரத்து ஒலிக்கும் பாடல் ’நீ ஏனிங்கு வந்தாய்?’ என்று என்னைக் கேள்வி கேட்கிறதா? 1984ன் ஒரு பிற்பகலில், வெறும் பதினாறே வயதில் அந்த மதுபான விடுதிக்குள் நுழையும்போது எனது கால்கள் நடுங்கின.

ரப்பர் பாலை உறைக்கும் அமிலம் போன்று மூக்கைத் துளைக்கும் வாடையொன்று வெங்காயப் பச்சடி, பலவகை வறுவல்களின் வாடையுடன் கலந்து அங்கே மிதந்தது. உணவு மேஜைகளின்மேல் மதுப் புட்டிகளும் குவளைகளும் தின்பண்டங்களுமாக பலர் ஆங்காங்கே அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். எங்கிருந்தோ சில கெட்டவார்த்தைகள் ஓங்கி ஒலிக்கின்றன. ஒரு மேஜைக்குப் பின்னால் அந்தப் பக்கம் பார்த்து அமர்ந்து குடிப்பவர் எனக்குப் பரிச்சயமானவரா? இருக்காது!

என்னை அங்கே அழைத்து வந்தவர் என்னை விட 15 வயது அதிகமிருந்த ஒரு நண்பர். உள்ளே வரும்போதே போதிய போதையிலிருந்த அவர் அரைப் புட்டி ஹனி பீ பிராந்தியையும் இரண்டு கல்யாணி பீரையும் வரவைத்தார். தொட்டுக்கொள்ள கடுகு மாங்காய் ஊறுகாய். கடித்துச் சவைக்க மாட்டுக்கறி உலர்த்து. நீள் குவளைகளில் பாதி அளவுக்குப் பிராந்தியை ஊற்றி அதன்மேல் பீரும் சாய்த்து ஊற்றியபோது அது சோப்பு நுரைபோல் பொங்கி வந்தது.

“எடுத்துக் குடிக்கெடா... சியேழ்….ஸ்ஸ்ஸ்..” என்று சொல்லியபடியே அந்தத் திரவத்தை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினார். குவளையை வாயருகே கொண்டுவந்தபோதே எனக்குக் குமட்டியது. அமிலம், பூஞ்சணம் பரவிய கோதுமை, புளித்துப்போன பழைய கஞ்சி எல்லாம் கலக்கிய ஒரு முடைநாற்றமும் ஒவ்வாத நாச்சுவையும். இந்தக் கருமத்தை எப்படி இவர்களால் குடிக்க முடிகிறது?

தன் நண்பர்களை வரவழைத்து எங்கள் வீட்டில் நடத்தும் குடிக் கொண்டாட்டங்களில் முகம் சுளித்துக்கொண்டு ஒரே இழுப்பில் குவளையைக் காலி செய்யும் அப்பாவை மனதில் நினைத்துக்கொண்டு ஒரே மூச்சில் நான் அதைக் குடித்து இறக்கினேன். தொண்டையை எரித்து, நெஞ்சைத் துளைத்து அந்த நெருப்புத் தைலம் வயிற்றுக்குள் விழுந்து குளிரத்தொடங்கியது. விரைவில் அடுத்த குவளை நுரைந்து நிரம்பியது. அது முடித்தவுடன் அடுத்தது. முடைநாற்றமும் கெட்ட சுவையுமெல்லாம் எங்கோ போய்விட்து. நான் குடித்துக்கொண்டேயிருந்தேன்.

முதலில் வந்திருந்த பல குடிகாரர்கள் தள்ளாடி வெளியே போனார்கள். நண்பர் மேலும் மேலும் எதேதோ வாங்கிக் குடித்தார். எனக்கும் ஊற்றினார். முகம் முழுவதும் மசாலாவை அப்பிக்கொண்டு இறைச்சியைக் கடித்து இழுக்கும் அவரது உருவம் எனக்கு மங்கலாகத் தெரிந்தது. கட்டுப்படுத்த முடியாத குமட்டல் என்னைத் திக்குமுக்காட வைத்தது. “எனக்கு வாந்தி வருதே.. அய்யோ…”. சறுக்கியும் விழுந்தும் கைகழுவும் இடத்தைத் தேடி ஓடினேன்.

அப்போது அதோ என் கண்முன்னே தோன்றுகிறார் பூனைக்குழி மாமா! அம்மாவின் சொந்தத் தம்பி. நான் உள்ளே வந்தபோது மறுபுறம் பார்த்துக் குடித்துக் கொண்டிருந்தவர் இவரே! “பாருக்குள்ளே ஏறிக் குடிக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியாடா தெம்மாடி மவனே..?” போதையில் மிதக்கும் மாமா வெறிபிடித்த நாயைப்போல் என்னைக் கடிக்க வருகிறார். எனது குடிக் கதை வீட்டிலும் ஊரிலும் அனைவருக்கும் தெரியவர இனி நேரம் அதிகமில்லை. ஆனால் இப்போது அவர் கையில் சிக்கக் கூடாது. நான் அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓடினேன்.

சுடும் வெயிலில் தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த எனது கண்முன்னே ’தையில் ஃபர்னிச்சர்ஸ்’ எனும் பெயர்ப்பலகை தெரிந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஓச்சப்பனின் மரச்சாமான் கடை. என்னைத் துரத்திக்கொண்டுவரும் மாமனின் கண்ணிலிருந்து தலைமறைவாகவேண்டும். எங்கேயாவது கொஞ்சநேரம் படுக்கவேண்டும். நான் ஓச்சப்பனின் கடைக்குள்ளே ஓடி ஏறினேன். ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு வாடிக்கையாளர்கள் அங்கே நின்றிருந்தனர். வேலைப்பாடுகளும் ஜரிகைகளும் நிறைந்த ஒரு சோஃபாவை அவர்களுக்குக் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார் ஓச்சப்பன்.

நான் ஒரு கட்டிலின்மேல் இடித்துச் சறுக்கி அவர்களுக்கு முன்னால் சரிந்து அந்த சோஃபாவின்மேலே குப்புற விழுந்தேன். ‘ப்ளாவுவ்வே….. ள்வ்வே….’ குழம்புப் பானை உடைந்ததைப் போல் வாந்தியெடுத்தேன். அதோடு கண்கள் இருட்டாகிப்போனது. நினைவு திரும்பும்போது அடுத்தநாள் அதிகாலை. அக்கடைக்கு பின்னாலிருந்த ஓச்சப்பனின் அறைக்குள்ளே வெறும் தரையில் படுத்துக் கிடக்கிறேன். உடம்பெல்லாம் உலர்ந்த வாந்தியின் மிச்சசொச்சங்கள்.

”சரக்கடிச்சு வாந்தியெடுத்து அசிங்கம் பண்ண ஏங்கட தானாடா கெடச்சது ஒனக்கு? ஓன் வாந்திய அள்ளறது ஏன் வேலையாடா மயிரு?” ஓச்சப்பன் கடும் சினத்தில் குமுறுகிறார். வாடிக்கையாளர்கள் வாங்க முடிவெடுத்திருந்த அந்த உயர்விலை சோஃபாவின்மேல்தான் வாந்தியெடுத்தேன். அவர்கள் ஓடிப்போனார்கள். பெரும் வியாபார நஷ்டம். சோஃபாவின் நுரைமெத்தை நனைந்து நாறிப்போனது. அதைச் சரிசெய்ய குறைந்தது எழுநூறு ரூபாய் ஆகும். “அந்த காசத் தராம நீ இங்கேர்ந்து நகர முடியாதுடா பிச்சக்காரப் பயலே”.

காசு விஷயத்தில் ஈவு இரக்கமில்லாத கடும் வியாபாரி ஓச்சப்பன். “எழுநூறு ரூபாய்க்கு நான் எங்கே போவேன் ஓச்சப்பா?”.

”எனக்குத் தெரியாது. எனக்கு ஏங்காசு வேணும். இப்ப வேணும்”.

எழுநூறு ரூபாவுக்கு என்ன பண்ணுவேன் என்ற கவலையுடன் நெடுநேரம் அங்கேயே கிடந்தேன்.

சில நாட்கள் கழித்து இன்னொரு நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்கித்தான் அந்த முதல் குடி வாந்தியின் விலையைக் கட்டினேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com