அம்பாசிடர் ஓட்டிய அந்த அனுபவம்

KaaliVenkat
காளி வெங்கட்
Published on

15 வருடங்களுக்கு முந்தைய ஃப்ளாஷ்பேக் இது. ரோட்டில் நடந்துபோகிறவர், கூட்டத்தில் நாலாவது வரிசையில் ஏழாவதாக நிற்பவர், சண்டையை இடது ஓரத்தில் நின்று எட்டிப்பார்ப்பவர்னு பல வெரைட்டியான கேரக்டர்கள் பண்ணிக்கிட்டிருந்த பசிக் காலம். 

‘எடுத்தநாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை’ங்குற மாதிரி ஒன்லி சைக்கிள் மட்டுமே ஓட்டத் தெரிஞ்ச காலம். ஒருநாள் ஒரு நண்பர் மூலமா டி.வி சீரியல் ஒண்ணுல ஒரு அடியாள் வேஷம் கிடைக்குது. ரவுடி கடத்துற குழந்தையை வாங்கிட்டு அம்பாசிடர் கார்ல வச்சி நான் கடத்தணும். அதுவரைக்கும் பண்ணினதுலயே பெரிய ரோல். நம்ம முகம் நிச்சயம் தெரிஞ்சிரும். ஆனா துயரமே நமக்கு டிரைவிங் தெரியாதே. அதைச் சொன்னா வாய்ப்பு கிடைக்காதுன்னு மறைச்சிட்டேன்.

ஷூட்டிங் ஸ்பாட். அசிஸ்டெண்ட் டைரக்டர் சீனை சொல்றப்ப கூட டிரைவிங் தெரியாதுங்குற மறைச்சுட்டேன். ஏன்னா முதல்ல அவங்க எடுக்கப்போறது ஒரு குடோன்ல இருந்து ரவுடி கிட்ட இருந்து நான் குழந்தையை வாங்கப்போற காட்சிகளை. ஆக நான் கமிட் ஆகிடுறேன். அப்புறம் நம்மள கேரக்டர்ல இருந்து தூக்க முடியாதே.

ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகி குடோன் சீன்லாம் எடுத்து முடிச்சி. வெளிய வர்றாங்க. 

ரவுடி கிட்ட குழந்தையை வாங்கிட்டுப் போய் ஒண்ணுந்தெரியாத மாதிரி நான் அம்பாசிடர் பின் சீட்டுல உட்காருறேன். டைரக்டர்க்கு கடுமையான கோபம் வந்துருச்சி.

‘யோவ் அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் அந்தாளுக்கு சீனை சொன்னீங்களாய்யா…குழந்தையை மட்டும் பின் சீட்டுல போட்டுட்டு இவர் டிரைவர் சீட்ல உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணிட்டுப் போகணும். அத்தனை மூவ்மெண்டும் ஒரே ஷாட்தான் .ஒழுங்கா பண்ணச்சொல்லு. இல்லைன்னா அந்த ஆளோட சேர்ந்து உங்களையும் உதைப்பேன்’ங்குறார்.

இந்த டைரக்டர் இவ்வளவு கோபக்காரர்னு தெரிஞ்சிருந்தா இந்த கேரக்டர்ல நடிக்க வராமலே போயிருக்கலாமேன்னு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சி.

வேற வழியில்ல... சில இடங்கள்ல அசிங்கப்பட்டாதான் முன்னேற முடியும்னு முடிவு பண்ணி அடுத்தடுத்த டேக்குகள்லயும் பின் சீட்லயே போய் உட்கார்ந்தேன். கடுப்பான டைரக்டர் ஒரு கட்டத்துல வெறியாகி, ‘ஏன்யா பின் சீட்டுல உட்கார்ற ஒரேயடியா கார் டாப்ல ஜம்ப் பண்ணி உட்கார்ந்துட வேண்டியதுதானே’ன்னு கத்துனப்ப, ‘சார் அதைக் கூட ஒரு டைவ் அடிச்சி பண்ணிருவேன். ஆனா முன் சீட்ல உட்கார முடியாது. ஏன்னா எனக்கு சைக்கிள் தவிர வேற எதுவும் ஓட்டத் தெரியாதுன்னு உண்மையை உடைச்சவுடனே எனக்கு சான்ஸ் வாங்கிக் குடுத்தாரே டைரக்டரோட நண்பர் அவருக்கு சுடச்சுட ஸ்பாட்லயே ஒரு அறை 

விழுந்தது.

அடுத்த ரெண்டு வருஷங்கள்ல ‘ஆண்மை தவறேல்’ படத்துல ஒரு டிரைவர் கேரக்டர் கிடைச்சப்ப ரொம்ப சின்சியரா குட்டி யானையை ஓட்டப் பழகி டிரைவிங் கத்துக்கிட்டேன். இப்ப எந்தக் காரைக் குடுத்தாலும் கிராஃபிக்ஸ் சப்போர்ட் இல்லாம ஏர்ல டைவ் அடிக்கிற அளவுக்கு நாம எக்ஸ்பர்ட்.

(நடிகர் காளிவெங்கட்டிடம் கேட்டு எழுதியவர்: மூர்த்தி)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com