மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவதுபோல் சடக்கென நின்று, நின்ற வேகத்திலே முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.
அவள் அந்த அழகிய காரைப் பின்னாலிருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஒட்டி ஓர் ஆச்சரியம்போலப் பார்க்கிறாள்.
அந்தக் காரை ஓட்டிவந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடதுபுறம் சரிந்து படுத்து, பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.
‘‘ப்ளீஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்'' என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.
அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு, காதோரமும் மூக்கு நுனியும் சிவந்துபோகிறது: ‘‘நோ... தேங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழித்து... மழை விட்டதும் பஸ்லேயே போயிடுவேன்.''
‘‘ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்'' என்று அவன் அவசரப்படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...
இப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே...
‘‘ம்... கெட் இன்...''
இப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...
..
கார் போய்க்கொண்டே இருக்கிறது.
இந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியினால் அதில் ஒரு குதூகலம் இருந்தபோதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒருவகை பீதி உணர்ச்சி, அவளது அடிவயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்துகொண்டிருக்கிறது.
..
‘‘இப்ப நாம எங்கே போறோம்?'' - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.
‘‘எங்கேயுமில்லை; சும்மா ஒரு டிரைவ்...''
‘‘நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவாங்க.''
‘‘ஓ யெஸ்... திரும்பிடலாம்.''
- கார் திரும்புகிறது. டிரங்க் ரோடைவிட்டு விலகி, பாலைவனம் போன்ற ஒரு திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகுதூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன.
காருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.
திடீரென கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: ‘‘ஏன் கார் நின்னுடுச்சு? பிரேக்டௌனா?''
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பதுபோல் சிரிக்கிறான்.
அந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பதுபோல் எதற்கோ கெஞ்சுகிறான்.
..
காரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போதுதான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கிவிட்டான்.
''எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்.'' என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பமாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறான்.
அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து, வாயிலிட்டுக்கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.
..
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது; அவனது ரகசியக் குரல் அவளது ஹிருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது; ‘‘டு யூ லைக் மீ?''- 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’
‘‘ம்'' - விலக இடம் இல்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
..
‘‘ரொம்ப நல்லா இருக்குல்லே?''- இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
‘‘நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே...''
‘‘பயமா? எதுக்கு... எதுக்குப் பயப்படணும்?''
'எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...''
இந்த முறை பின்வாங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.
‘‘மே ஐ கிஸ் யூ?''
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்து, தேகம் பதறுகிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப்போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘‘ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...
அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப்போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.
..
‘‘நான் வீட்டுக்குப் போகணும்... ஐயோ! எங்க அம்மா தேடுவாங்க...''
...
அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள்: ‘‘எங்க அம்மா தேடுவாங்க... என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம்'' என்று வெளியே கூறினாலும், மனதிற்குள் குழப்பமும், எங்காவது தலையை மோதி உடைத்துக்கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்க, பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.
‘‘ப்ளீஸ்... டோன்ட் க்ரியேட் ஸீன்ஸ்'' என்று அவளைக் கெஞ்சி வேண்டிக்கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்.
'சீ! என்ன கஷ்டம் இது! பிடிக்கல்லேன்னா, அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப்பொழுது பாழாகிவிட்டது. பாவம்! இதெல்லாம் காலேஜிலே படிச்சு என்ன பண்ணப்போகுதோ? இன்னும்கூட அழறாளே...’ - அவன், அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறான்: ‘‘ஐ ஆம் ஸாரி... உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவுசெய்து மன்னித்துக்கொள்'' - அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு, இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்ற அவசரத்தில், அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.
இன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.
..
மழையில் நனைந்து தலை ஒரு கோலம், துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்த்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: ‘‘என்னடீ இது, அலங்கோலம்?''
அவள் ஒரு சிலை அசைவது மாதிரி கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். ‘‘அம்மா!'' என்று குமுறிவந்த அழுகையை, தாயின் தோள் மீது வாய் புதைத்து அடைத்துக்கொண்டு, அவளை இறுகத் தழுவியவாறு குலுங்கிக் குலுங்கி அழுதாள்!
‘‘என்னடீ, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு?''
..
அந்தப் பேதைப் பெண் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘‘மழை கொட்டுக் கொட்டுனு கொட்டிச்சு! பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன்... அப்புறம் எங்கேயோ காடு மாதிரி ஒரு இடம்... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா, எனக்கோ வழியும் தெரியாது. நான் என்ன பண்ணுவேன்... அப்புறம் வந்து... வந்து... ஐயோ! அம்மா... அவன் என்னெ...''
‘‘அடிப்பாவி! என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே...'' என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.
'என்னடி, என்ன விஷயம்?'' என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக்கொண்டு சுவாரசியமாய் விசாரித்தவண்ணம் கூடத்துக்கே வந்துவிட்டாள் பின்கட்டு அம்மாள்.
‘‘ஒன்றுமில்லை... இந்தக் கொட்டுற மழையிலே... அப்படி என்ன குடி முழுகிப்போச்சு? தெப்பமா நனைந்துகொண்டு வந்திருக்கிறாள். காசை, பணத்தைக் கொட்டிப் படிக்கவச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது? நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரித்திருப்பான்'' என்று பொய்யாக அங்கலாய்த்துக்கொண்டாள் அம்மா.
‘‘சரி... சரி... விடு. இதுக்குப்போயிக் குழந்தையே அடிக்காதே'' - பின்கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை; போய்விட்டாள்.
வாசற்கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா.
அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப்பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
..
இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ, இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து, அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு, அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.
பாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு, இந்த ஒன்றுமறியாப் பேதையின் மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக்கொண்டாள் அம்மா.
கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளையெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்திவிட்டாள். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு ஒரு யந்திரம் மாதிரி குறுகி உட்கார்ந்த அவள் தலையில், குடம் குடமாய்த் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: ‘‘உனக்கு அவனைத் தெரியுமோ?''
‘‘ம்ஹீம்...''
‘‘அழிஞ்சுபோறவன். அவனை என்ன செய்தால் தேவலை!''
‘‘இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே! தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சுபோகும். நம் வீட்டிலேயும் ஒரு பெண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே தெரியாது. பரம்பரைத் துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணி... மற்றவர்களைச் சொல்றேனே; இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா?'' என்று புலம்பிக்கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையைத் துவட்டிய பின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள்கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப்பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள்.
‘‘நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே.
நீ பளிங்குடீ, பளிங்கு.
....(.நன்றி: ஜெயகாந்தன் சிறுகதைகள்-2, கவிதா வெளியீடு)
ஜெயகாந்தன் இந்த அக்கினிப் பிரவேசம்(1966) (மேலே அச்சிறுகதையின் சுருக்கிய வடிவம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது) கதையை எழுதி 58 ஆண்டுகள் ஆகியும் அந்த பெண்ணின் தாயைப்போல் பக்குவப்படாத எண்ணற்ற தாய்மார்களைப் பற்றி இன்னும் கேள்விப்படுகிறேன்.
நல்ல சிறுகதைகள் தரும் அனுபவம் அலாதியானது. பதின்பருவ பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையிலான பிரச்னை உலகெங்கும் தீர்க்க முடியாத பிரச்னைகளில் முதல் ஐந்தில் இடம்பெறத் தகுதியுள்ளது. ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் சிறுகதை தமிழில் பதின்பருவ பிரச்னையைச் சொல்லும் சிறந்த சிறுகதை. நாம் அறிவித்திருந்த பதின்பருவ உணர்வுகள் பற்றிய சிறுகதைப் போட்டிக்கு உலகெங்கிலும் இருந்து வந்த வரவேற்பு மிக முக்கியமானது.
தமிழில் சிறுகதை வடிவம் யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற விவாதம் தீராமல் உள்ளது. பாரதியின் ரயில்வே ஸ்தானம் தான் முதல் சிறுகதை என்ற கருத்தும் உண்டு. வ.வே.சு. அய்யர் 1915 ஆம் ஆண்டில் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையிலிருந்துதான் தமிழ்ச் சிறுகதை ஆரம்பித்தது என்பது பொதுவான நம்பிக்கை. 1915-ஐத் தொடக்கப் புள்ளியாக வைத்து 2015 இல் திருச்சியில் தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய பிரபஞ்சன், “உலக அளவில் 334 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு எழுத்தாளர் போம்பெவல் முதல் சிறுகதை எழுதினார். தமிழில் 1910 ஆம் ஆண்டில் பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ என்ற கதையை எழுதினார். ஆனால், இது சிறுகதை வரிசையில் வரவில்லை” என்றார்.
“மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். இதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும்” என்று அந்நிகழ்வில் பேசிய திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் குறிப்பிட்டார். பா. இரஞ்சித்தின் வார்த்தைகளை அந்திமழையின் சிறுகதைப் போட்டியில் வென்ற கதைகள் பதிவு செய்கின்றன.
‘மொசக்கறி’ கதை படிப்பவர்களுக்கு சகமனிதனை மதிக்காத மனிதர்கள் மீது கோபங்கொள்ள வைக்கிறது. வாமுகோமுவின் கதை அழுத்தத்தை மீறி எழும் செடியில் பூக்கும் பூவாக அந்த சிறுவனின் மலர்ந்த முகத்தை பதிவு செய்கிறது.
இலக்கணப் பிழைகளில்் வரும் சுஜாதா படிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது.
இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 கதைகளும் நம் பிள்ளைகளை மட்டுமல்ல ஊரார் பிள்ளைகளையும் புரிந்து கொள்ள உதவும்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் ஏன் சிறுகதைப் போட்டி வேண்டும் என்ற கேள்விகளையும் எதிர்கொள்கிறோம். வந்தலகுண்டில் பிறந்து, படிப்பைப் பாதியில் விட்டு பல்வேறு வேலைகளை செய்து வந்த ஒருவர் முப்பதுகளில் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்கு ‘மலரும் மணமும்’ என்ற கதையை அனுப்ப, ஊக்கப் பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது. ‘மணிக்கொடி’இதழ் மூலம் சிறுகதைகளை வாழ்வாங்கு வாழ வைத்த பி.எஸ். ராமையாதான் அந்த பத்து ரூபாய் சன்மானம் பெற்றவர்.
போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் பி.எஸ். ராமையா போல் புகழ் பெற வாழ்த்துகள்.
என்னதான் டிஜிட்டல் யுகம் வந்தாலும் கண்டென்ட்தான் கிங். சிறுகதைக்கும் எழுதுபவர்களுக்கும் எதிர்காலம் என்றும் உண்டு.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்