அண்மையில் வெளிவந்திருக்கும் Mission Impossible – Dead Reckoning - Part 1 படத்தில் டாம் க்ரூஸ் அவரது ஸ்டண்ட் காட்சிகளில் அவரே நடித்திருக்கும் வீடியோக்கள் உலகெங்கும் பரவின. இந்தப் படம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே டாம் க்ரூஸ் அவரது படங்களில் ஆபத்தான பல ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்யும் தன்மை உடையவர். இருந்தாலும் அவருக்கும் ஸ்டண்ட்களில் டூப்கள் உண்டு. அதை அவரே சொல்லியும் இருக்கிறார் (தமிழில் கமல்ஹாஸனும் அவரது ஸ்டண்ட்களில் பலவற்றை அவரே செய்யக்கூடியவர்).
ஸ்டண்ட் டபிள்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்டண்ட்மேன்களின் பிரதான வேலை, நடிக நடிகையர்களுக்கு டூப் போடுவது. ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் அவர்களுக்குப் பதில் இவர்கள் நடித்து அந்த ஸ்டண்ட் காட்சியை நல்லபடியாக முடித்துக் கொடுப்பது. உலகின் மிக ஆபத்தான வேலைகளில் இதுவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சிறிய நொடி பிசகினாலும் எலும்புகள் உடையலாம்; உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற சூழலில் இந்த வேலைக்குத் தயங்காமல் வருவது உண்மையில் மிகப்பெரிய விஷயம். உலகெங்கும் இப்படிப் பல ஸ்டண்ட் டபிள்கள் இருந்திருக்கிறார்கள் - இன்னும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் அப்படிப் பலர் உண்டு.
ஹாலிவுட்டில் நினைவு தெரிந்து மிகப்பிரபலமான ஸ்டண்ட் டபிள் யாரென்று யோசித்தால், அனைவருக்கும் தெரிந்த பஸ்டர் கீட்டன் தான் நினைவு வருகிறார். 1920களில் குட்டிக்குட்டி இரண்டு ரீல் படங்கள் பலவற்றில் நடித்த கீட்டன், இதன்பின் முழுநீள மௌனப் படங்களில் நடித்தார். அவரது ஷெர்லக் ஜூனியர் (1924) படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் அவர் தலைமேல் உயரத்தில் இருக்கும் ஒரு டாங்க்கில் இருந்து தண்ணீர் கொட்டவேண்டும். அந்தக் காட்சியில் நடித்தபோது கீட்டனின் கழுத்தில் லேசான முறிவு ஏற்பட்டது. 1926இல் த ஜெனரல் படம் நடிக்கையில், அதன் க்ளைமேக்ஸ் காட்சிதான் அப்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் அமைந்த ஷாட். ஒரு மிகப்பெரிய ரயில்வண்டி எரிந்துகொண்டிருக்கும் ஒரு பாலத்தில் வேகமாகச் செல்லும். பின்னர் ஸ்டீம்போட் பில் ஜூனியர் (1928) படத்தில், ஒரு வீட்டின் முன் முழித்துக்கொண்டு நிற்கையில் அந்த வீட்டின் முன்புறம் அப்படியே பெயர்ந்து அவர் மேல் விழவேண்டும். அதில் ஒரே ஒரு சிறிய ஜன்னல் மட்டும் திறந்திருக்கும். எனவே அந்த ஜன்னல் வழியாக அவர் அப்படியே நிற்பார். அவரைச்சுற்றி அந்த வீட்டின் முன்புறம் விழும். இந்த ஸ்டண்ட்டின்போது அந்த வீட்டின் செட்டின் எடை இரண்டு டன். அவர் மீது மிகச்சரியாக அந்தத் திறந்திருக்கும் ஜன்னல் விழும். எனவே அவருக்கு எந்த காயமும் படவில்லை. இருந்தாலும் ஒருவேளை விழும்போது லேசாக அவர் ஓரிரண்டு அடிகள் வேறெங்காவது வைத்து நின்றிருந்தால் நசுங்கியே இறந்திருப்பார். அந்தப் படம் வருகையில் இது மிகப்பெரிய ஸ்டண்ட்டாகக் கருதப்பட்டது.
இவை பற்றி கீட்டன் சொல்கையில், ‘ஸ்டண்ட்மேன்களால் ஆடியன்ஸை சிரிக்கவைக்க முடியாது; அது நடிகர்களால் மட்டுமே முடியும்‘ என்று சொல்லியிருக்கிறார்.
இவற்றுக்குப் பின்னர் பல பேசும்படங்களிலும் நடித்தார். அவற்றுக்குப் பின்னும் சில டிவி ஷோக்களில் கீட்டன் நடிக்கையில், மௌனப்படங்களின் காலத்தில் அவர் செய்ததுபோலவே பல ஸ்டண்ட்களை செய்துகாட்டியும் இருக்கிறார். அப்போதெல்லாம் அவருக்கு ஐம்பது வயதுக்கும் மேல். உடலெங்கும் காயங்கள் கீட்டனுக்கு இருந்தன. ஆனாலும் ஸ்டண்ட்கள் செய்வதில் பிடிவாதமாக இருந்தவர்.
1966இல் அவரது இறுதிப் படமான A Funny Thing Happened to the Way to the Forum படத்திலும்கூட பல காட்சிகளில் அவரே அவரது ஸ்டண்ட்களை செய்திருக்கிறார். அப்போது அவரது வயது அறுபத்து ஒன்பது. அதன்பின் எழுபதாவது வயதில் இறந்தார்.
பஸ்டர் கீட்டனுக்குப் பிறகு உயிருக்கே ஆபத்து தரும் பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உலகெங்கும் புகழ்பெற்றவர் ஜாக்கி சான். அவருமே அவருக்கு இன்ஸ்பிரேஷன்களாக இருந்தவர்களில் பஸ்டர் கீட்டனைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
ஜாக்கி சான், துவக்கத்தில் ஒரு ஸ்டண்ட் நடிகராகவே தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். 1972இல் வெளியான 'First of Fury' படத்தில் ப்ரூஸ் லீக்கே ஸ்டண்ட் டபிளாக நடித்துப் பிரபலமானவர். ஜாக்கி சானின் நகைச்சுவை கலந்த ஸ்டண்ட்கள் உலகப் புகழ்பெற்றவை.
ஜாக்கி சான், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். எட்டு வயதில் முதல் படம். 1971ல் படிப்பை முடித்துவிட்டு, திரைப்படங்களில் ஸ்டண்ட் மேனாக நடிக்க ஆரம்பிக்கிறார். அப்போதே, பிறர் செய்யத் தயங்கும் பல ஸ்டண்ட்களை ஜாக்கி சான் மனமுவந்து செய்ததாக அறிகிறோம். அப்போது ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (1971) படத்தில் சான் யுவென் லுங் என்ற பெயரில் பதினேழு வயதில் நடித்தார் ஜாக்கி சான். இந்தப் படத்தில், அப்போதைய சைனீஸ் படங்களிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து அவர் விழுந்து சாதனை படைத்ததாக அவரைப்பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ப்ரூஸ் லீயின் பாராட்டும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது எண்டர் த ட்ராகன் படத்திலும் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் பணிபுரிந்தார். இவற்றைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் ஸ்டண்ட் மேனாக ஜாக்கி சான் நடிக்க, அவரது தொழில் நேர்த்தி, அப்போதைய பிரபல இயக்குநரான லோ வெய்யின் கவனத்தைக் கவர்ந்தது. லோ வெய் சாதாரண இயக்குநர் அல்ல.
ப்ரூஸ் லீயின் ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரியின் இயக்குநர் இவர். ஜாக்கி சான் நடித்திருந்த Hand of Death (1976) படத்தில், நடிகராக மட்டுமன்றி, ஹீரோவுக்கு ஸ்டண்ட் டபிளாகவும் பல காட்சிகளில் இவர் துடிப்புடன் பணியாற்றியிருந்தது லோ வெய்க்குத் தெரியும். இதனால் ஜாக்கி சானை அழைத்து, New Fist Of Fury என்ற படத்தை இயக்குகிறார். இதுதான் ஜாக்கி சான் ஹீரோவாக நடித்த முதல் படம். இது, ப்ரூஸ் லீயின் படத்துக்கு இரண்டாம் பாகம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மிக சீரியஸான ப்ரூஸ் லீ டைப் கதாபாத்திரத்திலேயே ஜாக்கி சான் நடித்திருப்பார்.
ந்யூ ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி ஓடவில்லை. ப்ரூஸ் லீயின் இடத்தில் புதிய நடிகர் ஒருவரை வைத்துப் பார்க்க மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்கள் விரும்பவில்லை. இருந்தாலும், வரிசையாக இதன்பின் சில மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களை ஜாக்கி சானை வைத்தே லோ வெய் இயக்கினார். அந்தப் படங்கள் அனைத்துமே சரியாகப் போகாதவையே.
இதன்பின் தான் Snake in the Eagle’s Shadow (1978) படம் வெளிவருகிறது. இது தமிழ்நாட்டு மார்ஷல் ஆர்ட்ஸ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான படம். சென்னையில் ஓரளவு நன்றாகவே ஓடியது. இந்தப் படத்தில்தான், அதுவரை ப்ரூஸ் லீயின் நிழலிலேயே அவரைப்போலவே நடித்துக்கொண்டிருந்த ஜாக்கி சான், முதன்முறையாக அவரது ஸ்டைலை மாற்றியமைத்துக் கொண்டார். கங் ஃபூவுடன் நகைச்சுவையை
சேர்த்தார். இந்தப் புதிய ஸ்டைல் நன்றாக எடுபட்டு, ஜாக்கி சானுக்கு அவரது முதல் ஹிட் கிடைத்தது (இதற்கு முன்னர், இரண்டு படங்களில் செக்ஸ் காட்சிகளில் கூட ஜாக்கி சான் நடித்துப் பார்த்தார்.. ம்ஹூம். எந்தப் பயனும் இல்லை. போலவே, கங் ஃபூ காமெடி என்பது இதற்கும் முன்னரே 1975ல் Spiritual Boxer படத்திலேயே முயற்சிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் ஜாக்கி சான் வந்துதான் இந்த வகையான படங்கள் உயிர்த்தெழவேண்டும் என்பது விதி போலும்).
இந்தப் படத்துக்குப் பின்னர்தான் இன்றும் நினைவுகூரப்படும் Drunken Master (1978) படம் வெளியானது. இது ஜாக்கி சானின் ஸ்டார் ஸ்டேட்டஸை உறுதி செய்தது. இதன்பின் வரிசையாக இதுபோன்ற கங் ஃபூ காமெடிகள் வெளியாகி நன்றாக ஓடின. இதனால் ஹாங்காங்கின் நம்பர் ஒன் மார்ஷல் ஆர்ட்ஸ் ஸ்டார் என்ற இடத்தை ஜாக்கி சானால் அடைய முடிந்தது.
அவரது பல படங்களின் ஸ்டண்ட் காட்சிகள் இன்றும் நினைவுசொல்லத்தக்க வகையில் இருப்பதே ஜாக்கி சானின் வெற்றி.
இவர்கள் இருவரும் நடிகர்களாகவும் அதே சமயம் ஸ்டண்ட்களை அவர்களே செய்யக்கூடியவர்களாகவும் இருந்தவர்கள். ஸ்டண்ட்களாலேயே புகழ்பெற்றவர்கள் பலரும் ஹாலிவுட்டில் உண்டு. ஸோயி பெல் (Zoe Bell), குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண் ஸ்டண்ட் டபிள்களில் ஒருவர். இன்றும் பல படங்களில் பல ஹீரோயின்களுக்கு ஸ்டண்ட் டபிளாக இருக்கிறார். க்வெண்டின் டாரண்டினோ எடுத்த கீல் பில் படங்களில் ஹீரோயின் ஊமா தர்மனுக்குப் பல காட்சிகளில் இவரே ஸ்டண்ட் டபிள். பல டாரண்டினோ படங்களில் ஸ்டண்ட் டபிளாக இருந்திருக்கிறார்.
அதேபோல் சர் பட்டம் பெற்ற எட்டி கிட் (Sir Eddie Kidd). இவரது ஸ்டண்ட்கள் உலகப் புகழ்பெற்றவை.
எழுபதுகளில் அக்கால மோட்டார்சைக்கிள் ஸ்டண்ட்கள் இவருக்குக் கைவந்த கலை. 1979இல் வெளியான ஹானோவர் ஸ்ட்ரீட் படத்தில் ஹீரோ ஹாரிசன் ஃபோர்ட் பைக்கில் வருவது போன்ற ஒரு காட்சியில் அவருக்கு ஸ்டண்ட் டபிளாக டூப் போட்ட எட்டி கிட், தொண்ணூறு மைல் வேகத்தில் 120 அடி நீளம் உள்ள ஒரு ரயில்வே லைனைத் தாண்டிக் குதித்தார். அது பெரிதும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்டண்ட். அதன்பின்னர் பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஏராளமான ஸ்டண்ட்களை செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் சீனப் பெருஞ்சுவரை பைக்கில் தாண்டிக் குதித்திருக்கிறார். 1996இல் ஒரு பைக் விபத்தில் மூளையில் அடிபட்டு பக்கவாதம் வந்துவிட்டது. ஆனால் இனியும் பத்து வருடங்களாவது கோமாவில் இருந்து அவர் எழ ஆகும் என்று மருத்துவர்கள் சொல்ல, மூன்றே மாதத்தில் கண்விழித்துவிட்டார். ஆனாலும் பக்கவாதம் பல வருடங்கள் இருந்தது. 2011 லண்டன் மராத்தான் போட்டிகளில் முதலில் சக்கர நாற்காலியில் வந்தவர், பின்னர் எழுந்து நடந்து, இரண்டு மாதங்கள் கழித்து அந்த மராத்தானை முடித்தார். அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய ஸ்டண்ட் என்று அது வர்ணிக்கப்பட்டது.
இவர்களைத் தவிர, Colin Follen Wider, Richard Bradshaw, Hall Needham, Chad Stahel (ஜான் விக் படங்களின் இயக்குநர்) ஆகியவர்களை உள்ளடங்கிய மிகப்பிரபல ஸ்டண்ட் டபிள்கள் (பின்னாட்களில் ஸ்டண்ட் மாஸ்டர்கள்) ஹாலிவுட்டில் உண்டு.
இவர்களில் காலின் ஃபாலன்வெய்டர், உலகின் அத்தனை முக்கியமான திரைப்படங்களிலும் ஸ்டண்ட் டபிளாக நடித்தவர். டெர்மினேட்டர் சீரீஸ், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா, ஐயர்ன் மேன், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்று எத்தனையோ படங்கள். டேனியல் க்ரெய்க், ப்ரூஸ் வில்லிஸ் என்று துவங்கி ஏராளமான நடிகர்களின் ஸ்டண்ட் டபிள் இவர். ஆனால் வயதோ ஆரம்பகால நாற்பதுகளே. இப்போது ஹாலிவுட்டில் மிக பிசியான ஸ்டண்ட் டபிள்களில் இவர் முக்கியமானவர்.
விக் ஆர்ம்ஸ்ட்ராங், ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு மறக்காத பெயர். உங்களில் பலருக்கு இவர் நினைவிருக்கலாம். பல படங்களில் டைட்டில்கள் போடுகையில் Second Unit Director – Vic Armstrong என்று வரும். கின்னஸ் புத்தகத்தில் பெயர் வரும் அளவு ஏராளமான படங்களில் ஸ்டண்ட் டபிளாக நடித்தவர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் 1 படத்தில் சூப்பர்மேனாக நடித்த க்ரிஸ்டோஃபர் ரீவ்ஸுக்கு இவர்தான் ஸ்டண்ட் டபிள். இதுதவிர இண்டியானா ஜோன்ஸ் படங்களில் ஹாரிசன் ஃபோர்டுக்கும், ஆன் ஹெர் மெஜஸ்டி‘ஸ் சீக்ரெட் சர்வீஸ் படத்தில் ஜேம்ஸ் பாண்டாக (ஒரே படம்) நடித்த ஜார்ஜ் லேசன்பைக்கும் இவரே ஸ்டண்ட் டபிள். இண்டியானா ஜோன்ஸ் படத்தின் மூன்றாம் பாகத்தில் (Last Crusade), ஹாரிசன் ஃபோர்டுக்கு ஸ்டண்ட் டபிளாக நடித்து ஒரு காட்சியில் குதிரையில் பாய்ந்து வந்து அப்படியே ஒரு ராணுவ டாங்க்குக்குள் குதிப்பார். அது உலகம் முழுதும் புகழ்பெற்ற ஸ்டண்ட்களில் ஒன்றாக மாறியது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இவரது மனைவி வெண்டி லீச் (Wendy Leech) இன்னொரு பிரபல ஸ்டண்ட் டபிள். உலகின் மிகச்சிறந்த பெண் ஸ்டண்ட் டபிள் என்ற பெயர் வாங்கியவர். இவருமே விக் ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்டண்ட் டபிளாக நடித்த பல படங்களில் ஹீரோயின்களுக்கு ஸ்டண்ட் டபிளாக இருந்திருக்கிறார். இவரது பெயரும் ஹாலிவுட்டில் மிகப் பிரபலமானது.
ஸ்டண்ட் டபிள்கள் செய்யும் ஆபத்தான சண்டைக் காட்சிகளே திரை ரசிகர்களை ஈர்த்து அவர்களை மயிர்க்கூச்செரியவைக்கிறது. அந்த வகையில் தனிப்பட்ட முறையில் பல அடிகளை வாங்கி, எலும்புகள் உடைந்து, காயங்கள் பெற்றே ஸ்டண்ட் டபிள்கள் அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுக்கிறார்கள். உண்மையில் ஸ்டண்ட் டபிள்களும் ஸ்டண்ட்மேன்களும் செய்யும் வேலை மிகுந்த ஆபத்தானது - அதேசமயம் விலைமதிப்பில்லாதது. நம்மைப் பல ஆபத்தான காட்சிகளில் நடித்து மகிழ்விக்கும் அவர்களைப் பற்றி நம்மால் முடிந்தவரை தெரிந்துகொண்டு திரைப்படங்கள் பார்ப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் பதில் நன்றியாக இருக்கும்.
எம்ஜிஆரின் டூப்!
ஸ்டண்ட் காட்சிகள் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் படங்கள் நினைவு வரக்கூடும். எம்.ஜி.ஆர் சூப்பர்ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் பல ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறார். அவருக்கு டூப்பாகவும் சிலர் பணியாற்றியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரே துணிந்து டூப் இல்லாமலும் நடித்திருக்கிறார். மீனவ நண்பன் படத்தில் முப்பத்தைந்து அடி உயரத்தில் இருந்து தடாலென்று ஒரு ஸ்டண்ட்டில் குதிப்பார். அது அவரே செய்தது. அப்போது அவரது வயது அறுபது. இயக்குநர் ஸ்ரீதர் இதைக் கண்டு பதற, எம்.ஜி.ஆர், ‘என் ரசிகர்கள் என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே பதறவேண்டாம்’ என்று சொல்லியதாக செய்திகள் உண்டு.
ஆனால் பல சமயங்களில் எம்.ஜி.ஆருக்கு டூப்களும் போடப்பட்டன. அவர்களில் முக்கியமான ஒருவர், கே.பி. ராமகிருஷ்ணன். 1947இல் சௌகார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலைசெய்துகொண்டிருந்த ராமகிருஷ்ணன், அந்தக் கடைக்கு அப்போதெல்லாம் அடிக்கடி வரும் எம்.ஜி.ஆரையும் அவரது அண்ணன் சக்கரபாணியையும் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர் அப்போது மிகப்பெரிய நடிகர் ஆகவில்லை என்றாலும் அவர் நடித்த படங்களில் இருந்து அவரை ராமகிருஷ்ணன் அடையாளம் கண்டுகொள்கிறார். அப்போது எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் வால்டாக்ஸ் சாலையில் தங்கியிருந்த காலகட்டம். ஒரு பொங்கல் நாளில் எம்.ஜி.ஆரை வீட்டில் சந்தித்துப் பேசுகிறார் ராமகிருஷ்ணன்.
ஆனால் அதன்பின் எம்.ஜி.ஆர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த ராஜகுமாரி வெளியாக (இயக்கம் - ஏ.எஸ்.ஏ சாமி), பின்னர் மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என்று எம்.ஜி.ஆர் பிரபல நடிகர் ஆகி அடையாறில் குடியேறுகிறார். சில வருடங்களில் சிலம்பம் தெரிந்தவர்கள் ஒரு சண்டைக்காட்சிக்கு வேண்டும் என்பதால் சிலம்பம் தெரிந்த ராமகிருஷ்ணன் ஒரு படத்தில் சண்டையிட, அதன்பின் நிரந்தர ஸ்டண்ட்மேனாக மாறிப்போனார். இதன்பின் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் டூப்பாக வேலை செய்திருக்கிறார். பின்னர் எம்.ஜி.ஆரின் பாடிகார்டாகவும் இருந்தார்.
தமிழ் சினிமாவின் டூப்களில் கே.பி. ராமகிருஷ்ணன் முக்கிய-மானவர். நாடோடி மன்னன் படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு டூப்பாக முதன்முதலில் பணியாற்றுகிறார் ராமகிருஷ்ணன். அதன்பின் ஏராள படங்கள். அவற்றில் பல இன்னல்-களையும் சந்தித்து வெற்றிகரமாக எம்.ஜி.ஆருக்கு டூப்பாக நடித்திருக்கிறார். உதாரணமாக நீரும் நெருப்பும் படத்தில் இரண்டு எம்.ஜி.ஆர்கள் மோதும்போது அதில் ராம-கிருஷ்ணன் ஒருவர். அந்த சண்டைக்காட்சியில் உபயோகிக்கப்-பட்ட கத்தி நிஜமானது. எம்.ஜி.ஆரே ஒரு தேர்ந்த ஸ்டண்ட்மேன் என்பதால் எம்.ஜி.ஆருடன் இன்னொரு எம்.ஜி.ஆராக நிஜக்கத்தியுடன் சண்டையிடும் பெரிய சவாலை சந்தித்து மீண்டிருக்கிறார். நினைத்ததை முடிப்பவன் படத்தில் கையில் கத்தியுடன் எம்.ஜி.ஆருக்கு டூப்பாக உயரத்தில் இருந்து குதிப்பார். ஆசை முகம் படத்தில் இரட்டை வேட எம்.ஜி.ஆர்களில் வேட்டி கட்டிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆருக்கு டூப்பாக ஆவேசமாக சண்டையிட்டிருக்கிறார்.
தன்னுடன் ஸ்டண்ட் காட்சிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை எம்.ஜி.ஆர் மிகுந்த எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்வார் என்று சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். உதாரணமாக நினைத்ததை முடிப்பவன் படத்திலேயே ஒரு ஸ்டண்ட்டில் கால் முட்டியைப் பாதுகாக்கும் கவசம் ஒன்று எம்.ஜி.ஆருக்கும் அவரது டூப்பான ராமகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் முழங்கால் கவசம் ஒரிஜினல். வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது. ஆனால் ராமகிருஷ்ணனின் முழங்கால் கவசமோ போலி. எளிதில் பிய்ந்துவிழும் தன்மையுடையது. முழங்கால் கவசம் இருவருக்கும் வழங்கப்பட்டபோது எம்.ஜி.ஆர் இரண்டையும் சோதித்துப் பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்கிறார். உடனடியாகக் கோபம் அடைந்து, தனக்கு வழங்கப்பட்ட அதே முழங்கால் கவசம்தான் ராமகிருஷ்ணனுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லி, அது வந்தபின்னர்தான் ஸ்டண்ட்டுக்குச் செல்ல சம்மதித்திருக்கிறார். அதேபோல் ஒரு ஸ்டண்ட் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்படமுடியாமல் அந்தக் காட்சி ஆபத்தானதாக இருந்தால் அதைக் கச்சிதமாக இரண்டு மூன்று ஷாட்களாகப் பிரித்து ஸ்டண்ட் நடிகர்களுக்கு ஆபத்து நேராமல் எப்போதும் எம்.ஜி.ஆர் பாதுகாப்பார் என்றும் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.