கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் அமைந்திருக்கும் மூஸா இனிப்புக் கடை நான்காம் தலைமுறையாய் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கடையின் பெயரும், புகழும் கோடம்பாக்கத்தின் கதவுகளைத் தட்டி விடவே, ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸில் அமர்ந்து கொண்டு "பள்ளப்பட்டி மூஸா கடை பூந்தி"- என நம்ம சமுத்திரக் கனியே வீர வசனம் பேசும்படியாகி விட்டது. ஆமாம். சேர் மிட்டாய் எனப்படும் இந்த கடையின் பூந்தியை சுவைத்தவர்கள் இதற்கு அடிமை ஆகிவிடுவார்கள் என்பதே எதார்த்தம்.
"அத்தனையும் மனக் கணக்கு தான் சார்!"- என சற்று ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார் மூஸா ஸ்வீட்ஸ் உரிமையாளர் அப்துல் சமது.
பேச்சில் இனிப்பின் வாசம் கலந்தடித்தது. எரிந்து கொண்டிருக்கும் அடுப்பின் வெப்ப நிலை, வாணலியில் ஊற்றப்பட்ட நெய்யினுள் வெந்து கொண்டிருக்கும் கடலைப் பருப்பின் பதம். நொடி பிசகாமல் கிண்டிக் கொண்டிருக்கும் "கபீர்"- கரண்டியின் சுழட்டல்கள். இப்படி பல்வேறு சேர்மானங்களை விழுங்கிச் செரித்த பின் பொன்னிறப் பதத்தில் மின்னிடும் இனிப்பு பாகின் பக்குவத்தை ஒரு நொடி பிசகாமல் மறு நொடியே அடுத்த அகண்ட பாத்திரத்தில் கவிழ்த்து விட வேண்டும். அதில் ஒரு கிண்டு அதிகமானாலோ ஒரு ஓரிரு நொடிகள் மிகையானாலோ இனிப்பின் பதம் நொடியில் மாறி விடும். எனவே அடுப்பு முதல் எடுப்பு வரை அத்தனையும் மனக் கணக்குதான். அப்போது தான் நமக்கு இளம் முருகலான மைசூர் பாகும், உதிரி...உதிரியான பூந்தியும், தித்திக்கும் கற்கண்டு லட்டும் பூப்போல மலர்ந்து மணம் வீசும்.
”இந்த கடை எங்கள் தாத்தா காலத்தில் ஆரம்பித்தது. சின்னதாக பஜ்ஜி கடைபோல் தொடங்கி, ரம்ஜானுக்கு இனிப்பு சீட்டு பிடித்து, பகிர்ந்து கொடுத்து மெதுவாக கால்பதித்த கடை. பெற்ற நம்பிக்கையான அடையாளத்தைத் தக்க வைக்க இன்று வரை நான்காவது தலைமுறையாக அயராது உழைத்து வருகிறோம்’ என்கிறார்.
பள்ளப்பட்டியில் இருக்கும் இன்னொரு கடை சதக் ஸ்ட்வீட்ஸ். இதன் உரிமையாளர் சதக்கத்துல்லா, மூஸா ஸ்வீட்ஸில் 13 வயதில் சேர்ந்து இருபத்திஐந்து ஆண்டுகள் அங்கே தொழில் கற்றுக்கொண்டு தனியே வந்து தொடங்கினார்.
"தனியாக கடை போட்டு பதினைந்து ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த குறுகிய காலத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வல்ல இறைவன் எனக்கு அளித்துள்ளான்,’’ என மனம் திறந்து பேசினார்.
"கொங்கு நாட்டில் எல்லாமே இனிப்பை வைத்துத் தான் ஆரம்பிப்பார்கள். திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டார்களும், மாப்பிள்ளை வீட்டார்களும் முதல் முறையாக உறவு கொண்டாடும் போது சபைக்கு நடுவில் இனிப்பு பலகாரங்களை வைத்துத்தான் "சம்பந்தம் கலக்க"-ஆரம்பிப்பார்கள். எனவே, எங்க சுற்று வட்டார கிராமத்து தலைக்கட்டு அத்தனையும் எங்கள் கடைக்கு வந்து இனிப்புகளை வாங்கிச் செல்வார்கள். அதனால் தான் ரம்ஜான் பண்டிக்கைக்கு விற்பனையாகும் அதே அளவு இனிப்பு மற்றும் கார வகைகள் தீபாவளி மற்றும் பொங்கல் காலங்களிலும் விற்பனையாகும்.
இதனால், இந்த தமிழ் மண்ணில் உள்ள எல்லா பண்டிகைகளையும் எங்களுடைய பண்டிகையாக இனிப்பு வழங்கி கொண்டாடக் கூடிய பெரும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது’ என்கிறார் தன்மையாக. நல்லிணக்கம் என்பதை இது போன்ற இனிப்பான வியாபாரிகள் நடை முறையில் செய்து காட்டி விடுகிறார்கள்!