குதிரையில் தொங்கிய ராசேந்திர சோழன்!

Rajaraja Chozhan
ராஜராஜசோழன் திரைப்படம்
Published on

என் சொந்த கிராமத்தில் பல விவசாய வேலைகளை செய்துள்ளேன். ஆனால் எருமை மாட்டின் மீது சிறுவர்கள் சவாரி செய்வதுபோல் மட்டும் நான் செய்தது இல்லை. அப்பவே எனக்கு விலங்குமீது சவாரி என்றால் பயம்தான்! அப்பேர்ப்பட்ட என்னைக்கூப்பிட்டு குதிரை சவாரி செய் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் படத்தில் எனக்கு ராஜேந்திர சோழன் வேடம். கேளம்பாக்கத்தில் ஒரு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு. அது போர்க்களக்காட்சி. நான் குதிரை மீது ஏறி நடிக்கவேண்டும். குதிரை அருகே சென்றால், அதன் முதுகே என் தலைக்கு மேலே இரண்டடி உயரத்தில் இருந்தது. எனக்கு தலையில்கிரீடம் வைத்து காலில் ராஜாக்கள் அணியில் முன் பகுதி வளைந்த காலணி, நகை நட்டுகள், இடுப்பில் இறுக்கமான உடை என்று அணிவித்திருந்தார்கள். இந்த உடை இம்சையுடன் இரண்டடி உயரமான ஸ்டூல் போட்டு ஏறி குதிரை மீது உட்கார்ந்தேன். காலை நுழைக்கும் ஸ்டிரப் வளையத்துக்குள் அந்த காலணியை நுழைக்க நான் பட்டபாடு!... அதுதான் நான் முதல் முதலில் குதிரை மேல் ஏறி அமர்ந்த சம்பவம். அதனுடைய லகானை அதன் பிடரியுடன் சேர்த்து பிடித்துக்கொள்ளுங்கள். இரண்டு காலையும் வயிற்றில் தட்டினால்குதிரை ஓடும் என்று எனக்குச் சொன்னார் அதன் பயிற்சியாளர். அவருக்குத் தெரியுமோ என்னமோ.. குதிரைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் எனக்கு ஓட்டத் தெரியாது என்று…

ஆயிரக்கணக்கில் மக்கள்படப்பிடிப்பைக் காண வந்திருந்தார்கள். சிவாஜி வேறு ராஜா வேஷத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாதே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நமக்குத்தான் சோதனை வருமே…

அப்ப ஒரு ஈ வந்து நாம உட்கார்ந்திருந்த குதிரை மூக்கில் புகுந்துவிட, அந்த குதிரை ஒரு பெரிய தும்மல் போட்டது. அதன் கழுத்து கீழே போக நானும் அதனுடன் கீழே இழுக்கப்பட, ராசேந்திர சோழன் தலையில் இருந்த கிரீடம் கீழே விழுந்துவிட்டது. சும்மாவே சிவாஜிக்கு பெரிய கண்கள்.. அப்படியே என்னைப் பார்த்தார். நம்ம இளவரசன் வேஷம்.. இப்படி மானத்தை வாங்கறானே என்று நினைத்திருக்கவேண்டும்.

திரும்பவும் கிரீடத்தை மாட்டி உட்கார வைத்தார்கள். அந்த ஈ… என்னை ஒரு வழி ஆக்கவேண்டும் என்று நினைத்தது போலிருக்கிறது. மீண்டுமா குதிரை மூக்கில் போகவேண்டும்? முன்பை விட பெரிய தும்மல் போட.. ராசேந்திர சோழன் இப்போது குதிரை மேலிருந்து தொங்கிவிட்டான்! கம்பீர ராசேந்திர சோழன், சிரிப்பு ராசேந்திர சோழன் ஆகிவிட்டான்!

சிவாஜி அழைத்தார். ‘தம்பி நமக்கு என்ன தொழிலு?’ என்றார் நக்கலாக. ‘நடிக்கிறது தானுங்க’ என்றேன். ‘ஒங்கொப்பன் மவனே குதிரை ஓட்டறதை யாரு கத்துக்கணும்? நீ தான் கத்துக்கணும். ஜிம் கானா கிளப்புக்கு அனுப்புறேன். பத்து நாள்ல கத்துகிட்டு வா..’ என்று சொல்லிவிட்டார்.

ஜிம்கானா கிளப்புக்கு போனா நமக்குக் கட்டுப்படியாகாது. சினிமாவுக்கு குதிரை கொடுக்கிற கோவிந்தன் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் பேசி, விடிகாலை நான்கு மணிக்கே பீச்சுக்குப் போய்விட்டேன். அவர் கழுதையை விட சற்றுப் பெரிதாக இருந்த ஒரு குதிரையைக் கொண்டுவந்து ஏறச் சொன்னார். நான் தயங்குவதைப் பார்த்து என்னை மேலும் கீழும் பார்த்தார் குதிரைக்காரர். "சாமி ஒண்ணும் பயப்படாதிங்க. இது ராமராவ் நாகேஸ்வரராவ் எல்லாம் பழகுன குதிரை..’’ என்றார். அப்போது அந்த நடிகர்களுக்கு எழுபது வயது ஆகி இருந்தது. அப்படியென்றால் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே குதிரையில் பழகி இருக்கவேண்டும்… அப்படியென்றால் நாற்பது வயதா இந்த குதிரைக்கு… உலகத்தில் கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமாய்யா….” எனக்கென்னவோ குதிரையே நக்கலாக சிரித்ததுபோல் இருந்தது.

குதிரையின் இடதுபக்கம் போய் பின்புறமாகப் பார்த்தவாறு நின்று, இடதுகாலை ஸ்டிரப் வளையத்தில் நுழைத்து ஏறி வலதுகாலைத் தூக்கிப் போட்டு உட்காரவேண்டும். எறி உட்கார்ந்ததும் பிரம்பு நாற்காலி பொல் அதன் முதுகு வளைந்தது. என்னய்யா வளையுது? என்றேன். சாமி… நீங்க கொஞ்சம் வெயிட்டு சாமி… என்றார் கு.கா.

அடுத்த நாள் அதைவிட சற்றுப் பெரிய குதிரை வந்தது. இது பீச்சில் வடக்கே இருந்த காந்திசிலை நோக்கிப் போவது என்றால் பயங்கரமாக அடம் பிடித்தது. அதே சமயம் தெற்கு நோக்கிப் போவது என்றால் பயங்கர குஷியாகி ஓடிவரும். ஏனப்பா இப்படி என்றேன். ’சாமி தெற்கு பக்கமாகத்தான் நம்ம வூடு இருக்குதுங்க. அதுதான் ஓடியாருது..’ என்றார் கு.கா.

கடைசியில் நல்ல உயரமான குதிரை கொண்டுவரப்பட்டது. அன்றைக்கு நான் கறுப்புச் சட்டை போட்டுப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும்.. ஈஈ என கனைத்துக்கொண்டு ஏற அனுமதிக்கவில்லை. சாமி…. சட்டையைப் பார்த்து மிரளுதுங்க என்றார்கள். மறுநாள் வெண்ணிற ஆடையில் போனேன். அப்பதான் ஏற முடிந்தது… ஒரு வழியாக போனால் போகட்டும் என்று அந்த விலங்கு என்னை ஏற்றிக்கொண்டது! குதிரையேற்றம் கற்றுக்கொள்ளும்வரை சிவாஜி சாரின் உருண்டை விழிகளின் மிரட்டல் என்னைத் தூங்கவிடவே இல்லை… மனிதனா குதிரையா என்ற போராட்டத்தில் பல நாட்களுக்குப் பின் நான் ஜெயித்துவிட்டேன்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com