புதியவன்

புதியவன்
Published on

தர்மபுரியில் அஜிதன் பிறந்தபோதே எனக்கு இவன் கொஞ்சம் விவகாரமான ஆள் என்னும் எண்ணம் எழுந்தது. அருண்மொழிக்கு தபால்துறையில் வேலை கிடைத்து உத்தரவு வந்தபோது அவள் கருவுற்றிருப்பதாக டாக்டர் சொன்னார். பயிற்சிவகுப்பில் சேரவேண்டும். அதில் உடற்பயிற்சி உண்டு. பயிற்சியைத் தவிர்த்தால் ஓராண்டு சென்றுவிடும், அடுத்த ஆண்டு வேலை கிடைக்குமென உத்தரவாதமில்லை.

அப்போது தியடோர் பாஸ்கரன் கர்நாடக மாநிலத்தின் தபால்துறைத் தலைவராக இருந்தார், அவரிடம் நிலைமையைச் சொன்னேன். அவர் கூப்பிட்டுச் சொன்னதன் பேரில் அருண்மொழிக்கு விதிவிலக்கு அளித்தார்கள். நான்குமாதம் கழித்து பயிற்சி. மதுரை பெருங்குடிக்குச் சென்று பயிற்சி வகுப்பில் சேர்ந்தாள். சுரேஷ்குமார் இந்திரஜித் ஏற்பாட்டில் அங்கே ஒரு வீடு பார்த்து அருண்மொழியின் பெற்றோர் வந்து தங்கி பார்த்துக்கொண்டனர். நான் சனி, ஞாயிறுகளில் சென்று பார்த்துவந்தேன்.

பயிற்சி முடிந்து திரும்ப தர்மபுரிக்கு வந்தோம், திருப்பத்தூரில் வேலைக்குச் சேரவேண்டும். வேலைக்குச் சேர்ந்து ஒருநாள் கழிந்தால் மருத்துவ விடுப்பு கிடைக்கும், பணிமூப்பிலும் முன்னிடம் உண்டு. டாக்டர் குழந்தை பிறக்க இருபதுநாட்கள் வரை ஆகலாம் என்றார். ஆகவே மறுநாள் திருப்பத்தூர் செல்ல முடிவெடுத்து இருந்தோம். மாலையில் கொஞ்சம் அசௌகரியமாக உணர்வதாகச் சொன்னாள். ஆஸ்பத்திரிக்குச் சென்று அரைமணிநேரத்தில் குழந்தை பிறந்துவிட்டதாக டாக்டர் சொன்னார்.

நான் நம்பவில்லை, அதெப்படி? சினிமாவிலெல்லாம் என்னென்னவோ காட்டுகிறார்கள். அலறல் சத்தமெல்லாம் கேட்கவேண்டும், நான் வெளியே குறுக்கும் மறுக்குமாக நடக்கவேண்டும். அவள் அம்மா அப்பா எல்லாம் பிரார்த்தனை புரியவேண்டும். டாக்டர் வெளியே வந்து ”யார் இங்கே ஜெயமோகன்” என்று கேட்கவேண்டும். நான் பதற்றத்துடன் “நாந்தாங்க” என்று சென்று நிற்கவேண்டும்.

ஒன்றும் நடக்கவில்லை, உள்ளே சென்றாள். நான் பெஞ்சில் அமர்ந்தேன். உள்ளே ஏதோ பேச்சுக்குரல். ஒரு நர்ஸம்மா வெளியே வந்தாள். “எப்டி இருக்கா?” என்றேன். “ஆம்புளப்புள்ளே…” என்றாள். “இல்லை, இது வேற…அருண்மொழிநங்கைன்னு…இப்பதான்…” என்று நான் சொன்னேன். ”ஆமா, அவங்கதான்…இப்ப ஒரே கேஸுதான்…புள்ளை பொறந்தாச்சு…ஆம்புளைப்புள்ளே. குளிப்பாட்டிட்டிருக்காங்க”

முப்பதாண்டுகளாக அஜிதன் இந்த குணாதிசயம்தான், எப்படி என்ன செய்வானென்று முன்னர் சொல்லமுடியாது.

டாக்டர் வந்து “கையெழுத்து போடணும் வாங்க” என்றாள்.

என் மாமியாருக்கு அப்போதுதான் பேரப்பிள்ளை பிறந்த செய்தியே மண்டையில் உறைத்தது. முசுமுசுவென அழ ஆரம்பித்துவிட்டார்கள். நர்ஸ் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

நான் டாக்டருடன் சென்று வெவ்வேறு காகிதங்களில் கையெழுத்து போட்டேன். இவ்வளவு சாதாரணமாக பிறந்துவிட்டானே, அதனால் ஏதாவது பிரச்சினை இருக்குமோ?

“ஏன் டாக்டர் வலியே இல்லாம பிறந்திருக்கே, ஏதாவது பிரச்சினை இருக்குமோ?”

“யாருக்கு பிரச்சினை?”

”இல்ல, குழந்தைக்கு”

“என்ன பிரச்சினை?”

நான் விழித்தேன்

“நீங்க சும்மா பிரச்சினை பண்ணாதீங்க….குழந்தை ஜம்முன்னு இருக்கு…சூட்டிகையான பையன்”

பயலுக்கு முதல் பாராட்டு. இன்றுவரை யார் யாரோ பாராட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் பாராட்டுகிறார்கள் என்று மிச்சபேர் திகைக்கிறார்கள்.

நான் வெளியே வந்தேன். உலகம் இனிய இசையாலும் நறுமணத்தாலும் அழகிய நடன அசைவுகளாலும் நிரம்பியிருந்தது. ஒரு மாதிரி மப்பென்று இருந்தது. மாடியில் இருந்து கையெட்டி அருகே நின்ற அசோகமரத்தை பிடிக்கலாமென முயன்றேன்.

”என்ன செய்றீங்க? புள்ளையப் பாக்கல?”

ஆமாம், பயலை இன்னும் பார்க்கவில்லை. உள்ளே சென்று பார்த்தேன். செக்கச்சிவப்பாக தொட்டிலில் மல்லாந்து கிடந்து கைகால்களை ஆட்டிக்கொண்டிருந்தான். பெரிதாக அழவில்லை. கண்கள் வேறு இரண்டு பெரிய நீர்த்துளிகள் போல விழித்திருந்தன.

ஏற்கனவே பெயரிட்டிருந்தோம். அருண்மொழி “அஜிக்குட்டி அழவே இல்ல. ஜாலியா இருக்கான்”

அதுவும் அவன் குணம்தான், அடுத்த முப்பதாண்டுகளில் பெரிதாக எதையும் கண்டுகொள்வதில்லை. எப்போதும் எதற்காகவும் அடம்பிடிக்கவில்லை. அவனுக்குரிய உலகில் அவன் பாட்டுக்கு இருந்தான். ஒரு சின்ன டம்ப்ளரில் ஒரு ஸ்பூனைபோட்டு கையில் கொடுத்துவிட்டால் அவன் பாட்டுக்கு இரண்டுமணிநேரம் விளையாடுவான். அந்த டம்ளர், ஸ்பூன் இரண்டின் அதிகபட்ச சாத்தியம் வரை விளையாடப்படும்.

நான் தொட்டிலில் குனிந்து பார்த்தேன். என்னைப்போல் இருப்பதாக ஏற்கனவே நர்ஸும் என் மாமியாரும் சொல்லியிருந்தார்கள். ஆனால் முகம் மாவு உருண்டை போல தோன்றியது.

“நீ ஜாக்கிச்சான் படமெல்லாம் ரொம்ப பாக்காதேன்னு சொன்னேன்ல? இங்கபார், பயலுக்கு மூக்கே இல்ல”

“சப்ப மூக்கு” என்றாள் “அப்பனுக்கு இருந்தா புள்ளைக்கு வந்திருக்கும்”

அதுவும் சரிதான் என்று தோன்றியது.

“எதுக்கு சார் துணியெல்லாம்?” என்றார் கடையில் இருந்தவர்

“குழந்தை பிறந்திருக்குங்க…”

“டாக்டர் துணி வாங்கச் சொன்னாங்களா?”

“இல்ல, தேவைப்படுது”

அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். நான் துணியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். அருண்மொழி குழந்தைக்கு பால் ஊட்டியிருந்தாள்.

“துணியெல்லாம் வாங்கியாச்சு” என்றேன்.

“அம்மா துணி கொண்டாந்திருக்காங்க ஜெயன்…”

“துணியா என்ன துணி?” நான் ஒயர்கூடையை எடுத்துப் பார்த்தேன். பழைய புடவை சுருட்டி வைத்திருந்தது. அவசரத்திலும் மாமியார் அதை எடுத்திருந்தார்.

“சீ” என்று கூடையை அப்பால் வைத்தேன். “பழையதுணியா பிள்ளைக்கு?”

“அம்மா அப்பவே நல்லா வாஷ் பண்ணி மடிச்சு வைச்சிருக்காங்க”

“பழைய துணிதானே? அதெல்லாம் புள்ளை பக்கத்திலே வரக்கூடாது…பாத்தியா எல்லாம் புதிசு…”

அருண்மொழி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கையில் கண்களை ஒருமாதிரி உருட்டுவாள்.

“இதோபார், நம்ம பயலுக்கு எல்லாமே புதிசுதான், தெரிஞ்சுக்க” என்றேன். புத்தம்புது உலகம். புதிய வானம், புதிய பூமி, புதிய மனிதர்கள். கொஞ்சம் சாவகாசம் கிடைத்தால் உருவாக்கிவிடலாம்.

டாக்டர் வந்தார். “என்ன செய்றான் குழந்தை?”

“சாப்பிட்டதும் தூங்கிட்டான்”

“நல்லா போத்தி விடணும்…கொஞ்சம் குளிர் இருக்கு” என்றார். “துவைச்ச துணி இருக்குல்ல?”

“புதிசு இருக்கு டாக்டர். இப்பதான் வாங்கிட்டு வந்தேன்”

“சேச்சே… இதெல்லாம் பக்கத்திலே போகக்கூடாது. என்ன பசைபோட்டான்னு தெரியாது. நீலம் வேற முக்கியிருப்பான்” என்றார் டாக்டர் “அம்மாவோட பழைய காட்டன் புடவைதான் பெஸ்ட். கொஞ்சம் கிழிஞ்சாலும் பரவாயில்லை, பழசாகி சாஃப்டா ஆயிருக்கணும். சோப்பு போடாம துவைச்சு மடிச்சு கொண்டுவரணும்…இருங்க நர்ஸ் கிட்ட கேக்கறேன்”

“அதான் எங்கம்மா கொண்டுவந்தாங்க…அதோ இருக்கு டாக்டர்” என்று அருண்மொழி சொன்னாள்

நான் திகைத்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்தேன்.

டாக்டர் அதை எடுத்து தொட்டுப்பார்த்து “நைஸ்….” என்றார்.

 “அதான் பெரியவங்களுக்குத் தெரியும். இந்த துணியெல்லாம் வேண்டாம்…அலர்ஜி ஆயிட்டுதுன்னா சிக்கல்”

டாக்டர் போனபின் அருண்மொழி “நான் சொன்னேன்ல?” என்றாள். அவளை முறைத்துவிட்டு உளச்சோர்வுடன் வெளியே வந்தேன். பழைய உலகம்தான் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது. உலகின் தலைசிறந்த எழுத்தாளனின் முதல்குழந்தைக்குக் கூட அப்படித்தான்.

அந்தத் துயரை புரிந்துகொள்ளாமல் ஒருவர் டீ சாப்பிட இன்னொருவர் தினத்தந்தி வாசித்தார். ஒரு அம்மாள் கையில் ஒயர்கூடையுடன் சென்றாள். ஒரு பெண்மணி தூக்குப்போணியுடன் வந்தாள்.

மாமியார் உள்ளே சென்று அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருக்கும் ஓசை. மெல்லிய சிரிப்பொலி. சரிதான், நான் கொஞ்சம் அதிகமாக துள்ளிவிட்டேன் போல. ஆனால் இப்போது துள்ளாமல் எப்போது துள்ளுவது?

மாமியார் வெளியே வந்து “நான் வீட்டுக்கு போய்ட்டு சாப்பாடு ஏதாவது செஞ்சு கொண்டு வாறேன். பாத்துக்கிடுங்க” என்றார்

அவர் சென்றபின் நான் கதவருகே நின்று உள்ளே பார்த்தேன்.

“உள்ள வாயேன்” என்றாள் அருண்மொழி. நான் உள்ளே சென்றேன்.

“ஒருதடவை சிணுங்கினான். ஈரம்பண்ணிவிட்டான்… துணிய மாத்தினதும் தூங்கிட்டிருக்கான்” என்றாள்

நான் குனிந்து பார்த்தேன். அதற்குள் வண்ணம் மாறியிருந்தான். மெல்லிய இளஞ்சிவப்பு நிறப்புடவையில் மலரிதழ் நடுவே படுத்திருப்பதுபோல கைகளை விரித்து படுத்திருந்தான். நேர்த்தியான புருவங்கள். அடர்த்தியான இமைகள். சின்ன உதடுகள்

“இந்தப்புடவை எது?”

“இதான் அம்மா கொண்டுவந்தது”

நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளத்தின் மேலோட்டமான பரபரப்புகள் அடங்கி ஆழத்தில் இருந்து ஓர் அலை எழுந்து வந்து அள்ளிச்சென்றது என்னை.

அவனை தொடுவதற்காகக் குனிந்து, பின் அந்த துணியை மெல்ல தொட்டேன். அந்தத் துணி புதியதாக இருந்தது. அந்த அறை, அந்த மருத்துவமனை, அந்த நகர், அந்த வானம் அந்த மண் எல்லாமே புதியனவாகத்தான் இருந்தன.

logo
Andhimazhai
www.andhimazhai.com