பெரியோர்களே, தாய்மார்களே

மாறிவரும் பிரச்சார முகங்கள்
பெரியோர்களே, தாய்மார்களே
ஓவியம்: ரவி பேலட்
Published on

அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.

‘உனக்கு தேர்தல் பிரச்சாரங்களில் பேசி பழக்கம் இல்லை. நீ தனியாகச் செல்கிறாய். எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்ற கூட்டங்களில் பெசுவது போல் அல்ல தேர்தல் கூட்டங்களில் பேசுவது. அதற்கான பயிற்சி உனக்கு இல்லை. எனவே கவனமாக இரு. எந்த ஊர்களில் பேசப்போகிறாயோ அதற்கான பட்டியலை முன்கூட்டியே தெரிவித்து விடு. அந்த பகுதி மா.செக்கள் மூலம் தேவையான பாதுகாப்பை அளிக்கச் சொல்கிறேன்' என்று கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்திமழை யூட்யூப் சானலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுபவீ பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவதும் அந்நேரங்களில் ஊடகங்களில் பேசுவதும் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளவேண்டியவை என்பதை கலைஞர் உணர்ந்திருந்தார் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.

இந்தியாவின் ஒரே பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தான் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக ஒரிஸாவில் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது எழுதப்பட்ட உரையினூடாக ஏதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு சில வார்த்தைகளையும் பேசினார்: ‘ இங்கே இன்று நான் இருக்கிறேன். நாளை இல்லாமலும் இருக்கலாம். நாட்டின் நலன்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் வேண்டும். என்னை சுட்டுக்கொல்ல எவ்வளவு முயற்சிகள் நடந்திருக்குமோ யாருக்கும் தெரியாது. வாழ்வதையும் சாவதையும் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் சேவையில் முழுமையாக வாழ்ந்திருப்பதில் பெருமை அடைகிறேன். நான் இறக்கையில் என் ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இந்தியாவை வலுவாக்கும்' என்றார். சில மாதங்களில் பொதுத்தேர்தல் வரக் கூடிய சூழலில் பேசப்பட்ட உரை அது!

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக சார்பில் சற்று கொள்கைரீதியாக தேர்தல் பிரச்சார உரைகளின் போக்கு அமைந்திருக்கும். அதிமுக சார்பிலான உரைகள் நேரடியாக மக்களின் உணர்ச்சியுடன் பேசுவதாக அமைந்திருக்கும் எனச் சொல்லலாம். 1980 - இல் தன் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் எம்ஜிஆர் அடுத்த சட்டமன்றத் தேர்தல் பிரச் சாரத்தில் வலுவான திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொண்டார். தனக்கு அநீதி இழைக்கப்பட் டதாகவே அவர் பிரச்சாரத்தில் முன்வைத்தார். 'என்ன குற்றம் செய்தேன்?' அவரது பிரச்சாரத் துக்கு முன்னர் காங் - திமுக கூட்டணி எதிர்த்து நிற்க முடியவில்லை!

இன்றைக்கு தேர்தல் பிரச்சாரங்களின் நிலை எப்படி இருக்கிறது? உங்க கட்சியில் நன்றாகப் பேசக்கூடிய இளம் தலைவர்கள் யார் என்று கேட்டால் பெரிய கட்சிகளில் கூட அடையாளம் காட்டத் தயங்கும் நிலையே உள்ளது. காரணம் பிரச்சாரம் என்பது தொலைக்காட்சித் திரைக்கும் சமூக ஊடகத்துக்கும் நகர்ந்துவிட்டது. பிரச் சார உரைகளை நேரில் கேட்க காசு கொடுத்து ஆட்கள் கூப்பிட்டுவரப்படுகிறார்கள்! அடுத்த தலைமுறையினர் இப்படியெல்லாம் பிரச்சாரம் நடந்திருக்கிறதா? 11 மணி நேரம் ஒருவர் தொடர்ந்து பேசியிருக்கிறாரா? இன்றைக்கு வருவதாகச் சொன்ன எம்ஜிஆர் நாளைக்குத் தான் வருவார் என்றாலும் மக்கள் காத்துக் கிடந்தார்களா என்றால் நம்ப மறுப்பார்கள்.

காங்கிரஸ் முழு பலத்துடன் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த நாட்கள் அவை. அடல்பிகாரி வாஜ்பாய், இந்திய அரசியல் கண்ட ஆகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் பெரும் தொழிலதிபர். தனக்கு வாக்களிக்கக்கோரும் நோட்டீஸ்களை வாஜ்பாயி பேசிய கூட்டத்திலேயே ஹெலிகாப்டர் மூலம் கொட்டியிருக்கிறார். இதைக் கண்ட வாஜ்பாயி முழங்கினார்.'அவர்கள் நோட்டீஸ்களுக்குப் பதிலாக பணத்தையே கொண்டுவந்து கொட்டட்டும். இறுதியில் நாம்தான் வெற்றி பெறுவோம்.' இன்று காலம் மாறி காங்கிரஸ் கட்சியினர் பாஜகவைப் பார்த்து இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலை வந்துவிட்டது!

அந்திமழை இதழின் சார்பாக 2013 ஆம் ஆண்டு பேச்சாளர்கள் சிறப்பிதழ் என்று ஒன்றைத் தயாரித்தோம். பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துபோன நிலையில் அடுத்த தலைமுறை தேர்தல் பேச்சாளர்களைப் பற்றிய இதழாக இதைத் தயாரித்திருக்கிறோம். அனைவரையும் சுட்ட இயலாது என்பதால் ஒரு சிலரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறோம். பொதுவாக தேர்தல் பிரச்சாரங்களின் போக்கைப் பற்றி அறிந்துகொள்ள இது உதவும். அதே சமயம் பழைய தேர்தல் பிரச்சார நினைவுகளும் இந்த இதழில் பகிரப்பட்டுள்ளன.

1951 - 52 இல் முதல் பொதுத்தேர்தல் நடந்தபோது நேரு காங்கிரஸுக்காக நாடெங்கும்போய் பிரச்சாரம் செய்தார். 200 ஆண்டுகால வெள்ளையர் ஆட்சி யை நாட்டின் பின் தங்கிய நிலைக்குக் காரணம் காட்டாமல் இதற்கெல்லாம் தானே போறுப்பேற்று உழைப்பதாகப் பேசியிருக்கிறார். பஞ்சாப்பில் பிரச் சாரம் செய்தபோது தனக்குப் பிறகு அங்கே எதிரணியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயண் பேச வரப்போவதாக அறிந்த அவர்,' நீங்கள் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்கவேண்டும் என நான் சொல்லுவேன். அவருடன் எனக்கு சில விஷயங்களில் உடன்பாடு கிடையாது. ஆனால் அவர் அற்புதமான மனிதர். பிறர் சொல்வதை நீங்கள் காதுகொடுத்து கேட்டு, வெவ்வேறு வாதங்களையும் அறிந்துகொண்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்' என்று பேசியிருக்கிறார். அது அன்றைய சூழல். இன்றைக்கு?

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலர் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார்கள். யாருடைய கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடுகின்றன என்பதை அறிய மே மாதம்வரை காத்திருப்போம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com