நிலைமம்
ஓவியம்: ரஞ்சித் பரஞ்ஜோதி

நிலைமம்

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை

சரவணனுக்கு ஒன்றும் ஓடவில்லை. கல்லூரியில் இருந்து வந்த தகவல் குழப்பமடைய வைத்தது. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்து பேசலாம் என்றால், அதற்கும் தயக்கமாக இருந்தது. அவரைப் பார்த்து யாரும் அவ்வளவு எளிதில் பேசி விட முடியாது எந்த சந்தேகத்தைக் கேட்டாலும், அவர் ஒரு பதில் வைத்திருப்பார். அவர் சொன்னதையே சரி என்று சாதிப்பார். குழப்பம் தீர்வதற்குப் பதிலாக, இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு.

சரவணன், நாகராஜனுக்கு போன் அடித்தான். காலேஜ்ல இருந்து மெசேஜ் வந்துச்சு பாத்தியா என்றான். ஆமா இப்ப தான் பார்த்தேன். அதுவும் எனக்கு ஆல்வின் சொல்லித்தான் தெரியும் என்றான் நாகராஜன். அவன் குரலில் கவலை தோய்ந்திருந்தது. மதி சாரைப் பாத்தியா என்றான் நாகராஜன். இல்ல, பாக்கல, அவரைப் பார்த்தா என்ன சொல்லுவாரு, அது தான் மெசேஜ் வந்திருக்குல்ல, பிறகு என்ன, அப்பிடின்னு சொல்லுவாரு, அதுக்கு மேல அவரு என்ன சொல்லுவாரு என்றான் சரவணன். ஆமா எதையும் அவங்க ஓப்பனா சொல்ல மாட்டேங்குறாங்க அது தான் பிரச்சனை என்றான் நாகராஜன். இப்ப என்ன செய்றது என்றான் சரவணன். மதி சாரை பார்த்து பேசினாத்தான் எதுவும் தெரியும் என்றான் நாகராஜன். சரி என்று போனை துண்டித்து விட்டு சரவணன் வகுப்பறையில் இருந்து மதி சாரின் அறையை நோக்கி நடந்தான். என்ன சொன்னாலும் பரவாயில்ல, அவரிடம் விவரத்தைக் கேட்டு விடுவது என்ற முடிவோடு நடந்தான். மெல்டா கம்பெனி செலக்‌ஷன் லிஸ்ட்டுல் இருந்து பத்துப் பேர தூக்கிட்டீங்களே எதுக்கு என்பதை கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு நடந்தான். தனியார் கல்லூரியில் இப்படி கேள்வி எல்லாம் கேட்க முடியாது என்ற மரபை மீற முடிவு செய்து நடந்தான். 

சரவணன் தான் அவன் வீட்டில் முதல் பட்டதாரி. அவனுக்கு பொறியியல் கல்லூரியில், கலந்தாய்வில் இடம் கிடைத்தது. அவனது அப்பாவுக்கு சந்தோசம். தான் பன்னிரெண்டு வரை மட்டுமே படித்து இருந்தது நல்லதாக போய்விட்டதாக நினைத்தார். இரண்டொரு நாளில் முதல் பட்டதாரிக்கான சான்றிதழை கொடுத்தார். சரவணின் அப்பா கல்லூரியில் சேர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவர் படிப்பை முடிக்கவில்லை. கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் போராட்டம் தான். சரவணனின் அப்பா, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பம்பாய்க்கு வரச் சொல்லி அவரது சித்தப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏய் உடனே கிளம்பி இங்க வா, மெரைன் கோர்ஸ் ஒன்னு இருக்கு, ரெண்டு வருசம் படிச்ச உடனே வேலை தான், அங்க ஊரைச் சுத்திக்கிட்டு திரியாம கிளம்பி வா என்று சித்தப்பா அன்பாகப் பேசினார். அதில் சரவணனின் அப்பாவுக்கு விருப்பம் இல்லை. உள்ளூரில் கிடைத்த நண்பர்களை விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை.

அது வெறும் நண்பர்கள் குழாம் என்று மட்டும் சொல்லி விட முடியாது. சினிமா, அரசியல், கதை, நாவல் என்று பலதையும் குறித்து மணிக்கணக்கில் பேசித் திரியும் கூட்டமாக இருந்தது. தனிப்பட்ட எதிர்காலம் குறித்தெல்லாம் பெரிய கனவேதும் அவர்களுக்கு இருந்தது இல்லை. அதுவும் மொழி தெரியாத ஊரில் போய் எதைச் சாதிக்க முடியும் என்றும் சரவணனின் அப்பா நினைத்து, அவரது சித்தப்பாவின் அழைப்பை மறுத்து விட்டார். ஆனால் கொஞ்ச காலம் கழித்து நிலைமை தலைகீழாக மாறிப் போனதை உணர்ந்தார். எதிர்வீட்டு கந்தசாமி பொறியியல் முடித்து விட்டு சிங்கப்பூர் போனதும், பெரிய தெரு சக்தி படிப்புக்காக அமெரிக்கா போனதும் அடுத்தடுத்து நடந்தன. சரவணனின் அப்பாவுக்கு நாலைந்து சித்தாப்பாக்கள். சித்தப்பாக்களின் பிள்ளைகள் அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கத்தார் என்று இப்போது பல நாடுகளில் உள்ளனர். சே, தெரியாத்தனமா வேண்டாம்னு விட்டுட்டோமே, பேசாம பம்பாய்க்கு போயிருக்கலாமோ என்று பலமுறை சரவணன் அப்பா யோசித்திருக்கிறார். 

சரவணனின் அப்பா பன்னிரெண்டு முடிக்கும் போது தான் ஆனந்த் படம் வெளிவந்தது. லதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ, நீ வேறோ நான் வேறோ பாட்டு தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். பிரபுவை தன் மடியில் போட்டு ராதா பாடும் பாட்டில், சொக்கிப் போய் பிரபுவாகவே மாறிய காலமது. ராதாக்களைத் தேடிய காலம்.

சரவணனின் அப்பாவிடம் எத்தனை காதல் உங்களுக்கு என்று கேட்டால், நாடியில் கை வைத்து யோசித்து யோசித்து சொல்லும் அளவுக்கு, தான் காதலித்த கதைகளைப் பட்டியல் போடுவார். எட்டு படிக்கும் போது, மதுரையில் இருந்து அவரது ஊருக்கு குடிவந்த சுஜாதா மீது தான் முதல் காதல். அந்தக் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாட்டுத் தான். சுஜாதாவும் எட்டு தான் படித்துக் கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்கு ஏதாவது வாங்க முக்கு கடைக்குத் தான் வருவாள். சரவணனின் அப்பாவும் முக்கு கடையே கதியென்று கிடப்பார். கடைக்கு வந்த சுஜாதா, யதேச்சையாக திரும்பிப் பார்த்தாலும் தன்னைத்தான் பார்த்துக் கொண்டதாக சரவணனின் அப்பா நினைத்துக் கொள்வார். அப்போது ரேடியோவில் உன் பார்வையில் ஓராயிரம், கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். 

தனது தெருவை விட்டுவிட்டு, வேண்டும் என்றே சுஜாதா வீட்டுத் தெருவில் வந்து விளையாடுவார். சாயங்காலத்தில் வீட்டு முற்றத்தில் நிற்கும் சுஜாதாவைப் பார்ப்பதற்கே அந்தத் தெருவில் சேக்காலிகளை பிடித்தார். பம்பரம், கபடி, கோகோ எல்லா விளையாட்டும் அந்தத் தெருவில் தான். பொழுது சாய்ந்து விட்டால் மனதில் அந்தப் பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும், தேவனின் கோவில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே, இன்று என் ஜீவன் தேயுதே, என் மனம் ஏனோ சாயுதே. 

பத்து முடித்து பிளஸ் ஒன் சேர்ந்த பிறகு சங்கரகுத்தாலம், அனந்தபெருமாள் என அவரது நட்பு வட்டம் மாறியது. சனிக்கிழமை என்றால் முதல் காட்சிக்கு கீதாலாயா தியேட்டரில் இருப்பார்கள். சினிமாவைத் தவிர ஊரில் எதுவும் இல்லை. அதுவும் சங்கரகுத்தாலம் நாயகன் படத்தை பத்து தடவையாவது பார்த்திருப்பான்.

நிழல்கள் ரவி உடலைப் பார்த்து கமல் அழுவதை, நினைத்து நினைத்து சங்கரகுத்தாலம் அழுவான். எதுக்கு, என்னாச்சுடா என்று கேட்டால் இப்பிடி யாராலும் நடிக்க முடியாதுடா என்பான். அவன் உண்மையிலேயே அழுகிறானா அல்லது நடிக்கிறானா என்று எல்லோருக்கும் தோன்றும். எல்லோர் மனதிலும் அந்தக் காட்சி ஓடும். துணியை விலக்கி கருகிய உடலைப் பார்த்து விட்டு, நெஞ்சில் கை வைத்து, மயில் குரல் கொடுப்பதைப் போல கத்திக் கொண்டு கமல் அழும் காட்சி. தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியில பாட்டு பின்னாலேயே சோகமாக ஓடி வரும். 

பள்ளிக்கு முன்னதாக இருக்கும் தேனப்பபுரம் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் தான் எல்லோரும் கூடுவார்கள். கடையின் ஓரத்தில் நின்று, கோல்டு பிளேக் பிளைன் சிகரெட்டை வாங்கி சுற்றுக்கு விடுவார்கள். பிறகு தான் பள்ளிக்கூடம். பெட்டிக் கடையின் பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்து, கூண்டிலிருந்து சிறகடித்து பறக்கும் பறவையைப் போல சங்கீதா ஓடோடி வருவாள். அவள் பெண்கள் பள்ளியில் படித்தாள். சரவணன் அப்பாவுக்கு உயரப் பறப்பது போல் தோன்றும். ரெண்டு வீடு தள்ளி சங்கீதாவோடு ஜெயலட்சுமியும் சேர்ந்து கொள்வாள். ஜெயலட்சுமியை அனந்தபெருமாள் காதலித்தான். பெருமாள் எழுதிக் கொடுத்த கடிதத்தை சரவணன் அப்பா தான் ஜெயலட்சுமியிடம் கொடுத்தார். மலங்க மலங்க முழித்தபடி ஜெயலட்சுமி வாங்கிக் கொண்டாள். சீக்கிரமே பெருமாள் காதலுக்கு ஜெயலட்சுமி பச்சைக்கொடி காட்டினாள். சரவணன் அப்பாவுக்கு தேனப்பபுரம் தெரு காதலும் கை கூடவில்லை. 

அப்பா, அம்மா இல்லாத சங்கீதா மாமா வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். ரொம்ப காலம் கழித்து அவளுக்கு அம்பாசமுத்திரத்தில் திருமணம் நடந்தது. ரெண்டொரு முறை அம்பாசமுத்திரம் போன போது, சங்கீதா வீட்டைக் கடந்து போகும் போது, அவளை எப்படியாவது பார்த்து விடலாம் என்று சரவணன் அப்பா நினைத்தது உண்டு. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. சங்கரகுத்தாலத்திடம் சொன்ன போது அவன் வாழ்வே மாயம் படத்து கதையை சோகத்தோடு சொல்ல ஆரம்பித்து விட்டான். அந்தப் பாட்டை வேறு பாடிக் காண்பித்தான். பிறக்கின்ற போதும் பாலை ஊட்டுவார் இங்கே, இறக்கின்ற போதும் பாலை ஊட்டுவார். தனக்கு எதுவும் செட் ஆகாது என்று நினைத்த சரவணன் அப்பா, சனிக்கிழமையானால் சைக்கிளை எடுத்துக் கொண்டு ராஜபாளையம் போய் விடுவார். காலைக் காட்சி, அடுத்து மதியக் காட்சி ரெண்டும் பார்த்து விட்டு ஊருக்குத் திரும்புவார். அந்த நேரத்தில் சினிமாவுக்கு போய் விடலாம் என்று அவருக்கு தோன்றியது. நல்ல கதையைத் தேடி நூலகத்திற்குப் போனார். அங்கு தான் சங்கரை சந்தித்தார். சங்கர் தான் சரவணன் அப்பாவுக்கு புத்தகங்களை முதலில் தேர்வு செய்து கொடுத்தார். 

கடல்புறா, சேரமான் காதலி, பொன்னியின் செல்வன் படித்து விட்டு, அனுராதா ரமணன், லெட்சுமி கதைகளுக்குத் தாவினார். பிறகு பட்டுக்கோட்டை பிரபாகர், அப்படியே சுஜாதா எனப் போய் ஒரு ரவுண்டு அடித்தார். ஒரு நாள் அவர் கையில் அதிகாலையின் அமைதியில் கிடைத்தது. அன்றைக்கே உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்ற முடிவுக்கு வந்து விட்டார். கோமதி ஸ்டூடியோ மாடியில் நடக்கும் இலக்கிய கூட்டத்துக்கு தவறாமல் போக ஆரம்பித்தார். மஸ்தான் சார், தன் ஸ்டூடியோவுக்கு கோமதி எனப் பெயர் வைத்திருந்தார். இலக்கிய சர்ச்சையில் சென்னைக்கு போவதை விட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த கல்லூரியில் போய்ச் சேர்ந்தார். படிச்சா மட்டும் போதாது, காலேஜ்ல சங்கத்த ஆரம்பிக்கனும் என்று முடிவெடுத்தார் நண்பர்களோடு. சங்கம் ஆரம்பித்தால் சும்மா இருக்குமா நிர்வாகம். அவர்கள் சஸ்பெண்ட் செய்ய, பதிலுக்கு யூனியன் வேண்டும் என்று போராட்டத்தை துவக்க, கடைசியில் சரவணனின் அப்பா கல்லூரியில் இருந்து ஒரே அடியாக நீக்கப்பட்டார். அப்படி நின்று போன படிப்பு, சரவணனுக்கு உதவியாக அமையும் என்று அப்போது யாருக்கும் தெரியாது. இப்போது முதலில் சந்தோசப்பட்டவர் சரவணனின் அப்பா தான். சரவணனுக்கே அப்போது தான் தெரிய வந்தது அப்பா டிகிரி முடிக்கவில்லை என்று. 

அந்த வேலை, இந்த வேலை என்று மாறி மாறி சென்றாலும் சரவணன் அப்பா சங்க வேலையை விடவில்லை. சின்ன வயசில் சரவணன், அப்பா சொன்ன எல்லா கதைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்ப தான அவரு வெளிய கூட்டிட்டுப் போவாரு. ஆனால் வீட்டில் நடக்கும் சண்டை தான் சரவணனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு வீடு கிடையாது, ஒரு நகை நட்டு கிடையாது, எப்ப பாத்தாலும், சங்கம், கூட்டம்னு அலைஞ்சா எங்க உருப்படும் என்று சரவணன் அம்மா தனது ஆற்றாமையைக் கொட்டுவாள். அமைதியாக இருந்திருந்தாள் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் விளக்கம் சொல்லப் போறேன் பேர்வழி என்று சரவணன் அப்பா நாட்டு நடப்புகளை சொல்ல ஆரம்பிப்பார். இதை எல்லா எங்காயாவது கூட்ட்த்துல போயி பேசுங்க, எங்கிட்ட வேணாம் என்று ஒரே போடாக போடுவாள் சரவணன் அம்மா. சில சமயம் சண்டை முற்றிப் போகும். ஒரு முறை சண்டையில் சரவணன் அம்மா குக்கர் மூடியை எடுத்து தன் தலையில் அடித்துக் கொள்ள ரத்தம் கொட்டியது. சரவணன் ரத்தத்தை பார்த்து அழுத அழுகை ஊருக்கே கேட்டிருக்கும். நாட்கள் செல்லச்செல்ல சரவணனுக்கு விசயங்கள் பிடிபட ஆரம்பித்தது. அம்மாவின் விருப்பமும், அப்பாவின் லட்சியமும் இரு துருவங்களாக இருந்தன. பிறகு சரவணன் வீட்டில் இருப்பதை குறைத்துக் கொண்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு திருமால்நகர் மலைக்குச் சென்று விடுவான். நண்பர்களோடு கால்பந்து விளையாடுவான். படிச்ச உடனே வேலைக்கு போகனும் தம்பி என்று அம்மா சொன்னதை மட்டும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டான். 

மதி சாரின் அறைக்கு வெளியே நின்றிருந்தான் சரவணன். மதி சார் உள்ளே சில பேருடன் பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அனைவரும் வெளியேறினர். கடைசியாக மதி சாரும் வெளியே வந்தார். சரவணன் ஒரு வணக்கம் வைத்தான். என்னப்பா என்றார் மதி சார். மெசேஜ் பாத்தேன், மெல்டா கம்பெனி லிஸ்ட்டுல இருந்து என் பேரை எடுத்துட்டாங்க என்றான் சரவணன். மதி சார், சரவணனை ஏற இறங்கப் பார்த்தார். நம்ம காலேஜூல படிக்கிற எல்லாப் பேரும் வேலைக்கு போகனும் அப்படிங்குறது தான் மேனேஜ்மெண்ட் விருப்பம், அது உனக்கே நல்லா தெரியும். ஆமா என்பது போல சரவணன் தலையை ஆட்டினான். மெல்டா கம்பெனி இப்ப தான் முதல் தடவையா நம்ம காலேஜூக்கு கேம்பஸ் இண்டர்வியூ வந்தாங்க, நாப்பது பேர எடுத்தாங்க, இப்ப முப்பது பேரு போதுங்குறாங்க, ஒன்ன மாதிரி நல்லா படிக்கிற பத்துப் பேர எடுத்துட்டோம் என்றார் மதி சார். சார், நாங்க செலக்ட் ஆயிட்டோம். அதனால வேற கம்பெனி இண்டர்வியூல கலந்துக்க கூடாதுன்னு சொன்னதால, வேற எதுலயு நாங்க கலந்துக்கல, அப்ப நாங்க என்ன பண்றது சார் என்றான். சரவணன் குரல் மெலிந்து சன்னமாகியது. மதி சார் அவனைக் கூரந்து பார்த்தார். இல்லப்பா, இன்னும் சில கம்பெனி வருது, வந்த கம்பெனிகள்ல சிலதை மறுபடி கூப்பிட்டு இருக்கோம், கவலைப்படாத பார்க்கலாம் என்று சொல்லி விட்டு, சரவணனின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். அந்த இ்டத்திலேயே செய்வதறியாது, திகைத்துப் போய் சரவணன் நின்றான். 

இரண்டாவது மாடியில் இருந்து இறங்கி ஹாலோபிளாக் செங்கல் பதித்த கல்லூரிச் சாலையில் நடந்தான். ஆங்காங்கே சில மரங்கள் அசைவற்று நின்றிருந்தன. மாலை வெய்யில் பலத்து அடித்தது. கேண்டீன் பக்கமாக வந்து, வாசலுக்கு செல்லும் சாலையில் நடந்தான். 

முதலில் ஒரு கம்பெனி இண்டர்வியூக்கு சென்னைக்கு போனான் சரவணன். முதல் நாள் மூன்று பேர் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள். எல்லாம் முடிந்து டீ குடித்துக் கொண்டே பேசுகையில், உங்கப்பா என்ன செய்றாரு, அவங்க ஹாபி என்ன என்று கேட்ட போது, சரவணன் அவனது அப்பாவுக்கு இருக்கும் சங்க ஆர்வத்தை மறதியாக சொல்லி விட்டான். மறுநாளும் இண்டர்வியூ தொடர்ந்தது. ஆனால் இரவு எட்டு மணி போல சரவணன் தேர்வாகவில்லை என்ற தகவலைச் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி, தாம்பரம் வந்து, பிறகு பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தான் சரவணன். முதன் முதலாக அம்மாவைப் போலவே, அப்பாவின் சங்க வேலைக்கு எதிரான கோபம் ஒன்று சரவணன் மனதில் உருவானது. வேறு ஒரு கம்பெனியிலும் தேர்வாகவில்லை. அடுத்து வந்த மெல்டாவில் தேர்வாகி, இப்போது அதுவும் இல்லை என்றாகி விட்டது. 

சரவணனின் அம்மா இட்லியை தட்டில் வைத்து சரவணனை சாப்பிடக் கூப்பிட்டாள். சரவணனின் அப்பா, நீ எதுக்கு நான் சங்க வேலை, ஆர்ப்பாட்டம்னு சுத்துறத இண்டர்வியூல சொல்ற என்றார். சாப்பிட உட்கார்ந்திருந்த சரவணன், அப்பாவைத் திரும்பிப் பார்த்தான். நீ எதுக்கு அதுல இருக்க, என்னைய பொய் சொல்லச் சொல்றியா என்றான். இது எல்லாம் டேக்டீஸ், இடத்துக்கு தக்கன சில விசயங்களை சொல்ல வேண்டியிருக்கும் என்றார் சரவணன் அப்பா. 

இது எதுவும் பிடிக்கவில்லை என்பது சரவணன் முகத்திலேயே தெரிந்தது. கிடைக்கிறத பிடிச்சிக்கனும், அது தான் கெட்டிக்காரத்தனம் என்றார் அப்பா. உனக்கு ஏன் அந்தக் கெட்டிக்காரத்தனம் இல்ல என்று இட்லி தட்டை தள்ளி விட்டு சத்தமாக கேட்டான் சரவணன். அந்த சத்தத்தைக் கேட்டு மிரண்டு போனது போல பார்த்தார் சரவணன் அப்பா. சரவணனா இப்படிக் கேட்டான். அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

எத்தனை கதைகளை அவனுக்குச் சொல்லி இருப்பார். பகத்சிங் கதையை சொல்லி இருக்கிறார். ஓடும் ரயிலில் இருந்து, பிரிட்டிஷாரின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்த தீரர்களின் கதைகளைச் சொல்லி இருக்கிறார். குண்டடிபட்டு செத்துப் போன ஆசாத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார். ஆசாத் சாய்ந்து விழுந்த மரமே, மக்களின் வழிபாட்டுத்தலமாக மாறிப்போனதை அடுத்து, அந்த மரத்தையே வெட்டிச்சாய்த்த கதையைச் சொல்லி இருக்கிறார். எத்தனை எத்தனை கதைகளை சொல்லி இருக்கிறார். அவனையே உற்றுப் பார்த்தார் சரவணன் அப்பா. அது சரவணனை முறைத்துப் பார்ப்பது போல் தோன்றியது. முறைச்சிப் பார்த்தா, எதுக்கு பிரயோஜனமில்லாத வேலைய இத்தன நாளா கட்டிக்கிட்டு அழுதிருக்கியே என்றான் சரவணன். 

ஷெல்பில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் சரிந்து கீழே விழுந்தன. காலடியில் வந்து விழுந்த புத்தகங்களை வெறித்துப் பார்த்தார் சரவணன் அப்பா. பழுப்பேறிய அந்த புத்தகங்கள் காற்றில் படபடத்தன. அதற்கும் உயிர் இருந்து, எதையோ சொல்ல துடிப்பது போல இருந்தது. காலம் தான் எத்தனை மாறிக்கிடக்கிறது. சீட்டுக்கட்டைப் போல அனைத்தும் இடம் மாறிக்கிடக்கிறது. அர்த்தங்களும் மாறித்தான் போய் விட்டன. எதுவும் முடிவுக்கு வரவில்லை என உரக்கச் சொல்ல வேண்டும் போல் சரவணன் அப்பாவுக்குத் தோன்றியது. அவரது முகத்தைப் பார்க்க பார்க்க, சரவணன் அம்மாவால் தாங்க முடியவில்லை. அம்மாவுக்கு லேசாக கண்கள் கலங்கின. 

அம்மாவுக்கு அப்பா மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், அப்பாவின் கனவுகளை ஒரு போதும் தவறென்று நினைத்தது கிடையாது. கனவுகள் இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டா என்ன? அங்கு நிலவிய அமைதி அனைவருக்கும் தேவைப்பட்டது. அந்த அமைதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பல நினைவுகள் மீண்டெழுந்தன.   சரவணன் அப்பா ஜோல்னா பையை தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு எதுவும் பேசாமல் வெளியேறினார். டிவியில் அப்போது அந்தப் பாட்டு ஒலித்துக் கொண்டு இருந்தது. போகும் பாதை தூரமில்லை, வாழும் வாழ்க்கை பாரமில்லை, சாய்ந்து தோள் கொடு, இறைவன் உந்தன் காலடியில், இருள் விலகும் அக ஒளியில், அன்னம் பகிர்ந்திடு. சரவணனின் அப்பா காதில் அந்த வயலின் இசை கேட்டுக் கொண்டே இருந்தது. அவர் வீட்டு வாசலுக்கு வந்த போது தான், அங்கு நின்றிருந்த செல்லத்துரையைப் பார்த்தார். 

என்ன துரை, வேலை எல்லா முடிஞ்சிருச்சா, இன்னைக்கு உங்களுக்கு எந்த ஏரியா என்றார். ரெண்டு நாளையில் மந்திரி வாறதால மெயின் ரோட சுத்தம் பண்ணச் சொல்லிட்டாங்க முடிச்சிட்டு வாறேன் என்றார் துரை. வேற என்ன சேதி என்றார் சரவணன் அப்பா. வண்ணார்பேட்டை ஏரியாவுல வேல பாத்துக்கிட்டு இருந்த சேர்மக்கனிங்குற புள்ளைய மாடு முட்டி தள்ளிருச்சி, அதுக்கு மூனு புள்ளைங்க, எல்லா நாலஞ்சு நாளா பட்டினி கெடக்கு, கார்ப்பரேஷன்ல பேசி நஷ்டஈடு ஏதாச்சு வாங்கிக் கொடுக்கனும் என்றார் துரை. வாங்க போகலாம் என்று துரையை அழைத்துக் கொண்டு சரவணன் அப்பா நடக்க ஆரம்பித்தார். சூரியன் மேலேறிக் கொண்டிருந்தான். 

கே.ஜி. பாஸ்கரன்

திருநெல்வேலியில் வசித்து வரும் கே.ஜி. பாஸ்கரன், இடதுசாரி அரசியல் இயக்க ஊழியர்.  மஞ்சள் பையும் மோப்ப நாயும் எனும் சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது.  நதிக்கரை அரசியல், கனவுகள் ஒரு நாள் கைகூடும், வள்ளலார் சர்ச்சையும் உண்மையும் எனும் கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com