நாற்றாங்கால்

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை
நாற்றாங்கால்
ஓவியம்: வேலு
Published on

இன்னிக்கு நம்ம சீராளன் பள்ளிக்கூடத்தல பேச்சுப் போட்டியில பேசப் போறானாம்... அவனோட ஆயி அப்பனையும் கூட வரச் சொல்லியிருக்காக. சித்த நேரம் அவங்ககூட போ. நான் சொசைட்டியிலே நூறு நாள் காசு ஏறியிருக்கான்னு பாத்து எடுத்துட்டு வந்துடுறேன்... மாட்டுக்கு தீவனம் வாங்க கூட காசு இல்ல” வேலம்மாள் வாசலில் கட்டியிருந்த ஆடுகளுக்கு கீரைத் தழைகளை கட்டியபடியே திண்ணையின் விளிம்பில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்து பஞ்சு சிகரெட் உறிஞ்சிக் கொண்டு இருக்கும் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளை ஏளனமாக பார்த்த அவன், சிகரெட்டு புகையை பெருவிரலால் தட்டியவாறு,

“ஏலோய் நாளைக்கு கட்சி மாநாடு, வேலையைப் பாக்கணும், ஆள் புடிக்கணும், பணம் பட்டுவாடா செய்யணும், வண்டிக்கு அட்வான்ஸ் தரணும், நம்ம சாதிக்கரங்களை ஒண்ணு சேர்க்கணும்… பொறுப்பும் பணமும் ஏங்கிட்ட இருக்கு தலவரு நம்மள நம்பி தேனி மாவட்டத்தையே ஒப்படைச்சிருக்கார்… அதேன் எனக்கு முக்கியம்… நீயே அவங்கூட போலோய்” என்றான்

“அதான… என்னடா காலங்காத்தால எலி அம்மணம்மா ஓடுதுன்னு பாத்தேன். வெள்ளையும் சொள்ளையுமா துண்டு தோள்ல தொங்கும் போதே தொரை ஊருக்கு தொண்டூழியம் பண்ண கிளம்பிட்டாருன்னு” என்றாள் வேலம்மாள்.

“பாத்தியில்லேவே… அப்புறம் ஏங் கேக்கற?”

தோளில் இருந்த கட்சிக் கரை துண்டை சரிசெய்தபடி இரண்டு பக்கமும் அதன் தலைப்பை ஒரே நேருக்கு வைத்தும் இருக்குமாறு செய்தான். திண்ணையை விட்டு எழுந்து சுவரில் மாட்டியிருந்த ஆள் உயர கண்ணாடியில் பார்த்தான். சீப்பால் மீசையையும் இரண்டு பக்க கிருதாவையும் காதுக்கு மேல் நோக்கி வாரி விட்டான். கண்ணாடிக்கு அருகில் இருந்த சந்தனம் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டான். தன் வலது கையில் அவன் சாதி அடையாளத்தை காட்டும் கயிறுகளை இடது கை ஆட்காட்டி விரலால் நுழைத்து ஒரு சுற்று போட்டான். அதில் ஜவ்வாது எடுத்துப் பூசிக் கொண்டான்.  அதன் வாசம் அந்த வீடு முழுவதும் பரவியது. வாசலில் நின்றிருந்த பைக்கை ஸ்டார்ட் செய்து வெளியில் கிளம்பினான்.

வீட்டின் உள்கூடத்தில் நாளைக்கு நடக்க இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தயாராக ஆசிரியர் எழுதிக் கொடுத்த “நான் விரும்பும் தலைவர்” என்ற தலைப்பில் வேலம்மாளின் மகன் சீராளன் மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய சாதிக் கட்சியில் பூமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் கட்சி சார்ந்த பொறுப்பில் இருப்பவன் வேலம்மாளின் கணவன் பூமலை கணேசன். எழுதப் படிக்கத் தெரிந்தவன். கட்சி நடத்தும் பத்திரி்கைகளில் சந்தா செலுத்தி அதனை மட்டுமே வாசித்தும் குறிப்பு எடுத்துக்கொண்டு தேனி வட்டாரத்தில இயக்கம் நடத்தும் பொது கூட்டங்களுக்கும் அந்தக் குறிப்பை ஆதாரத்துடன் பேசி கைத்தட்டல் பெற்று தற்போது  முன்னணி பேச்சாளர்.

மறுநாள் பூமலைக்குண்டு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உள்ளுர் ஊராட்சி மன்றத் தலைவர் என்று ஒவ்வொருவராய் வந்தபடி இருந்தார்கள். நிகழ்வு நடக்கும் இடமும் நிரம்பி வழிந்தது.

சீராளன் தலைக்கு எண்ணெய் தடவி படிய சீவி பள்ளிச் சீருடை அணிந்திருந்தான். உடன் அவன் அம்மா வேலம்மாளும் இருந்த சேலைகளில் நல்ல சேலையாக எடுத்துக் கட்டி அதற்கு மேட்சாக ஜாக்கெட்டும் உடுத்தி இருந்தாள். இருவரும் கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் அமர்வதற்கு இருக்கையைத் தேடி கூட்டத்தில் நடுப்பகுதியில் இரண்டு சேர்களை கண்டுபிடித்து அமர எத்தனித்த போது, “டேய் சீராளா” என்ற சத்தம் வந்தது. சத்தம் பார்வையாளரின் பின் இருக்கையில் வரும் திசையை நோட்டம் விட்டான், சீராளன.

“எலேய் சீரளா நாந்தேன் இதிகாசன் இங்கிட்டு பாரு” உரத்த சத்தமிட்டபடியே இருக்கையை விட்டு எழுந்து அவனுக்குத் தெரியுமாறு தன் கையை உயர்த்தி சைகை செய்தான்.

இப்போது சீராளன் பார்த்துவிட்டு “எலேய் இதிகாசா நீயா?” என்று சொல்லியபடியே “எம்மோவ் வா இதிகாசன் பக்கம் போய் உட்காரலாம்” என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சேர்களை விலக்கியபடி இதிகாசன் அருகில் வந்தார்கள்.

இதிகாசன் அமர்ந்திருந்த இருக்கை அருகில் அவனது அப்பா கோவிந்தராஜ் அமர்ந்திருக்க, தனது கைகளை கூப்பி கும்பிடு போட்டவாறு, “வணக்கம்” என்றான்.  “உட்காருடா சீரளா உங்கொப்பன் வரலியா?” கோவிந்தராஜ் கேட்டார்.

 சற்று விழித்த வேலம்மாள், “ண்ணே இன்னிக்கு தான் திருச்சி சாதி ஒருங்கிணைப்பு மாநாடு. அங்க  போயிடுச்சு” என்றாள்.

“இப்புடி கிறுக்கு புடுச்சி திரிய்யறானேம்மா” ஒரு விதமான கவலை அந்த வார்த்தையில் வெளிப்பட, “மகன் கூட பள்ளிக்கூடத்துக்கு வந்து போட்டி  மேடையி்ல என்ன பேசுறான்னு கண்ணழகு பாக்காம”

இதிகாசன், சீராளன்  இருவரும் ஒரே பள்ளி மாணவர்கள். அது மட்டுமல்லாது ஒரே ஊரைச் சேர்ந்தவர்களும் கூட. மாமன் மச்சான் உறவில் எதையும் கேட்டுப் பெறும் அளவிற்கு உரிமையும் பாந்தமும் இருக்கிறது.

இதிகாசன் தந்தை கோவிந்தராஜூக்கு பூமலை கணேசனைப் போல தன் சமூகத்தின் மீது கெட்டித் தன்மை கிடையாது. நல்லது கெட்டதற்கும் செய்முறை சீர் என்பதற்கும் மட்டுமே கலந்து கொள்வார். வனத்தில் மேய்ந்து இனத்தில் சேர்ந்து கொள்ளும் பொத்தாம் பொதுவான கொள்கையில் இருப்பவர், உள்ளுர் சாதி சங்கத்தில் அங்கத்தினர் மட்டுமே.

இப்போது நிகழ்வு ஆரம்பித்து, “பூமலைக்குண்டு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு ‘அ’ பிரிவு மா.இதிகாசன் பேசலாம்” தொகுப்பாளர் அழைத்தார்.

இதிகாசன் மேடையில் ஏறியவுடன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த அவனின் தந்தை கோவிந்தராஜ் தனது பெரிய ஸ்மார்ட் போனை எடுத்துக் கொண்டு மேடைக்கு அருகில் சென்று வீடியோ பட்டனை தடவி மகனின் பேச்சை வீடியோ எடுக்க ஆயத்தமானார்.

இதிகாசன் “நான் விரும்பும் தலைவர், இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்… இவர்… என்றவுடன் கூட்டத்தில் சராமாரியாக கைத்தட்டல் விழுந்தது. அரங்க மேடையில் இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். இதிகாசனின் பேச்சில் கைத்தட்டல் விழுந்தபடி இருந்தது. “அடுத்து பூமலைக்குண்டு பள்ளி மாணவர் பி பிரிவு சீராளன் பேசலாம்” தொகுப்பாளர் அழைத்தார். விழா மேடையில் ஏறிய சீராளன், “நான் விரும்பும் தலைவர்… அவர் பெயரைச் சொன்னவுடன் மீண்டும் கரகோஷம். அவர் இந்திய திருநாட்டிற்கு மட்டுமல்ல… மனித சமுதாயம் அனைத்திற்கும் ஒப்பற்ற தலைவர்’ மீண்டும் பெயரைச் சொல்ல கூட்டத்தல் கைத்தட்டல் ஆரம்பித்தும், சிலர் விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் தான் தொடங்கிய பேச்சில் பிசிறு இல்லாமல், தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசினான்.  உடல்மொழியும் உரையில் ஏற்ற இறக்கத்துடன் வார்த்தை உச்சரிப்பும், கைதேர்ந்த பேச்சாளர் போல் இருக்க, தாய் வேலம்மாளோ அப்படியே அவங்கப்பனைப் போலவே இருக்கான் என் நினைத்துக் கொண்டாள். அருகில் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த கோவிந்தராஜ் வேலம்மாளைப் பார்த்து மெல்லிய சிரிப்பை காட்டி மேடையில் பேசும் சீராளனை காட்டி தலையசைத்து காட்டினான். அதில் “ஏ வேலம்மா, உன் மகன் மேடையில போடுற போடப் பாரு” எனச் சொல்வது போல் வேலம்மாளுக்கு புரிந்தது.

கூட்டத்தில் இதிகாசனுக்குப் போலவே கரகோசம், கூடுதலாக விசில் சத்தம் கேட்டபடி இருந்தது. தாய்க்கோ தலைகால் புரியவில்லை. “எழவு எடுத்த மகனே எங்கோ போய் ஊரு சுத்திகிட்டு மூத்திர தண்ணிய்ய குடிச்சிட்டு சுத்திக்கிட்டு இருப்பான், இதெல்லாம் எப்ப பாக்க போறான்” என்று மனதுக்குள் நினைத்தபடி ”ஊர் பயல்களுக்கு ஊழியம் செய்ய போறானாம். வரட்டும் அவன்்” என்று நினைத்துக் கொண்டாள். வீட்டுக்கு போனதும் மொத வேலையா மொளகா சுத்திப் போடணும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அடுத்தடுத்து மாணவர்கள் அழைக்கப்பட அவரவர் பங்கிற்கு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வும் முடிவிற்கு வந்தது. கூட்டத்திற்கு வந்தவர்கள் கலையத் தொடங்கியதும் பெற்றோர் அவரவர் குழந்தைகளை அழைத்தபடி சென்றனர்.

மூன்று நாட்கள் கழித்து தெருக்கோடியில் இருக்கும் வீடும் கடையுமாக உள்ள காளீஸ்வரி தேநீர்க் கடையில் பெஞ்சில் அமர்ந்து கோவிந்தராஜ் அன்றைய செய்தித்தாளை புரட்டியவாறு இருந்தார். “என்ன சேதி போட்டிருக்கு கோயிந்து” என்று அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் கேட்டார்.

“என்ன வழக்கம் போலத் தான் இருக்கு” என்று சொல்லியபடி இருக்க,   “ஏய் கோயிந்து என்னய்யா நம்ம பள்ளிக்கூடத்துல நடந்த சேதி படத்தோடு வந்திருக்குய்யா ஒங்க படமும் போட்டிருக்காய்ங்க” என்று சொல்லிக்கொண்டே ஒரு நடுத்தர வயதுக்காரர் தனியாக இருந்த செய்தித்தாளை எடுத்து கோவிந்தராஜிடம் தந்தார். வாங்கிப் பார்த்த கோவிந்தராஜ், “ஆமா எம் மவன், நம்ம பூமலைகணேசன் மகன் இவிய்ங்கெல்லாம் பேச்சுப் போட்டியில்ல கலெக்டர் முன்னால பேசிக் காட்டினது, அந்த விஷயத்தைப் போட்டிருக்காய்ங்க” என்று சொல்லிக் கொண்டே “ஏப்பா... இந்த பேப்பர் எனக்கு வேணும்யா, எடுத்துக்கிறேன்” என்று கேட்டுக் கொண்டே கடைக்காரரின் ஒப்புதலுக்குக் கூட காத்திராமல் பேப்பரை மடித்துக் கையில் வைத்துக் கொண்டான். கடைக்காரரோ தலையை மட்டும் ஆட்டியவாறு, டீக்குவளையை ஆத்திவிட்டுக் கொண்டார். கோவிந்தராஜ் செய்தித்தாளும் கையுமாக நடந்து பூமலை கணேசன் வீட்டை அடைந்தான்.

வீட்டின் தாழ்வாரத் திண்ணையில் பிளாஸ்டிக் சேரில் கீற்றுக் கீற்றாக விபூதி பட்டை, குங்குமம், சந்தனத்துடன் பூமலை கணேசனின் அதே டிரேட் மார்க்குடன் கையில் செல்போனை வைத்து எதையோ கவனித்துக் கொண்டு இருந்தான். வேலம்மாள் மாடுகளுக்கு தொழுவத்தில் குறுதாடியில் தண்ணீரில் மாட்டு தீவனம் கலந்து கொண்டிருந்தவள் வாசலில் வந்த கோவிந்தராசுவைப் பார்த்துவிட்டாள்.

“ண்ணே, வாண்ணே இ்ந்நேரம் என்ன விசயம்? என்று கேட்டுக் கொண்டே “ஏய் சீராளா அண்ணே வந்திருக்கு நீ எத பாத்திக்கிட்டிருக்கவே” என்றாள்.  திருமணம் ஆன புதிதில் மச்சான் என அழைத்துக் கொண்டுதான் இருந்தாள், வேலம்மாள். பிறகு ஒரு மகன் பிறந்து அவனின் பெயரான சீராளன் என்ற பெயரிலேயே புருசனை அழைக்கத் தொடங்கி விட்டாள். எவ்வளவு கூட்டம், திருவிழா கும்பலும் என்று இருந்தாலும் புருசன் “ஏய் சீராளா” என்று அழைத்தால் போதும், தன்னைத் தான் அழைக்கிறான் என்று புரிந்து கொள்வான். அவனும், மனைவி கூப்பிடும் சத்தம் கேட்டு செல்போனில் இருந்து நிமிர்ந்து பார்த்துவிட்டு வாசலில் நின்றிருந்த கோவிந்தராஜைப் பார்த்த-வுடன் “வாய்யா, மாப்பிள்ள என்ன விசயம்? காலங்காத்தாலே...’ என்றவன் வீட்டின் உள்கூடத்தில் இருந்த ஒரு பிளாஸ்டிக் சேரை எடுத்து வந்து உட்கார் எனச் சொல்லியபடி தானும் அமர்ந்தான். கோவிந்தராஜூம் சேரில் அமர்ந்தவாறு தான் கொண்டு வந்த செய்தித் தாளை பிரித்து பள்ளியில் நடந்து நிகழ்வின் செய்தியையும் படத்தையும் அவனிடம் நீட்டியபடியே “கணேசா ஒம்மவனும், எம்மவனும் பேச்சுப் போட்டியில பேசுனது படத்தோடு செய்தி போட்டிருக்காங்கப்பா” என்றான். செய்தித் தாளை வாங்கிய பூமலை கணேசன் ஒரு பார்வை பார்த்து விட்டு சாவதானமாக “இது தானா… ஏய் கோவிந்து நான் பேசினதெல்லாம் சேகாரம் செய்திருந்தேனா வீடு கொள்ளாதுயா… என்னமோ முக்கியமான விசயம்ன்னு சொல்லிட்டு சின்ன பயல்களுக்கு எழுதிக் குடுத்து பேசினதை எடுத்திட்டு வந்திட்டே” என்று சொல்லிக் கொண்டே நக்கலாக சிரித்தபடி அசட்டையாக அந்த பேப்பரை கோவிந்தராஜூவின் மடியில் வீசினான்.

“யோவ் என்னய்யா சின்னப் பயல்கங்கிறே, பேசினது நாம பெத்த புள்ளைக என்னமா பேசினாய்ங்கன்னு தெரியுமா?”

“என்னத்தப் பேசிக் கிழிச்சாய்ங்க”

 “பள்ளிக்கூடமே அதிர்ந்து போற அளவுக்கு கைத்தட்டல். கலெக்டர் அம்மா வேற தட்டிக் கொடுத்து பாராட்டினாங்க தெரியுமா? மாவட்டத்துல முப்பது பேர்கள் கலந்துகிட்டாங்க எப்படியும் நம்ம சீராளனுக்கும், எம் மகன் இதிகாசனுக்கும் மொத பரிசு இல்ல ரெண்டாம் பரிசு கிடைக்கும்யா’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையில் குறுக்கிட்ட வேலம்மாள் வீட்டிக்குள் இருந்தபடியே “எப்பண்ணே பரிசெல்லாம் தருவாங்க?” என்று கேட்டாள்.

”ஏம்மா தங்கச்சி தேனியில்ல பொத்தக திருவிழா நடக்க போவுதாம் அங்கே வச்சு தருவாங்கலாம்’’ என்று திண்ணையில் அமர்ந்தவாறு பதில் தர, எதையும் காதில் வாங்காமல் மீண்டும் கையில் இருந்த செல்போனை தடவிக்கொண்டே “இம்ம் அப்படியா மாப்பிள்ளே” என்று ஆச்சரியமாக கேட்பது போல தனது கவனத்தை செல்போனில் தடவுவதில் இருந்தான். “ ஏம்பா நான் சொல்றது ஒனக்கு கிண்டலா தெரிய்யுதா” என்று கேட்டுக் கொண்டே சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து அதை விரலால் தடவி ஒரு வீடியோ பக்கத்தை எடுத்து “பாருய்யா” என தனது சேரை நகர்த்தி கணேசன் முகத்திற்கு அருகில் கோவிந்தராஜ் செல்போனின் வீடியோவைக் காண்பித்தான்.

அதில் கோவிந்தராஜ் மகன் இதிகாசன் மேடையில் பேசி உரையின் பதிவைக் காட்டிட கூர்ந்து பார்த்தபடி பூமலை கணேசனுக்கு, சிறிது நேரம் கவனித்தவன் முகம் மெல்ல மெல்ல மாறியது. அதில் கோபக் குறி தென்பட்டது. பிறகு அது முடிந்து, “இரு கணேசா ஏம் மவன் போட்ட போடு பாரு” என்று அடுத்த வீடியோ பதிவைக் காட்டினார்.

தன் மகனின் பேச்சு உரை எப்படி இருக்கிறது? என்று அவனையும் அறியாமல் ஒரு உற்சாகத்திலும் தன்னைப் போலவே பேசுகிறானா என்று பார்க்கும் ஆர்வமும் கூடியதால் தன் மகனின் உரையைக் கேட்கத் தொடங்கினான் பூமலை கணேசன். கேட்டுக் கொண்டிருந்த சில நிமிடத்திலே தன் மகனுக்கு கரகோசமும், பார்வையாளர் பகுதியில் இருந்து வரத்தொடங்கியது.

சில வரலாற்றுப் பதிவுகளையும், சீராளன் பேசிய தலைவரின் வாழ்க்கை குறிப்புகளும், வரலாற்று நடந்த ஆண்டுகளின் குறிப்புகளையும் எடுத்து உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த பூமலை கணேசனுக்கு கண்கள் சிவப்பாக கடுங்கோபம் கொண்டு, “நிறுத்துய்யா வீடியோவ, தேசத் தலைவரு, வெண்ணைத் தலைவரு” என்று ஆவேசமாகக் கத்தினான். கோவிந்தராஜ் செல்போனை நிறுத்தி தன் சட்டைப் பைக்குள் வைத்தான்.

“ஆமா இந்தப் போட்டி யாரு மூலியமா நடத்துறாய்ங்க”

“மாவட்ட கல்வித்துறை நூலகத்துறை மூலம்தே, ஏன் கேக்குற”

பூமலைகணேசனின் வார்த்தைகளில் ஒருமையும், சில ஆபாசமான வார்த்தைகளும் சரளமாக வந்து கொண்டிருக்க, “என்ன ஆச்சுயா நல்லதான பசங்க பேசினாய்ங்க”

“யாரைக் கேட்டு என் மவன சேர்த்தாய்ங்க”

“இதுக்கு யாரையா கேக்கணும்”

“தலைவராம், தலைவர், மயிர்த் தலைவர்… ஏலோ வேலு” என்று உரத்த சத்தத்துடன் வீட்டின் உள் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மனைவியை அழைத்தான். அருகில் கோவிந்தராஜ் பூமலை கணேசனின் முகத்தை கவனித்தான். ஏதோ வில்லங்கம் இழுக்கப் போகிறான் என்று மட்டும் புரிந்தது.

வேலம்மாள் “என்னாவாம்? இம்புட்டுச் சத்தம்” என்று கேட்டுக் கொண்டே கணவர் அருகில் வந்து நின்றாள்.

“எங்கடி உம் புத்திரன்?” முகத்தில் கோபத்தில் தோரணையாகக் கேட்டான். தன் தகப்பன் சத்தம் கேட்டவுடன் சீராளன் வீட்டின் பின்கட்டில் இருந்து பிரஷால் பல் துலக்கியவாறு வந்தான்.

“லேய் சீராளா போட்டியில் இந்த தலைப்ப கொடுத்து பேசச் சொன்ன வெண்ண எவன்டா?” என்று மகனைப் பார்த்து கேட்க,

“எங்க தமிழ் அய்யா சிவக்கொழுந்து தான்” என்று சீராளன் சொல்லும் போதே அவனின் வார்த்தை யில் ஒரு கம்பீரம் வெளிப்பட்டு மறைந்தது.

“யாரு அந்த ஜிப்பா சட்டைக்காரனா? அதான் எவ்வளவு மப்பு இருந்தா இந்த தலைப்பை தந்திருப்பான்?”

மீண்டும் தன் மகனைப் பார்த்து, ”இங்காரு மொதல்ல போய் பள்ளிக் கூடத்துல பரிசெல்லாம் வேணாமின்னு எங்கப்பா சொல்லிட்டாருன்னு சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், என்ன நினைத்தானோ ”வேணாம், வேணாம், நானே அங்கே வர்றேன், அவுங்களா? நானா என்று பார்க்கிறேன்” என்று இருக்கையை விட்டு எழுந்து நிற்க

“யோவ் என்ன கணேசா ஆச்சி ஒனக்கு? பிள்ளைக படிக்கிறது பள்ளிக்கூடத்துல, போட்டியில்ல கலந்துகிடதும் நல்ல விசயம் தானே. பிள்ளைகளே நாம் தாம் மெச்சிக்கணும். பாராட்டும் இதில்லே என்ன உனக்கு சிரமம் இருக்கு?”

“கோயிந்து அந்த வாத்தி பய வேணும்னுதான் அவிய்ங்க சாதி தலைவர எழுதிக் கொடுத்து பேச வச்சிருக்காம் போல தெரியுது”

“யோவ் நீயும் ஒன் சாதியும் ஏய்யா எம் மவனும் தான் பேசினான். அவன் பேசினது நம்ம சாதிக்கார தலைவரா? ஏய்யா எடுத்ததெற்கெல்லாம் சாதி பாக்குற?”

“ஏலே வெண்ணை அவனவனுக்கு அவங்க சாதி தான் ஒசத்தி, ஆள் தலைக்கட்டும், ஓட்டிலும், பணத்திலும் நம்ம சாதிதான் மெஜாரிட்டி, எவனுக்கு அடி பணியனும், நம்ம தலைவரே நம்ம ஓட்டு்களை நம்ம சாதிக்காரனுக்குத்தான் தேர்தல்லே போடணும்னு மேடை மேடைக்கு பேசிக்கிட்டிருக்காரு. அப்படி இருக்க ஏம் வீட்டுக்குள்ள இன்னொரு சாதித் தலைவரைப் பத்தி பெருமை பேசி அதையும் பத்துப் பேர் முன்னாடி பேசி கைத்தட்டல் வாங்கினானாம். இதை நானும் பாராட்டுனுமா?” என்று மனைவியையும் மகனையும் பார்த்து கோபத்தின் உச்சியில் கேட்டான்.

குறுக்கிட்ட கோவிந்தராஜ் “ஏப்பா அன்னிக்கு இருந்த தலைவர்களுக்கு சாதி தெரியல்ல, இந்த தேசம் தான் தெரிந்தது. அப்படிப்பட்ட தலைவர்களை பின்னால் வந்த அரசியல் கட்சிகளும், சுயநல அரசியல்வாதிகளும் சாதி சாயம் பூசி, ஒரே ஊருக்குள்ள இருந்தவர்களை என் சாதி பெருசு, உன் சாதி சிறிசுன்னு பிரித்து கலகத்தை மூட்டி குளிர்காய்கிறார்கள். இது உனக்குத் தெரியாதா கணேசா?”

“நீ என்ன தான் சொன்னாலும் கோயிந்து நாம தான் இந்த நாட்டிலே பெரிய சாதின்னு மேடைக்கு மேடை நான் பேசிட்டு இருக்கும் போது ஊருக்குள்ள இருப்பவன் காரித் துப்புவான் எம் மூஞ்சியில”

“எம் மவன் பேசியதும், நீ எதிர்க்கும் சாதித் தலைவர் தானே கணேசா?”

“யோவ் உன் விசயம் வேறய்யா. நான் யாரு? பூமலை கணேசன். தேனி மாவட்டத்துல அடையாளமான பேரு. பூமலை கணேசனுக்குன்னு ஒரு கெத்து இருக்கு. தலைமையிலும் எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. இதெல்லாம் எவனாவது பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், வாட்ஸ்-அப்பிலும் போட்டு விட்டால், கட்சித் தலைமை வரை போகும். என்னப் பத்தி தலைவரு என்ன நினைப்பார்? இப்பவே கட்சிக்குள்ள எம் பதவிக்கு வரப் போட்டி நிறையா இருக்கு” என்று பேசிக் கொண்டே தன் மகனைப் பார்த்தான்.அவன் திண்ணையில் அமர்ந்திருந்த தன் தாயார் வேலம்மாளைப் பார்த்தான். இருவரும் ஒன்று சேர்ந்து தாழ்வாரக் கட்டையைப் பிடித்தவாறு பேசிக் கொண்டிருந்த பூமலை கணேசனைப் பார்த்தனர்.

பூமலை கணேசனும் இரண்டு பேரையும் பார்த்து விட்டு, மீண்டும் தொடர்ந்தான். “இந்த மாடு, கண்ணு, வீடு, தேனியில ஓடுற ஆட்டோக்கள், நகராட்சி கடைகள், பேங்க்ல கிடக்குற நகையெல்லாம், எப்படி வந்தது? இந்த சாதிய அரசியலின் பக்க பலமும், தாட்டியம் தான். இதே கெத்துல தலைவர் வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல சீட் தர்றேன்னு சொல்லிருக்கார். ஒழுக்கமா வீடடங்கி கிடய்க்கணும்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையை விட்டு இறங்கினான்.

வாசலில் நின்றிருந்த யமஹா பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டே “கோயிந்து வாய்யா உன் வீட்டைத் தாண்டித் தான் போறேன், உட்காருய்யா” ஸ்டார்ட் செய்த வண்டி டுப்… டுப்… டுப்… என உறுமலுடன் பெருத்த சத்தம் கொடுத்தது.

“நாளைக்கு பள்ளிக்கூடத்துல வேடிக்கைய பாரு கோவிந்தா, மொத அந்த ஜிப்பா வாத்தியான் …………” என்று அவரின் ஒரு ஆபாச சொல்லைச் சேர்த்து சொல்லிக் கொண்டே புல்லட் பூமலைக்குண்டு சாலையில் போய்க் கொண்டிருந்தது. புல்லட்டின் ஆங்காரமான சத்தம் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டே போய் அடங்கிப் போனது.

பூமலைக்குண்டு காலை நேரம், பள்ளி துவங்கும் சிலமணி நேரம் இருக்கவே பள்ளிக்கு ஒவ்வொரு மாணவர்களாக வரத் தொடங்கியிருந்தார்கள்.  அப்படி வந்தவர்கள் யாரும் வகுப்பறைக்குச் செல்லாமல் பள்ளியின் வெளி வாசலில் நின்று கொண்டிருந்தனர். பள்ளிக்கூடத்தின் முகப்பு கதவுகள் திறந்தும், அதன் அருகே பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர், இன்னும் சில ஆசிரியர்கள் வளாக சுவற்றையே உற்றுப் பார்த்தபடி ஏதேதோ பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் பேச்சில் சிறிது வருத்தம் தோய்ந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

சீராளனும், இதிகாசனும் அவனுடன் படிக்கும் சக மாணவர்களும் வந்து அந்த திரளுடன் சேர்ந்து கொண்டு, பள்ளி வளாகச் சுவரை பார்த்தார்கள்.

அரசே! மாவட்ட நிர்வாகமே… கல்வித்துறையே… பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு. சாதி பாகுபாடுடன் செயல்படும் பள்ளி ஆசிரியர்கள், சிவக்கொழுந்து மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் துரிதமாக நடவடிக்கை எடு. இல்லையெனில்… பஸ் மறியல் செய்வோம்! என்ற வாசகம் தாங்கியும், சீராளனின் தந்தை பூமலை கணேசனும், அவர் சார்ந்த கட்சித் தலைவரின் படமும், கட்சி சின்னமும் தாங்கிய சுவரொட்டிகள். அந்த பள்ளி வளாக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் யார் யாருக்கோ தொடர்பு கொண்டு பேசியபடி இருந்தனர். சிவக்கொழுந்து ஆசிரியர் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் மாணவர்கள் மத்தியில் நின்றபடி இருந்தார்.

சீராளன் கூட்டத்தை விட்டு அகன்று நேராக பள்ளி வளாகச் சுவருக்கு அருகில் சென்றான். சுவரொட்டிகளைப் பார்த்தான், தன் தகப்பனும் அவர் சார்ந்த கட்சி மாநிலத் தலைவரும் சிரிப்புடன் இருக்கும் படத்தைக் கூர்ந்து கவனித்தான். ஏதோ ஒன்று அவன் மனதிற்குள் தோன்றியது. தன் கையில் கட்டியிருந்த சாதி அடையாளக் கயிரை அறுத்து எறிந்தான். அது நேராக கூட்டத்தில் விழுந்து  மிதிபட்டது.

தன் புத்தகப் பையை பின்னால் வந்த இதிகாசனிடம் கொடுத்து விட்டு, ஒட்டியிருந்த சுவரொட்டிகளை ஒவ்வொன்றாக கிழிக்கத் தொடங்கினான். இதிகாசனும் தன் பங்குக்கு சுவரொட்டிகளை கிழிக்க ஆரம்பித்தான். பள்ளியின் ஆரம்ப மணியை அடிக்க வாட்ச்மேன் ஓடினார்.

இர. அறிவழகன்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரைச் சேர்ந்த இர. அறிவழகன் பொதுவுடைமை சிந்தனாவாதி. கடந்த முப்பது ஆண்டுகளாக பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே அமர்ந்து மக்கள் எழுத்தாளராகப் பணி செய்து வருகிறார்.  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் செயல்பாட்டாளர். பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com