நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், காளியம்மாள். பிறந்தது, சீர்காழிப் பக்கம் திருமுல்லைவாசல் என்றாலும், வாழ்க்கைப்பட் டது நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை. கஜா புயலால் விவசாயிகளோடு மீனவர்களும் என காவிரி டெல்டாவே கலங்கிப்போயிருக்க, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக நாம் தமிழர் கட்சியின் மேடையில், நாகை அவுரித் திடலில் தன் முதல் மேடைப் பேச்சைத் தொடங்கினார், காளியம்மாள். அது 2018 டிசம்பர் 31. அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல். நாகை மாவட்ட காளியம்மாள், வடசென்னையில் போட்டியிட்டு 60ஆயிரத்து 515 வாக்குகளைப் பெற்றார். சீமானின் பேச்சு, மதுரையை மையமாகக் கொண்ட தென்மாவட்ட கிராமிய வழக்கு என்றால், காளியம்மாளுக்கு கீழத்தஞ்சையின் பிறமொழி கலவா சொல் வழக்கும் தனித்தமிழ் மேடைப் பேச்சும், அவருக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. முக்கிய அரசியல் கட்சிகளின் பெண் பேச்சாளர்களின் பேச்சு ஒரு இரகம் என்றால், இவரின் பேச்சு வேறு இரகம். பெண்களும் ஆண்களுமாக இவரின் பேச்சைக் கேட்கத் திரள்வது, புது மாதிரி. இந்தத் தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர். திருத்துறைப்பூண்டியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குப் பின்னால் தன் பரப்புரையைத் தீவிரப்படுத்தும் முனைப்பில் இருந்தவரிடம் அலைபேசி மூலம் பேசினோம். “அரசியலுக்கு பெண்கள் வருவதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ளாமல், அவர்களை விலக்கி ஓடச்செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. உச்சகட்டமாக, எனக்கு ஒரு கட்சியினர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து, அதனால் என் தாயார் உடல்நிலை பாதிக்கப்படும் அளவுக்கு, நிலைகுலைய வைக்கும் காரியத்திலும் ஈடுபட்டார்கள். பானால், இதையெல்லாம் எதிர்கொண்டு இந்த மண்ணின் மக்களுக்கான அரசியலுக்காக நின்றாக வேண்டும்' திடமாகப் பேசுகிறார், காளியம்மாள்.
ஜீவாவின் கூற்று!
இடும்பாவனம் கார்த்தி
சீமானின் உடல்மொழியும் பேச்சு மொழியும் ஒருங்கே அமைய ரசிக்கத்தகும்படி பேசக்கூடிய இளைஞர், இடும்பாவனம் கார்த்தி.
பொறியியலில் டிப்ளமோவும் அடுத்து பி.இ. பட்டமும் படித்தவர். இப்போது நா.த.க.வின் ஒரு ஊடக முகமாக அறியப்படும் கார்த்தி, மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர். கட் டுரைகளாக எழுதிக்கொண்டிருந்த இந்த சீமான் படைத் தம்பி, கட்சி மேடையேறிப் பேசத் தொடங்கியது 2012 டிசம்பர் 15. அரியலூரில் நடைபெற்ற ஈகைத்தமிழன் அப்துல் ரவூஃப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் அது.
அதற்கடுத்து, நாம் தமிழர் கட்சியின் பல கூட் டங்களிலும் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் என்கிற அடிப்படையில் இவரைப் பேச்சாளராக ஆக்கிவிட்டனர். மெல்ல மெல்ல நா.த.க.வின் தவிர்க்கமுடியாத பேச்சாளராக ஆகிவிட்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க. வேட்பாளர்களை எதிர்த்து பரப்புரை செய்வது, நா. த.க.வின் முடிவு. அதன்படி, குமரியில் பரப்புரை தொடங்கவிருந்த மேடையில் காங்கிரசார் பிரச்னை செய்ய, களேபரம் ஆகிவிட்டது. அந்தக் கூட்டத்தின் முதல் பேச்சாளர், இடும்பாவனம் கார்த்தி. இவரின் முதல் தேர்தல் பரப்புரை மேடை அதுதான்.
‘என்னைப் பொறுத்தவரை செய்தியை சரியான இடத்தில் பொருத்தி, சுவைபடவும் கருத்தாவும் சொல்லணும். கண்ணியக்குறைவாவோ மக்கள் முகம் சுளிக்கிறபடியோ பேசிடக்கூடாது. மக்கள் தங்கள் மனசுல இருக்கிறதைப் பேசுறான்னு எண்ணம் வரும்படிப் பேசணும். மக்கள் பட்ற பாடுகளை, அவலங்களை மக்கள் மொழியில மக்கள் உணரும்படிப் பேசணும்கிறதுதான் என்னுடைய கவனம். ஜீவா சொன்ன, “பேச்சு என்பது ஒரு மேடைக் கலை அல்ல; தொழில் அல்ல; நான் நம்பிய கொள்கையை விளக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம். என் வாழ்க்கைப் போராட்டம். போர்க்களம்.' என்கிற கூற்றை நான் பொதுவா கடைப்பிடிக்கிறேன். அதை நம்புறேன். அதை பாணி என்றும் சொல்லிக்கலாம்.' எனச் சரளமாகப் பேசுகிறார், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான இடும்பாவனம் கார்த்தி.