மொசக்கறி
ஓவியம்: டிராட்ஸ்கி மருது

மொசக்கறி

முதல் பரிசு ரூ. 10000 பெறும் சிறுகதை

கார்த்திகை மாத பனி கொட்டிக்கொண்டிருந்தது. ஊருக்குள் ஓரிரு தாட்டோடு வீடுகளும் அப்பொழுதுதான் காரை வீடுகளாக மாறிக்கொண்டிருந்த காலம். சனம் மொத்தமும் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தது. அந்தப் பனியிலும் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு ராசுக்குட்டி திண்ணையில் படுத்திருந்தான். நெஞ்சு வரை கம்பளியைப் போர்த்தியிருந்தான். தூக்கம் வராமல் கண்களை உருட்டி உருட்டி கூரையை வெறித்துக் கொண்டிருந்தான்.

ராசுக்குட்டியின் சிறிய குடுசு ஊர்க் கோடியில் இருந்தது. பனை ஓலைகளைக் கொண்டு நேர்த்தியாக மேயப்பட்டிருக்கும்.  வழக்கமாக ராசுவும் ஆத்தாளும்தான் குடுசுக்குள் படுத்துக்கொள்வார்கள். அய்யன் வெளியே திண்ணையில் படுப்பார். ஆனால் இப்போதெல்லாம் அய்யன்  தளர்ந்துவிட்டார். கண்ணும் சரியாகத் தெரிவதில்லை. அதனால் ராசுக்குட்டி திண்ணைக்கு மாறிவிட்டான். அடுப்பு ஒரு மூலையிலும், ஆத்தாளும் அப்பனும் ஒரு மூலையிலும் படுத்துக்கொள்வார்கள்.

பல வருடங்களாகப் புள்ளையில்லாமல் நரம்பு தளர்த்த காலத்தில்தான் ராசுக்குட்டி பிறந்தான். ராசு வளர வளர பெத்தவர்களுக்கும் வயசாகிக்கொண்டே போனது. விவரம் தெரிய ஆரம்பித்ததும், அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனைச் சுற்றிக்கொண்டே இருந்தது.

கம்பளியை இழுத்து தலைவரை போர்த்தியபோது, தூரத்தில் நான்கைந்து நாய்கள் குறைப்பது அவன் காதில் விழுந்தது.  நாய்களின் சத்தம் அருகில் வர வர பேச்சுச்சத்தமும் கேட்டது. பேச்சு சத்தத்தில் வாரிசுருட்டி எழுந்தான். கட்டியிருந்த அரைக் காவேட்டியை காலுக்கு நடுவில் விட்டு, பின்னால் இழுத்து இறுக்கமாகச் சொருகினான். ஓடிப்போய்க் குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்தான்.

ஈட்டியோடு வெளியே வரும்போது நாயும் ஆட்களும் அருகில் வந்துகொண்டிருந்தார்கள். வேகமாய்ப் போய் ஈட்டியோடு இட்டேரியில் நின்றுகொண்டான். தீப்பந்தம் நகரும் வேகத்திலிருந்து, வருபவர்கள் ஓட்டமும் நடையுமாக வருவதைக் கணித்தான். அந்த வெளிச்சத்தில், மூன்று நீட்டுபோக்கான நாய்கள் ஆக்ரோஷத்துடன் வருவதும், அவற்றைப் பிடித்திருந்த மூன்று பேரையும் அவை தரதரவென்று இழுத்துவருவதும் தெளிவாகத் தெரிந்தது.

இவனருகில் வந்ததும் ஆட்கள் இழுத்துப்பிடித்து நாய்களை நிறுத்தினார்கள். இரண்டு செவலையும்,  கருநாயும் நாக்கை தொங்கபோட்டவாறு எச்சை ஒழுக நின்றது.

அதில் கருநாயை பிடித்திருந்தவர் ராசுக்குட்டியை ஏற இறங்கப் பார்த்து, “என்னடா இன்னிக்கு வரியா?” என்றார் அதட்டலாக. இதுக்காகவே காத்திருந்த ராசுக்குட்டி, “ஆமாங் வரேனுங்” என்றான். “செரி வா” என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டு, இழுத்துப்பிடித்திருந்த கயிற்றை இளக்கமாக விட்டார்.

கயிறு இளகியதைக் கண்டதும், அவர்களை இழுத்துக்கொண்டு நாய்கள் பறந்தன. இந்தமுறை அவர்களுக்கு நடக்க வாய்ப்பில்லை. வெறும் ஓட்டம் தான். ராசுக்குட்டியும் குத்தீட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினான். வேட்டை நாய்கள் என்பதால், அவற்றின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது கொஞ்சம் சிரமாகவே இருந்தது. அவை பார்ப்பதற்கே சிறுத்தைகளைப்போல் திடமாக இருந்தன. அதனால் அவற்றைச் செல்லமாக வேங்கைகள் என்றே சொல்வார்கள் வேட்டைக்காரர்கள்.

“நாற்பது வயதில் நாய்க்குணம்” என்பதுபோல், புள்ளகுட்டியெல்லாம் தோலுக்கு மேல் வளர்ந்தபிறகும் கூட்டு சேர்ந்து காடு மேடு என்று வேட்டையாடிக்கொண்டு திரிகின்றனர். எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் வேட்டைக்குக் கிளம்பிவிடுவார்கள். பெரும்பாலும் முயல் வேட்டையாகத் தான் இருக்கும்.

முயல் வேட்டைக்குப் போகிறார்கள் என்று ஐயன் சொன்ன நாளிலிருந்து ராசுக்குட்டிக்கு தானும் அவர்களுடன் சேர்ந்து எப்படியாது வேட்டைக்குப் போய்விடவேண்டும் என்ற ஆர்வத்திற்கு ஆளானான். ஆசை யாரை விட்டது. வேட்டைக்காரர்கள் வேட்டைக்குப் போகும்போது எல்லாம் அவர்கள் பின்னாலயே போவான். ராசுக்குட்டி தங்கள் பின்னாலயே அலைவதைப் பார்த்த வேட்டைக்காரர்களில் ஒருவர், “என்னடா? எங்க போறவாலேயே வந்துட்டு இருக்க?” என்று அவர் போட்ட் சத்தத்தில் ராசுக்குட்டியின் சப்த நாடியும் அடங்கிவிட்டது.

அவர்களின் பார்வையில் அவ்வளவு கண்டிப்பு. ஆனாலும் ராசுக்குட்டியின் ஆர்வம் அவனைப் பேசவைத்தது. நெஞ்சு படபடக்கத் தக்கி முக்கி “மொச வேட்டைக்கு ஒங்க கூட வரலாம்னு…” என்று இழுத்தான். பெருங்கூட்டு ஆளுங்களுக்கு இவனைப் பார்க்கவே ஏளனமாக இருந்தது. ராசுக்குட்டிக்கு இன்னும் மீசை கூட முளைக்கவில்லை. எலும்பை இறுக்கிக் கட்டின  தோல் போல் ஒல்லியான தேகம். இதைவைத்துக்கொண்டு வேட்டைக்கு வருகிறேன் என்று சொல்லவே தனித் தைரியம்வேண்டும்.

கடைசியில் ராசுக்குட்டி அவர்களுடன் சேர்ந்ததும், வேங்கைகளுடன் கொரங்காட்டை வந்தடைத்தனர்.  வந்தும் வராததுமாக வேங்கைகள் மோப்பம் பிடிக்கத் தொடங்கின. அவற்றைத் தீப்பந்த வெளிச்சத்தில் இவர்கள் தொடர்ந்தார்கள்.

மோப்பம் பிடித்துக்கொண்டே போன வேங்கைகள், திடீரென்று ஓடத் தொடங்கின. மூன்றும் சுற்றி வளைக்கும் விதமாகத் தானாகப் பிரிந்து பாய்ந்தன. கூடப்போனவர்கள் கண்ணுக்கு ஏதும் தட்டுப்படவில்லை. ஆனால் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது, வேங்கைகள் முயலை பார்த்துவிட்டன என்று.

மூவரும் ராசுக்குட்டியைத் திரும்பிப் பார்த்தார்கள். அதைப்புரிந்துகொண்ட ராசு குத்தீட்டியோடு வேங்கைகளுடன் ஓடத் தொடங்கினான். சில சமயம் வேங்கைகள் மூன்றும் ஒன்றாகப் பாயும்போது முயல்கள் எத்தல் பண்ணி நழுவி விடும். அப்புடி நழுவும் முயல்களை ராசு ஈட்டியில் குத்திப் பிடித்துவிடுவான். இதனாலேயே அவனை இவர்கள் கூடவே வைத்திருக்கிறார்கள்.

இந்த முறை ராசுவுக்கும் குத்தீட்டிக்கும் வேலையில்லை. கருவாய் செவலையின் பாய்ச்சலிலிருந்து அந்த முயல் தப்பவில்லை. செவலையின் வாயில் முயல் அகப்பட்டதும், மற்ற இரண்டும் அமைதியாக நின்றுவிட்டன. வேங்கைகள் மூன்றும் காதை மடக்கித் தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தின. ராசுக்குட்டியும் அவற்றைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

கருவாய் செவலை, வேட்டைக்காரர்கள் காலுக்கு அடியில் முயலைப் போட்டது. வேட்டையாடிய சந்தோசத்தில், காதை மடக்கிக்கொண்டு அப்படியே உட்கார்ந்தது.

பந்தம் பிடித்தவர்தான் முயலைத் தூக்கிப்பார்த்தார். காதைப் பிடித்துத் தூக்கியபோதே கண்டுவிட்டார் நல்ல இளங்கறியாக இருக்குமென்று. பின்னங்கால் இரண்டையும் தூக்கிப் பார்த்தார்கள். ஆண் முயல் என்றதும் இன்னும் குதூகலமாக இருந்தது அனைவருக்கும். பெண் முயலை விட ஆண் முயலின் கறிதான் பந்து பந்தாக இருக்கும். வாயில் போட்டு மெல்லும்போது பூ போல், ருசியும் அவ்வளவு அருமையாக இருக்கும்.

முயலுடன் வேட்டைக்காரர்கள் முன்னே நடந்தனர். கொடுத்த வேலையை முடித்த திருப்தியுடன் வேங்கைகள் அவர்களைப் பின்தொடர்ந்தன. ஓட்டமும் நடையுமாக மாட்டுப் பட்டிக்கு வந்து சேர்ந்தனர். வேட்டை எங்கு நடந்தாலும் கறி மட்டும் இங்குதான் வேகும். மொட்டைக் கிணறும், அதன் பாம்பேரியில் முளைத்திருந்த ஊஞ்ச பொதரும் இவர்களுக்குத் தோதான இடம். பொதற்கடியில் முயலைப் போட்டுவிட்டு அனைவரும் தலைசாய்ந்தனர்.

ராசுக்குட்டி மட்டும் ஓடி ஓடி வேலை செய்தான். குடுதாலி தண்ணியை ஒரு குடுவையில் மோந்துவந்து வைத்தான். பட்டியில் கிடந்த கருவெங்கட்டையையும், படலில் சொருகியிருந்த வெட்டறுவாளையும் தண்ணிக் குடுவைக்குப் பக்கத்தில் வைத்தான்.

எல்லாம் ஒரு கெடை வந்ததும், பந்தக்காரர் பந்தத்தைத் தூக்கிக்கொண்டு முயலோடு அங்கு வந்தார். அதற்குள் ராசு வாழை இலையை அறுத்துக்கொண்டு வந்தான். பந்தத்தை ராசுக்குட்டி கையில் தந்துவிட்டு, முயலைத் தோலுரித்து வெட்டத் தொடங்கினார். உரித்த தோலை மூன்றாக வெட்டி நாய்களுக்கு வீசி எறிந்தார். மூன்றும் சண்டை போடாமல் அமைதியாகத் தின்றன.

கறியை வெட்டி இலையில் வைத்தபோது மலை போல் தெரிந்தது. அவ்வளவும் நல்ல கறி.

“இன்னைக்கு நல்ல கறி உழுந்துருக்கு” என்று சத்தம் போட்டுக் கொக்கலித்தார்.

அவர் போட்ட சத்தத்தில், கண் அசந்தவர்கள் முழித்துக்கொண்டார்கள்.

வாரிச் சுருட்டி எழுந்தவர்கள், கருங்கல் மூன்றை வைத்து அடுப்புக்கூட்டினார்கள். வேலி கட்டைகளை வைத்து அடுப்பைப் பத்தவைத்தனர். அதன் மேல் பெரிய வாணாவை வைத்தனர். வாணா சூடாகிப் புகை வந்ததும் படலில் மாட்டியிருந்த தூக்குவாளியையும், பனை ஓலையில் சுருட்டிச் சொருகியிருந்த இரண்டு பொட்டலங்களையும் எடுத்தனர்.

தூக்கு வாளியை திறந்ததும் நல்லெண்ணெய் மனம் குமுகுமு என்று வீசியது. வாணலில் ஊற்றிய எண்ணைக் காய்ந்ததும் கறியை அள்ளிப் போட்டார்கள். ஈரக் கறியை போட்டதும் எண்ணைச் சடசடவென்று வெடித்தது.

மர திடுப்பை வைத்து ஒரு கிளறு கிளறி விட்டார்கள். பின் பனை ஓலை பொட்டணத்தைப் பிரித்து உப்பையும் மொளகுத் தூளையும் போட்டு வேகவைத்தார்கள். ராசுக்குட்டிக்கு நாக்கில் எச்சை ஊறியது. வயசுப்பசங்களுக்கு உண்டான கறி ஆசை தான். கறி வேகும் மனம் அவனை என்னவோ பண்ணியது. இருப்பு கொள்ளவே இல்லை. சீக்கிரம் கறி வேக வேண்டும் என்று சாமி கும்பிட்டான். கறி முக்கா வேக்காடு வெந்ததும், தீயை அனைத்துவிட்டார்கள். தணலை மட்டும் வைத்து கறியை புளுங்க விட்டார்கள். தணல் கொஞ்சம் கொஞ்சமாகப் பூத்து வந்தது.

ராசுக்குட்டி அனைவருக்கும் இலை போட்டான். சொரக் குடுவையில் தண்ணீர் மோந்து நடுவில் வைத்தான். வாணாவை ராசுக்குட்டி தூக்கிப் பிடித்துக்கொண்டே வந்தான். அவரவருக்கு வேண்டிய கறியை இலையில் தள்ளிக்கொண்டார்கள். நான்கு பேரின் இலையிலும் கறி குமி போட்டிருந்தார்கள். கடைசியாக ராசுக்குட்டி இலைக்கு  அடிவண்டலுடன் ஒரு கைப்புடி கறி மட்டும் தான் இருந்தது.

அது எப்போதும் அவனுக்குப் பழக்கப்பட்டதுதான். பெரிய முயல் கிடைத்ததும் அவன் மனதுக்குள் வேறுகணக்குப் பண்ணியிருந்தான். “இன்னைக்குக் கறி கொஞ்சம் நிறைய உழும், ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் கொஞ்சம் கொண்டுபோய்க் குடுக்கணும்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இலைக்குக் கறி வந்ததும், எலும்புகூட மிச்சம் வைக்காமல் வெறியெடுத்தவன் போல் தின்று முடித்துவிட்டு தான் ராசுக்குட்டி நிமிர்ந்து பார்த்தான்.

வேட்டைக்காரர்கள் எல்லோரும் கறியைத் தின்றும் திங்காமலும் அப்படி அப்படியே நாய்களுக்கு வீசிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்க்கப் பார்க்க ராசுக்குட்டிக்கு வாயில் எச்சை ஊறியது. இவ்வளவு சதையுடன் போடுகிறார்களே என்று அங்கலாய்ப்பாய் இருந்தது. நமக்குக் கொஞ்சம் குடுக்கமாட்டார்களா என்று அவர்கள் வாயையே பார்த்துக்கொண்டிருந்தான். நான்குபேரும் திங்கமுடியாமல் தின்றுகொண்டிருந்தனர். ராசுக்குட்டிக்குக் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. எப்படியும் திங்கமுடியாமல் மிச்சம் வைப்பார்கள். அந்தக் கறியையெல்லாம் அள்ளிக்கொண்டு ஊட்டுக்குப் போகலாம் என்று நினைத்தான்.

பந்தக்காரரைத் தவிர மூவரும்பா திக்கறியை இலையிலேயே வைத்துவிட்டு எழுந்து-கொண்டார்கள். அவர்களால் அதற்குமேல் திங்க முடியவில்லை. அவர்கள் எழுந்ததும், ராசுக்குட்டியும் ஒரு இலையை எடுத்துக்கொண்டு எழுந்தான். இன்னிக்கு ஆத்தாளுக்கு அப்பனுக்கும் கறியிலிலேயே வயிறு நிறையும் என்று நெஞ்சு குளிர்ந்தான். ஆனால் வேட்டைக்காரர்களில் ஒருவர், இலைகளை வேங்கைகளுக்கு இழுத்துவைத்தார். அதைப் பார்த்ததும் ராசுக்குட்டி முகம் வாடிப்போனது.

மனதுக்குள் அத்தனை ரணம். சொல்லமுடியாத வலி. ஒரு நொடி விக்கித்து நின்றவன், எடுத்த இலையைக் கீழே போட்டான். குத்திவைத்திருந்த ஈட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான். வேட்டைக்காரர்கள் சத்தம் போட போட நடையின் வேகத்தைக் கூட்டினான். ராசுக்குட்டி ஏன் போறான் என்று கூட அவர்களுக்கு விளங்கவில்லை. எதற்கும் அலட்டிகொள்ளாதவர்கள், ராசுக்குட்டி் போனதையும் பெரிதாக நினைக்கவில்லை.

இருந்தத கோவத்தில் தடம் பார்த்துகூட நடக்காமல், அவன் இஷ்டத்துக்கு நடந்தான். காலில் ஏறிய முள்ளு கூட அவனுக்குச் சோதிக்கவில்லை. நெஞ்சுக்குழியில் அவ்வளவு பொருமல். வேகுவேகென்று வீட்டுக்கு வந்தவன், அமைதியாகத் திண்ணையில் நீட்டி படுத்துகொண்டான். ஆனாலும் அவன் மனக் கொதிப்பு அடங்கவில்லை.

எப்பொழுதும் விடியும் முன்னே எழுந்திரிப்பவன், இன்று அய்யன் ஆடு ஓட்டிப்போகும் வரை தூங்கிக்கொண்டிருந்தான். யாரும் அவனை எழுப்பவில்லை. ஆட்டுக்குட்டி ஒன்று திண்ணையில் துள்ளிக் குதித்து ராசுக்குட்டியின் கால்மேல் வைத்த மிதியில் ராசு எழுந்து விட்டான். எழுந்தவன் அமைதியாகத் திண்ணையிலே உட்கார்ந்திருந்தான்.

அப்பனுடன் ஆத்தாளும் ஆடோட்டிப் போய்விட்டாள். இவன் மட்டும் தனியாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் அமைதியாக இருந்தவன், திடுமென எழுந்து செங்காட்டை நோக்கி நடந்தான்.

“இவனுங்க என்ன நமக்கு மொசக்கறி தரது, நாமளே மொசப் புடிக்கணும்” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே நடந்தான். என்னதான் தனியா வேட்டைக்குப் போகவேண்டும் என்று நினைத்தாலும், அவனிடம் ஏதும் இல்லை. வேட்டை நாய்கள் வளர்க்கும் அளவுக்குப் பெரிய பொழப்பும் கிடையாது. நாய்கள் இல்லாமல் ஈட்டி குத்தி வேட்டையாடுவது என்பது ஆகாத காரியம்.

ஆனாலும் ராசுக்குட்டியின் மனதில் வேறு யோசனை இருந்தது. போனமுறை வேட்டைக்குப் போகும்போதுதான், முயல் கண்ணி பற்றிப் பேசினார்கள். கண்ணி வைத்து முயல் பிடிப்பதும் ஒரு மாதிரி நுணுக்கமான வேலை தான். கண்ணி சரியாக இல்லையென்றால் முயல் அதில் மாட்டாது. அவ்வளவு எளிதாக அந்தக் கண்ணியை யாராலும் செய்துவிட முடியாது. அதை நேக்காகச் செய்ய ஒரு சிலர் தான் இருக்கிறார்கள். அதிலும் பாதிபேர் இப்போ கண்ணி பின்னுவதில்லை. முந்துன வேட்டையில் அவர்கள் பேசியது மொத்தமும் தலைக்குள் வந்துபோக, ராசுக்குட்டியின் நடையில் வேகம் கூடியது.

பந்தக்காரர் தான் முதலில் ஆரம்பித்தார், “கண்ணி கட்டுறவங்க எல்லாம் என்ன ஆனாங்கனு தெரில. இப்போதைக்குச் செங்காட்டுக்காரர் மட்டும் தான் பண்ணறாருனு சேதி” என்று சலிப்போடு சொன்னார். “அப்புறம் என்ன, அவருகிட்ட நம்ம நாலு கண்ணிய வாங்கி வச்சுக்கலாம். அத வாங்கிட்டா இப்புடி ராத்திரில காடு மேடு எல்லாம் அலைய வேண்டியது இல்ல” என்று வேட்டைக்காரர் ஒருவர் சொல்ல பந்தக்காரர் சலித்துக்கொண்டார்.

“அவரு இப்போ கண்ணிக்கட்டி எல்லாம் விக்கிறது இல்லியாமா. அது போக ஆருக்கும் கண்ணிகட்ட சொல்லியும் தாரது இல்லியாமா” என்று பந்தக்காரர் சொன்னதும் அனைவரது முகத்திலும் ஏமாற்றம். “அந்த ஆளு எப்பப்பாத்தாலும் கண்ணி பின்னிக்கிட்டே தான் இருக்காரு. ஆனா ஆருக்கு குடுக்காருனு தான் தெரில” என்று பந்தக்காரர் நொந்துகொண்டார்.

வெய்யில் உச்சிக்கு ஏறும்போது செங்காட்டுக்காரர் தோட்டத்துக்கு ராசுக்குட்டி வந்து சேர்ந்தான். அப்போதுதான் அவர் வேப்பமரத்துக்கும் வேலமரத்துக்கும் கயிறு கட்டி கண்ணி வலயம் பின்னிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் ராசுக்குட்டிக்கு அவ்வளவு சந்தோஷம். இன்னிக்கு கண்ணி வாங்கிட்டு போய்டணும் என்று ஓர் எட்டு எட்டி வைத்தவனுக்குப் பந்தக்காரர் சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்து போனது. அதனால் அமைதியாக நின்று அவர் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் பார்த்துவிடக் கூடாது என்று கடலைக்கொடிப்போர் மறைவில் நின்றுகொண்டான். அவரும் வேகவேகமாகக் கண்ணியைச் சேர்த்துப் பின்னிக் கொண்டிருந்தார். ராசுக்குட்டிக்கு ஏதும் புடிபடவில்லை. இந்த மனுஷன் கண்ணியும் வெலைக்கு விக்க மாட்டிங்கறாரு, எப்டி பின்றதுனு சொல்லித்தரவும் மாட்டாரு. சரி அவரு செய்யுறது பாத்து பண்ணலாம்னு பாத்தா ஒன்னும் புடிபடல. இப்போ என்ன தான் பண்றதுனு தெரிலேயேனு மனசுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டான்.

ஆனாலும் இதப் பின்ன கத்துக்கிட்டே ஆகணும் என்று உறுதியாக இருந்தான். அதனாலேயே தொடர்ந்து அஞ்சாறு நாளாக ஒளிந்து அவர் பின்னுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக அவனுக்கு அது புடிபட்டது. அந்த வாரமே சனிக்கிழமைச் சந்தையில் கண்ணிகட்டத் தேவையான கயிறு, நரம்பு, ஆணி கட்டை என்று எல்லாம் வாங்கிக்கொண்டான்.

அந்த அன்னிக்குச் சாயங்காலமே குடிசைக்குப் பின்னால் இருந்த வன்னி மரத்தண்டை பொருட்களோடு போனான். ரெண்டு மொளகுச்சிகளைப் பத்தடி இடைவெளியில் அடித்தான். சூடிக் கயிற்றை ரெண்டு குச்சிகளிலும் இழுத்துக் கட்டினான். நரம்புக் கட்டை கவனமாகப் பிரித்தான். அப்படியிருந்தும், அவன் பெருவிரலில் பட்டு வலிக்காமலேயே ரத்தம் வந்தது. அதை அப்படியே கட்டியிருந்த துணியில் துடைத்துக்கொண்டான். அந்த நரம்பு அந்தளவிற்குப் பதமாக இருந்தது.

பிரித்த நரம்பை முழங்கை அளவு வைத்துப் பார்த்துத் துண்டுகளாக வெட்டிக்கொண்டான். வெட்டிய நரம்பின் நுனியில் சின்னச்சின்னக் கட்டைகளை வைத்து கட்டிக்கொண்டான். கட்டை நுனியை வைத்துச் சுருக்கிக் கொண்டான். அதைச் சூடிக்கயிற்றில் கோர்த்து கோர்த்துவைத்தான். இதைச் செய்து முடித்தபோது பொழுது மறைந்திருந்தது. அதை அங்கேயே வைத்துவிட்டு ராத்திரி கஞ்சி குடித்தான். காலையிலிருந்து வேலை மும்மரத்தில் அவனுக்குப் பசி தெரியவில்லை.

வழக்கம் போல் படுக்கத் திண்ணைக்கு வந்தபோது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. காலை நீட்டி கம்பளியை தலைவரை போர்த்திப் படுத்துகொண்டான்.  கண்ணி புண்ணியத்தில் இடுப்பு விண்ணுவிண்னென்று வலித்தது. சலுப்பில் வலியோடு தூங்கிப்போனான்.

காலையில் எழுந்ததும் முதல்வேலையாகக் கட்டிய கண்ணியைப் பார்க்கப் போனான். அதைப் பார்த்தபோதுதான் அவனுக்குச் சந்தேகம் வந்தது. இது சுருக்கு விழுமா என்று. அதைச் சோதித்துப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தான். கவட்டைக் குச்சியை எடுத்துச் சுருக்கில் மாட்டிப் பார்த்தான். ஆனால் குச்சி சுருகில் விழவில்லை. சுருக்கு இறுக்காமல் அப்படியே இருந்தது. ராசுக்குட்டி முகம் சுண்டிப்போனது. இத்தனை செய்தும் வீணாகிவிட்டதே என்று தளர்ந்து போனான்.

இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தான். மறுபடியும் செங்காட்டுக்குப் போனான். அவன் போன நேரம் யாரும் சாலையில் இல்லை. எங்குத் தேடியும் செங்காட்டுக்காரரைக் காணவில்லை. அவனது வழக்கமான இடத்திலேயே காத்திருந்தான். தான் செய்த கண்ணி அனைத்தையும் விற்றுவிட்டு செங்காட்டுக்காரர் பொழுதிறங்க வந்து சேர்ந்தார். முன்னெல்லாம் கண்ணிகளை உள்ளூர்காரர்களுக்குத் தான் விற்றுக் கொண்டிருந்தார். ஆனால் என்னைக்கு மலைநாட்டுகாரங்களுக்குக் கண்ணி குடுக்க ஆரம்பிச்சாரோ அன்னிக்கே உள்ளூர்காரர்களுக்கு விக்கிறத நிப்பாட்டிட்டாரு. அவரைப் பொறுத்த வரை மலைநாட்டுகாரங்களுக்குத் தான் வேட்டையாடி திங்கிறது முக்கியம். அது தான் அவங்களுக்குச் சீவனம். ஆனா இங்க இருக்கவனுக எல்லாம் மெத மிஞ்சித் திரியுறானுங்க. இவனுங்களுக்கெல்லாம் கண்ணி செஞ்சு குடுக்கிறது இல்லனு முடிவு பண்ணிட்டாரு.

அவரைப் பார்த்ததும் ராசுக்குட்டி தன்னை நன்றாக உள்ளிழுத்து கடலைக் கொடிப்போரில் மறைந்துகொண்டான். சலிப்போடு வந்தவர் மொடாவிலிருந்த தண்ணியை அள்ளி கைகால் மூஞ்சி கழுவினார். கட்டியிருந்த மண்டைக்கட்டை அவிழ்த்து மூஞ்சியைத் தொடைத்துக்கொண்டே “எத்தனை நாளைக்குத் தான் போரிலியே ஒளிஞ்சு பாப்பே? இங்க வா” என்று அவர் ராசுக்குட்டியைப் பார்த்துக் கூப்பிட்டதும் நடுங்கிப்போனான்.

ராசு பயப்படாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். செங்காட்டுக்காரரின் உருவம் பார்ப்பதற்கு அவ்வளவு கம்பீரமாக இருந்தது. “இங்க என்னடா பண்ற”  என்று அவர் அதட்டியதுதான் தாமதம். பயத்தில் அனைத்தையும் உளறிவிட்டான்.

செங்காட்டுக்காரருக்கு அவனைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. “இங்கயே இரு” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சாலைக்குள் சென்றார். ஆனாலும் ராசுக்குட்டிக்குப் பதட்டம் குறையவில்லை. சாலையில் இருந்து வெளியே மொசக்கண்ணியொடு வந்தார். ராசுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “இந்தாப் புடி, இத வச்சுக்க...” என்று அவன் கையில் திணித்தார்.

ஆசையாகக் கண்ணியைக் கையில் வாங்கியவன், வெள்ளந்தியாக “காசு” என்று இழுத்தான். ராசுக்குட்டி காசு என்றதும், “காசா... ஓடுறா...” என்று அவனை அடிக்கக் கட்டையைத் தேடினார். அவ்வளவுதான், திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடினான்.

அவன் வீடு வந்துசேரும்போதே இருட்டத் தொடங்கியிருந்தது. அந்த இருட்டிலும், அடுப்பிலிருந்த கொள்ளிக்கட்டையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறுகையில் கண்ணியை எடுத்துக்கொண்டு நடந்தான்.

ராசுக்குட்டி காட்டு எல்லைக்குப் போகும்போதெல்லாம், ரெட்டைப் பள்ளத்தில் முயல்கள் ஓடுவதைப் பார்த்திருக்கிறான். அதனால் அங்கேயே கண்ணி வைத்தான். சரியாகத்தான் கட்டியிருக்கிறோமா என்று பலமுறை பார்த்துக்கொண்டான். முன்ன பின்ன கண்ணி கட்டி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் சந்தேகத்துடன் சுத்திச் சுத்தி வந்தான். பின் என்ன ஆனாலும் கோழி கூவ வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு நடந்தான். வீட்டுக்கு வந்தபோது அப்பனும் ஆத்தாளும் தூங்கியிருந்தார்கள்.

கோழி கூவ பொழுது கிளம்பியது. அவ்வளவுதான், ராசுக்குட்டி ஓட்டமும் நடையுமாக ரெட்டைப் பள்ளத்தை நோக்கி நடந்தான். ராசுக்குட்டி போகும்போதே, சாம்பல் நிற முயல் கண்ணியில் மாட்டி துள்ளிக்கொண்டிருந்தது. முயல் மாட்டினாலும் அதை உயிரோடுதான் வீட்டுக்குக் கொண்டுபோகவேண்டும் என்று தீர்மானமாக இருந்தான்.

முயலைப் பொறுத்தவரை, உடல் சூடுதணியாமல் வறுத்தால் கறிக்குத் தனிச்சுவை வரும். செத்த முயல் கறியில் அவ்வளவு ருசி இருக்காது. முயலை லாவகமாக கண்ணியிலிருந்து கழட்டி எடுத்தான். முயலின் கால்கள் நான்கையும் சேர்த்துச் சரட்டை இறுக்கிக் கட்டினான். கொண்டுவந்த பையில் போட்டு ஓரமாக வைத்தான். கண்ணியைக் கவனமாகச் சுத்தி கையில் எடுத்துக்கொண்டான். கொஞ்சம் பிசகினாலும், கண்ணியில் சிக்கு விழுந்துவிடும்.

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

முயலை ஒரு கையிலும், கண்ணியை ஒரு கையிலும் தாவிக்கொண்டு அய்யன் ஆடு மேய்க்கும் கொறங்காட்டை நோக்கி நடந்தான். ராசுக்குட்டி போனபோது, ஆடுகள் பரவலாக மேய்ந்துகொண்டிருந்தன. ஐயன் கொடை சீத்தமரத்தடியில் உட்கார்ந்திருந்தார்.

“அப்பு, ஆட்ட ஓட்டிட்டு வா, ஊட்டுக்குப் போலாம்” என்று சத்தம் போட்டான். இவன் சத்தம் கேட்டு அய்யன் திரும்பிப் பார்த்தார். ராசுக்குட்டி கையில் முயலை பிடித்துக்கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஆடு மேய்த்த பக்கத்து ஆட்டுப் பட்டிக்காரரும் பார்த்துக்கொண்டிருந்தார். முயலைப் பார்த்ததும் ஐயனுக்கும் ஆசை வந்துவிட்டது. அவரும் கறி எல்லாம் தின்று கொள்ள நாள் ஆகியிருந்ததது.  ‘ஆடுகளுக்கு வயிறு நெம்புனதும் வாறன். நீ போய்ப் பாரு’ என்று முயலைப் பார்த்தவாறே பேசினார்.

“ஒரு நாளைக்கு அற வயிரா இருந்தா ஒன்னும் ஆவாது, இப்போவே ஓட்டுப் போலாம்” என்று கறாராகச் சொன்னான். ஐயனும் எதுவும் பேசாமல் ஆடுகளை ஓட்டினார். ஓட்டி வந்த ஆடுகளை ராசுக்குட்டி பட்டியிலடைத்தான். அய்யன் பக்குவமாக முயலின் கழுத்தை அறுத்து ரத்தம் வடிய சாத்தி வைத்தார். அதற்குள் ராசுக்குட்டியின் ஆத்தா, அருவமனை போசி எல்லாம் கொண்டுவந்து ஐயன் கைக்குக் கொடுத்தாள்.

ராசுக்குட்டி பட்டியைச் சாத்திவிட்டுவரவும், ரத்தம் வடியவும் சரியாக இருந்தது.

ஐயன் நடு வயிற்றில் ஒரு கீறு கீறி, தோலை உரித்துத் தனியாக வைத்தார். பொறுமையாகச் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போசியில் போட்டார். ஒவ்வொரு துண்டும் நல்ல சதையோடு தளுக் தளுக்கென்று குதித்தது. சித்த நேரத்திற்கெல்லாம் அரிந்து முடித்துவிட்டார்.

ராசுக்குட்டி அடுப்பை மூட்டித் தயாராக வைத்திருந்தான். வெட்டிய கறியைக் கொண்டுவந்து அடுப்படியில் வைத்தார். செக்கச் செவேலென்று பார்க்கவே அத்தனை ஆசையாக இருந்தது. ஆத்தாளை அடுப்படிபக்கமே விடாமல் அத்தனையும் அவனே பார்த்துக்கொண்டான். யாருயாருக்கோ ஆக்கிப் போட்டவனுக்குப் பெத்தவங்களுக்கு ஆக்கிப்போட கசக்குமா என்ன?

காட்டுக்குள் வறுப்பதுபோல வறுக்காமல், குழம்பாக வைத்தார்கள். ஆத்தா அம்மியில் அரைத்துக் கொடுத்த மொளகு ஒரு கொதி வந்ததும் கறியை அள்ளி மொளகுசாத்தில் போட்டான். கறியை அள்ளும்போது கூட வெதுவெதுப்பாக இருந்தது. ஐயனுக்குத் தெரியாததா?அதனால் தான் கறி சூடுகொறைவதற்குள் வெட்டிக்கொடுத்துள்ளார்.

இளம் முயலாக இருந்ததால் நான்கு கொதியில் கறி பூ போல வெந்துவிட்டது. குழம்புச் சட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, மூவரும் வட்டலோடு சுற்றியும் உட்கார்ந்தார்கள்.

ராசு கறியை மூட்டி எல்லோருடைய வட்டலிலும் போட்டான். திடுதிடுவென வேட்டைக்காரர்கள் நால்வரும் குடுசுக்குள் புகுந்தார்கள். அவர்களின் காலுக்கு நடுவில் வேங்கைகள் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு நின்றன. வேட்டைக்காரர்கள் முதுகுக்குப் பின்னால் பக்கத்து ஆட்டுப்பட்டிக்காரர் ஒளிந்து நின்றுகொண்டிருந்தார்.

“என்னடா? தனியா வேட்டைக்கும் போரளவு ஆளாய்ட்டியா?” என்று பந்தக்காரர்தான் காஜித்தார்.

ராசுக்குட்டி தலையைத் தொங்கப்போட்டு அமைதியாக நின்றான். “இவன்கிட்ட நமக்கு என்ன பேச்சு?” என்றதும் வேட்டைக்காரர்களில் ஒருவன் கறிக்குழம்பைச் சட்டியோடு தூக்கிப்போட்டு உடைத்தார். சட்டி உடைந்ததும் கறி மனம் நாலுமடங்கு அதிகமாக அடித்தது. வேங்கைகள் வெகுவேகமாகக் கறியை கவ்விக் கவ்வி முழுங்கின.

ராசுக்குட்டியின் குடுசுக்குள் அதிக நேரம் நிற்க விரும்பாமல், வேங்கைகள் தின்பதை பார்த்த வேட்டைக்காரர்கள் சிரித்துக்கொண்டே திரும்பிப் போனார்கள். பக்கத்து பட்டிக்காரரும் இவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவர்கள் பின்னாடியே ஒட்டிக்கொண்டு போனார். வேட்டைக்காரர்கள் போவதைப் பார்த்த வேங்கைகளும் பாதிக்கறியை விட்டுவிட்டு அவர்கள் பின்னால் ஓடின.

ராசுக்குட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திரும்பி உடைந்த கறி குழம்புச் சட்டியைப் பார்த்தான். வேங்கைகள் விட்டு சென்ற மிச்சத்தைப் பொறுக்கி ஐயன் வாயில் போட்டுக்கொண்டிருந்தார். ராசுக்குட்டி அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

சிவசெல்வி செல்லமுத்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் கொட்ட முத்தாம்பாளையத்தில், விவசாய வாழ்வைப் பின்னணியாக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் : செல்லமுத்து – ஜானகி.

கொங்கு நிலப்பரப்பின் எளிய மாந்தர்களின் அனுதின வாழ்க்கைப் பாடுகளைத் தன் படைப்புகளில் கவனப்படுத்துவதில் தீவிர ஆர்வம்கொண்டவர். ஊடகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தற்போது தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பணி செய்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com