ஆண்டாள் ஆட்சி புரியும் ஶ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள உமாராணி மருத்துவமனையில் தான் நான் பிறந்தேன். என் தாத்தாவிற்கு மூன்று பெண் குழந்தைகள் நான் தான் அந்தக் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு அதனால் தாத்தா பேரன் பிறந்து விட்டான் என்று மதம் கொண்ட யானை போல ஆடினாராம். வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டாலிருந்து பால்கோவா பாக்கெட்டுகளாக வாங்கி பேரனைப் பார்க்க வருவோருக்கெல்லாம் கொடுத்து சந்தோசப்பட்டாக உங்க தாத்தா என்று என் ஆச்சி எப்போதும் சொல்லிக்கிட்டேயிருக்கும். தாத்தா சாகும்வரை வீடு தேடி தன்னைப் பார்க்க வருவோருக்கு ஒரு பால்கோவா பாக்கெட் கொடுத்தனுப்புவார்.
என் தொட்டிலில் கட்டப்பட்ட பிறந்த ஊர் மண்ணோடு பால்கோவாவின் மணமும் தாய்ப்பாலோடு என் சுவை ராஜ்யத்திற்குள் ஓர் எறும்பாய் நுழைந்து விட்டது. இனிப்பு இருக்கும் திசையெங்கும் எறும்புகள் மொய்ப்பதைப் போல வேறு ஒரு ஜீவராசியும் இனிப்பை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை.அதனால் தான் நான் என்னை எறும்பாக எண்ணிக் கொள்கிறேன். மூன்று அறிவு கொண்ட எறும்பின் உடம்பெங்கும் இனிப்பின் வாசனையைத் தேடி ஓடும் அறிவை எண்ணி வியக்கிறேன். ஒரு துளி சீனித்துகள் தரையில் சிதறி விழுந்த ஐந்தாவது நிமிடம் ஆஜர் சார் என்று ஆம்புலன்ஸை விட எறும்பு வேகமாக வந்து அதை நுகர்ந்து தன்னில் சுமந்து செல்லும் அழகு.பேரழகு.
ஆண்டாள் பாசுரம் இசைத்துக் கொண்டிருக்கும் வி வீதிகளில் பால்கோவாவின் மதுரம் காற்றோடு கலந்து அந்த நகரை மதுராபுரியாக மாற்றியவண்ணமிருக்கும். வி பேருந்து நிலையத்திற்குள் உங்கள் பேருந்து நுழைந்து விட்டால் சின்னதும் பெரியதுமாக பால்கோவா பாக்கெட்களுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உங்கள் பேருந்தைச் சூழ்ந்து கொண்டு பால்கோவாவை விற்காமல் ஒருவரையும் பயணிக்க அனுமதித்ததில்லை. ஐம்பது கிராம் பால்கோவாவை வாங்கி அது சுற்றப்பட்டிருக்கும் பட்டர் பேப்பரைப் பிரித்து பால்கோவாவை கொஞ்சம் கொஞ்சமாக தின்னும் போது பலமுறை பேப்பரிலிருந்து பால்கோவாவைப் பிரித்தெடுக்க வழியின்றி பேப்பரோடு சப்பி சப்பி சாப்பிட்டிருக்கிறேன்..எத்தனை பாக்கெட் தின்றாலும் தித்திப்பு அடங்கா சுவை பால்கோவாவின் சுவை.
விருதுநகரில் தான் என் பள்ளிப்படிப்பெல்லாம் ஆனால் தேர்வு விடுமுறை விட்டவுடன் விக்கு ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து விடுவேன். ஆண்டாள் கோவிலுக்கு அருகேயுள்ள பென்னிங்டன் நூலகத்தில் காலை 8 மணியிலிருந்து 11.30 வரை மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை இருந்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஆண்டாள் கோவில் வாசலில் தாத்தா தன் நண்பர்களுடன் நின்றவாறு பேசிக் கொண்டிருப்பார். ஆண்டாளைக் கும்பிட்டுட்டு வா என்பார். ஆண்டாள் கோவிலுக்குள் நுழையும் போது வௌவால் வாசனை, விபூதி வாசனை, நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு, பல்வேறு மலர்களின் வாசனையெல்லாம் ஒன்றோடு ஒன்று இணங்கி முயங்கி ஒரு தெய்வீக வாசனை வீசும். அதை நுகர்ந்தவாறு கோவில் பிரகாரங்களை சுற்றியவண்ணம் வருவேன். கோயிலினுள்ளே நுழைகின்ற போது வருகின்ற வாசனை நீயல்லவா என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
வெளியே ஆண்டாள் கோவிலை ஒட்டியுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டாலில் பால்கோவா மணம் மூக்கைத் துளைக்கும். தாத்தா வீட்டுக்கு போயிருப்பார். டவுசர் பையில் ஆச்சி கொடுத்த கால் ரூவாய் காசு இருக்கும். கால் ரூவாய்க்கு பால்கோவா கேட்டால் கடைக்காரன் முறைப்பான். கூட்டம் வேறு கடையை மொய்த்தபடியிருக்கும். பசி வேறு வயிற்றைக் கிள்ளும் ஆனால் பால்கோவாவை இன்று எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்ற ஆசை பேராசையாக மாறி நம்மை விழுங்கியிருக்கும். ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் பால்கோவாவின் சுவையை நுகர்ந்தவாறு அங்குமிங்கும் திரிந்தவண்ணமிருப்பேன். இரவு பத்து மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஸ்வீட் ஸ்டாலும் மூடும் நேரம் நெருங்கியிருக்கும். என் வயதை ஒட்டியுள்ள சிறுவர்கள் கடை வாசலில் காத்திருப்போம். பால்கோவா கிண்டும்போது அடி பிடித்து கருகிய பால்கோவாவைப் பிசுறுகள் என்பார்கள். அதைத் தவிர்த்து விட்டு நல்ல பால்கோவாவைத் தான் விற்பார்கள். கடையைச் சாத்தும் போது “அண்ணே! பிசுறுண்ணே பிசுறுண்ணே” என்று சிறுவர்கள் மொத்த பேரும் கெஞ்சுவோம்.
அந்தக் கடைக்காரர் எங்கள் மீது இரக்கப்பட்டு ஒரு கரண்டி கால்ரூவா என்று விற்பார். அந்த பிசுறு பால்கோவா வெள்ளை பால்கோவாவை விட இன்னும் ருசியாக இருக்கும் முறுகல் தோசையைப் போல. அதை கையில் வைத்து தின்று கொண்டே மஞ்சப்பூத்தெரு வந்து சேருவேன். மனதின் ஓரத்தில் இன்னும் அந்தப் பிசுறு பால்கோவாவின் தீஞ்சுவை பால்யக் காதலைப் போல பற்றி எரிந்தவண்ணமிருக்கிறது.