சினிமாவில் யாரைப் பற்றி சொல்லலாம், சொல்லக்கூடாது என்பதில் நேரடியான உண்மைகள் இருக்க முடியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், நாம் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி வேடிக்கை பார்க்கலாம் என்கிற மனோபாவம் இருக்கிறது.
சினிமா என்றால் என்ன என்பது போல ஒதுங்கி நின்ற அவர்கள் எல்லாம் கொந்தளித்த தருணம் ஒன்று உண்டு என்றால், அது காட் பாதர் படம் சினிமாவாக சொல்லப்பட்டபோது தான். சுலபமாக புரிந்து கொள்ளுவதற்கு நாம் நாயகன் படம் வெளிவந்த காலத்தை சொல்லலாம். கட்டுடைப்பாளர்கள் ஏறக்குறைய அறச்சீற்றம் வந்து கொந்தளித்து விட்டார்கள். யாரையெல்லாம் ஹீரோவாக்குவது என்கிற விவஸ்தையில்லையா என்பது அவர்கள் கேள்வி. ஒரு கிரிமினலை போக்கசில் நிறுத்தி வைத்து, நீங்க நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் வதந்தி கிளப்பிக் கொண்டிருப்பதாவது...
இந்த மாதிரி சந்தேகங்கள் இன்னமும் நிலவுகின்றன. தேசமெங்கும் நாம் வாழும் முறையில் பின்னப்பட்ட பல்வேறு கோணங்களின் ஒரு விளைவுதான் மாபியா என்பதை உணரும் மன விசாலத்தை அவர்கள் அஞ்சுகிறார்கள். அதிகாரம் யாரையாவது பழி வாங்க விரும்புகிறது என்றால், அவன் கள்ளக்கடத்தல் செய்தான் என்றோ, கஞ்சா கடத்தினான் என்றோ பழி வாங்கப்படுவதற்கு தோதாக இம்மாதிரி விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஒழித்துக் கட்டப்படுவது எல்லாம் நம்மை கடந்து போகிற வெற்றுச்செய்திகளாக முடிந்து விட வேண்டும். விசாரம் கொள்ள வேண்டிய மனித உயிர்கள் அல்ல அவை என்கிற அசட்டை.
இருந்தாலும் தமிழில் நிழல் உலகைப் பற்றி கதை சொல்லி சினிமாவில் அதன் உரிமையை நிலை நிறுத்தி விட்டார்கள் என்பது கண்கூடு. எதிர்ப்பாளர்கள் தங்களுடைய குரலை இழந்ததும் நடந்து விட்டது.
மலையாளத்தில் பாலன் கே நாயர், உம்மர், டிஜி ரவி போன்றோர் கள்ளக்கடத்தல் ஆட்களாக வந்து உறுமி விட்டு இறுதியில் தண்டிக்கப்பட்டு மறைந்து போவதெல்லாம் பாவனை சினிமாக்களின் ஓர் அங்கம். அது நடக்கவே செய்யும், செய்தது. எல்லா மொழிகளிலும் அது நிகழ்ந்து போயிருக்கும். தீவார், டான் போன்ற படங்களில் ஒரு கூர்மை தென்படுவதாக கவனித்தவர்கள் கூட, அதனுடைய அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் ராஜாவின்ட மகன் படம் வெளிவந்தபோது சின்ன அதிர்ச்சியை உருவாக்கியது. அதற்குள் முழுமையான ஒரு கடத்தல்காரன் இருந்தான். அவனுடைய சாகசங்கள், மற்றும் அவனுடைய தரப்பு நியாயங்கள் போன்றவை அவற்றில் இருந்தன. என்ன வியப்பு என்றால், அவனுடைய தனிமை கூட அதில் சொல்லப்பட்டது. வியாபார வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இருந்த மாபியாவை மக்கள் குதூகலித்தார்கள். தமிழில் அப்படம் மக்கள் என் பக்கம் என்கிற பெயரில் வந்தது.
கஸ்டம்ஸ் அதிகாரிகள், கடற்படை போலீஸ் என்கிற மாதிரியான பல படங்களும் மலையாளத்தில் வந்து போனதைக் குறிப்பிட்டு சொல்ல முடியும். அவற்றுடன் காட்பாதர் அல்லது நாயகன் படங்களை காப்பி செய்த சில படங்களும் வந்தன. கௌரவர் என்று மம்முட்டி சற்று நிதானத்துடன் பண்ணிய படம் முதல் தரம் என்று சொல்ல முடியாதபோதும், சற்றே கௌரவமான ஒரு புதிய மனிதனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று சொல்லலாம்.
இந்த மாதிரிப் படங்களைப் பேச வருகையில் பலரும் அபிமன்யு என்கிற படத்தைப் பற்றிக் குறிப்பிடக்கூடும். படம் வருவதற்கு முன்னால்,அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டார்கள். பட்டி தொட்டியெங்கும் பேச்சாக இருந்தது. ஆனால் அப்படத்தின் இயக்குநர் நல்ல விளம்பரம் செய்வதில் மட்டுமே குறியாக இருப்பவர். ஒரு போதும், முழுமையான ஒரு நல்ல படத்தை பண்ணவே மாட்டார். அதில் மும்பை இருந்தது, தாராவி பூராவி என்றார்கள். நாயகன் செட்டுகளின் ஆத்திரம் இருந்தது, ஹிந்தி இருந்தது, லால் இருந்தார். படத்தில் ஒரு இன்ச் இடத்தைக் கூட விட்டுக் கொடுக்காமல் போலித்தனங்களே நிரம்பி வழிந்தன. தேவையற்ற மலையாளக் கூச்சல் படத்தின் போக்கையே சந்தேகம் கொள்ள வைத்தது.
அபிமன்யு படத்தை ஒரு சாம்பிள் போலவே எடுத்துக் கொள்ளலாம்.
நிழல் உலகத்தை சொல்ல வந்தவர்கள் ரத்தமும் சதையுமற்ற பொம்மைகளை ஊதிப் பெருக்கினார்கள். இந்த அவலம் உலகெங்கிலும் பரவலாக நடந்தது.
எண்ணிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, பொதுவாக மலையாள சினிமா, நிழல் உலகம் பக்கம் அவ்வளவாக திரும்பவில்லை என்பதுதான் நிஜம். எம் டி, லோகி. ஜான் பால் போன்ற திரைக்கதை ஆசிரியர்கள் அதில் ஈடுபடவில்லை. மாஸ்டர்களும் அதில் அக்கறை கொள்ளவில்லை. ஒரே விதிவிலக்காக பத்மராஜனை சொல்ல வேண்டும். சீசன், அபரன் போன்ற படங்கள் தனித்துவமிக்கவை. ஆயின் அது குற்ற உலகைப் பற்றியது அல்ல. அது குற்றவாளிகளின் மனநிலையைப் பற்றியது. மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் அப்படங்களைப் பற்றி தனியாக பேச வேண்டும். அன்று இருந்தவர்கள் மட்டுமில்லை, இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்களும் அதில் குறைவாகவே கவனம் கொள்ளுகிறார்கள்.
இதற்கிடையே சில படங்கள் இருக்கின்றன என்பதை சொல்லவே இந்தக் கட்டுரை. தற்போதைய சினிமாக்களில் மாயநதி என்னை மிகவும் ஈர்த்த படம். வெகு லாவகமாக ஒருவன் தன்னைக் குற்றச் செயல்களில் இருந்து விடுவித்துக் கொள்ளுவதை மிகவும் முதிர்ச்சியாக சொல்லி இருந்தார்கள். சர்வ சாதாரணமாக அதற்கே உரிய டெம்ப்ளேட்டை நொறுக்கி விட்டிருந்தார்கள்.
மாயநதி போலவே மலையாள சினிமாவில் புதிய அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.
முழுமையான நிழல் உலகக் கதையாக இல்லாதிருந்தபோதும், அதன் தோரணையால், மடிப்புகளால், குணநலன்களால் கம்மாட்டிபாடம் அசாத்தியமான ஒரு படைப்பு. அதன் திரைமொழி மிகவும் பச்சையாக இருந்து உண்மைகளை பட்டவர்த்தனம் செய்தது. வெறும் கூலிக்கு மனிதர்களை விரட்டுகிற ஒருவன் இறுதியில் தப்பி ஓடியவாறு இருக்கிறான்! ஒரு நகரை எழுப்பக் காரணமாயிருந்தவன் அந்த நகருக்குள் நுழைய முடியாத அபாயம். ஒரு நிழல் உலகை சினிமாவில் சிருஷ்டி செய்ய விரும்புபவர்கள் கம்மாட்டி பாடத்தின் திரைக்கதையில் மற்றும் படமெங்கும் மின்னிட்ட அத்தனை வர்ணங்களையும் அள்ளிக் கொள்ள வேண்டும். மேலும் அதில் அலை புரண்டிருந்த உணர்வுகளின் வெள்ளத்தை கைகொள்ள வேண்டும்.
கம்மாட்டிப் பாடம் படத்தை இவ்வளவு பாராட்டுவதில் வேறு ஒரு விஷயமுண்டு. இப்படத்தைக் காட்டிலும், இப்படத்தின் இயக்குநரே இதைக் காட்டிலும் நல்ல ஒரு படத்தை செய்திருக்கிறார். இந்த சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு சமீபத்தில் யாரும் இந்த அளவில் ஓர் அற்புதத்தை செய்யவில்லை என்பதை சொல்ல முடியும். ராஜீவ் ரவி, இயக்குநர். படத்தின் பெயர் ஞான் ஸ்டீவ் லோபஸ். திரைக்கதையில் ராஜீவ் ரவியுடன் அவருடைய மனைவி கீது மோகன்தாஸ் பணிபுரிந்தார். முக்கியமாக, எழுத்தாளர் சந்தோஷ் எச்சிகானம் இவர்களுடன் இணைந்து தம்முடைய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். வழக்கமான சடங்குகள் அனைத்தையும் புறக்கணித்து எழுதப்பட்ட எழுத்து. ஒரு கதையை சொல்லுவதில் உள்ள தனித்துவமான ஸ்டைல் இதில் இருக்கிறது. அதே நேரம் அதன் கச்சிதம் வியப்பூட்டக் கூடியதாக இருந்தது.
வெகுஜன மக்களைப் படம் சேர்ந்து அடைந்ததா என்கிற கேள்விக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரம் பின்னால் வரக் கூடிய பல சாதனை திரைக்கதைகளுக்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு கொலை நடக்கிறது. அதை நேரடியாகப் பார்த்தவன் என்ன நடந்தது என்பதை அறிய முயற்சி செய்கிறான். அவனும் கொலை செய்யப்படுகிறான். குற்றவாளிகள் யாரென்று படத்தில் இல்லை. தலையும், வாலும் காட்டப்படாத படத்தில் எல்லா சூசகங்களும் இருக்கின்றன. குற்றங்களின் வலைப் பின்னல்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை என்கிற எச்சரிக்கையுடன், தலையிட நேர்ந்து விட்டால் யாருமே இதற்கு பலியாகி விடலாம் என்கிற புன்னகையும் இருக்கிறது.
ராஜீவ்ரவி அனுராக் காஷ்யபின் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணி புரிந்தவர். கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் போன்ற படங்களில் அவர் புழங்கிய சகஜத்தை அவர் மலையாளத்துக்கு கொண்டு வந்தது அவர்கள் செய்த பாக்கியமென்றே சொல்ல வேண்டும். அவர் புதிய சினிமாவின் துடிப்புகளை தனது சினிமாக்களின் நரம்புகளில் பாய்ச்சினார். நாம் சொல்லி வந்த வரிசையில் அவர் ஒளிப்பதிவு செய்து, அவருடைய மனைவி இயக்கிய மூத்தோன் சந்தேகமில்லாமல் ஒரு புதிய ருசியை சினிமா ஆர்வலர்களுக்கு காட்டியிருக்கிறது.
இனிமேல் வருவதாக இருக்கிற துறைமுகம் படமும் புதிய சிகரங்களைத் தொடுவதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இறுதியாக மாலிக் படத்தைச் சொல்லலாம்.
ஒரு இனத்தைக் காப்பாற்றி அரவணைப்பது என்கிற வகையில் நாயகனும் மாலிக்கும் ஒன்றுதான். அவன் அதற்கு பொறுப்பேற்க முற்படுகையில் பல காரியங்களையும் செய்ய வேண்டி வருகிறது. நான்கு பேருக்கு நல்லது நடக்கும் என்றால், எதுவுமே சரி. என்றால் இந்த காலத்தில், இப்போதிருக்கிற அரசியல் நெருக்கடிகளில் மைனாரிட்டி மக்கள் மீது இழைக்கப்படுகிற அநீதிகள், சொல்ல வருகையில் வேறுவகை அழுத்தம் பெறுகின்றன. படம் ஒரு நல்ல புனைவாக, நல்ல சினிமாவாக இருந்து பல்வேறு உள் மடிப்புகளைக் கொண்டிருந்தது. படத்தின் மௌனங்களும், இருண்மையும் எல்லாம் படத்தில் சொல்லப்பட்ட கதையையும் கடந்து பல்வேறு கொந்தளிப்புகளை அடக்கி வாசித்து வெளிப்படுத்தி இருந்தார்கள். படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன். பகத் ஒரு காலத்தின், இனத்தின் அடையாளமாக தன்னை நிறுத்தி வெறுமையை துளைத்த துணிச்சலுக்கு மேலும் பல பாராட்டுகள் கிடைத்திருக்க வேண்டும். பல பேருடைய ரசனையில் அது ஒரு சுரணையாக மாறவில்லை.
இவ்வருடத்தில் வந்த வெயில் என்கிற படத்தை இவ்விடத்தில் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். அத்தனை நல்ல மனசும் இருக்கிற இளைஞன் ஒருவன் தன்னுடைய சூழலை சகித்துக் கொள்ளாமல் மெதுவாக குற்றங்களை நோக்கி ஈர்க்கப்படுகிற கதை. ஒரு கட்டம் வரை சென்று கதை திசை திரும்பவே செய்கிறது. ஆனால் படத்தின் நீரோட்டத்தில் நாம் அடையாளம் காண பலவும் இருந்தன. முக்கியமாக ண்டச்ணஞு ணடிஞ்ச்ட் என்கிற நடிகன் அதகளம் செய்திருந்தான்.
முதலில் துவங்கிய இடத்துக்கே வருவோம்.
நிழல் உலக குற்ற செயல்கள் அதற்கே பிரத்யேகமாக தயாரித்து அனுப்பப்பட்ட ஒரு கிரகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செய்து கொண்டிருப்பதா? அதனால் பயன் அடைந்து கொழித்துக் கொண்டிருப்பவர்கள் யாரெல்லாம்? அதை பிழைப்பாக செய்து கொண்டு பொறுக்கித் தின்னுகிறவர்கள் யாரெல்லாம்? வெறும் பலி கடாக்களாக அடையாளமற்று அழிக்கப்பட்டு மறைந்து போகிறவர்கள் நமது ஜனத்தொகையில் இல்லாதவர்களா? எனக்கு நண்பனாக இருந்த ஒருவன் பிழைப்பு நிமித்தம் சுற்றி அலைந்து ஒரு நாள் முழுவதுமாக காணாமல் போனான். அவனுடைய நாற்பதாம் வயதில் அவனுடைய சடலத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவர்களுக்கு முகமில்லை. அவனும் முகமற்று தான் அன்றாடம் எலும்பு முறிய உழைத்திருக்கிறான். ஒருநாள் யாரோ குத்திப் போட்டு விட்டுப் போனதில் அவனுடைய அர்த்தமற்ற வாழ்க்கை முடிந்து போயிற்று. அவனுக்கு படியளந்து சம்பாதித்தவர் யாராக இருக்கக் கூடும் என்றால் தெரியாது. அவன் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்தவர் பற்றியும் தெரியாது. அன்று பிண அடக்கத்துக்கு வந்தவர்கள் எல்லாம் கைகளைப் பிசைந்து கொண்டு நின்ற கையறு நிலை கவனத்தில் வருகிறது.
வேறு ஒன்றும் கூட. ஞான் ஸ்டீவ் லோபசில் ஹீரோ ஒரு மொபைல் வைத்திருப்பான். அவனுடைய காதலி பெயர் அஞ்சலி. அதைக் குறிப்பிடும் பொருட்டு ரகுமானின் அஞ்சலி, அஞ்சலி பாட்டு ரிங் டோனாக இருக்கும். அவன் ஒரு விதத்தில் நம்முடைய ஆள். ஹீரோ. நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அந்த போக்கிரி வைத்திருக்கிற மொபைலில் கூட ரிங் டோன் அஞ்சலி, அஞ்சலி தான். இது இளையராஜாவின் அஞ்சலி, அஞ்சலி. ஆம், அது அவனுடைய மகளைக் குறிப்பிடுகிறது. குண்டு வெடித்து சிதறி, துண்டு துண்டாக போன பிறகு அந்த மொபைலை ஒப்படைத்து, அவன் மரணமடைந்த விஷயத்தை சொல்ல அவனுடைய மனைவிக்கு முன்னால் ஹீரோ நிற்கிற காட்சி அது.
யாரும் சினிமாவில் எதற்கு வர வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்.
ஜூலை, 2022