மாலை நேரத்து நடனம்!
ஓவியம்: ஜீவா

மாலை நேரத்து நடனம்!

சிறப்புப் பரிசு ரூ.2500 பெறும் கதை

மரங்கள் சூழ ஒரு வனம் போல அமைந்திருக்கும் மிகப் பெரிய உயர்தரத் தனியார் பள்ளி. அதற்குள்நுழைய வலது லேனில் திரும்பியபோது எப்போதும் போல நிறைய நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. தலைவலி கொஞ்சம் அதிகமாகி இருந்ததால் (அதற்கான மாத்திரை போட்டுக்கொண்டு) சீக்கிரமே கிளம்பிவிட்டேன். இல்லாவிட்டால் நியுஜெர்சியின் பிரதான 287 சாலையில் ஊர்ந்து வரவே ஒரு மணி நேரம் பிடித்திருக்கும். பெயர்தான் விரைவுச் சாலை!

காரை நிறுத்திவிட்டுச்சித்தாவின் வகுப்பை நோக்கி நடக்கும் போதே எதிரே சிரித்த முகத்துடன் ஓடி வந்து முட்டி அனைத்துக்கொண்டான். பதின்மூன்று வயதாகப்போகிறது, இன்னும் ஐந்து வயதென்ற நினைப்பு! ஒரே குழந்தையாக இருப்பதால் அதீத செல்லம். ஆனாலும் இந்தச் செல்லமும் கொஞ்சலும் வேண்டியிருந்தது. கட்டிப்பிடித்தவாறே காருக்குச் சென்றோம்.

பையைப் பின் பக்கம் வைத்துவிட்டு முன்னால் உட்கார்ந்து அநிச்சையாய் சீட் பெல்ட்டை போட்டவாறு “என்னம்மா இன்னிக்கு சீக்கிரம்” என்றான்.

“கொஞ்சம் தலைவலி, ஆமாம் இன்னிக்கு என்ன சித்தா ரொம்ப சிரிச்ச மூஞ்சியா இருக்க. என்ன நியூஸ்?” என்றேன். படிப்பதென்னவோ எட்டாம் வகுப்பு ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்வதால் தமிழ் இன்னும் ததிங்கிணத்தோம்தான்.

“நீ கெஸ் பண்ணேன்” என்று சொல்லி ஓரக்கண்ணால் சிரிப்புப் பொங்க பார்த்த மகனுடன் விளையாட எனக்கும் ஆர்வம்தான்.

என்னவாக இருக்கும்? இங்கே பள்ளியில் யார் முதல் ராங்க் என்றெல்லாம் சொல்வதில்லை, எதேனும் விளையாட்டாக இருக்கும்.இவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பானோ? இருக்காதே. இன்னும் நாள் இருக்கிறதே. இசை, இவன் தான் ஆர்கெஸ்றாவில் லீட் வயலினிஸ்ட்டாயிற்றே.

ஏதேனும் சுற்றுலாவாய் இருக்கும் என்று சர்வ நிச்சயமாகக் கண்டுபிடித்துவிட்டேன்எனும் நம்பிக்கையுடன்

“எங்க டிரிப்?” என்றேன்

“அதான் இல்லைம்மா.”

“ நீ தோத்தாச்சு”

“வீ ஆர் ஹவிங் அவர் ஃபர்ஸ்ட் மிடில் ஸ்கூல் டான்ஸ் , சித்தா ரொம்ப ஹாப்பி’’

“வ்வ்வ்வ்வாட்? சோ சூன்?”என்றேன் திகைப்போடு.

வீடு வந்தும் இன்னும் திகைப்பில் இருந்து மீளவில்லை. இன்னும் 12 வயதாகவில்லை அதற்குள் முதல் நடனமா? என்ன இது?

“அம்மா – நான் யாரை என்னோட டான்ஸ் ஆட கேட்கட்டும்? மோனிக்காவையா? கிஞ்சலையா? எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். டீச்சர் சொன்னாங்க, முதலில் க்ரூப் டான்ஸ்தான், அப்புறம் அரை மணி யாரோ ஒருத்தர் கூட ஆடலாம்னு. எனக்கு இன்னும் டான்ஸ் ஆட சரியா தெரியாது. அவங்களே கத்து தருவாங்க. எல்லாருக்கும் தினம் அரை மணி பிராக்டீஸ் இருக்கு!” குதிப்பும் துள்ளலுமாய் ஹோம் வொர்க் செய்யச் சென்றான்.

வெர்க் ஹார்ட் ப்ளே ஹார்ட் என்பதெல்லாம் எங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட பழக்கம். முதலில் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டுத்தான் டிவி அல்லது அவன் சோனி பிளே ஸ்டேஷன்! அவனுக்குச் சொல்லவே வேண்டாம்!

இரவு உணவு ஆயத்தங்களில் இறங்கினேன்.

சித்தா கேட்டு மோனிகாவோ கிஞ்சலோ மாட்டேன் என்று சொல்லி இவன் மனம் வருந்திவிட்டால்? கொஞ்சம் கொஞ்சமாகத் தயார் செய்ய வேண்டும். எப்படி இவனுக்கு அவர்களோடு நடனமாடப் பிடிக்குமோ அதேபோல அவர்களுக்கு வேறு யாரோடும் ஆடப்பிடிக்கலாம் அதனால் அவர்களுக்கு இவனைப் பிடிக்காது என்ற பொருளில்லை என்று சொல்லித்தர வேண்டும். என்றெல்லாம் மனம் சிந்திக்க தொடங்கியது.

டின்னர் முடித்து டேபிளில் எடுத்து வைத்து சித்தாவை அழைக்கவும் முரளி வரவும் சரியாக இருந்தது!

“என்ன விஷயம்?இன்னிக்கு சீக்கிரமே வந்தாச்சா?” என்ற கணவனிடம், “தலைவலி, சீக்கிரம் தூங்கினா சரியாகிடும்.சாரி, வந்ததும் வராம டின்னருக்கு அவசரப்படுத்தறேனா?” என்றேன்.

“இட்ஸ் ஒகே தலைவலி. நாள் முழுக்க வேலை. தெரியாதா? வழக்கம் போல கிளையண்ட் மீட்டிங். எனக்கே சீக்கிரம் தூங்கினா பரவாயில்லை ஒரு ஐஞ்சு நிமிஷம் கொடு, ப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று உடை மாற்றச் சென்றான் முரளி!

“டாடி, நானும் அம்மாவும் வர சண்டே எனக்கு புது டிரெஸ் வாங்க போறோம். நீயும் வரயா?”என்றவாறே டின்னருக்கு வந்தான் சித்தா.

“என்ன விஷயம் சித்தா? ஸ்கூல்ல ஏதாவது பிளே, இல்லை கான்சர்ட்?”

“நோ டாட், எங்க மிடில் ஸ்கூல்ல முதல் டான்ஸ்”

“டான்ஸ், யார் கூடடா?”

“வேற யாரு டாடி, எங்கஃப்ரென்ட்ஸ் கூடத்தான்?”

என்றவாறே தன் டின்னரை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு ஓடினான்.

கேள்விக்குறியுடன் என் முகத்தைப் பார்த்த முரளியிடம்“நமக்குத்தான்குழந்தை.பன்னிரண்டுவயசுஆச்சு. ஸ்கூல்லேயே டான்ஸ் எல்லாத்துக்கும் எடிக்கெட் சொல்லித்தந்தா நல்லதுதானே” என்றேன்

“அது சரி.அதுக்காக இவ்வளவு சீக்கிரமா? ஐயாவுக்கு இப்பவே பெண்ணுங்க கூட டான்ஸெல்லாம் தேவையா?படிக்கிற கவனம் எல்லாம் போகப்போகுது. இன்னும் குழந்தைம்மா.”

“கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரியட்டும் நாம என்ன ஆண்டிப்பட்டிலயா இருக்கோம். இங்க இருக்கிற மாதிரி இருக்க வேணாமா?” என்றேன்

“அம்மா தாயே! இருக்கட்டும்.யார் வேணாங்கிறாங்க. இப்ப கும்பகோணமே நியுஜெர்சியவிட நாகரிக உச்சிக்கு போயாச்சு. தெரியும்ல. யாரோ 12 ஆவது படிக்கிற பையன் ப்ரோபோஸ் பண்ண போய், பொண்ணு மாட்டேன்னு சொல்லிட்டான்னு அந்தப் பொண்ணு மேல் மண்ணெண்ணை ஊத்தி எரிச்சுத் தானும் எரிஞ்சிட்டான். அம்மா சொன்னாங்க, போன வாரம் பேசினப்போ. அந்த அளவு மோசமாகாது ஆனாலும் இவன் யாரையாவது டான்ஸ் ஆடக் கூப்பிட்டு அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லிட்டா இவன் மனசு கஷ்டப்படும் இல்லை, இப்பவே இதெல்லாம் தேவையா?”என்று விவாதித்தான் முரளி.

அப்புறம் “இது உன் டிபார்ட்மெண்ட். பாத்துக்கோ.” என்று முடித்தான்

“தோல்வி, சின்னச் சின்ன நிராகரிப்பு, இப்பவே வரது நல்லதுதானே. நாம் இருக்கோம், புரிய வைக்க, ஒரு டிரிப் கூட்டிட்டு போய் சரி பண்ண, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு அவனைத் தயார் செய்யணும்” என்றுசொன்னாலும், சின்னப் பிள்ளையின் மனம் வலிக்குமே எனக்கும் பயமாகத்தான் இருந்தது!

மறு நாள் அலுவலகத்தில் என் முகம் அமைதியைக் கண்டு தோழிகள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

காஃபிக்காக வெளியே போனபோது பிடித்துக்கொண்டார்கள்

“என்னம்மா, சண்டையா வீட்டில?”

“இல்லையே ஏன் கேக்கறீங்க?”

“முகமெல்லாம் வாடியிருக்கே!”

“அதுவா, சித்தாவோட ஸ்கூல்ல சாயங்காலம் மீட்டிங்! கொஞ்சம் சீக்கிரமா போகனும்!”

“ஏதாவது பிரச்சினையா?”

“நோ நோ! மிடில்ஸ்கூல் டான்ஸாம். கொஞ்சம் புரியலை. நாங்க இந்த ஊருக்கு வந்தே பத்து வருஷம்தான் ஆகுது. இதெல்லாம் எனக்குப் புதுசு அதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு.” என்று என் தயக்கத்தைச் சொன்னேன்.

“அதுக்கு ஏன் கவலை? சந்தோஷமாப் போகட்டும். இரண்டு மணி நேரம்தானே. நீயும் வேணா கூடப்போ.” என்றாள் தோழி

“அதான் கொஞ்சம் கவலையா இருக்கு” என்றேன்.

“எது நீ கூடப்போறதா?”

“இல்லம்மா, இந்த வயசிலேயே ரிஜக்‌ஷன் எப்படி ஹாண்டில் பண்னுவானோங்கிறது.”

“இந்த வயசிலதான் ஈசி. அட்டென்ஷன் ஈசியா டைவர்ட் ஆவாங்க, மேலும், நமக்கு ஆசைப்பட உரிமை இருக்கிறமாதிரி அவங்களுக்கு வேண்டாம்னு சொல்லவும் ரைட்ஸ் இருக்கு.

அவங்களுக்கு தா இன்னொருத்தர் மேல ஆசைப்பட விருப்பம் இருக்குன்னு சொல்லித்தர வாய்ப்பு இருக்கு. அடிபட்டா தாங்கிப்பிடிக்க அம்மா அப்பான்னு நாம் இருக்கோம்.

என் மகன் ஸ்கூல்ல போன வருஷம். முதல்ல க்ரூப் டான்ஸ் ஆரம்பிக்கும் நம்பர் கொடுத்து க்ரூப் பிரிப்பாங்க. எல்லாருக்கும் எல்லாருடனும் ஆட வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த வருஷம் இன்னும் சின்ன குருப். ஹைஸ் ஸ்கூல் தனி நடனம். அதுக்குள்ள பழகிடுவாங்க. இது வெறும் ஆடக் கத்துக்கிறதுதான். டீம் ஸ்போர்ட்ஸ் மாதிரிதான். இதுக்கு நீ ஏன் அநாவசியமா கவலைப்படறே? ஸ்போர்ட்ஸ் டீம்ல ரிஜெக்ட் ஆகறதில்லையா?”

“இல்லை ஒரு பெண்ணுமேல ஆசைப்பட்டு கேட்டு ரிஜெக்ட் ஆகறது வேற மாதிரி இல்லையா?”

“எது? ரிஜக்‌ஷன் எல்லாம் ஒண்ணுதானே? இரண்டு நண்பர்கள் கூடச் சேரணும். ஆசைப்பட்டு முடியாம போனா அதுகூட ரிஜக்‌ஷன் தானே? நாம நிறையத்தப்பான செய்திகளே படிச்சு அதையே கற்பனையே செய்துக்கிறோம். கவலைப் படாம எஞ்சாய்.” என்று சொல்லிச் சென்ற தோழியைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

தொடர்ந்து வந்த மீட்டிங்களில் விவாதங்களில் மறந்தே போனேன். வழக்கம் போல கிளம்பிப் பள்ளிக்குச் சென்று, பிள்ளையை பிக் அப் செய்து கொண்டு ஆசிரியைப் பார்க்க போன இடத்தில் அப்படியே வாலண்டியராக பெயரைக் கொடுத்துவிட்டுஅவரிடம் மெல்ல விசாரித்தேன்.

“ஓஹ் டாக்டர் ராமராஜன்! ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. இரண்டு மணி நேரம் க்ரூப் ஸ்க்யர் டான்ஸ். அடுத்த வாரம் முழுக்க பிராக்டீஸ்!

பேரண்ட்ஸ் எல்லாம் ஸ்னாக் எடுத்து வராங்க. நீங்க என்ன கொண்டு-வரப்போறீங்கன்னு அந்த எக்ஸெல் சீட்ல குறிச்சிடுங்க, பை.” என்றவாறு விடை கொடுத்தார்.

மகனுடன் திரும்பும் போது அந்த உற்சாகம். என்னையும் தொற்றிக்கொண்டது!

அடுத்தடுத்த நாட்களில் உரையாடல்கள் நடனத்தை ஒட்டியே இருந்தன. அவனின் பயிற்சிக்கு நான் ஈடுகொடுத்தேன்.

“இன்னிக்கு என்ன ஸ்பெஷல்குட்டி?”

“அம்மா, நாங்க எல்லாரும் நம்பர்ஸ் பிக் பண்ணினோம். ஒன்றில் இருந்து நான்கு வரை. ஒண்ணாம் நம்பர் எடுத்தவங்க எல்லாம் ஒரு க்ரூப். இரண்டு வந்தவங்க ஒரு க்ரூப்.மூணு இன்னொரு க்ரூப். நாலு ஒரு க்ரூப். ஒன்று ப்ளூ கலர் சர்ட், இரண்டுரெட் ஷர்ட்,மூணு க்ரீன் ஷர்ட், நாலு யெல்லோ ஷர்ட். பிளாக் பேண்ட். நான் குரூப் மூணு. இந்த வாரம் கடைக்கு போகணும்  க்ரீன் ஷர்ட் வாங்க. கேர்ல்ஸ் அதே கலர் ஸ்கார்ட் சட்டை.”

“உன் க்ரூப்பில எத்தனை பேர்டா குட்டி?”

“என் க்ரூப்பில எட்டுப் பேர், நாலுபாய்ஸ், நாலுகேர்ல்ஸ், கெஸ் வாட்? நான் லக்கியாக்கும். என் க்ரூப்பில மோனிக்கா கிஞ்சல் இரண்டு பேருமே இருக்காங்க அம்மா!

அடுத்த மாசம் திரும்பவும் நம்பர் சூஸ் பன்ணுவோம் அப்ப வேற வேற பேர் க்ரூப் ஆக சேருவோம். நாலு தடவை டான்ஸ் இருக்கு அம்மா!”

“இஸ் சித்தா ஹாப்பி குட்டி?”என்றேன்

“அஃப் கோர்ஸ் அம்மா!”

“சித்தாக்கு தெரியும் தானே அடுத்த முறை இந்த ஃப்ரேன்ட்ஸ் மாறிடுவாங்கன்னு, அதனால வருத்தம் வரக்கூடதுன்னு”

“அம்மா. உனக்கு மிஸ் லிசாவைத் தெரியும்தானே? எங்க கவுன்சிலர். அவங்க பாடினாங்க. நல்லாவே இல்லை. இன்னிக்கு அவங்க பாடினது எத்தனை பேருக்கு பிடிச்சதுன்னு கேட்டாங்க. ஹானஸ்டா சொல்லனும் கேட்டாங்க. நிறைய பேர் பிடிக்கலைன்னு சொன்னோம்.”

அவங்க டீச்சரா எத்தனை பேருக்கு பிடிக்கும் கேட்டாங்க. எல்லாருக்கும் பிடிக்கும் நல்ல டீச்சர். அப்ப சொன்னாங்க ஒருத்தர் ஒரு விஷயத்தில பிடிச்சா இன்னொரு விஷயத்தில் பிடிக்கனும் அவசியம் இல்லை, அதில தப்பு ஒண்ணும் இல்லைன்னு.

நமக்கு பிடிச்சது எல்லாருக்கும் பிடிக்கனும்னு இல்லை, அதுக்காக அவங்களுக்கு நம்மை முழுசா பிடிக்காதுன்னு இல்லை. ஒருத்தர் உன் ஷர்ட் பிடிக்காதுன்னா அதுக்காக அவங்களுக்கு உன்னையே பிடிக்காதுங்கிறது இல்லை. நீ ஸ்மார்ட்டா இருக்கிறது பிடிக்கலாம், உன் ஸ்போர்ட்ஸ் பிடிக்கலாம் ஆனா உன் டிரெஸ் சென்ன்ஸ் மட்டும் பிடிக்காம இருக்கலாம். அதுக்காக அது மோசம்னு பொருள் இல்லைன்னு சொன்னாங்கம்மா.”

அடுத்த இரண்டு வாரங்கள் மாலை முழுதும் ஸ்க்யர் நடன பயிற்சிதான். கொஞ்சம் வால்ட்ஸ் கூட. அப்புறம்தான் தெரிந்தது, ஒரு மணி க்ரூப் டான்ஸ், இடையே இரண்டிரண்டிரண்டு பேராய் வால்ட்ஸ் ஆடியிருக்கிறார்கள் என்று!

ஷாப்பரோனாய் சென்ற நான் நன்றாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டு வம்பளந்ததில் கண்டு கொள்ளவே இல்லை!

வரும் வழியில் காரில் ஏறிய பின் மகிழ்ச்சியும் அயர்ச்சியும் நிறைந்த சித்தா, பெல்ட்டை அணிந்து கொண்டே

“சித்தா ஈஸ் சோ ஹாப்பி, பிகாஸ் சித்தா ஹஸ் தி பெஸ்ட் ஃப்ரெண்ட்.” என்றான்

“ரியலி! அது யாருடா? நான் கெஸ் பண்ணவா? பாடி (Paddy)”

“நோ!”

“ஜேம்ஸ்”

“நோ!”

“மோனிகா”

“நோ”

“பின்ன யாருடா?”

“அம்மா. லவ் யு டு தி மூன் அண்ட் பாக்! என்னை டான்ஸுக்கு அழைத்து போனதுக்கு நன்றிம்மா” என்றபடியே உறங்கிப்போனான்.

எடுத்த புகைப்படங்கள் சரியாகக் கூட வராமல் சொதப்பியிருந்தது ஆனாலும் ஒரு நிம்மதி பரவியிருந்தது. இன்னும் பத்து பேருக்கு மிடில் ஸ்கூல் டான்ஸ்சா அது ஒன்னும் இல்லைங்க என்று சொல்லும் அளவு தேறியிருந்தேன். முரளியின் டென்ஷன் குறையத்தான் இன்னும் கொஞ்சம் நாள்களும் பெக்ஸும் வேண்டியிருந்தது!

பத்மா அர்விந்த்

 பத்மா அர்விந்த் மருத்துவத்துறையில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய, மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகவும்  உடல்நலத்துறையின் சிறப்பு ஆலோசகராகவும்20 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார்.

திசைகள், தமிழோவியம் போன்ற இணைய இதழ்களும், ஊடறு, தினமணி ஆகிய பத்திரிகைகளும் இவருடைய கட்டுரைகளைத் பிரசுரித்திருகின்றன. மெட்ராஸ் பேப்பர்  இணைய இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் வழிகள் குறித்து இவர் எழுதிய க்ரீன் கார்ட், அமெரிக்க அரசியல் குறித்து எழுதிய உள்ளும் புறமும், திட்டமிடுதல் பற்றிய திட்டமிட்ட வெற்றி  என்ற புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com