"உங்களை எல்லாம் ஆண்டவன் தான் திருத்தணும்!''

M.G.R
எம்.ஜி.ஆர்.
Published on

சிரிப்பு இல்லாத நாள் வீணாக்கப்பட்ட நாள் என்றார் சார்லி சாப்ளின். அன்றாட வாழ்வின் அழுத்தங்களில் புன்னகையும் ஒளிந்திருக்கிறது. ட்ராஜெடிகளைக் கூட பின்னாளில் காமெடிகளாகக் காணமுடியும். இந்த இதழின் சிறப்புப் பக்கங்களில் சில நிஜவாழ்க்கைக் காமெடிகள் இடம் பெறுகின்றன. புன்னகை இனிது, எவ்வளவு சிறிதாக இருந்தாலும்!

-ஆசிரியர் குழு

தற்போதைய அரசியல் சூழலில் இயங்கும் தலைவர்களிடம் நகைச்சுவை உணர்வு குறைவாகக் காணப்படுவதாகவே தெரிகிறது. தமிழக அரசியலில் இயங்கிய மூத்த தலைவர்கள் பொதுக்கூட்டங்களிலும் செய்தியாளர் சந்திப்புக்களிலும் கலகலவென இருக்கவே விரும்புவார்கள்.

சிரிப்பொலிக்குப் பஞ்சமே இருக்காது. விமர்சனங்களுக்கும் நகைச்சுவையுடன் பதில் சொல்லுவார்கள். இதில் ராஜாஜி, கலைஞர் இருவருமே விற்பன்னர்கள். சட்டென்று நினைவுக்கு வரும் சில சம்பவங்கள்:

சட்டமன்றக் கூட்டம் ஜோராக நடந்துகொண்டிருந்தது. எம்ஜிஆர் முதலமைச்சர். எதிர்க்கட்சி வரிசையில் கலைஞர். சபாநாயகர் இருக்கையில் ராசாராம். அது ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு ஆகியோர் திமுக தரப்பு எம்.எல்.ஏக்களாக இருந்து சட்டமன்றத்தில் சண்டமாருதமாக இயங்கிய காலம். இவர்கள் மூவரும் எழுந்துநின்று ஏதோ ஒரு பிரச்னையில் கண்டனம் தெரிவித்து, கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். சபாநாயகர் ராசாராம் பொறுமை இழந்தார். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் இவர்கள் கேட்பதுபோல் தெரியவில்லையே என தலையில் அடித்தவாறு.. ‘உங்களை எல்லாம் ஆண்டவன் தான் திருத்தணும்’ என்றார். உடனே கலைஞர் இதற்காகவே காத்திருந்தவர் போல் எழுந்து, ‘சபாநாயகர் ஆண்டவன் தான் வரவேண்டும் என்றார். நான் தானே முன்பு ஆண்டவன். எனவே நான் சொல்கிறேன்.. மூன்று பேரும் அமைதியாக உட்காருங்கள்!’ என்றார். அவையில் எழுந்த சிரிப்பொலி அடங்க சற்று நேரமாகியது.

ராஜாஜி நீண்டகாலமாக அரசியலில் இருந்தவர். மிகக் கூர்மையான மதி உடையவர். ஒரு சமயம் சில வெளிநாட்டு பிரதிநிதிகள் அவரைக் காண வந்தனர். அவர்கள் ராஜாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரைக் காண வருவதற்கு முன்பாக மாமல்லபுரம் சென்று அங்கிருந்த நினைவுச் சின்னங்களைக் கண்டதாகக் கூறினர். ராஜாஜி,’ ஓ… அந்த பழங்கால நினைவுச் சின்னங்களைப் பார்த்தது போதாது என்று இன்னொரு நினைவுச்சின்னமாக இருக்கும் என்னிடம் வந்துவிட்டீர்களா?’ என சிரித்துக்கொண்டே சொன்னார்!

சின்ன அண்ணாமலை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். மூதறிஞர் ராஜாஜிக்கு மிக வேண்டியவர். சுதந்தரப் போராட்ட வீரரும் கூட. அப்போது பம்பாயில் ஒரு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை தமிழர். சின்ன அண்ணாமலைக்கு கலைத்துறையுடன் தொடர்பு உண்டு என்பதால் சென்னையில் இருந்து சங்கீத வித்வான் ஒருவரை கச்சேரி செய்ய அழைத்து சென்று இருந்தார். கச்சேரியின்போது நடந்ததாக சின்ன அண்ணாமலை பகிர்ந்துகொண்ட நகைச்சுவை நிகழ்வு இது. 

’பாம்பேக்காரர்கள் இது என்ன தமிழில் ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாரே.. இந்த வித்துவான்… பாம்பே பற்றி பாடுங்கள்… என்று குரல் எழுப்பினார்கள். வித்துவானுக்கு பாம்பே பற்றி என்ன தெரியும்? விழித்தார். ஆனால் வந்திருந்தவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. பிறகு அவர் ஒரு பாட்டைப் பாடினார். எல்லோரும் அமைதி ஆகிவிட்டார்கள்!” அது என்ன பாட்டு தெரியுமா? நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே.. நீ நல்ல பெயர் பெற்றது ஏன் சொல்லு பாம்பே….” இதை அவர் சொல்லி முடித்தவுடன் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பெரியாரைப் பேட்டி காணப் போயிருந்தேன். நான்கைந்து நாள் மாநாட்டுக்கு அப்போது ஏற்பாடு ஆகி அதுதான் முதல் நாள். அப்போது நான்காம் நாள் பேச வேண்டிய ஒரு பேச்சாளர் அன்றே குடும்பத்துடன் வந்துவிட்டார். அவர் பெரியாரைப்பார்க்க வந்தார். பெரியாருடைய சிக்கனம் தான் எல்லோருக்கும் தெரிந்ததாயிற்றே.. ‘உனக்கு நான்காம் நாள்தானே நிகழ்ச்சி.. நீ ஏன் இப்போதே வந்தாய்?’ என்றார். ஒன்றுமில்லை.. தங்குமிடம் சாப்பாடு செலவு கழகத்துக்கு ஆகுமே என்ற கேள்வி அதில் தொக்கி நிற்கிறது. வந்தவருக்கு அது தெரியாதா என்ன? அவர் உடனே அவசர அவசரமாகப் பதில் சொன்னார்:’ அய்யா… நானும் குடும்பமும் தங்க வெளியே ஏற்பாடு பண்ணி இருக்கேன்!’ பெரியாரின் முகத்தில் மலர்ச்சி தெரிய கூட இருந்த எல்லோரும் கலகலவென சிரித்தார்கள்!

பேட்டி காணும்போது தலைவர்களை செய்தியாளர்கள் கலாய்ப்பதும் உண்டு. ஒருமுறை எம்ஜிஆர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். பல கேள்விகள் வந்து விழுந்துகொண்டிருந்தன. அந்த காலத்தில் எல்லா செய்தியாளர்களும் பொதுவாக எம்ஜிஆருக்குத் தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் அன்றைய சந்திப்பில் ஒருவர் புது ஆளாக இருந்தார். அவரைப் பார்த்து எம்ஜிஆர் ‘யார் நீங்க? எந்த பத்திரிகை? பார்த்ததே இல்லையே? ’ என்று விசாரித்தார். அந்த நிருபர் குறும்புக்காரர். ‘ சார்.. நான் புதுமுகம்’ என்றார் சினிமா பாணியில். எம்ஜிஆரே டக்கென்று சிரித்துவிட்டார்.

எம்ஜிஆரால் எம்பி ஆக்கப்பட்ட மூத்த அரசியல்வாதி அவர். ஆனால் அவரிடம் செய்திக்கான முக்கியத்துவம் எதுவும் இல்லை. என்ன பேசினாலும் பேட்டி கொடுத்தாலும் ஒன்றும் தேராது. செய்தித்தாளில் போடவும் மாட்டார்கள். எனக்கு நன்றாக அறிமுகமானவர்தான். ஒருமுறை எல்லா நிருபர்களையும் அழைத்து ஓட்டலில் மதிய சாப்பாடு போட்டார். சாப்பாடு முடிந்ததும் வாங்க, என்ன கேள்வி வேணா கேளுங்க பதில் சொல்றேன் என்றார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர கேள்வியே வரவில்லை. மயான அமைதி. மெதுவாக ஓரு துடுக்குத்தனமான நிருபர் எழுந்தார். நான் ஒண்ணும் கேட்கலாமா என்றார்.  ‘கேளுங்க’’

“நாங்க ஆபீஸுக்கு இப்ப கிளம்பலாமா?’ என்றாரே பார்க்கலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com