ஒவ்வொருத்தரும் குறைந்தது பத்துகிலோவுக்கு மேல் வாங்கிச் செல்வார்கள்!

karuppatti_mittai
Published on

நீங்க கருப்பட்டி மிட்டாயை ஓடிச்சா அதுல இருந்து பாகு ஒழுகணும், அதுதான் கருப்பட்டி மிட்டாய் இல்லனா, அவிச்சமிட்டாய்தான்” என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தனர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடல் அருகில் மூன்று தலைமுறையாக கருப்பட்டி மிட்டாய் வியாபாரம் செய்துவரும் நாகராஜ்- மணிகண்டன் குடும்பத்தினர். 1972-இல் இருந்து கூட்டுக்குடும்பமாக இந்த ஸ்வீட் கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கடைக்கு பெயர் வைப்பதற்கு முன்பே ஊர்மக்கள் ”ரத்னா கடை” என்ற அவரது அம்மா பெயரையே கூப்பிட்டு வந்ததால் அந்த பெயரையே கடைக்குச் சூட்டிவிட்டார்கள். பாட்டி சங்கரத்தம்மாள் காலத்திலிருந்து கருப்பட்டியை ஓலைக்கொட்டானில் (பனையோலையில் செய்த பெட்டி) வைத்துதான் பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

‘நாங்க மூன்று தலைமுறையாக கருப்பட்டி மிட்டாய் செய்றோம். இந்த மிட்டாய் விரைப்பாக இருந்தால்தான் மரப்பலகையில் கோபுரமாக அடுக்கி வைக்கமுடியும். அந்த விரைப்புத் தன்மைக்காக 10 கிலோ கருப்பட்டிக்கு ஒரு கிலோ சீனி சேர்ப்போம். மற்றபடி வேறு ரசாயனங்கள் சேர்ப்பது கிடையாது. ஆர்டர் கேட்கிற ஆட்களுக்கு மட்டும் ஒரு பொட்டு சீனி கூட சேர்க்காமல் கருப்பட்டியில் மட்டுமே செய்துகொடுப்போம். அந்தக் கருப்பட்டி மிட்டாய் ஜாங்கிரி மாதிரி கொஞ்சம் குழைவு தன்மையோடு இருக்கும். அந்த மிட்டாயை அடுக்கிவைக்காமல் அப்படியே தட்டில் வைத்து கொடுத்துவிடுவோம். கடலை எண்ணெயில் செய்தால் நான்கு நாட்கள்தான் மிட்டாய் தாக்குப்பிடிக்கும் அதற்கு பிறகு புளிப்பு தன்மை ஏறிவிடும். ஆதனால் சுத்திரிகரிக்கப்பட்ட எண்ணெயில் செய்கிறோம் அது 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்,’ என்று கருப்பட்டி மிட்டாயின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்தார் நாகராஜ்.

‘வால்பாறை, மூணாறு மக்கள் சங்கரன்கோவில் கோமதி அம்மாளைக் கும்பிட்டுவிட்டு நேராக நம்ம கடைக்குதான் வருவாங்க. மிட்டாயை விரும்பி வாங்கிட்டு போவாங்க. எங்கஊர் அனைத்து கட்சிக்காரா்களும் சென்னை போவதாக இருந்தால் நமக்கு போன் பேசுவாங்க. ஒவ்வொருத்தரும் குறைந்தது பத்துகிலோவுக்கு மேல் வாங்கி செல்வார்கள். முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரொம்ப விரும்பி சாப்பிடுவதாக கட்சிக்காரா்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். இதுபோக மற்ற சில கடைகளுக்கும் சப்ளை செய்கிறோம். நாங்க நெல்லை மானுாரில் நடக்கும் திருவிழாவில் மட்டும் கடைபோடுவோம். வேறு எந்த சுற்றுவட்டாரத் திருவிழாவிற்கும் கடைகள் போடுவது கிடையாது. நம்ம கடைப் பண்டம் என்றால் அந்த ஊர் மக்களுக்கு அவ்வளவு விருப்பம் அதுபோல சங்கரன்கோவில் ஆடித் தபசு நேரத்தில் சாலையோரங்களில் நிறைய பேர் கடை போடுவார்கள். கோபுரம் மாதிரி அடுக்கி வச்சு விற்பனை செய்வார்கள். சங்கரன்கோவில் மக்கள் மட்டும் இல்லாம ஆடித்தபசு பாக்க வர்ற சுற்று வட்டார கிராம மக்களும் விரும்பி வாங்குவார்கள். கடைபோடுகிற எல்லோருக்குமே ஆண்டவன் படி அளக்கிறான். ஆனால் நம்ம கடை தேடி வருகிற மக்களும் இருக்கதான் செய்றாங்க. அது இறைவன் செயல்.

அதெல்லாம் சரி.. உள்ளுர் மக்களாகிய நீங்கள் கருப்பட்டி மிட்டாயை எவ்வளவு விரும்பி சாப்பிடுவீர்கள் என்று தமிழாசிரியர் சங்கரராமிடம் கேட்டோம். ‘பனைஓலை பெட்டி, கருப்பட்டி, ரசாயன சேர்மானம் இல்லாதது என இப்படி ஒரு ஸ்வீட் உடலுக்கு கேடுவிளைவிக்காமல் கிடைக்கிறது என்றால் நாங்கள் விட்டுவைப்போமா? சங்கரன்கோவிலுக்கு என் நண்பர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு ஓலைக்கொட்டான் பார்சல்’ என்று உரக்கச் சொன்னார்.

செய்முறை

”பச்சரிசியை (அம்பை 16-இட்லி அரிசி) காயவைத்து மாவு மில்லில் கொடுத்து அரைச்சு அதோட உளுந்து மாவு சேர்த்து கெட்டியான தன்மையில் மாவாக ஆட்டி அதைப் புளிக்கவைப்போம். மாவு புளித்தால்தான் செய்யமுடியும். மூணு மணி நேரம் கழித்து பித்தளை செம்பு அடியில் ஓட்டை போட்டு அதில் மாவை நிரப்பி எண்ணெய் சூடான பின்பு சுத்தி சுத்தி ஏணிப்படி மாதிரி வட்டவட்டமாகப் பொறித்து எடுக்கவேண்டும். நல்லா மொறு மொறுப்பா வந்த பிறகு, அதைக் கருப்பட்டிப் பாகுல 2 நிமிடம் ஊற வைத்து எடுத்துவிட்டால் கருப்பட்டி மிட்டாய் ரெடி. அதையே சீனிப் பாகில் போட்டால் சீனி மிட்டாய். தயாரிப்பு முறை பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் மிட்டாயை எண்ணையில் பிழிய பயிற்சி வேண்டும் .

கருப்பட்டி மிட்டாய் கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். சாதாரண நாட்களைவிட ஆடித்தவசு நேரங்களில் 5000 கிலோ மிட்டாய் தயார் செய்கிறார்கள். திருவிழா கடைகளில் அரிசிமாவுடன் உளுந்து சேர்க்காமல் சோடா உப்பு சேர்த்து செய்வார்கள். அந்தக் கருப்பட்டி மிட்டாய் நல்லா உப்பிப்போய் இருக்கும் இதைதான் அந்த ஊர்மக்கள் அவித்தமிட்டாய் என்று சொல்கிறார்கள். அந்த மிட்டாய் ரொம்ப மொறுமொறுப்பாக இருக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com